“ஜவுளி வாங்குவது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு..2🌹🌹
(நேற்றையத் தொடர்ச்சியாக இன்று.....வாசிக்க)
“ பெண்களுக்கு கைரேகை பார்க்கத் தெரியாவிட்டாலும், ஆண்களின் முகரேகை வாசிக்கத்
தெரியும்.” என்ன தான் கணவனை நம்பி ஒரு களத்தில்
இறங்குமுன் தன்கையிலும் தனியே காசுபணம் வைத்துக் கொண்டு தான் துணிவாக இறங்குவார்கள்.
ஆண்களும் தன் பர்ஸுக்கு வேட்டு வச்சிருவாங்களோ.?
என நினைத்தவாறு தான் முகத்தை ‘ஐயோ பாவமாக’
வைத்திருப்பார்கள். ஒரு பிரசவ வார்டில் நடப்பதைப்
போல மனசு திக் திக் என இருக்கும் என்பதை பலர்
நகைச்சுவையாகக் கூறுவதைக் கேட்டு இருக்கிறேன்.
“ இம்புட்டு நேரமாவா புடவையை செலக்ட் பண்ணுவாங்க...காலையில அவசரத்தில கம்மியா இட்லி சாப்பிட்டது இப்ப வயிறு வேற பசிக்கு..இவங்களுக்கெல்லாம் பசிக்கவே பசிக்காதா..? என தன்னுடன் வந்தவர்களுடன் ஆதங்கப்பட்டுக் கொள்ளும் ஆண்கள் ஒரு வகை .(இதுக்காகத்தான் இப்ப காஃபி,கூல்டிரிங்ஸ் கொடுக்க ஆரம்பிச்சிருப்பாங்களோ..?)ஆனாலும் நல்லதாகப் புடவை அமையும்போது மனதளவில்
பெண்கள் காசைப் பார்ப்பதில்லை.மனநிறைவையே
முக்கிய குறிக்கோளாகக் கொண்டு மருமகளுக்கு
முகூர்த்தப் புடவை எடுப்பார்கள். சிலர்’ஒருநாள்
கூத்துக்கு மீசை எதுக்கு..?’ என்பது மாதிரி பேசுவார்கள். ஆனால் அந்த ஒருநாளின் பிரதிபலிப்பு
எந்தக் கல்யாணத்திற்குச் சென்றாலும் நம் மருமகள்
உடுத்தப்போகும் புடவை மனசைவிட்டு நீங்காது
இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் பலர்.முதலில்
எந்த வீட்டுக் கல்யாணம் என்றாலும், அவரவர்களின்
முகூர்த்தச் சேலையை கட்டுவது வழக்கமாக இருந்தது.
இப்பல்லாம் ‘செக்கு கனம் கனக்கே.. இதையா ஒருநாள் முழுவதும் சுமந்துகிட்டு நடக்கிறது..? என
அப்போதைய தலைமுறையினரே ஓரங்கட்டி விட்டனர்.
இப்ப விதவிதமாக நேரத்திற்கு ஒரு மாடலாக மணப்பெண் சிங்காரிக்கப்படுகிறாள்.
வீட்டுப்பெண்கள் இப்படி என்றால் வேலைக்குச் செல்லும் பெண்கள் வேறுவிதமாக இருப்பர்.அவர்கள்
கோ-ஆப்டெக்ஸ்,காதி பவன் போன்ற கடைகளில்
ஜவுளி எடுப்பார்கள்.தங்களின் நெருக்கமான தோழிகளுடன் குறைந்தது சுமார் ஐந்துபேர் ஒரு
கூட்டமாகச் செல்வதுண்டு.அங்கமர்ந்து எதைச்
செலக்ட் பண்றது என எதையோ எடுத்துக் கையில்
வைத்து யோசனைசெய்து கொண்டு இருப்பார்கள்.
“ ஏய்..! என்னப்பா இது..? இந்த க்ரீன் கலர் ஏற்கனவே
உங்கிட்ட இருக்கே.. வேற கலர் எடுப்பா..?எனச் சொல்லும்போது ,பெண்களின் ஆழ்மனது புரியும்.
‘நாம் தினம் பீரோவில் சேலை பார்க்கிறோம்..நமக்குக்
கூட ஞாபகம் வரலே..இவங்க எப்படி ஞாபகம் வச்சிருக்காங்க பாரேன் ‘என வியந்து போவதுண்டு.
இந்தக் கலர்ல அந்த டிசைன் வருமா..? என்று சிலர்
புதுசாக செலக்ஷன் அம்பு விடுவார்கள்.அது ஆர்டர்
கொடுத்தால் இரண்டு,மூணு வாரத்தில வரும் என
கஸ்டமரைச் சமாளிப்பார்கள்.அதுக்காகவே நடையாய்
நடந்து எப்படியும் வாங்கி விடுவார்கள் சிலர்.
‘இருக்கிறதுல ஒண்ணை எடேன்..ஏன் இப்படி அலையுற..? எனச் சிலர் பட்னு கேட்ருவாங்க.
அப்ப அவங்க வாய்க்குள்ள நாக்கு ‘கதகளி’ ஆடும்.
‘நம்ம என்ன சும்மாவா தூக்கிட்டு வரப்போறோம்..
நாம கஷ்டப்பட்டு உழைச்ச காசு..நாலு கடை ஏறி
இறங்கி நல்லதாகப் பார்த்து வாங்கணும்ல ‘ என்று
சொல்லும்போது அங்கே நியாயம் இருப்பது புரியும்.
ஆனால் எல்லாம் எடுத்துப்போட்டு,கலைச்சு வச்சிட்டு
அடுத்த கடைக்குச் செல்லும் நிலை எளிது. அது ஒரு சிலருக்குச் ஜாலியாக இருந்தாலும்,அதற்குப் பின்புறம்
அதை அழகாக மடித்து அட்டியில் ஏத்தும் பணியாளர்களின் நிலைமையையும் யோசிக்கணும்ல..!
ஒரு புடவை ஐந்தாறு பேர்கள் கலந்தாலோசித்து
எடுத்துக் கட்டும்போது,அதன் பின்புற நிகழ்வுகள்
மனத்திரையில் ஓடத்தானே செய்கிறது..! முன்பு
பேத்திகளுக்குப் பாவாடையாக பாட்டிகள் தன் பட்டுச்சேலைகளைத் தருவதுண்டு.இப்ப யாரு பாவாடை
கட்றாங்க..? அதிலும் ரெடிமேடு வந்தவுடன் விதவிதமாக டிசைனில் வாங்கி தரைதூர்க்க உபயோகப்படுத்தமுடிகிறது.
அப்போ கிராமங்களில் கைமிஷின் (தையல் இயந்திரம்)ஒருத்தர் தோளில் கைவைத்தநிலையில்
சுமந்து செல்வார். பழைய பட்டுப்புடவையோ,புது
சீட்டித் துணியோ வைத்து இருப்பவர்கள் கைதட்டி
அழைப்பார்கள். “பாவாடை தைக்கணும்..நல்லா சுருக்கு வச்சு தைக்கணும்..டக்கு பிடிச்சு தைக்கணும்..” என்ற குரலை மனதில் உள்வாங்கி
தைக்க முன்அறையில் அமர்வார்.அவர் வீட்டில் வந்தமர்ந்து ,முதலில் அளவெடுத்து ,பின் துணிகளை கத்திரிக்கோலால் வெட்டி, சுருக்குகள் வைத்து பின்
இரண்டு பகுதிகளையும் இணைத்து,இறுதியில்
பாவாடை நாடாவை அடிக்கும்போது ஒரு பாவாடை
கண்முன் உருவாகுவதை பார்த்த சந்தோஷம்
எல்லோர் முகத்திலும் எழும்.திறமைசாலியான ஒவ்வொரு கலைஞனும் பிரம்மாவிற்கு இணையாக நினைக்க வைக்கும். இடையே வெயிலுக்காகஅவருக்கு
மோர்,தண்ணீர் எனக் கொடுத்து உபசரிப்பு நடத்துவார்கள்.அப்படியே பக்கத்து வீட்டுக்காரர்கள்
வந்து பார்த்து ‘அங்க முடிச்சுட்டு இங்க வாப்பா’ எனச்
சொல்லி அவர் முகத்தில் சந்தோஷரேகை தோன்றச்
செய்வதுண்டு.கடைசியில் ரூபாயைக் கண்ணில் ஒற்றி,
தையல்காரர் பையில் எடுத்துச் செல்வதுண்டு.
அதற்கப்புறம் காலால் மிதித்து தைக்கும் இயந்திரம்
வந்தது.அதற்கு முன்னால் கிழிந்து போனவைகளை
கையில் ஊசியால் தைத்துக் கொண்டிருந்தவர்கள்
மிஷினுக்கு மாறிட்டாங்கன்னே சொல்லலாம்.
‘வீட்டுவீட்டுக்கு ஒரு தையல் மிஷின் ‘மூடி போட்டு
வைத்திருப்பார்கள். ஆண்களுக்கு இணையாகத்
தைப்பதற்கு பெண்களும் வெளிவந்தார்கள்.
ப்ளவுஸ் சரியாகத் தைத்துவிட்டால் போதும்.
எல்லோரும் அளவுப்ளவுஸ் சுற்றி எடுத்து வந்துவிடுவார்கள். பெண்களும் சரியாக ப்ளவுஸ்
அமையும் வரை டெய்லர்களை விடுவது இல்லை.
தீபாவளியன்று கிடைக்கும்வரை கஜினிமுகமதாக
படையெடுத்து நடந்து ஜெயித்தவர்கள் உண்டு.
இப்ப ஆன்லைன் கலாச்சாரம் வந்தாச்சு.அவர்களே
தோளில் வைத்துக் காட்டுகிறார்கள்.முந்தானை,
ப்ளவுஸ் துணியெல்லாம் விரித்துக் காட்டுகிறார்கள்.
வீட்டில் இருந்தே ‘செலக்ட்’ பண்ணி ஆர்டர்
கொடுக்கிறாங்க.ஆனால் தொட்டுப் பார்த்து உணரும்
நிலை தான் இல்லை.சிங்கிளாகவே தேர்வு
செய்வதில் அந்த பழைய ‘த்ரில்’ இல்லை என அறிகிறோம்..!
இந்த தீபாவளியில் இதை வாசிக்கும் அனைவர்க்கும்
நல்ல புத்தாடைகள் கிடைக்கட்டும்.வாழ்த்துகள்.
இப்பதிவிற்காக புகைப்படம் அனுப்பிய முகநூல்
நட்பு திரு.கோ.ரா. ரவி பட்டு நெசவாளர் அவர்களுக்கு
என் அன்பின் நன்றி. தொ.பேசி.எண் 94448 45044
93821 16111🥰📚📚✍️✍️✍️🌈🌈
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக