வெள்ளி, 13 ஜூலை, 2018


என் நண்பர்கள் வட்டம்...

என் நண்பர்கள் வட்டம் சிறியது  ...அவ்வப்பொழுது மனதிற்கு பிடித்த பணியையும் தாண்டி நண்பர்களுடன் பேசுவது மிகச்சொற்பம்..ஈரோட்டில் முகநூலில் கிடைத்த நண்பர் பொக்கிஷம்..மணிகண்டன் .7 வருட நட்பு ...கணிப்பொறியாளர் -பெங்களூர் .சமூக செயல்பாட்டாளர் ....அடிக்கடி ஷ்யாமின் நலனை அதிகம் விசாரிப்பார் ... மாதம் ஒருமுறை  தொலைபேசியில் பேசிக்கொள்வோம் ..வருடம் தவறாமல் .புத்தக கண்காட்சியில்.குழந்தைகளுக்கான நிகழ்வில் சந்தித்து கொள்வோம் ...பேசும்பொழுது கேட்கும் தகவல்களை ..கட்டுரை வடிவில் கொண்டு வந்துவிடுவார் ...எதிர்கால தொழிநுட்பங்கள் ,எதிர்கால பணிகள் எப்படி இருக்கப்போகிறது ...நம்மை எப்படி மாற்றி கொள்ளவேண்டும் ..வாழ்க்கைமுறையை ,எதிர்காலத்தில் எப்படி எதிர்கொள்ளவேண்டும் பேசி தெரிந்துகொள்வோம் ...இனிவரும் நாட்களில் உங்களுடன் அதை பகிர்ந்துகொள்வதை பெருமைகொள்கிறேன் ...

புதிய நுட்பங்கள் குறித்து நிறையப் பேர் பேசினார்கள். இது குறித்தான விரிவான உரையாடலுக்கு நிறைய சாத்தியங்கள் இருக்கின்றன. படிக்கும் போதும், வேலை தேடும் போதும் நாம் நிறைய விஷயங்களைப் பற்றி தெரிந்து வைத்திருப்போம். அந்தந்த காலகட்டத்திற்கான புதிய நுட்பங்கள் பற்றி நமக்கு ஓரளவுக்காவது தெரியும். வேலை கிடைத்தவுடன் நம்முடைய தேடல் வெகுவாக குறைந்துவிடுகிறது அல்லது கவனம் சிதறுகிறது. கற்றல் சம்மந்தமாக ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோம்? 

நேரம் இல்லை என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ள இயலாத காரணங்கள். ஒரு நாளைக்கு ஃபேஸ்புக்கில் எவ்வளவு நேரம் இருக்கிறோம்? யூட்யூப்? டிவிட்டர்? வாட்ஸாப்? அதற்கெல்லாம் எப்படி நேரம் கிடைக்கிறது? மேற்சொன்ன எதுவுமே தவறில்லை. எந்நேரமும் படிப்பும் வேலையாகவே சுற்ற முடியுமா? ஆனால் இந்த உலகம் நம்மிடம் புதிது புதிதாக எதையாவது எதிர்பார்த்துக் கொண்டேயிருக்கிறது. வருடம் இருபது லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்து பதினைந்து வருட அனுபவமுள்ள ஆள் செய்யக் கூடிய வேலையை வெறும் ஐந்து வருட அனுபவம் கொண்ட ஒருவருக்கு வருடம் எட்டு லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்து முடித்து விட முடியும். பத்து வருடம் கூடுதல் அனுபவம் இருக்கிறது என்பதற்காக மட்டுமே நம்மை எதற்கு அவர்கள் வேலையில் வைத்திருக்க வேண்டும்? நம்முடைய பங்களிப்பு என்னவாக இருக்கிறது என்பது முக்கியம். செலவுக் குறைப்பு என்று வந்தால் ஏழு கழுதை வயதானவர்களைத்தான் முதலில் வெட்டுவார்கள். 

நவீன யுகத்தில் அனுபவத்தை விடவும் அறிவுதான் நம்மைப் பற்றி அடுத்தவர்களிடம் பேசும். அதை கூர் தீட்டிக் கொண்டேயிருக்க வேண்டியது அவசியமாகியிருக்கிறது. அதிகமில்லை- அடுத்த ஆறு மாதங்களுக்கு தினசரி வெறும் அரை மணி நேரத்தை ஒதுக்கினால் போதும். புதிய ஒன்றைக் கற்றுவிட முடியும். அதைத்தான் நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.  

முப்பது 'ஹாட் நுட்பங்கள்' என்று குறிப்பிட்டிருந்தேன். அந்தப் பட்டியலை தர முடியுமா? என்று கேட்டிருந்தார்கள். வாழைப்பழத்தை உரிக்க சிரமப்படுகிறார்கள். உண்மையில் ஒன்றைத் தேடும் போது குதிரைக்கு கடிவாளமிட்ட மாதிரி அதை மட்டுமே நோக்கி ஓட வேண்டியதில்லை. உதாரணமாக இரண்டாம் உலகப் போர் குறித்தான ஒரு படத்தை பார்க்கிறோம் என்றால், படத்தில் இடம் பெறும் வரலாற்றுச் சம்பவங்கள் குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ள படம் குறித்து மேலும் தேடுகிறோம். வெறுமனே அந்தப் படம் குறித்து மட்டும் தேடினால் என்ன சுவாரசியம் இருக்கிறது. வால் பிடித்த மாதிரி ஒவ்வொன்றாக பிடித்து போய் ஒரு வரலாற்றுச் சித்திரத்தை மனதுக்குள் உருவாக்கிக் கொள்ளும் போதுதான் நம்முடைய தேடல் முடிவடையும். இந்த வால் பிடித்தல் என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தும். உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குச் செல்லும் க்ரோஷியா உலக வரைபடத்தில் எங்கே இருக்கிறது எனத் துழாவி அதன் அழகான அதிபர் தொடங்கி அவரது கணவர் பொறியியல் படிப்பை முடித்தவர் என்பது வரைக்கும் தேடுவதில்தான் நம்முடைய தேடலுக்கான சுவாரஸ்யமே இருக்கிறது. 

படிப்பிலும் கூட அதுதான் நம்மை மேலும் மேலும் தேட வைக்கும். ஒன்றுமில்லை- தினசரி நாம் பயன்படுத்துகிற விஷயங்களையே எடுத்துக் கொள்வோம். ஜி.பி.எஸ் எப்படிச் செயல்படுகிறது? அவற்றுக்கான நுட்பம் என்ன? இப்படியே போனால் Geo - Spatial நுட்பம் பற்றி ஓரளவுக்குத் தெரிந்து கொள்வோம். அதில்தான் ஜி.ஐ.எஸ் வருகிறது. செயற்கைக் கோள் வருகிறது. அதெல்லாம் எனக்கு என்ன சம்பந்தம் என்றெல்லாம் எதையும் கேட்க வேண்டியதில்லை. ஷங்கர் படத்தில் செந்தில் சொல்வது போல இன்பர்மேஷன் இஸ் வெல்த்'. நமக்கு அவசியமே இல்லையென்றாலும் நம் பிள்ளைகளுக்கு சொல்லித்தரவாவது உதவும்.

'இந்த கார் இவ்ளோ பெருசு..ஆனா எடை ரொம்ப குறைவு' என்று சாதாரணமாக பேசுவார்கள். ஆனால் அட்வான்ஸ்ட் மெடீரியல் துறை எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது என்பது பற்றி நமக்கு பெரிய அளவுக்குத் தெரியாது. காம்போசிட், நேனோ, பாலிமர், அல்லாய்ஸ் என்று அது கன வேகத்தில் பயணிக்கிறது. எந்திரவியல் சார்ந்து இருப்பவர்கள் இத்தகைய துறைகளைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக அலசி வைத்திருந்தால் எப்படியும் அத்தகைய ஆட்களுக்கான தேவை இருக்கும். 

மருத்துவம் சார்ந்த நுட்பங்களில் இருப்பவர்களுக்கு ஜெனோமிக்ஸ், பயோனிக்ஸ் என்றெல்லாம் இருக்கிறது. வரிசையாக அடுக்கலாம். 3 - டி பிரிண்டிங், ஆற்றல் (எனர்ஜி) துறையில் வந்திருக்கும் நவீன விஷயங்கள் என்று ஒவ்வொரு துறையும் அசுர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. 

'நீ இதெல்லாம் படிச்சு வெச்சு இருக்கியா?' என்று கேட்டால் எல்லாவற்றையும் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் என்ன புதிய அம்சங்கள் வந்திருக்கின்றன என்று ஓரளவுக்கு கவனித்து வைத்திருக்கிறேன். எலெக்ட்ரானிக்ஸ் ஃபார் யூ மாதிரியான தளங்களை மாதம் இரண்டு முறையாவது மேய்ந்துவிடுவேன். இதே மென்பொருள் துறையில் நான் இருக்கப் போவதில்லை. ஆனால் நான்கு பேரிடம் பேசும் போது மேல்மட்ட அளவிலாவது எனக்குத் தெரியும் என்று காட்டிக் கொள்ளவாவது தெரிந்து கொள்கிறேன். 

கார்பொரேட் நிறுவங்களின் பணியில் இருப்பவர்கள் தம்மை கூர் தீட்டிக் கொண்டேயிருக்க வேண்டும். கார்பொரேட் யுகத்தில் இருப்பவர்கள் மட்டுமில்லை- பேராசிரியர்கள், ஆசிரியர்களும் இதைப்பற்றியெல்லாம் புரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். ஒரு வருடம் இடைவெளி விட்டாலும் இந்த உலகம் பத்து வருடத்துக்கான வளர்ச்சியுடன் முன்னேறி போய்விடும். ஏற்கனவே சொன்னது போல் நம்முடைய அறிவு மட்டுமே நமக்காக அடுத்தவர்களிடம் பேசும். அதை ஆயுதமாக பயன்படுத்தும் வரைக்கும்தான் இந்த நவீன யுகத்தில் நம்மால் ஓட முடியும் இல்லையென்றால் உலகம் அதன் போக்கில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும். நாம் ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பதைத் தவிர ஒன்றும் செய்ய முடியாது. 

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக