புதன், 27 அக்டோபர், 2021

“ ஜவுளி வாங்குவது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு..”🌹
தீபாவளிக்கு ஜவுளி வாங்குவது என்றால் இரண்டு
மாதத்திற்கு முன்னாலே முடிவெடுக்கும் விசயம்.
இப்ப உள்ளது போல ‘ரெடிமேடு’ எல்லாம் வராத
காலநிலை அது. அப்போ ஊரில் ஒன்றிரண்டு
டெய்லர்களே உண்டு.அவர்கள் குடும்ப டாக்டர் போலத் தான் அப்போ இருந்தார்கள்.டாக்டருக்கு நோயாளிக்குத் தக்க மருந்து கொடுக்கத் தெரிந்திருப்பது போல ,இவருக்கு நம் அளவு,ஸ்டைல்,
எல்லாம் தெரிந்திருக்கும்.அந்த தீபாவளி மாதம் புது
சினிமாவுக்கு இணையான மவுசு இவர்களுக்கு உண்டு.
‘இன்னிக்கு சாயங்காலம் தாரேன்..’என்பதே எல்லோருக்கும் பாரபட்சமற்ற சொல்லாக இருக்கும்.
வருடத்திற்கு ஒரு முறை எடுப்பதே அப்போதெல்லாம்
வாடிக்கை.சில சமயம் சைக்கிளில் ஜவுளி மூட்டை
சுமந்து வரும் சிலரிடம் எடுப்பவர்கள் உண்டு.
அதற்கெனவே ஊரில் உள்ள பிரபலமான பெரிய வீடு
ஒன்றில் தான் கடை விரிப்பார். “ உங்க முகராசி அப்படி ..” என்று அடிக்கடிஅவர் ஆச்சியிடம் சொல்லிச் சொல்லியே ஆச்சி அதற்கு தகுந்த அந்தஸ்து
பெற்றிருந்தார்.ஆச்சி குறைந்தது இரண்டு சேலைகளாவது எடுப்பார். ஆச்சியும் பதிலுக்கு ‘அவர் கைராசியான கை ‘ என்று சிலாகித்துச் சொல்வதால் எல்லோரும் எடுக்க முன் வருவார்கள். ஆச்சியின் பேச்சு எடுக்காதவரைக் கூட எடுக்க வைத்து விடும்.
அந்த வீட்டுக்கார ஆச்சி தெருவில் பக்கத்து வீடுகளுக்கு ‘ ஜவுளி மூட்டைக்காரர் வந்திருக்கிறார்’எனச் சொல்லி விட்டு வரும்படி
குட்டிப் பசங்களைத் தூதுவராக்கி விடுவார்.உடனே
ஐந்து நிமிடங்களில் வீட்டில் போட்டது போட்டபடி
இருக்க ,உடனே ஆஜராகி விடுவார்கள்.பெரியவங்க
கூப்பிட்டால் அவ்வளவு மரியாதை அப்போது..!
எல்லோரும் வருவதற்கு முன் இரண்டு பாய்கள்
விரிக்கப்பட்டு,அதில் ஒரு வெள்ளைத்துணி விரித்திருக்கும். எல்லோரும் அதைச் சுற்றி வட்டமாக
அமர்வார்கள். அவர்களுக்கு வாயால் உத்தரவு
பிறப்பித்து ஆச்சி இடம் இல்லாதவர்க்கு தகுந்த இடத்தை அமைத்து தந்து விடுவார்.
அவர் வெள்ளைநிற மூட்டையை சைக்கிளில் இருந்து
எடுத்து தோளுக்கு மாற்றி தரையில் வந்து இறக்குவார்.
அவர் நடுநாயகமாக அமர்ந்து கொண்டு ,முதலில் அதன்
நான்கான மடிப்பில் உள்ள முடிச்சுகளை அவிழ்த்து,
தன் கைகளால் தொட்டுக் கும்பிட்டபடி முதல் சேலையை எடுத்து பூப்போல வைப்பார்.எல்லோர்
கண்களும் அதில் லயித்து இருக்கும். அப்புறம் அடுத்தது
என்ன..? என்றவாறு நெற்றியில் ஒரு சுருக்கம் விழ
பார்ப்பார்கள்.ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக
இருக்கும். அவர் அனைத்தையும் எடுத்துப் போடுவதற்குள் சிலர் கைகளால் ஸ்பரிசித்துப் பார்ப்பார்கள்.சிலர் தனக்கு அந்தக் கலர் பிடித்துள்ளது
என யாருக்கும் தராமல் கைக்குள் பாதுகாப்பாக
வைத்துக் கொள்வர்.கீழே போட்டால் திரும்பக்
கிடைக்காது என்ற உளவியல் தெரிந்தவர்கள் அவர்கள்.
“ இன்னும் இருக்கிற இரண்டையும் எடுத்துப் போடு...”
என ஆச்சி தான் அவரை உரிமையோடு சொல்லி
விரித்து காட்டச் சொல்வார்.எல்லாத்தையும் நல்லாப்
பாருங்க.. என கண்களைச் சுழலவிட்டு ,கண்சிமிட்டி
ஒரு ‘சிக்னல்’ தருவார். அவர் கலைச்சுப்போட்ட பிறகு
நல்லா இருக்கதை எடுங்க..மடிப்பு கலையாமயா
பார்ப்பே..? என்ற சொன்ன பிறகு தான் ‘ இப்படியும்
பார்க்கணுமோ..?’ என்று புதுசாக வாங்குபவர்களுக்குத்
தெரியும். அப்புறம் ஆச்சியிடம் கீழே விழுந்து
கும்பிட்டு ,ஆசி பெறுவது தனிக்கதை.
‘என்ன உனக்கு பிடிச்சிருக்கா ?இல்லையா..?
பணம் இல்லைன்னு மருகுதையா..? அதெல்லாம்
நான் தாரேன்..அப்புறம் கொடு எனச் சொல்லும்போது
அந்தக் கண்களில் தோன்றும் அதிக பிரகாசத்திற்கு
ஆச்சி மகிழ்ந்து (மகுண்டு) போவார். அப்போதெல்லாம்
பெண்கள் வேலைக்குச் செல்லாத காலம். ஆச்சி
எடுக்கச் சொன்னதால் எடுத்தோம் என்றால் வீட்டில்
அப்பீலே இல்லை என்பதால் தைரியமாக எடுப்பார்கள்.
அப்படி ஒண்ணும்,மண்ணுமாகப் பழகிய காலம்..!
அந்தச் சேலையின் வாசத்தையும்,மடமடப்பையும்
உணர்கையில்,ஆச்சியின் பேச்சு வார்த்தை
நடைபெறும்.எப்படியோ சொன்ன விலையில் சற்றே
குறைத்துக் கேட்டு, உனக்குச் சரியா..? என்பது போல
ஒரு ஏற்றப் பார்வை பார்த்து உறுதி செய்வார்.இந்த
கண்ணசைவுகள் அவர் வேறு ஒருவர்க்கு சேலை
விரித்துக் காட்டும்போது நடைபெறும் .
பெண்கள் வெயிலில் வைத்துப் பார்ப்பதும், தோளில்
போட்டு கண்ணாடியில் பார்த்து மகிழும் இன்பம்
அலாதியானது. அந்த இன்பம் இப்போ இருக்கா..?
தெரியல.தீபாவளி எப்போ வரும்..? என்று நாட்காட்டியைப் பார்த்து அந்த நாளை மடித்து
வைப்பதுண்டு.
பெண்களுக்கு முகூர்த்தப்பட்டு எடுக்கும்போது குடும்பம்
சுற்றி இருக்கையில் ,பாயில் விரித்துக் காட்டும்
அழகே தனி..! இப்படித் திருப்பி புடவைத் தலைப்பைக்
(முந்தானை) காட்டும்போது அதிலுள்ள ஓவியங்கள்
கண்ணைக் கவர்ந்து விடுகின்றன. சேலை எடுத்துக் காட்டுபவர்கள் கூட ‘இது லேட்டஸ்ட்டாக வந்திருக்கு..இந்தக் கலர் நல்லாயிருக்கும் எனச் சொல்லி ஆசை காட்டுவது உண்டு.பெண்கள் கவனம் முதலில் விலைப் பட்டியலைத் தான் பார்க்கும். தன் மனதில் நினைச்சு வச்சிருக்கும் ரேட்டுக்கு
ஒத்து வருதா..? என்ற கேள்விக்குப் பதில் கிடைக்கும் வரை ஓய்வதில்லை கடல் அலைகளைப் போல..!
சேலை எடுத்தாலும் அதிலுள்ள ப்ளவுஸ் பிடிக்காது.அதை அட்டியில் இருந்து எடுத்துப் போடச் சொல்லி ,கரைக்ட் மேட்சிங் என கடைக்காரர் சொல்லி ,லைட் வெளிச்சம் பொய் சொல்லும் என
வெளியில் சென்று வச்சுப் பார்த்து திருப்தியாகி
பார்த்து எடுப்பதற்குள் ஒரு ஆறுமணி நேரமாவது
ஆகும். சில பேர் அலுக்காமல் எல்லாத்தையும்
எடுத்துப் போடச் சொல்லி வேலை வாங்குவார்கள்.
ஆண்கள் முகம் போகும் போக்கைப் பார்க்கணுமே..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக