செவ்வாய், 24 செப்டம்பர், 2019


உடுமலையின் மண்ணின் மைந்தர் ......வி.ஜி.மோகன் பிரசாத் 

கோவை விஜிஎம் மருத்துவமனை 10ம் ஆண்டு விழா
:தரமான மருத்துவ சேவையே குறிக்கோள்
 கோவை சிங்காநல்லூரில் அமைந்துள்ள விஜிஎம் மருத்துவமனையின் 10 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கே.ஜி. மருத்துவமனை தலைவர் ஜி.பக்தவச்சலம் உள்ளிட்ட 23 மருத்துவர்களுக்கு சிறந்த மருத்துவர்களான விருதுகள் வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக, முன்னாள் தமிழக காவல் துறை தலைவர் ராதாகிருஷ்ணன், நடிகர் பத்மஸ்ரீ விவேக், கே.ஜி.மருத்துவமனையின் தலைவர் பக்தவச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில், மாற்றத்தினை உருவாக்கும் வகையில் சேவையாற்றி வரும் கல்லீரல் மாற்று சிகிச்சை நிபுணர் முஹம்மது ரீலா மற்றும் பத்மஸ்ரீ நடிகர் விவேக் ஆகியோருக்கு சேஞ்ச் மேக்கர் விருதும், கடந்த 60 வருடங்களாக மருத்துவ சேவை செய்துவரும் மருத்துவர்கள் டி.ஏ.ஆர் அக்பர் அலி, கோபால்சாமி, கனகராஜ், சங்கரராமன் ஆகியோருக்கு மனிதநேய விருதும், மருத்துவ கல்வி மூலம் பல மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வரும் மருத்துவர்கள் ஜி.பக்தவச்சலம், முருகானந்தன், எம்.பி.பரனேஷ் ஆகியோருக்கு சிறந்த மருத்துவ கல்வியாளர் விருதும், மருத்துவ பணியில் சிறந்து விளங்கி வரும் மருத்துவர்கள் அப்பாஸ், பாலசுப்பிரமணியன், பாஸ்கர், ஜெகதீஷ் குமார், எஸ்.குமரேசன், ஆர்.குமரேசன் கருப்புசாமி, நடராஜன், பழனிசாமி, பழனி வேலாயுதம், ரமணி, ரவிசங்கர், சாஜகான், பழனியப்பன் ஆகியோருக்கு சிறந்த மருத்துவர் விருதும் வழங்கப்பட்டது.
விழாவில், 2 நாட்களுக்கு தொடர்ந்து செரிமானம், எண்டோஸ்கோபி உள்ளிட்ட பல துறையின் கீழ் இயங்கும் மருத்துவம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில், இந்தியாவில் உள்ள சிறந்த நிபுணர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். மேலும் 350க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

விழாவில்வி.ஜி.எம். மருத்துவமனை தலைவர் டாக்டர் மோகன் பிரசாத் பேசுகையில், கோவையில் கடந்த 10 ஆண்டுகளாக திருச்சி சாலையில் வி.ஜி.எம் மருத்துவமனை மூலம் பல்வேறு மருத்துவ அறுவை சிகிச்சைகளை குறைந்த கட்டணத்தில் அதிக தரத்தில் வழங்கி வருகிறோம். மேலும் மக்களுக்காகவே பல நவீன மருத்துவ சிகிச்சைகளை கோவையில் நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

எங்கள் மருத்துவமனையின் மூலம் விஜிஎம் பவுண்டேஷன் எனும் அறக்கட்டளை நிறுவி 2 வருடங்களாக பல மருத்துவத் திட்டங்களை பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கி வருவது பெருமைக்குரியதாகும். அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர் பகுதியில் கடந்த 3 வருடங்களாக தொடர் மருத்துவப் பரிசோதனை மூலம் கல்லீரலை பாதிக்கும் ‘சி வைரஸ்’ இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

இதனை உடனடியாக அரசுக்கு தெரிவித்து முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக தற்போது மருத்துவ சிகிச்சைகளை அந்த நோய் பாதித்த 21 கிராமங்களில் உள்ள 55 ஆயிரம் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கி வருகிறோம். இத்திட்டம் வருகிற 2021 ஜூலை மாதம் முடிவடைய திட்டமிட்டுள்ளோம். இதன் மொத்த மருத்துவ சிகிச்சையின் செலவு ரூ.5 கோடி ஆகும். இதற்கு உறுதுணையாக இருந்து வரும் தமிழக அரசுக்கும் எங்களது மருத்துவ குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இந்த அறக்கட்டளையின் மூலம் அடர்வனம் திட்டம் எனும் மரம் நடும் திட்டத்தை துவக்கி இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை கோவையில் நட்டுள்ளோம். தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்புடன் கோவையின் அனைத்து பகுதியிலும் மரங்களை நட திட்டமிட்டுள்ளோம் என்றார்.

விழாவில் மருத்துவர்கள் மதுரா பிரசாத், சுமன், கோகுல், பிரபாகரன், தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நன்றி நண்பர் .:பி கோவை நிருபர் ராஜ்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக