வியாழன், 20 பிப்ரவரி, 2020

கட்டுச்சொல்லிகளின் கதை
---------------
எழுதப்பட்ட எழுத்துகள் சரியாகத் தெரிவதற்காக ஒவ்வொரு ஓலையின் இருபுறமும் மஞ்சளை நன்றாக அரைத்து குழம்பாக்கி அதோடு வேப்பெண்ணெயையும் கலந்து பூசி காயவைக்க வேண்டும்.. பின்னர் வசம்பு, மணித்தக்காளி இலை, கோவை இலை, ஊமத்தை இலை சாறுகள் தடவி, மாவிலை, அறுகம்புல் ஆகியவற்றை எரித்த கரியை மையாகத் தடவுவர். இதனால் சுவடியில் உள்ள எழுத்துக்கள் தெளிவாக தெரியும். இதற்கு ‘மையாடல்’ என்று பெயர்.
‘மஞ்சற் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிக வளர்ந்தாய - என்கிறது தமிழ் விடுதூது.
இதனால் ஓலையில் உள்ள எழுத்து தெளிவாகத் தெரிவதோடு கண்ணிற்குக் குளிர்ச்சியை உண்டாக்கி, ஓலைகளைப் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும். ஓகே ! வெறும் சுவடி ஓலைசுவடியான பிறகு, மக்கள் கூடும் இடங்களான கோவில்கள், அரண்மனைகள், அருங்காட்சியகங்கள், மடங்கள் ஆகியவற்றில் பார்வைக்கு வைத்து பாதுகாக்கப்படும்.
நல்ல நிலையில் பராமரிக்கப்படும் ஓலைச்சுவடியின் வாழ்நாள் சுமார் 200 முதல் 300 ஆண்டுகள். நன்றாகப் புழக்கத்தில் ஓலைச்சுவடிகள் 100 அல்லது 150 ஆண்டுகள்தான் நீடிக்கும். ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் ஆடி மாதத்தில் புதிய பனை ஓலைகளை சேகரித்து சுவடிகள் தயாரித்து பழைய சுவடிகளில் இடம் பெற்ற நூல்களை புதிய சுவடிகளில் பிரதி எடுப்பார்.
அது படி எடுத்தல் எனப்படும்.
இன்று ஒரு நூல் பல பிரதிகளாக அச்சடிப்பது போல அன்று மூல ஓலைகளில் இருந்து அதை பிரதி எடுத்து எழுதுவதற்கென்றே தனியாக கட்டுச்சொல்லிகள் – ஓலை நாயகங்கள் இருந்தார்கள். அவர்கள் வாழ்ந்த வீட்டிற்கு பாடி வீடு என்று பெயர். ஒருவர் மூல ஓலையை படிக்க சீடர்கள் அதைக் கேட்டு எழுதிப் படியெடுப்பர். இவ்வாறு பாடும் போதும் எழுதும்போதும் சிற்சில பிழைகள் ஏற்படும் வாய்ப்புண்டு.பாட பேதம்’ எனும் இதையொட்டி தான்
‘எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் ; படித்தவன் பாட்டைக் கெடுத்தான். - என்ற பழமொழியும் வழக்குக்கு வந்தது.
அப்புறம் படி எடுத்தவன் யார்? எந்த ஊர்? என்பதை அறிந்துக்கொள்ள சுவடியின் கடைசிவரியின் கீழ் கையெழுத்திட்டு, இப்படிக்கு.. என்றெழுதி தனது பெயரையும், ஊரையும் தெரிவிப்பார். இவர்களால் தான் ஒரு மூல ஓலை பல படிகளாக / சுவடிகளாக உருவானது.
கண்ணகி மதுரையை எரித்த கலவரத்தின் போது மதுரை முழுக்க இருந்த கட்டுச்சொல்லிகள் / ஓலை நாயகங்கள் அத்துனை பேரும் திட்டமிட்டு வெட்டிக்கொல்லப்பட்டனர். அவரது பாடி வீடுகள் எரித்து சாம்பலாக்கப்பட்டன என்பதெல்லாம் தமிழ் ஓலைச்சுவடிகளை குறிவைத்து அழிக்கப்பட்ட சோக வரலாறு.
இதற்காக தான் மதுரை எரிந்ததா..?
எத்தனை தமிழ் இலக்கிய பொக்கிஷங்கள் அழிக்கப்பட்டிருக்கும்
கேட்கவே நெஞ்சு கனக்கிறதே.
இருங்க குறையும் சொல்லிடுறேன்.
இதுப்போல பிரதி எடுக்கப்பட்ட பின் பழைய சுவடிகளை மரியாதையுடன், சப்பரம் எனும் அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் வைத்து எடுத்துச் சென்று , ஆடி 18 அன்று ஆற்றில் ஓடும் நீரில் இடுவர் .
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வரையினானே " என்றது இதைத்தான்.
அச்சுக்கலை வந்த பிறகு பிரிண்டிங் புத்தகங்கள் வாசக சாலைகளில் இடம்பெற ஆரம்பித்தன. அயலானை வியக்கும் தமிழன் பிரிண்டிங் பின்னால் போனான். ஓலைச் சுவடி படிப்பவர்களும் அதை எழுதும் ஆட்களும் அருகிப்போயினர்.
எனவே ஓலைச்சுவடி படி எடுக்காமலேயே , அதை அப்படியே சப்பரத்தில் வைத்து ஊர்வலமாக இழுத்து சென்று ஆற்றில் இட்டனர் . அதன்பின் பழைய சுவடிகள் இல்லாமல் போனதால்
வெறும் சப்பரத்தை மட்டும் ஆடி 18 அன்று ஆற்றில் இறக்குகின்ற சடங்கு உருவானது.
இப்படி வெறும் சப்பரத்தை மட்டும் இழுத்து செல்கிறீர்களே..! என்னவொரு பைத்தியக்கார தனம்? சப்பரத்தில் ஒரு சாமியை வையுங்கடா முட்டாள் பசங்களா.. என்று யாரோ அறிவாளி புத்தி சொல்ல, தமிழன் வரலாறு மதச்சடங்காக மடைமாற்றப் பட்டன.
அச்சு இயந்திரம் கண்டுபிடித்து இப்போது சுமார் 200 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே படி எடுத்து ஏறத்தாழ 200 ஆண்டுகள் ஆகிவிட்டன. எழுத்தப்பட்ட பனை ஓலைகளின் வயதும் இப்போது 150-200 ஆண்டுகள் ஆகிவிட்டன .
அவையெல்லாம் பொடிப் பொடியாக பயனற்றுப் போக இன்னமும் அதிகப்படியான ஆண்டுகள் இல்லை. தேடுவாரற்று பரண்களில் தூங்கிக்கிடக்கின்ற /ஒளிந்துக்கிடகின்ற தமிழர்களின் அத்தனை ஞானமும் அறிவும் கொண்ட சுவடிகள் வெகு விரைவில் மொத்தமாக அழிந்து போகும் அபாயம் உள்ளது.
படிஎடுப்பது என்பது ஏதோ வெறும் ஓலைச்சுவடிகளை பாதுகாப்பது என்பதாகாது. நமது பரம்பரியத்தை பண்பாட்டை பாதுகாக்க வாழ்வியல் முறைகளை மெய்யியல் கோட்பாடுகளை தமிழ் சிந்தனை மரபை படியெடுக்கின்ற பெரும் வேலைத்திட்டம் என்பதை உணர்தல் வேண்டும்.
சரி பனையோலைக்கு ஏன் சுவடி என்று பெயர் வந்தது ?
ஓலைகளில் பதியுமாறு ஆணிகளைக் கொண்டு எழுதப்பெற்ற ஏடுகளின் தொகுப்பு சுவடியாகின்றது.
தமிழன் தன் கருத்துச் சுவடு / எழுத்துச் சுவடு பதித்த பொருளை முதலில் ‘சுவடி’ என்றே அழைத்திருக்கவேண்டும்.
பாட்டுப்புறம் எழுதிய கட்டமைச் சுவடி’’
என்கிறது பெருங்கதை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக