திங்கள், 9 செப்டம்பர், 2019

மனைவி என்றொரு பூவுலக ஸ்வர்க்கம்
-----------------------------------------------------------------------
காலை ஐந்தரைக்கு மனைவியின் அலாரம் ஒலித்தது..உள்ளறையிலிருந்து எழுந்து ஓடி அந்த அலாரத்தை ஆஃப் செய்தேன்.
எழ முயன்ற மனைவியின் செவிகளில் ஒரு தென்றல் மோதுவதைப் போல மெல்லச் சொன்னேன். “ தூங்கு பெண்ணே...உனக்கான இனிய நித்திரை இன்னும் மிச்சமுள்ளது”
ஒரு நிலவு தனது இருப்பிடத்திற்கு திரும்புதல் போல எனது இல்லாள் சுகமான உறக்கத்திற்குள் மிதந்து சென்றார்...
கதவை நிதானமாய்த் திறந்தேன்...அதன் கீச் சப்தம் எனது மனைவியை தொல்லை செய்து விடக் கூடாதே....அந்தப் பூவின் நித்திரை கலைந்து விடக் கூடாதே...
வாசலில் ஒரு வசந்த காலம் இறைந்து கிடப்பது போல தினமலர் பரவிக் கிடந்தது....பிறந்த குழந்தையை பெண் மருத்துவர் ஆசையாய் தூக்குதல் போல செய்தித்தாளை எடுத்து வீட்டிற்குள் நுழைந்து ப.சிதம்பரம் சிறையில் கஞ்சி குடித்து கட்டிலில் தூக்கம் வராமல் புரண்டு படுத்து வெஸ்டர்ன் கழிப்பறையில் அமர்ந்து தேம்பியழுத செய்தியை வாசிக்கையில் “பாலு ! வாங்கிக்கங்கம்மா ! பாலு” என்ற தண்ணீரில் பால் கலக்கும் தயாள பால்காரரின் ஓசை...
கிச்சன் நுழைந்து பாத்திரத்தை எடுத்து வாசல் தாண்டி “ அரை லிட்டர்“ என்றேன்...ஒரு கார்காலம் பூமி மீது மழைத் துளிகளை ஊற்றி விடுவது போல பாலை ஊற்றுகிறார்...அவரை நன்றியுடன் நோக்குகிறேன்.. எல்லையில் காவல் செய்யும் கார்கில் வீரனுக் கொப்பானது இவர் தியாகம்....எந்த மழையிலும் பனியிலும் புயலிலும் பால் தரும் ஈர மனசுக்காரர்.
சமையலறை எனக்கான திகைப்புகளால் நிறைந்து கிடந்தது....பாலை சிறிது மிச்சம் வைத்து விட்டு மற்றுமொரு கிண்ணத்தில் நிரப்பினேன்...தேயிலைத் துகளைத் தேடினேன்....தொலைந்த குழந்தையை நெரிசலான பூங்காவில் தேடியலையும் தாயாக அந்த தேயிலையைத் தேடுகிறேன்...ஆங்கோர் நெகிழி போத்தலில் அது அடைபட்டிருக்கக் கண்டேன்.
எடுத்து அணைத்துக் கொண்டேன். கேஸ் ஸ்டவ்விற்குள் பதுங்கியிருந்த அக்கினி ஜுவாலைகளுக்கு விடுதலை தந்து எரிய விட்டென்..அதன் மேல் பால் கிண்ணம்..
இஞ்சியைத் தேடி குளிர்சாதனப் பெட்டிக்குள் நுழைந்து மீண்டேன்...சிறு துண்டு காணக் கிடைத்தது. எனது மனைவி தயாரிக்கிற தேநீருக்கு தனிச்சுவை தரும் இந்த இஞ்சித் துண்டுகள்..
ஒரு பூரிக்கட்டையை எடுத்து அதன் நுனிப்பகுதியால் இஞ்சியைத் தட்டி துகள்கள் ஆக்குகிறேன்...இடிந்த கட்டிடத்திற்குள்ளே சிதைந்த கிடக்கும் மனித உருவங்களாக இஞ்சி இறந்து கிடந்தது..
பால் கொதிக்கிறது...தேயிலையை உத்தேசமாய் கொட்டுகிறேன்...எனது மனைவியின் மேல் வைத்திருக்கிற காதலுக்கு எத்தனை கரண்டி தேயிலைத் துகள் கொட்டினால் அவருக்குப் பிடிக்கும் என்கிற சூட்சமம் தெரிந்தே உள்ளது....
தேயிலை பாலுடன் கலக்கிறது..தமிழிசை கவர்னர் ஆனதும் அவரது அப்பா குமரி ஆனந்தன் சிரித்தது போல அந்தப் பாத்திரத்துப் பால் தேயிலையுடன் இணைந்து சிரிப்பின் விநோத சந்தங்களை எழுப்பிக் கொண்டிருந்தது....கர்நாடகாவிற்கு மூன்று துணை முதல்வர்களைத் தெரிவு செய்து அனுப்பிய அண்ணன் அமித்ஷா போல் தேயிலை பால் கூட்டணிக்குள் இஞ்சியைத் திணிக்கிறேன்.....வட்ட பௌர்ணமியின் வடிவம் மிச்ச நாட்களில் மாறி விடுவது போல தேநீரின் வர்ணம் மாறி விடுவதை எனது விழிகள் விரியக் கவனித்தேன்.
கைக்கெட்டிய தூரத்து முதல்வர் பதவி கடைசி வரை கிடைக்காமல் போகுமோ எனக் கொதிக்கிற மு.க.ஸ்டாலின் இதயம் போல அந்த தேநீர் கொதிக்கிறது...நுரை பொங்கி மேலே வருகிறது..பாத்திரம் தாண்டி வரப்பார்க்கும் அந்த திரவத்தை ஹாங்காங் போராட்டக்காரர்களை தடி கொண்டு அடித்து அடக்க நினைத்த சீன போலிஸார் போல அடக்க முயல்கிறேன்.நெருப்பைக் குறைக்கிறேன்...எழும்பிய தேநீர் வேகம் குறைந்து உள்ளே போகிறது....அடங்கி விடுகிறது...
திருமண வைபவத்தின் தாலி கட்டும் காட்சியில் பூக்களை வீசும் பார்வையாளன் போல இறுதியாக சிறிது ஜீனியை தூவி விடுகிறேன்....வறண்ட வாழ்க்கைக்கு வர்ணம் பூசும் காலம் கடந்து கிடக்கிற கவன்மென்ட் வேலையாய் அந்த வெள்ளை சீனி தேநீருடன் கலந்து சங்கமம்.
நாம் போட்ட டீ எப்படி இருக்கிறதோ என்று தான் முதன்முதலில் எடுத்த புகைப்படத்தை பிரிண்ட் செய்து பார்க்கிற போட்டோ கிராபர் போல தேநீரை சுவைக்கிறேன்..அந்தத் துளிகள் உலகின் மொத்த ருசியையும் தனக்குள் ஒளித்து வைத்திருப்பதை அறிந்து பயங்கர வியப்பு எனக்குள் படர்கிறது..
நாமா இத்தனை சுவையான தேநீர் செய்தோம் என்று எனக்குள் எழுந்த கர்வத்தை அடே ! உன் மனைவி மீது நீ கொண்ட நேசமே இந்த தேநீருக்கான சுவையாய் பரிணமித்துள்ளது என்று சொல்லி அடக்குகிறது ஞானம்.....
ஒரு சிறு டம்ளருக்குள் அந்த தேநீரின் சுவையைப் பதுக்கி வைத்து எடுத்துச் செல்கிறேன்....ஒரு மாபெரும் பாலத்தை இரண்டு கடல்களுக்கு நடுவே கட்டிய பொறியாளனின் ஆனந்தம் எனக்குள்...
மனைவி இன்னும் தூக்கத்தின் பிடியில் கைதியாய் இருக்க அவரது சிறையிருப்பை திருப்புகிறேன்.....“என்னங்க”
“இந்தா டீ...உனக்காக நான் எனது அத்தனை திறமைகளையும் கொட்டி உருவாக்கிய டீ”
மெல்லப் பருகுகிறார்...அவரது விழிகள் வானத்தை விடவும் அகலமாய் திறக்கின்றன...
“நீங்க போட்டதா ! சூப்பர்”
நான் பிறந்ததன் பயனை அக்கணத்தில் அடைந்ததாய் உணர்ந்து நின்றேன்....
மனைவியை நேசிப்பவர்கள் உலகின் உச்ச பட்ச சந்தோஷக்காரர்கள் என்பதை அறிந்து கிறங்கிப் போய் சுவர் மேல் சாய்ந்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக