கேள்வி : இளைஞர்கள் ஏன் அரசியல் பேச வேண்டும்?
என் பதில் :..
அரசியலுக்குச் சொந்தக் காரர்களே அரசியல் ஏன் பேச வேண்டுமென்றால் என்று கேட்டால் என் செய்வது அன்பரே?
சித்தாந்ததின் படிப் பார்த்தால் அரசியல் செய்ய வேண்டியது இளைஞர்கள் மட்டுமே! அவர்கட்கு வழி காட்டவேண்டியது மூத்தோர்களே! ஆனால் இங்கே அப்படியா? எல்லாம் தலைகீழ் தான். இளைஞர்கள், பணத்தைத் தேடுவதிலும், அந்தப் பணத்தினைப் பதுக்கும் வேலையில் அரசியல்வாதிகளும் ஈடுபட்டுள்ளனரே!
எனக்கு இந்தக் கொரோனாவின் விடயத்திலும் நம்பிக்கையில்லை. இதன் பின்புலம் மிகவும் வலுவான (உலக) அரசியலாக இருக்கும் என்பது என் துணிபு!
சரி! இருப்பதெல்லாம் இருக்கட்டும். நாம் உங்கள் கேள்விக்கு வருவோம். உலக அரசியலே அந்தந்தக் காலகட்டத்தில் இருக்கும் புதிய தொழில்நுட்பத்தின் நுகர்வோரினைச் சார்ந்தே கட்டமைக்கப்படும். இதுவே உலக அரசியலின் எழுதப்படாத விதி! நீங்கள் வரலாற்றின் வழிநெடுகிலும் இதனை உணரலாம். துவக்கமே முடிவோ எந்தவொரு கண்டுபிடிப்பும் அன்றைய முதல்நிலை நுகர்வோரினைச் சார்ந்தே இருக்கும்.
அவ்வகையினில் நோக்கினால், இன்றைய இளைஞர்களே அரசியலை தீர்மானிக்கின்றனர். அவர்களைச் சார்ந்தே அனைத்து தொழில்நுட்பங்களும் உருவாக்கப்படுகிறது. அந்த தொழிநுட்பங்களைக் கட்டமைப்பதில் ஒரு நாட்டின் அரசும் அதைச் செய்யும் அரசியல்வாதிகளும் முக்கியப்பங்கு ஆற்றுகின்றனர். அதனால் இளைஞர்கள் அவர்களைச் சுற்றி நடக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும். அவற்றில் உள்ள அரசியலைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்வதனாலேயே தூய்மையான அரசியலை இங்கே காலூன்றச் செய்ய முடியும்!
இளைய சமூதாயத்தின் எழுச்சியே உலக வரலாற்றில் பலநாடுகளில் நிலையான மற்றும் அழுத்தமான தாக்கங்களை நிகழ்த்தியுள்ளது. அதனால் இளைஞர்களே மிக மிக அவசியமாக அரசியல் பேச வேண்டும். அவர்களுக்குள் ஒரு தெளிவு வேண்டும். ஆரோக்கியமான சிந்தனைகள் வேண்டும்.
நானும் என் நண்பனும் பெரும்பாலான விடயங்களை விவாதிப்போம். ஆனால் ஒருவருக்கொருவர் அவ்வளவு இலகுவாக தங்கள் பக்கங்களை விட்டுக்கொடுக்காமல் தத்தமது பேச்சுக்களே சரியெனப் பேசுவோம். நாங்கள் கூறுவதே சரியென நிரூபிக்க நிறைய மெனக்கெடுவோம் (பொய்யால் அல்ல). ஒரு முறை அவனே கேட்டுவிட்டான். 'நான் தான் நீ எதைச் சொன்னாலும், உடனடியாக ஏற்காமல் எதிர்விவாதம் செய்வேனே. ஆனால் எளிதில் ஏற்றுக்கொள்ளும் இடத்தில் தான் பெரும்பாலானோர் பேசுவர். நீ என்ன இப்படி?' என்றான்.
நான் கூறினேன், 'இதுவே ஆரோக்கியமான விவாதம். எளிதில் ஏற்றுக்கொள்ளாதவரையே தான் முதலில் நாம் நம்பவைக்க வேண்டும். எதிர்வினை இருக்கும் இடத்தில் திறனைக் காட்டுவதாலேயே நமது திறன் நமக்கே புலப்படும். எதைச் சொன்னாலும் ஏற்கும் கூட்டத்தில் பேசுவதால் பொய்களே பெருகும். ஆனால் ஏற்காத கூட்டத்தில் விவாதிக்கையில் தான், நாம் கூறுவதில் இருக்கும் நல்லவை கெட்டவை என அனைத்தும் விளங்கும். அதனால் முதலில் நம்முடைய தவறுகளை நாமே எளிதில் கண்டறிந்து திருத்திக்கொள்ள நல்வாய்ப்பாக அமையும். ஏற்காதவரை ஏற்கவைப்பதே சரியான விவாதம். விவாதத்தின் முடிவு எப்போதும் அறிவின் சுடராக இருத்தல் நலம். அது எதிர்வாதம் செய்பவருடன் எளிதில் கிட்டும். எதிர் தரப்பையே ஏற்கும் அளவிற்கு தெளிவாகவும் உண்மைகளுடனும் நான் பேசும் திறனையும் வளர்த்துக்கொள்வோம் அல்லவா?
அதுவே பல உண்மைகளை நமக்கும் எதிர் தரப்பிற்கும் புரியவைக்கும். ஆகையினால் அரசியலை இளைஞர்கள் அதிகம் விவாதிக்க வேண்டும். பலவித கண்ணோட்டங்கள் இருக்கும் விவாதமே தலைசிறந்த விவாதம் (அதாவது பலர்). அத்தகைய இடத்தில் அரசியல் பேசுங்கள். எத்தகு சூழலிலும் அவ்விடத்தினை புகார் தெரிவிக்கும் களமாக மடைமாற்றாதீர். விவாதம் மட்டுமே செய்யுங்கள்.
ஒருவர் சார்ந்துள்ள கட்சியின் தவறுகளை அடுத்தவர் சுட்டிக்காட்டும் போது, பதிலுக்கு அடுத்தவர் சுட்டியவரின் கட்சியின் தவறுகளைக் கூறுதல் மிகப் பெரும் தவறு. பதிலாக, குறிப்பிட்ட தவறுகளை தவறல்ல என்று நிரூபியுங்கள். உங்களுக்கான சுட்டிக்காட்டும் நேரம் வரும் வரையில் உங்கள் தரப்பினை நிரூபிக்கும் வேலையினை மட்டும் செய்யுங்கள். அப்படியில்லையெனில் உங்கள் கட்சியின் தவறுகளை உளமாற ஏற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு கட்சியின் சிறு தவறுகளால் அவர்களின் அரிய சீரிய திட்டங்களை தவறு என் நிரூபிக்கத் தலைப்படாதீர். அதே போல், எதிர்கட்சி என்பதால் எதிரிக்கட்சியாக மாறிவிடவும் கூடாது.
குறிப்பாக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விவாதம் செய்யாதீர். அது அரசியலுக்கே கேடாகும்.
இப்படிப் பல விடயங்களில் நேர்மையுடன் விவாதம் மட்டும் இளைஞர்கள் செய்தால் அரசியல் தென்றல் தவழும் மனங்களுடன் வாழும் பலரது சேவைக்களமாக மாறுதல் திண்ணம்!
நன்றி ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக