திங்கள், 28 ஆகஸ்ட், 2017

சுதந்திர போராட்ட வீரருக்கு அங்கீகாரம்: மணிமண்டபம் அமைக்க உறுதி

உடுமலை : 'சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய, தளி பாளையக்காரர்கள் வரலாற்றை வெளிப்படுத்த, மணி மண்டபம் கட்டுதல் உட்பட பணிகள் மேற்கொள்ளப்படும்,' என உறுதியளிக்கப்பட்டுள்ளதால், வரலாற்று ஆய்வாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உடுமலை அருகே தளியை தலைமையிடமாகக்கொண்டு, எத்தலப்பர் எனப்படும் பாளையக்காரர்கள் ஆட்சி புரிந்து வந்துள்ளனர். ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில், முக்கிய பங்காற்றிய, பாளையக்காரர் வரலாறு, பல ஆண்டுகளாக வெளிப்படாமல், இருந்தது. பின்னர், பலரது முயற்சியால், எத்தலப்பரால், துாக்கிலிடப்பட்ட, ஆங்கிலேய வீரனின் கல்லறை, ஜல்லிபட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது.

திருமூர்த்தி அணை கட்டுமான பணிகளின் போது, அங்கு, தளி பாளையக்காரர்கள் சிலை கண்டறியப்பட்டு, அவை, காண்டூர் கால்வாய் கரையில், வைத்து பராமரிக்கப்படுகிறது. தளிஞ்சி உட்பட மலைகிராமங்களிலும், பாளையக்காரர்கள் குறித்த சில ஆதாரங்களை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

இதையடுத்து, உடுமலை பகுதியின் வரலாற்றில், முக்கிய பங்கு வகிக்கும் எத்தலப்பருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருமூர்த்தி

மலையில், கால்நடைத்துறை அமைச்சர் ராதா

கிருஷ்ணன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அப்போது, எத்தலப்பருக்கு, மணி மண்டபம் கட்டுவது குறித்த, கோரிக்கை மனு, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம், கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பில், அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, காண்டூர் கால்வாய் கரையில், பராமரிக்கப்படும் எத்தலப்பர் வம்சாவாளியினர் சிலைகளை, அமைச்சர், திருப்பூர் கலெக்டர் பழனிசாமி மற்றும் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, வரலாற்று ஆய்வாளர்கள், தளி பாளையப்பட்டு குறித்த வரலாற்றை குழுவினருக்கு விளக்கமளித்தனர். இதையடுத்து, எத்தலப்பருக்கு மணி மண்டபம், நினைவு துாண் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குழுவினர் தெரிவித்தனர்.

நீண்ட கால கோரிக்கை நிறைவேறும் வகையில், அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மணி மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதால், வரலாற்று ஆய்வாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நன்றி : தினமலர் ....






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக