வியாழன், 14 மே, 2020

கேள்வி : ஒருவர் என்னை ஏற்று கொள்ளாத போது அதை சகஜமாக கடந்து செல்வது எப்படி?

என் பதில் :..

ஒருவரை நம்மை ஏற்றுக் கொள்ளவில்லை என்று நினைக்கும்போது நாம் அவரை சார்ந்து இருக்கிறோம் என்பதின் உள்ளர்த்தம் அடங்கிவிடுகிறது.
முதலில் மன வருத்தம் தான் இருக்கும். அதை எதிர்கொள்ளும் தைரியம் நமக்கு இருக்க வேண்டும்.

நம்முடைய திறமையை அவருக்குத் தெரிந்திருந்தால் நம்மை கடந்தது சென்றிருக்க மாட்டார் ஏதோ நம்மிடம் ஒரு குறை இருக்கிறது அது என்ன என்பதை ஆராய்ந்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்
அவரை நாம் எதிரியாக நினைக்க வேண்டிய அவசியமில்லை.


சாலையில் செல்லும்போது வாகனத்தை நம்மை கடந்து செல்பவராக நினைத்து விட்டுவிட வேண்டும்.


உங்களுடைய தனித்தன்மையை எடுத்துக்காட்ட இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


இதுபோல் பல இடங்களில் நம்மை ஏற்றுக் கொள்ளாதவர் நடந்திருந்தால் பெரிய பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு.


நாமும் அவரைப்போல் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்பதை ஒரு வாய்ப்பு அளித்தார்கள் என்று நினைத்து நாம் சகஜமாக கடந்து செல்ல வேண்டும் அல்லது சவாலாக ஏற்று நிறைவேற்றிக் காட்ட வேண்டும்.


இந்த மன தைரியம் தான் நம்மளை வாழவைக்கும்.

ஒருவர் நிராகரித்துவிட்டார் என்பதற்காக நாம் அனைத்தையும் இழந்துவிட்டோம் என்று நினைத்து மனம் வருந்துவதை விட நமக்கு நாமே நம்பிக்கை ஊட்டி செயல்படுத்திக் காட்டவேண்டும்.


நீங்கள் கேட்ட கேள்வியை மற்றவர்கள் பதிலளித்து இருப்பதை நான் பார்ப்பதே இல்லை. உங்கள் கேள்விக்கு பதில் அளித்த பிறகே மற்றவருடைய பதிலையும் படிப்பேன்.


இதுபோல் தான் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் மற்றவர்கள் நம்மை ஏற்றுக் கொள்ளாத போது சகஜமாக இருக்க முடியும்.

நன்றி ....


கேள்வி :.'பாய்ஸ் லாக்கர் ரூம்' விவகாரம் பற்றி தெரியுமா?


என் பதில் :...நான் சொல்வதை விட ..என் நண்பர் முதுகலை ஆசிரியர் .குணசீலன் ஸ்ரீரங்கன் .அவரிடம் கேட்டேன் ..அருமையான பதில் பதிவின் மூலம் அளித்தார் ..


ஹ்ம்ம்….கேள்விப்பட்டேன்….சமூக வலைதளங்களில கசிந்த ஒரு விடயம் மாணவர்களின் இன்றைய மனநிலையை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.

அதே போல் girls லாக்கர் ரூம் என்ற செய்தியும் வந்தது.

இது போன்ற மாணவர்களை தான் நாங்கள் பள்ளியில் எதிர்கொண்டு இருக்கிறோம்.இன்றைய மாணவர்கள் தொழில் நுட்ப வளர்ச்சியால் அவர்களின் மனநிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

தலைமுறை இடைவெளி போன்ற காரணங்கள் அவர்களை கட்டுக்குள் கொண்டு வர சிரமம் ஏற்படுகிறது.

படிப்பு என்பது அவனுக்கு இரண்டாம் பட்சம் தான். அவனுக்கு தற்பொழுது முதன்மையாக தெரிவது மொபைல் ,லேப்டாப்,போன்ற பொழுதுபோக்கு சாதனங்கள் தான்.

நானே எனது பள்ளியில் நிறைய மாணவர்களிடம முழுவதும் காம லீலைகள் அடங்கிய காணொளி காட்சிகளை பென்டிரைவ் , மெமரி கார்டு போன்றவற்றில் பதிவேற்றம் செய்து தன்னுடைய நண்பர்களுக்கு பகிர்வதற்கு பள்ளிக்கு எடுத்து வந்து இருப்பதை நிறைய முறை நான் கண்டுபிடித்து பறிமுதல் செய்து அதை உடைத்து விடுவேன்.

ஆனால் இது போல் நடப் பது சகஜமாக போய்விட்டது.நீங்கள் இந்த மாதிரி சூழலில் என்ன முடிவு எடுப்பீர்கள்??????

உளவியல் ரீதியாக பல பிரச்சினைகளை தற்போதய மாணவர்கள் எதிர்கொள்கின்றனர்.

சமூக வலைதளங்கள் மாணவர்களின் சிந்தனையை தீய வழிகளில கொண்டு செல்வது பற்றி இங்கு யார் கேள்வி கேட்பது?????

மாணவர்கள் மற்றும் அவர்களின பெற்றோர்களின் தற்போதய உறவுநிலை எந்த அளவில் உள்ளது??

இன்று பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் உள்ளன.வீட்டில் இருந்த படி சம்பாதிக்க முடியும்.புகழ் மற்றும் பிரபல்யம் அடைவது போன்ற செயல்கள் மிக எளிது.அதற்கு அடிமையாய் போவது இன்று எளிது.

நிலையான,,,, தான் கற்ற கல்வியே நம்மை செம்மைப்படுத்தும் என்பதை மாணவ பருவத்தில் மறந்து செயல்படுகின்றனர்.அது அம்மானவர்களை தீய வழியில் இட்டு செல்கிறது.

பெண்களை பற்றிய ஆண்களின் பார்வை,ஆண்களை பற்றிய பெண்களின் பார்வை எப்படி இருக்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் ,மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு புரிய வைப்பது இங்கு அவசியம் ஆகிறது.

இல்லை எனில் ,,இச்சமூகம் போகும் பாதை நல்வழியில் நிச்சயம் இருக்காது.உளவியல் ரீதியான கல்வி மாணவர்களுக்கு அவசியம்.தொழில்நுட்பத்தினை ஆக்கபூர்வமான முறையில் பயன் படுத்தும் முறையினை அவனுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

நாங்கள் எப்பொழுதும் கத்தி மேல் தான் நடந்து கொண்டிருக்கிறோம்.என்னால் முடிந்தவரை என் மாணவர்க ளை செம்மைப்படுத்த என்னால் முடிந்ததை செய்கிறேன்.

அவனுக்கு பள்ளி பாடம் நடத்துவதை விட வாழ்க்கை பாடம் எடுப்பதே பெரும் பாடாக இருக்கிறது இன்று.அவ்வளவு உளவியல் சிக்கல்களை சந்தித்து கொண்டு இருக்கிறான் தினம் தினமும் இச்சமூகத்தால்!!!!

நன்றி ....

புதன், 13 மே, 2020

கேள்வி : வாழ்க்கையின் சில அருவருப்பான உண்மைகள் யாவை?

என் பதில் :..

99% நண்பர்கள் சுயநலவாதிகள் மீதம் 1% ஏமாளிகள்.

மகனைப் பெற்ற தாய்மார்கள் அவனுக்கு திருமணம் ஆன பின்பு பெரும்பாலும் அவனைமகனாக பார்ப்பதில்லை மருமகளின் கணவனாகவே பார்க்கிறார்கள்.

எனக்கு நீ என்ன செஞ்ச அப்படின்னு கேக்குறதுக்கு ஒரு கூட்டமே நம்மள சுத்தி இருக்கும். உனக்கு என்னடா வேணும், நான் உனக்கு செய்கிறேன் அப்படின்னு கேக்குறதுக்கு ஒரு பய கூட இருக்கமாட்டான்.

அவசரமா இந்த வேலைய முடிக்கணும் அப்படின்னு சொல்ற கஸ்டமர்கள் பலபேறு அவர் கொடுக்கவேண்டிய கட்டணத்தை ரொம்ப தாமதமாகவே கொடுக்கிறார்கள்.


Todo லிஸ்ட் போட்டு ஆரம்பிக்கிற வேலை பெரும்பாலும் முடியறதே இல்ல. Todo லிஸ்ட்ல தான் இருக்கு.

செவ்வாய், 12 மே, 2020

கேள்வி :சேற்று மண்ணில் கால் புதைந்ததால் ஒருவரின் முகம் அருவருப்பு கொண்டதை நேரில் கண்டேன். இவர்கள் தானா மண்ணின் மைந்தர்கள்?

என் பதில் ...

முதலில் யார் மண்ணின் மைந்தர்கள் என்பதை வரையறுத்தது கொள்வோம் ,

இம் மண்ணில் பிறந்து இம் மண்ணிற்காக வாழ்ந்து பல சிறப்புகளை சேர்த்து இந்த மண்ணில் மடிபவர்கள் தான் மண்ணின் மைந்தர்கள் அப்படி பார்க்கும்பொழுது மனிதர்கள் என்றும் மண்ணின் மைந்தர்கள் இல்லை..

உண்மையில் மண்ணின் மைந்தர்கள் கரப்பான் பூச்சிகளும், மண்புழுக்களும் தான் , அவைகளால் மட்டுமே மண்ணின்கு வளமும் நலமும் அடைகின்றனர் அவைகள் தான் மண்ணில் பிறந்து மண்ணை உண்டு மண்ணில் மடிகின்றன,



சேற்று மண்ணில் கால் புதைந்ததால் ஒருவரின் முகம் அருவருப்பு கொண்டதை நேரில் கண்டேன் இவர்கள் தான் மண்ணின் மைந்தர்கள்?


சேற்று மண்ணின் சுவாசமும் வாசமும் சுவையும் யாவரும் அறிவதில்லை. விவசாய குடும்பதில் பிறந்தவர்களுக்கே வயல்சேறு முகம் சுழிக்கதான் செய்கிறது.


என் தாத்தா தளி ஜல்லிபட்டி குமாரசாமி வயல் மண்ணோடு(மானுப்பட்டி அருகே ) உறவாடி வேலைசெய்த பிறகு கைகூட கழுவாமல் கஞ்சி கலனில் கைவிட்டு சாப்பிடுவார் மண் வாசத்திற்கு ஈடே இல்லை என்று என் அம்மா சொல்ல கேட்டு இருக்கிறேன்


முகம் சுழிப்பவர்கள் சுழிக்கட்டும் ஆனால் என்றும் சேற்று மண்ணில் களிப்பவர்களும் உண்டு என்போன்றோர்கள் அய்யா,,


சேற்றில் பட்ட என் கால்களை கூட பல நாட்கள் நான் ரசித்ததுண்டு


நன்றி...
கேள்வி :.மனைவியின் தொல்லை தாங்க முடியவில்லை என்று கணவர்கள் புலம்புவது ஏன்? அப்படி என்ன, ஏன் தொல்லை கொடுக்கிறார்கள் மனைவிகள்?

என் பதில் :..


நம்ம கதையையே இங்க சொல்லலாம். இரவில் படுக்கும் முன் என் மனைவி "நாளைக்கு காலைல ஞாபகப்படுத்துங்க" என்றார். நான் "என்ன ஞாபகப்படுத்தணும்?" பதில் வந்தது "அதை காலைல சொல்றேன்".

 காலையில் ஞாபகப்படுத்தினால் "என்ன விஷயம்?" என்றார். நான் "ஒன்றுமில்லை" என்றேன். "ஏதாவது லூசுத்தனமா உளற வேண்டியது" பதில் வந்தது. மறுநாள் வெளியே வந்து இருந்தேன். ஃபோன் வந்தது.


"எங்க இருக்கீங்க?" ஃபோன் எடுத்தவுடனே "ஹலோ" கூட இல்லை "எங்க இருக்கீங்க?" இது எல்லா மனைவிகளும் செய்வது.


"சொல்லுமா.. என்ன வேணும்?"


மறுபடியும் "எங்க இருக்கீங்க?"


கடுப்பாகி "சொல்லு…என்ன வாங்கணும்?"


"எங்க இருக்கீங்க னு சொன்னாதானே என்ன வாங்கணும்னு சொல்ல முடியும்".


"மார்க்கெட் ல இருக்கேன்"


"அங்க ஒன்னும் வேலையில்லை. மளிகைக் கடைக்கு வந்துட்டு ஃபோன் பண்ணுங்க".


"மளிகைக் கடைக்கு வந்துட்டேன்".


"வெளியே தானே (social distance) நிக்கிறீங்க? கடைக்கு உள்ளே போனதும் கால் பண்ணுங்க"


"கடைக்குள்ள வந்துட்டேன்"


"நான் சொல்றதெல்லாம் வாங்கனும்" 10 அயிட்டம் சொன்ன மாதிரி இருந்தது. பொருட்கள் எடுத்தபின் கணக்கு பண்ணி பார்த்தேன். 8 தான் இருந்தது. மீண்டும் ஃபோன் செய்து கேட்டால் ஒரே புலம்பல்.

"ஒரு பத்து சாமான் ஞாபகமாக வாங்க முடியல உங்களையெல்லாம் என்ன பண்றது?" பிரச்சினை என்ன என்றால் அவங்களுக்கு மறந்து விட்டது. அதை சமாளிக்க என் மீது பழியை தூக்கி போடுவது.


இப்போது உஷாராக கிளம்பும் போதே பேப்பரில் எழுதி வைத்து கொண்டு கிளம்புவேன். பேப்பரில் இருப்பது மட்டும் வாங்கி கொண்டு வருகிறேன். இதுபோல காய்கறிகள் வாங்குவது அது தனியாக ஒரு பதிவு எழுத வேண்டும்.


திங்கள், 11 மே, 2020


கேள்வி :..அன்று உறவுகள் சுகமான சுமைகளாக தெரிந்தவர்கள், இன்று சுமைகளாக மட்டும் தெரிய காரணம் என்ன?

என் பதில் :..



"நமக்கும் நாலு பேரு வேணும்பா" இதை இப்போது கூறினால் "அட போயா சும்மா பழைய கதையை பேசிகிட்டு..எங்களுக்கு எதுக்கு அந்த நாலு பேரு காசு கொடுத்தா நாற்பது பேரு வந்து நமக்கு ஊழியம் பண்ணுவான்" என்று பதில் வரும்.


இப்போது இருக்கும் சூழலில்,கணவன்,மனைவி இருவரும் வேலைக்குச் செல்வது பெரும்பான்மை ஆகி விட்டது.விருந்தினர் வருகை என்றாலே வீட்டை சுத்தப்படுத்த வேண்டும்,அவர்களை கவனிக்க வேண்டும்,முறையாக சமையல் செய்ய வேண்டும் (No Swiggy,No Zomato),தேவைப்பட்டால் அலுவலக விடுப்பு எடுக்க வேண்டும் என பல சங்கடங்கள்.சரிப்பா வார நாட்களில் வந்தா தான கஷ்டம் வார இறுதில வர சொல்லுங்க என்று நீங்கள் நினைத்தால் அதிலும் சிக்கல் இருக்கு பாஸ்.


எங்களுக்கு கிடைக்கறதே வாரத்தில் ஒண்ணு இல்ல ரெண்டு நாள் தான்.அப்பவும் சமைக்க,துடைக்க,துவைக்க இது மாதிரி ஆயிரம் வேலை இருக்கு.பசங்களை வேற டான்ஸ் கிளாஸ்,பாட்டு கிளாஸ்,இன்ன பிற கிளாஸ் விட்டு கூட்டி வரணும்.


இதுக்கு எல்லாம் மேல,ஒரு நாள் தான் லேட்டா தூங்கி லேட்டா எழுந்துக்க முடியும்.அப்படியே சாயங்காலமா கிளம்பி மால்/சினிமா/பீச்சுனு போயிட்டு அப்படியே டின்னர நல்லா சாப்பிட்டு வரலாமுன்னு பார்த்தா இதை எல்லாம் கெடுக்குற மாதிரி விருந்தாளிக வந்தா நல்லாவா இருக்கும் !? சொல்லுங்கண்ணே சொல்லுங்க..

மேற்கூறியது ஒரு எடுத்துக்காட்டு தான்.அதாகப்பட்டது,

உறவுகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டாமை.

தினசரி வாழ்க்கையில் நேரமின்மை.

தனது வழக்கமான அட்டவணையில் மாற்றத்தை விரும்பாமை.

உறவுகளின் மதிப்பு மற்றும் அருமையை அறியாமை.

ஒத்துப்போகும் ,விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமை.

உறவுகளுக்கு உதவி செய்வதில் காட்டும் தயக்கம்.

உறவுகளை அனுசரித்து செயல்படுவதில் உள்ள சிரமம்.

உறவுகளின் நிறைகளை குறைவாகவும்,குறைகளை அதிகமாகவும் எடை போடுதல்.

இவை அனைத்தும் காரணங்களே..ஆனால் எல்லாவற்றிற்கும் மேல்,

"மனமிருந்தால் மார்க்கமுண்டு".உறவுகள் சுகமாக தெரிவதற்கும் சுமையாக தெரிவதற்கும் நம்முடைய மனநிலை (Mindset) ஒன்று தான் காரணி.


இன்றும் கூட சொந்த பந்தம் அனைத்தும் ஒன்று கூடி, பெருசு முதல் சிறுசு வரை,பண்டிகை,விசேஷம்,சுற்றுலா என்று அசத்தும் குடும்ப உறவுகள் ஆங்காங்கே அவ்வப்போது தென்படும்....நீங்களும் பார்த்து இருப்பீர்கள் ஏக்க பெருமூச்சுடன் ...


நன்றி ...மனா ஆறுதலுக்காக சில சொந்தங்களையாவது வாழ்க்கையில்  சேர்த்துவையுங்கள் ...

ஞாயிறு, 10 மே, 2020

உங்கள் அம்மாவிடம் உங்களுக்கு பிடித்த விஷயம் அல்லது குணம் என்ன?

என் பதில் :..அம்மாவிடம் அனைத்து குணங்களும் பிடிக்கும்

எப்போதெல்லாம் இந்த உலகத்தில் வாழ பணம் தான் ரொம்ப முக்கியம். பணம் இல்லைன்னா யாரும் மதிக்க மாட்டாங்கன்னு நான் பேசுவனோ அப்பலாம் எங்க அம்மா சொல்லுவாங்க.

சிவா ..., ஒரு விஷயத்தை நல்லா தெரிஞ்சிக்க. பணம் இன்னைக்கு வரும் நாளைக்கு போகும். வாழ்கையில பணத்தை எப்ப வேணும்னாலும் சம்பாதிக்கலாம். ஆனா நல்ல பேர், நல்ல மனிஷங்களை சம்பாதிக்குறது தான் கஷ்டம்.

எவ்வளவு கோபமா இருந்தாலும் என் அம்மா இதை கூறினால்  அமைதியாயிடுவேன். அவங்க சொல்வதில் நியாயம் இருப்பது போலவே தோன்றும்.

மத்தவங்க கஷ்டபடுறத பார்த்தா உதவி செய்யணும். பணம் பெருசா இல்லை மனிதாபிமானம் பெரிதான்னு ஒரு நிலைமை வரும் போது. மனிதாபிமானத்தை தான் தேர்ந்தெடுக்கணும். இந்த குணம் என் அம்மாவிடமிருந்து எனக்கு வந்தது.


என்னால யாருக்காவது உதவி செய்ய முடியும் இல்லை அந்த இடத்தைவிட்டு விலகி போகவும் முடியும். இதுல எதை செய்யுவன்னு கேட்டா கண்டிப்பா உதவி தான் செய்வேன். அது தான் என்னுடைய அம்மா எனக்கு கற்று தந்தது.

நன்றி ..அன்னையர் தின வாழ்த்துக்கள் ..
கேள்வி ..கேட்கும் போதே உங்களை கண்ணீர் சிந்த வைத்த பாடல் எது?

பதில் ...அன்னையர் தினம் ...

சில பாடல்கள் பாடிய விதம் பிடித்திருக்கும்.

சில பாடல்களில் வரிகள் பிடித்திருக்கும்.

அப்படி எனக்கு பிடித்த பாடல்கள்  உண்டு. கேட்பவரை கண் கலங்க வைக்கும் தாய்பாசம் குறித்தப்பாடல்.

படம் : வேலையில்லா பட்டதாரி.

பாடல் :அம்மா அம்மா.

இந்த பாடலின் வரிகள் என்னை அழவைத்துவிடும். தாயின் பிரிவை எண்ணி கலங்கும் பிள்ளை. அதற்கு தாய் கூறும் ஆறுதல். மிக அழகான பாடல்.


https://youtu.be/7E0iklvIZew
கேள்வி :உங்கள் வாழ்க்கையின் ஒரு மோசமான கட்டத்தில் இருந்து நீங்கள் எப்படி அந்த பக்கத்தைத் திருப்புவீர்கள்?

என் பதில் :..

சுமார் ஒரு 8 வருடம்  முன்பு என் வாழ்க்கையின் சோதனை காலகட்டங்களில் நான் சிக்கிக் கொண்டிருந்தேன். கடன் வாங்கியவர்களுக்கு வட்டி கொடுக்க வேண்டும், வாகன தவணை கட்ட வேண்டும்,  இதுவரை எந்த பிரச்னை வந்தாலும் எனக்கு உதவும் என் பெற்றோரால்  எனக்கு உதவ முடியாத சூழ்நிலை,


இரவுகளில் தூக்கத்திற்கு பதில் கண்ணீரும் கவலையும் வந்து ஒட்டிக்கொண்டது. என் செய்வது என்று தெரியவில்லை. எனக்கு உதவாத எல்லோரையும் மனதில் குறை கூறி கொண்டிருந்தேன் கடவுள் உட்பட. எதுவும் உதவவில்லை. மேலும் கவலை தான் அதிகரித்தது.


வழக்கம்போல் ஒரு இரவு தூங்குவதற்கு எவ்வளவு சிரமப்பட்டும் தூக்கம் வரவில்லை. எழுந்து அமர்ந்து ஒரு நோட்டு புத்தகத்தை எடுத்து எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்று எழுத தொடங்கினேன். அதில் சில நல்ல யோசனைகளும் பல மோசமான யோசனைகளும் இருந்தன. இது மாதிரி ஒரு வாரம் தினமும் எழுதியதில் என்னால் செயல்படுத்தக்கூடிய ஒரு 5 யோசனைகளை எடுத்து அதை செயல்படுத்த தொடங்கினேன்.


எனக்கு தெரிந்ததை நிதியியல் துறை சார்ந்து கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். நான் எதிர்பார்த்ததை விட அதிகம் பேர் என்னிடம் கற்றுக்கொள்ள ஆர்வமாய் இருந்தனர்.கட்டுரைகள் ..சிறு சிறு டிப்ஸ் தெரிந்தவர்களுக்கும் ,என் வாடிக்கையாளர்களுக்கும் ..நண்பர்களுக்கும் .சொந்தங்களுக்கும் தகவல்களாக சொல்லிக்கொண்டு இருந்தேன் ..நல்ல முன்னேற்றம் ..
.
மற்றவர்களுக்கு கற்று தர வேண்டுமெனில் நாம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதினால் நானும் மேலும் நிறைய துறை சார்ந்து கற்றுக்கொண்டேன் அது என் வளர்ச்சிக்கும் உதவியது.


அப்பொழுது சில வாழ்க்கையின் படிப்பினைகளை உணர்ந்தேன்

ஒவ்வொரு பிரச்னையும் அதற்க்கான தீர்வை தன்னுள் ரகிசியமாக மறைத்துவைத்துக்கொண்டு வந்துள்ளது. நாம் பிரச்னையை பார்க்கிறோம் அது கொண்டு வரும் தீர்வை விட்டு விடுகிறோம்.

ஒரு பிரச்சனையில் இருந்து தப்பிக்கும் பொழுது அதன் தீர்வில் இருந்தும் கூட தப்பித்து விடுகிறோம்.

பிரச்சனைகள் மாறுவேடத்தில் உள்ள ஆசீர்வாதங்கள்.

பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கொள்வதினால் ஒருபோதும் பிரச்னையை தீர்க்க முடியாது. அது கொண்டு வரும் ரகசிய வாய்ப்பை பார்க்க கற்றுக்கொள்வதினால் மட்டுமே அதை தீர்க்க முடியும்.

தளபதி விஜய் சொன்னமாதிரி, "வாய்ப்புகள்ல இருக்க கஷ்டத்த பாக்கறவங்க தோத்தராங்க, ஆனா அந்த கஷ்டத்துலயும் இருக்க வாய்ப்ப பாக்கறவங்க ஜெயிச்சர்ராங்க"

உங்க வாழ்க்கைல வர பிரச்னைய ரெண்டு வகைல நீங்க கையாளலாம்

அந்த பிரச்னைய உங்கள கட்டுப்படுத்த விடலாம்.

இல்லனா நீங்க அந்த பிரச்னையை கட்டுப்படுத்தலாம்.

இதுல எத தேர்வு செய்யறதுன்னு நம்ம தான் முடிவு பண்ணனும். நீங்க ஒரு பிரச்னையை பாத்து எழுந்து நீன்னு சண்ட கட்டலாம்னு முடிவு பண்ணிட்டா அதுக்கான சக்தியும், வழியையும் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பி வைக்கும்.

நன்றி ...தினம் தினம் கற்றுக்கொள்வோம் ...
Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

CAR LOANS,MUTUAL FUND,FIXED DEPOSIT,HOME LOANS,INSURENCE
Please be free to communicate at any time and it is our pleasure to serve you always.

கேள்வி :  உங்களுக்குப் பிடித்த வசனம் என்ன?


என் பதில்....ஜப்பான் ஹோண்டா ..வரலாறைதான் சொல்லமுடியும்

"வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே'"

 இது உலகையே திரும்பி பார்க்க வைத்த ஒரு மனிதனின் கதை

முன்னொரு காலத்தில் “பிழைக்கத் தெரியாத முட்டாள்” என்று 18 வயது இளைஞனை அவனது அப்பா திட்டினார். தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்டக்காரன் என்று கேலி பேசினார்கள் அவனது நண்பர்கள். அந்த இளைஞன் அடைந்த தொடர் தோல்விகளை உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால், எப்போதோ தற்கொலை செய்துக் கொண்டிருப்பார்கள். அத்தனை தோல்விகளையும் உள்வாங்கி, கடைசியில் பிரமாண்டமான வெற்றியை தனதாக்கிய அந்த மாமனிதன் தான் “சாய்க்கிரோ ஹோண்டா”.

தனது வாழ்க்கை அனுபத்தை சாறு பிழிந்து எடுப்பது போன்று “வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே” என்று அந்த இளைஞன் சொன்னார். Toyota நிறுவனத்திற்கு piston (உந்துருளி) தயாரிக்கும் தொழிற்கூடம் உருவாக்க வேண்டும் என்பது மாணவர் சாய்க்கிரோ ஹோண்டாவின் கனவு. யாருக்காகவும் அவன்காத்திருக்கவில்லை. அப்பாவின் திட்டு , சக மாணவர்களின் கேலிகளுக்கு இடையே, மாதிரி உலோகம் உருக்கும் கூடம் ஒன்றை 1928ஆம் ஆண்டு உருவாக்கினார்.

இதற்காக இரவு பகலாக உழைத்தார். ஓராண்டு காலமாக கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய, மாதிரி piston ஐ பெரும் எதிர்பார்ப்புடன் Toyota நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

எங்கள் எதிர்பார்ப்புக்குரிய தரத்தில் உனது piston இல்லை என்று நிராகரித்துவிட்டார்கள் பொறியியளாளர்கள். முதலாவது கனவுத் திட்டம் படுதோல்விஅடைந்த து. மனம் பாரமாக இருந்தது. திரட்டி வைத்த முதலீடு மொத்தமும் வீணாகியது. எல்லோரும் தங்களது கேலிகளை பொழிந்தார்கள். புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மனப் பக்குவத்தோடு, ஹோண்டா மீண்டும் முயற்சித்தார். மேலும் பல மாதங்கள் விடாப்பிடியாக உழைத்து அவர் உருவாக்கிய புதிய pistonமாதிரியை Toyota நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

அருமை என்று பாராட்டிToyota நிறுவனம் ஏற்றுக்கொண்டது. தயாரிப்புக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. மனதுக்குள் சிறிய வெற்றிக் களிப்பு கொண்ட சாய்க்கிரோ ஹோண்டா பெரிய தொழிற்கூடம் கட்டினால் தான் அவர்கள் கேட்கும் எண்ணிக்கையிலான piston தயாரிக்க முடியும்.

எனவே, கட்டடம் கட்டத் திட்டமிட்டார் ஹோண்டா. அப்போது ஜப்பான் நாடு உலகப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்ததால், அங்கே வரலாறு காணாத சீமெந்து தட்டுப்பாடு. எவ்வளவோ முயற்சி செய்தபோதும் 10 மூட்டை சீமெந்துக் கூட கிடைக்கவில்லை. ஒழுங்காக ஏதாவது வேலையில் போய்ச் சேர்ந்துவிடு என அவரது அப்பா கூறினார், வாழ்க்கை முழுவதும் ரிஸ்க் எடுத்துக்கொண்டே இருப்பாயா என்றார் உயிர்நண்பன்.

இவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காது சீமெந்து கலவைக்கு இணையான மாற்றுக்கலவையை உருவாக்கும் முறையை கண்டுபிடித்தார் ஹோண்டா. ஆங்காங்கு கடன் வாங்கி சில மாதங்களிலேயே பெரிய தொழிற்சாலையை கட்டி முடித்தார்.
தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி piston தயாரிக்கும் தொழிலை அமர்க்களமாகத் தொடங்கினார். கூடவே இரண்டாம் உலகப்போரும் தொடங்கியது.

அமெரிக்கா போட்ட குண்டு, ஹோண்டாவின் தொழிற்சாலையில் பெரும் பகுதியை உடைத்து நாசமாக்கியது. ஹோண்டாவின் வாழ்க்கை முடிந்தது என்று பேசிக் கொண்டார்கள் நண்பர்கள். ஆனால்,தனது மொத்தத் தொழிலாளர்களையும் திரட்டிக்கொண்டு, தானே களமிறங்கி சேதங்களை சீர்செய்து, தொழிற்சாலையை மீண்டும் இயக்கிக் காட்டினார் ஹோண்டா. ஜப்பான் நாட்டில் நிலநடுக்கங்கள் அதிகம். ஒரு நாள் திடீரெனத் தாக்கிய நிலநடுக்கம் ஹோண்டாவின் தொழிற்சாலையைத் தரைமட்டமாக்கி விட்டது.

மொத்தத்தொழிற்சா லையையும் திருப்பிக்கட்ட முடியாத நிலை. வேறு வழியின்றி உடைந்த கருவிகள், மற்றும் மூலப்பொருட்களைக் கிடைத்த விலைக்கு Toyota நிறுவனத்திற்கு விற்பனை செய்தார் ஹோண்டா.இப்படிப்பட்ட நிலைமையில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எண்ணிப்பாருங்கள்.........
ஆனால் அப்போதைய நிலையில் ஹோண்டா கூறிய கருத்து.......
“நான் ஆசைப்பட்ட ஒரு திட்டம் தோல்வி அடைந்தால், துளிகூட கவலைப்பட மாட்டேன்… இருக்கிற நிலைமையை எப்படி மாற்றலாம் என்று தீவிரமாக சிந்திக்கத் தொடங்கிவிடுவேன்.” இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம் ஜப்பானின் பொருளாதாரம் சாம்பலாக்கப்பட்ட காலக்கட்டம், ஜப்பான் முழுதும் பெற்றோல் தட்டுப்பாடு. கார்கள் எல்லாம் முடங்கிவிட்டன.

எல்லோரும் நடக்கிறார்கள் அல்லது சைக்கிளில் செல்கின்றார்கள். சாய்க்கிரோ ஹோண்டா, வீட்டில் அமர்ந்திருந்தார். அருகில் சைக்கிள் நின்றது. சற்றுத் தொலைவில் புல்வெட்டும் இயந்திரம் இருந்தது. அந்தப் புல்வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரைக் கழற்றி, இந்த சைக்கிளில் இணைத்தால் என்ன என்று ஹோண்டாவுக்கு ஒரு புத்தம் புது ஐடியா தோண்றியது.
அடுத்த நொடியில் காரியத்தில் இறங்கினார் ஹோண்டா. புல்வெட்டும் இயந்திர மோட்டாரைக் கழற்றி எடுத்து, தனது சைக்கிளில் அவர் பொருத்திய போது உலகின் முதல் மோட்டார் சைக்கிள் பிறந்துவிட்டது.

அதை எடுத்துக்கொண்டு ஆனந்தமாக சுற்றி வந்தார் ஹோண்டா. அதேபோன்று எங்களுக்கும் செய்துகொடு என்று மொய்க்கத் தொடங்கினர் மக்கள்.அவரும் சளைக்காமல் செய்து கொடுத்தார். அதன் விளைவு என்ன ஆயிற்று????? அந்த ஊரில் மோட்டார் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இதையே பெரிய தொழிலாக மாற்றினால் என்ன என்று சிந்தித்தார் ஹோண்டா. கையில் பணமில்லை, வங்கிகள் கடன்தரத் தயாராகவில்லை. ஹோண்டா துரதிர்ஷ்டக்காரன் என்று எல்லோரும் கூறினார்கள்.

அப்போதும் கலங்கவில்லை ஹோண்டா. தனது தொழில் திட்டத்துக்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து, ஜப்பானில் உள்ள 18 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்களுக்கு கடிதம் எழுதினார்.முதலீடு செய்யும் சைக்கிள் கடைக்காரர்கள், மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர்களாக நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார்.5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள் முன்வந்து பண உதவி செய்தனர். ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் உதயமானது.

முதலில் தயாரான மோட்டார் சைக்கிள் குறித்து விமர்சனங்கள் வந்தபோது, தானே உலோகம் உருக்கும் கூடத்தில் அமர்ந்து, அழகான வடிவமைப்புடன் அற்புதமான மோட்டார் சைக்கிள் வகைகளை கொண்டு வந்தார். அவமானகரமான தொடர் தோல்விகளுக்குப்பின்னர் பெரும் வெற்றி பெற்றார் சாய்க்கிரோ ஹோண்டா. இப்போது ஹோண்டா நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 2 கோடி மோட்டார் வாகனங்களை தயாரிக்கிறது. ஹோண்டா கார்களுக்கு மேற்கத்தேய நாடுகளிலும் பெரும் வரவேற்பு இருந்தது. எத்தனையோ வகை வகையான தயாரிப்புக்களில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது இந்த நிறுவனம்.

ஹோண்டா தயாரிப்புகளைப் பார்க்கும் போதெல்லாம் அனைவருக்கும் நினைவுக்குவருவது, அதன் மாமனிதன் சாய்க்கிரோ ஹோண்டா தனது வாழ்க்கை அனுபவங்களைச் சாறுபிழிந்து சொன்ன வார்த்தைகள்தான்


: “வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே” என்று...

இதை படித்தவுடன் ...நான் அடிக்கடி பார்க்கும் கோவையில் மேட்டுப்பாளையம் ..சாலையில் உள்ள டிவிஎஸ் சுந்தரம் ஹோண்டா நிறுவனம் தான் நினைவுக்கு வரும் ...

நன்றி ...
கேள்வி :..வாங்குவதற்கு யாரும் இல்லாத நிலையில் தங்கம் விலை ஏன் குறையவில்லை?


பதில் :..தங்கம் நா சும்மாவா ....!!!



மொத்த தங்க உற்பத்தியில்


50 % தங்கம் அணிகலன்கள் தயாரிக்க பயன்படுகிறது.
7 - 10 % தங்கம் தொழில்முறை பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தப் படுகிறது. பல மருத்தவ சாதனங்கள் தயாரிப்பில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.
மீதமிருக்கும் தங்கம் அனைத்தும் முதலீட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது.
எனவே அணிகலன்கள் வாங்குவது குறைவதினால் மட்டும் தங்கத்தின் விலை குறையாது. பாதிப்பு ஏற்படாது என்று அர்த்தமல்ல பாதிப்பு ஏற்படும் ஆனால் தற்போதுள்ள அசாதாரண பொருளாதார சூழ்நிலையால் அது விலை ஏறிக்கொண்டே இருக்கிறது.

ஒருவன் பணக்காரனாக வேண்டுமென்றால் அவன் பணத்தை அவனுக்காக வேலை செய்ய விட வேண்டுமென பணக்காரத் தந்தை ஏழை தந்தை புத்தகத்தில் ராபர்ட் கியோசாக்கி கூறியிருப்பார்.

எனவே பெரும் பணம் படைத்த முதலாளிகள், நிதி நிறுவனங்கள் அனைத்தும் தங்களிடம் உள்ள பணத்தை வேலை செய்ய விடுவார்கள். அப்பொழுது தான் பணம் வளரும். அவர்கள் அதை எப்படி செய்கிறார்கள். மிக எளிது, தங்களது பணத்தை நல்ல வருவாய் ஈட்டி தரும் மற்றும் முதலீட்டிற்கு ஆபத்தில்லாத இடங்களில் முதலீடு செய்து விடுவார்கள். இதன் மூலம் தங்கள் பணம் நாளடைவில் பல்கிப் பெருகும்.

அந்த இடங்கள் என்னனென்ன

பத்திரங்கள்
பங்குகள்
ரியல் எஸ்டேட்
தொழில்

இந்த நான்கு இடங்களும் பொருளாதாரத்தை சார்ந்தே ஏற்ற இறக்கம் காணும். பொருளாதாரம் நன்றாக போய்க்கொண்டிருக்கும் காலங்களில் இவை அனைத்தும் செய்த முதலீட்டிற்கு நல்ல வருமானத்தை ஈட்டித்தரும்.

ஆனால் தற்போது இருப்பது போல் உள்ள சூழ்நிலைகளில் இந்த நான்கும் மோசமான வருவாயை தருவதோடு மட்டுமல்லாமல் நம் முதலீட்டை ஆபத்தானதாக்கி விடும்.

இது போன்ற ஒரு அசாதாரண சூழ்நிலையில் பெரும் பணம் படைத்தவர்கள் அந்த நான்கு இடங்களில் தாங்கள் செய்த முதலீட்டினை விற்றுவிட்டு பணமாக மாற்றிக்கொள்வார்கள். பணமாக மாற்றினால் மட்டும் போதுமா? அதை வேலை செய்ய விட வேண்டுமல்லவா.

அதனால் எப்பொழுதெல்லாம் பங்குச்சந்தை மிக பெரும் சரிவை சந்திக்கிறதோ, பொருளாதாரம் மோசமாக உள்ளதோ அப்பொழுதெல்லாம் பெரும் பணக்காரர்கள் மற்ற முதலீட்டிலிருந்து வெளியே வந்த பணத்தை தங்கத்தில் முதலீடு செய்து விடுவார்கள். அதனால் தான் இப்பொழுது தங்கம் தினம் ஒரு உச்சத்தை தொட்டு கொண்டிருக்கிறது.

இப்பொழுதிருக்கும் ஒரே நம்பகமான முதலீடு தங்கம் தான். எப்பொழுது பொருளாதாரம் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்புகிறதோ அப்பொழுது தங்கத்திலிருந்து வெளியில் வந்து மீண்டும் பங்குகள் பத்திரம் போன்றவற்றில் முதலீடு செய்ய துவங்கி விடுவார்கள். அந்த சமயத்தில் தங்கத்தின் விலையில் இறக்கம் காணப்படும்.

தங்கம் விலை அதிகமாக மற்றொரு காரணம்

கச்சா எண்ணெய் மற்றும் காபி போல தங்கமும் ஒரு பண்டம் தான். ஒரு சிறு வித்தியாசம் என்னவெனில் தங்கம் எண்ணெய் அல்லது காபி போல் நுகரப்படுவதில்லை. அதாவது இது வரை வெட்டி எடுக்கப்பட்ட தங்கமென்பது புழக்கத்தில் தான் உள்ளது. இன்னுமும் வெட்டி எடுத்துக் கொண்டிருப்பதும் புழக்கத்திற்கு வந்துகொண்டுள்ளது.

இங்கே வழங்கல் மற்றும் சேவை சரிசமமாக உள்ளது இருந்தும் ஏன் விலை மட்டும் ஏன் இறக்கம் காணாமல் ஏறிக்கொண்டே இருக்கிறது? அதற்கான பதில் நகைகளாக செய்யும் தங்கம் பெரும்பாலும் வீட்டு லாக்கரிலோ அல்லது வங்கி லாக்கரிலோ சோம்பேறி தனமாக தூங்கிக்கொண்டிருப்பதால் தான்.

மேலும் தங்க சுரங்கங்கள் சுலபமாக எடுக்கக்கூடிய தங்கம் அனைத்தையும் வெட்டி எடுத்து விட்டார்கள். இப்பொழுது குறைவான தங்கத்தை வெட்டி எடுப்பதற்கு அதிக உழைப்பு, பணம் தேவைப்படுகிறது. இதுவும் தங்கத்தின் விலை ஏற்றத்திற்கு ஒரு காரணம் தான்.

நன்றி ....

கேள்வி :நீங்கள் மிகவும் நேசிக்கும் ஒருவர் உங்களை காயப்படுத்திவிட்டால் அதிலிருந்து வெளிவர என்ன முறையை கையாள்வீர்கள்?

என் பதில் :..


சில பேரிடம் நாம ரொம்ப அதிகமா இடம் எடுத்துப்போம். அவங்க மேல அதிக அன்பு வைச்சிடுவோம். ஆனால் அவங்க நம்மளை அதை மாதிரி நினைக்கவில்லைன்னு நமக்கு ரொம்ப தாமதமா தான் புரியும். அவங்க வாழ்க்கைல நாம பத்தோட பதினொன்னா இருப்போம். ஆனா நம்ம வாழ்க்கையில அவங்க தான் எல்லாமுமா இருப்பாங்க.

சில நேரங்களில் அவர்களின் உண்மை குணத்தை நாம புரிஞ்சிக்க நமக்கு காயம் தேவை படுதுதான். இல்லைன்னா கடைசிவரை அவர்களின் குணம் தெரியாமலேயே போய்விடும்.

குழந்தையை நெருப்பை தொடாதேன்னு சொன்னா கேட்காது. நெருப்பை தொட்டு சூடு பட்டத்துக்கு அப்பறம் தான் புரியும்.

சைக்கிள் ஓட்ட கத்துக்கும் போதும் பத்து தடவை கீழே விழுந்து அடிப்பட்டு தான் அதை நல்லா ஓட்ட கத்துப்போம்.

அதைமாதிரி தான் யார்க்கிட்ட எந்த அளவோட பழகணும்னு நமக்கு புரிய வைக்கும் சில வாழ்க்கை பாடம்.

இது தான் தாமரை இலை. இந்த இலையில் மீது படும் நீரை எப்பவுமே ஒரு லேயர் தடுத்து கொண்டிருக்கும். அதனால் தாமரை மேல் படும் நீர் பட்டும்படாமலே இருக்கும். அதைப்போல தான் நாமும் சில நேரங்களில் பட்டும்படாமல் இருந்துவிடுவது நல்லது.

எதுக்கு அதிக பாசம் வைத்துவிட்டு அதிக காயம் பட வேண்டும். வரும் முன்னே காத்துக்கொள்வது நல்லது.

மனதில் ஏற்பட்ட காயத்தை போக்கும் மருந்து காலம் மட்டுமே. அதுவே உங்களை அந்த வேதனையில் இருந்து வெளிவருவதற்கு உதவும்.


நன்றி ....