வெள்ளி, 13 ஏப்ரல், 2018

எனது நண்பர் ...நீண்ட வருடம் அமெரிக்காவில் வசித்துவரும் திருமதி .கீதா சந்திரா அக்காவின்  சிறு கிறுக்கல்கள் ...உங்களுக்கும் பிடிக்கும் ....

சந்திப்போம் பிரிவோம்
=========================
சற்றே நீளமான கதை . பாத்ரூமில் உட்கார்ந்து போனில் facebook பார்ப்பவரென்றால் piles வரும் அபாயம் உண்டு. அதனால் சாயங்காலம் படித்துக் கொள்ளுங்கள்.
எனது #Trainல்கிறுக்கியது#7 உப்பா சர்க்கரையா கதையில் சண்டை போட்டு தொலைத்த ரவியை சல்லடை போட்டு தேடிக் கண்டுபிடித்தேன். 27 வருடங்கள் கழித்துக் கண்டுபிடித்த அவனை , இந்த கதையின் முடிவில் கட்டையால் நாலு சாத்து சாத்த முற்பட்டதும் உண்மையே…
இத்தனை நாள் நைஜிரியாவில் வேலை பார்த்து இந்தியா திரும்பி மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக சொன்னான். நான் வேலை விஷயமாக இந்தியா வரும்போது மும்பையில் ஒரு நாள் இறங்கி தன்னைப் பார்த்துவிட்டு போகுமாறு சொன்னான்
Flight இல் கண்ணை மூடியதும் நான் , ரவி , நாய்க்கடி ஜனா மூவரும் அடித்த கூத்துக்கள் நினைவுக்கு வந்து தூக்கத்தில் முறுவலிக்க வைத்தது….ரவி அப்போதே பிரம்மாண்டமாக இருப்பான் அதற்கு மேல் வளர வாய்ப்பில்லை தான்…
எந்த கவலையுமின்றி நான் ,அவன் ,ஜனா , மூவரும் ரசீதுகளில் இருந்து தடிமனான லெட்ஜர்களுக்கு vouching பார்த்தபடி , ,ஒன் பை த்ரீ டீ குடித்துக் கொண்டு , ஆடிட்டர் அமாவாசை தர்ப்பணம் முடிந்து full மீல்ஸ் சாப்பிட்டு நேரே ஆபிஸ் வருவாரா ? இல்லை குட்டி தூக்கம் போட்டு வருவாரா போன்ற மாபெரும் விஷயங்களுக்கு பெட் கட்டி பொழுதை ஓட்டிய பொற்காலம் அது.
எங்களுடைய பெரிய பொழுதுபோக்கே ரவி எந்த பெண்ணை மடக்க நினைக்கிறான், அதற்கான SWOT analysis பற்றி அவனது அரிய கருத்துக்களை கேட்பது தான். முதலில் என்னுள் இருந்த பெண்ணியம் கொதித்துப் போய் “அதெப்படி மடக்கறதுங்கற வார்த்தையை யூஸ் பண்ணுவ….நாங்க என்ன புடவையா?” என்று குதித்தேன். பின்னர் இவன் வெறும் வெத்து வாய் சவடால்….பொண்ண மடக்கறதாவது பொண்ணு போட்டோவை கூட மடக்க முடியாது என்று தெரிந்து சிரித்தபடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்
ஆபீஸ் எதிர்த்தாற்போல் ஒரு டைப் இன்ஸ்டிடியூட் உண்டு. ஒவ்வொரு கிளாஸ் முடியும் போதும் இவனும் ஜனாவும் வாசலில் நின்று அத்தனை அம்மணிகளையும் நோட்டம் விடுவார்கள். நான் அவனிடம்..” பாவம் ஒண்ணு கூட உன்னை திரும்பி பாக்க மாட்டேங்குதே “ என்பேன். “இப்ப பாரு இப்ப பாரு தெரு முனைக்கு போனதும் ஒரு square drive அடிப்பா பாரு “ என்பான்… அப்படி அவனை திரும்பி பார்த்தவள் தான் கிருஷ்ணன் குட்டி , “கி குட்டி” என்பது ரவி அவளுக்கு வைத்த பெயர். அப்போது அவள் இயற் பெயர் தெரியாது.
ரவி “கி குட்டி”யை விடாமல் பஸ் ஸ்டாப் , அவள் வீடு , காலேஜ் என்று துரத்திக் கொண்டிருந்தான். அவள் சேர்ந்த டைப்பிங் கிளாசில் இவனும் சேர்ந்து டைப் அடிக்கயில் , மொத்த ASDFGF கீக்களும் கொத்தாய் பேப்பரை கவ்வ ……வாங்கி பார்த்த மாஸ்டர் , ரவியின் விரலைப் பரிசோதித்து “அடேய் இந்த விரலை வெச்சுகிட்டு நீ தவில் தான் வாசிக்கணும் டைபிங்க்லாம் வரக்கூடாது “ என்று கண்டித்து விரட்டியதாய் ஜனா சொன்னான்.
அவள் வருகிறாள் என்று , என்னையும் ஜனாவையும் வேறு அவ்வப்போது துணைக்குக் கூட்டிக்கொண்டு போய் கோவிலைச் சுற்றுவான். இப்போது யோசித்தால் நாங்கள் இருவரும் எதற்காக இவனோடு எடுபிடி மாதிரி சுற்றினோம் என்று புரியவில்லை. அவளுக்கு லெட்டர் குடுக்க என்னை கோவிலுக்குள் இருக்கும் அகோர வீரபத்திரர் சிலைக்கருகில் காக்க வைத்ததில் ஒரு முறை என் மேல் நாலு பேர் வெண்ணெய் பந்தை சாத்தும்ஆபத்து இருந்தது.
.
அவ ளிடம் கொடுப்பதற்க்காக என்னிடம் கவிதைகள் வேறு கடன் வாங்கிப் போவான்…நானும் உருகி….”மண்ணாய் மாற வேண்டுமென்று மானிடன் நான் விரும்புகின்றேன்……மருதோன்றி சிவப்பொளிரும் உன் மாசறு பாதத்தை முத்தமிட” என்றெல்லாம் தாறுமாறாக எழுதிக் கொடுப்பேன். அவனும் கிறுகிறுத்துப் போய்…”ஏய் நீயேவா எழுதின? இல்ல வைரமுத்துட்ட சுட்டியா?” என்று கேட்டு வாங்கிப் போவான். அவள் அதைப் படித்துப் பார்த்துவிட்டு ….”மருதோன்றின்னா என்ன?” என்று கேட்டு விட மறுமுறை மறக்காமல் பொழிப்புரை வாங்கிப் போனான்
“பேங்க் ல போட்டா அந்த செக் தாவுதாம்…ஏன்னா அது பௌண்ஸ் ஆன செக்காம்” போன்ற அந்துருண்டை ஜோக்குகளையெல்லாம் சொல்லி கடைசியில் “கி குட்டி” (இப்போது இவள் பெயர் வினோதா என்று தெரிந்து கொண்டேன்) இவனிடம் மயங்கித்தான் போனது….ஒரு மாதிரி அவள் அம்மாவிற்கு ரேஷன் வாங்கிக்கொடுத்து , அப்பாவிற்கு சைக்கிள் துடைத்துக் கொடுத்து , குடும்ப நண்பன் ஆகி விட்டான்.
நான் கூட “அடடா இந்த யானையும் பால் குடிக்குமா ங்கிற மாதிரி இருந்து இப்படி சாதிச்சிட்டயே” என்று அந்த ஆன்மீக காதலை சிலாகித்தேன்.
சுமுகமாய் போய்க்கொண்டிருந்த அந்த மரோசரித்ராவில் திருப்பம் , வினோதாவின் அப்பா வீடியோவில் ஆங்கிலதிரில்லர் படம் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதுதான். ரவியிடம் வீடியோ VCR இருந்தது. அதை அவன் வீட்டில் இருந்து வினோதா வீட்டுக்கு எடுத்துக் போய் சுபயோக சுபதினத்தில்…..படம் பெயர் சரிவர நினைவில்லை “Day of the Jackal” என்று நினைக்கிறேன் ….படம் பார்க்க ஏற்பாடாயிற்று….ஆங்கிலப் படங்களை முழுதும் நம்ப முடியாதாகையால் ..ஜனா முன்னாடி டிவி அருகில் தயார் நிலையில் உட்கார்ந்து இருந்தான். பின்னால் சேரில் வினோதா, நான், அவள் அம்மா, பாட்டி, தாத்தா, அப்பா, கொள்ளுத்தாத்தா மற்றும் ரவி.. படம் விறுவிறுப்பாகவே போனது…திடீரென்று சற்றும் எதிர்பாராமல் ஹீரோ குளித்து விட்டு பப்பி ஷேமாய் வெளியே வந்தான். ரவி திகைத்து….”ஜனா” என்று பதற, தயாராய் இல்லாத ஜனா பதட்டத்தில் “Pause” பட்டனை அழுத்தினான். திரையில் பிம்பம் உறைந்து திகம்பர சாமியாராக ஹீரோ நிற்க, .ரவி மேலும் அலற ஜனா இன்னும் பதட்டத்தில் volume ஐ குறைக்க,,, கொள்ளுத்தாத்தா ஒன்றும் புரியாமல் கண்ணாடியைத் துடைத்து மாட்ட…அந்த களேபரத்தில் நான் எஸ்கேப்…..
அதன் பின்னர் எனக்கும் ரவிக்கும் ஏதோ அற்ப புத்தக விவகாரத்தில் சண்டை வந்து, பிரிந்து , பேச்சு வார்த்தை இல்லாமல் , இதோ இப்போது தான் ஏர்போர்ட்டில் சந்தித்து உருகி அவனுடன் வீட்டிற்கு போகிறேன்
அவன் மனைவி…..நீங்கள் நினைத்தது சரி தான்…வினோதா சிரித்தபடி வரவேற்றாள்
“ உங்கள பத்தி நாங்க நினைக்காத நாள் இல்ல” என்றாள். இது ஒரு வரம் ,...மனைவியின் நட்புக்களை கணவனும் கணவனின் நட்புக்களை மனைவியும் அன்புடன் அங்கீகரிப்பது நெகிழ்ச்சி.
மனம் நெகிழ்ந்து சிரித்தபோது ரவியின் பெண் உள்ளே வந்தாள்…..அசர வைக்கும் அழகு அம்மாவைப்போல்,
அறிமுகம் முடிந்ததும் ரவி அவளிடம் சிடுசிடுப்புடன் குரல் தாழ்த்தி….”யார் கொண்டு வந்து drop பண்ணினான்” என்று ஏதேதோ அதட்டியபடி உள்ளே போனான்--------
சிறிது நிமிடத்தில் வெளியே வந்து என்னிடம்….”இந்த காலத்து பசங்கள நம்ப முடியாது,,, வயசுப் பொண்ண வளக்கறதுக்குள்ள போதும் போதும்னு இருக்கு கண்டவனும் பின்னாடி சுத்தறான்” என்று சலித்துக் கொண்டான்
நான் வியப்போடு அவனைப் பார்த்தேன்…
சுற்றுமுற்றும் தேடினேன்
அவன்..” என்ன தேடறே ?” என்றான்
“உன் மண்டைல அடிக்க ஒரு கட்டைய” என்றேன்
வினோதா சிரித்தபடி என்கிட்டே குடு என்றாள்..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக