சனி, 1 பிப்ரவரி, 2020

காணாமல் போன சக்கரகிரி தாலுகா

 Added : பிப் 18, 2017 


'சக்கரகிரி தாலுகா' இந்த பெயர் உடுமலை பகுதியை சேர்ந்த பலருக்கும் தெரிவதற்கு வாய்ப்பில்லை; ஆனால், முந்தைய ஆவணங்களில், நமது பகுதி, இப்பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்தது. தாலுகா பெயர் மாற்றம் எவ்வாறு வந்தது; எப்போது வந்தது என்பது குறித்த வரலாற்றை தேடிய ஆய்வு தீவிரமடைந்துள்ளது.உடுமலை என்ற பெயருக்கு, பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றன; உடும்புகள் நிறைந்த பகுதி, இரு மலைகளுக்கு ஊடே இருந்த பகுதி என பெயருக்கு விளக்கங்கள் வரிசை கட்டுகின்றன.தாலுகாவாக இருந்து, வருவாய் கோட்டமாக தரம் உயர்ந்துள்ள உடுமலை முன்பு சக்கரகிரி தாலுகா எனவே ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு வந்துள்ளது.கொங்கு மண்டலத்தில், நல்லுாருக்கா நாடு, சக்கரகிரி தாலுகா என உடுமலை பகுதி பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில், குறிப்பிடப்பட்டு வந்துள்ளது. தளி, மைவாடி உட்பட பாளையங்களின் ஆய்வில், இந்த தாலுகா பெயர் தெரிய வந்தது.இந்த ஆட்சியாளர்கள், பல்வேறு கோவில்களுக்கு அளித்த தானத்தில், சக்கரகிரி எனவே, இப்பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்றில் இடம் பெற்ற பெயர்கள், காலப்போக்கில் மறைவது வழக்கம்.ஆனால், பெயரே காணாமல் போன விந்தை உடுமலைக்கு ஏற்பட்டது ஏன் என்பதற்கான தேடல் நீண்ட இடைவெளிக்கு பிறகு துவங்கியுள்ளது.உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில், உடுமலை பகுதி வரலாற்றை கண்டறிந்து, தொகுத்து வெளியிடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில், ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட, தளி பாளையக்காரர் எத்தலப்பன், வரலாறு குறித்த ஆய்வுகளில், பல்வேறு தகவல்கள், கண்டறியப்பட்டுள்ளன.துாது வந்த ஆங்கிலேயே வீரனை எத்தலப்பர் துாக்கிலிட்ட இடமும், அங்குள்ள கல்லறை கல்வெட்டுமே வரலாற்றின் துவக்கமாக அமைந்துள்ளது.மேலும், திருமூர்த்தி அணை கட்டப்படும் முன், தளி பாளையக்காரர்கள் மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து வெளியேறும் தண்ணீரை தடுத்து, விவசாயத்துக்கு பயன்படுத்த தடுப்பணைகள் கட்டியுள்ளனர். இதற்கான பாறை கல்வெட்டும் கண்டறியப்பட்டுள்ளது.முதன்முதலாக, இப்பகுதியில், முதல் நீதிமன்றம், போலீஸ் ஸ்டேஷன் ஆகியவை தளியிலேயே துவக்கப்பட்டுள்ளன.கோவிலுக்கு தானம் அளிக்கப்பட்ட ஆவணங்களில், சக்கரகிரி தாலுகா என தெரிவிக்கப்பட்டுள்ளதே, இந்த வரலாற்று தேடலுக்கு உத்வேகம் அளித்துள்ளது.
பல்வேறு கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ள, வரலாற்று ஆய்வு நடுவத்தினர். இப்பகுதியின் முழு வரலாற்றையும் வெளிக்கொணர்வார்கள் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. -நமது நிருபர்-தினமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக