வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

காம்பவுண்ட் இன்ட்ரஸ்ட் பற்றிய புரிதல் ?

 

காம்பவுண்ட் இன்ட்ரஸ்ட் பற்றிய புரிதல் ?

கூட்டு வட்டி (Compound Interest) என்பது வெறும் கணிதம் அல்ல; அது நடுத்தர வர்க்கத்தின் பொருளாதார வாழ்க்கையை தலைகீழாக மாற்றக்கூடிய ஒரு பேராயுதம். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இதை "உலகத்தின் எட்டாவது அதிசயம்" என்று சும்மா சொல்லவில்லை.

மிக எளிமையாகச் சொன்னால்: "வட்டிக்கு வட்டி குட்டி போடுவது" தான் கூட்டு வட்டி. நடுத்தர வர்க்கச் சேமிப்பிற்கு இது ஏன் மிக முக்கியமானது என்பதை எளிமையான புரிதலோடு பார்ப்போம்.

சாதாரண வட்டி Vs கூட்டு வட்டி

நடுத்தர வர்க்கத்தில் பலரும் செய்யும் தவறு, பணத்தை சாதாரண வட்டி (Simple Interest) தரும் கணக்குகளிலேயே வைத்திருப்பது. சாதாரண வட்டியில் நீங்கள் போடும் அசல் பணத்திற்கு மட்டுமே வட்டி கிடைக்கும். ஒவ்வொரு வருடமும் அதே வட்டித் தொகைதான் வரும்; அதில் பெரிய வளர்ச்சி இருக்காது.

ஆனால், கூட்டு வட்டியில் முதல் வருடம் உங்கள் அசலுக்கு வட்டி வரும். இரண்டாம் வருடம், உங்கள் அசல் மற்றும் முதல் வருட வட்டி ஆகிய இரண்டும் சேர்ந்து புதிய அசலாக மாறும். அதற்கு வட்டி கணக்கிடப்படும். அதாவது, உங்கள் வட்டியும் உங்களுக்காக உழைத்து, வட்டிக்கு மேல் வட்டியை ஈட்டித் தரும்.

கூட்டு வட்டியின் மூன்று மாயாஜால விதிகள்

  • நேரம் தான் இதன் எரிபொருள்: கூட்டு வட்டியில் நீங்கள் எவ்வளவு பணம் போடுகிறீர்கள் என்பதை விட, எவ்வளவு காலம் அந்தப் பணத்தை எடுக்காமல் வைத்திருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். காலம் கூடக் கூட, பணத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கும்.
  • ஆரம்பத்தில் ஏமாற்றம், இறுதியில் பிரம்மாண்டம்: முதல் 5 வருடங்கள் பெரிய வித்தியாசம் தெரியாது. ஆனால், 15 அல்லது 20 வருடங்கள் தாண்டும்போது, ஜாமெட்ரிக் புரோக்ரெஷன் (Geometric Progression - பெருக்கல் வளர்ச்சி) காரணமாக, நீங்கள் சேமித்த தொகையை விட வட்டியாக வந்த தொகை பல மடங்கு அதிகமாக மாறும்.
  • சிறு துளி பெரு வெள்ளம்: நடுத்தர வர்க்கத்தினர் ஒரே அடியாகப் பெரிய தொகையை முதலீடு செய்ய முடியாது. ஆனால், மாதம் ஒரு சிறிய தொகையை (உதாரணமாக SIP மூலம்) கூட்டு வட்டி தரும் திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்தால், ஓய்வு காலத்தில் அது மிகப்பெரிய நிதியாதாரமாக மாறும்.

நடுத்தர வர்க்கத்திற்கான ஒரு எளிய கணக்கு

ஒரு நடுத்தர வர்க்க மனிதர் மாதம் 5,000 ரூபாய் சேமிக்கிறார் என்று வைப்போம் (ஆண்டுக்கு 60,000 ரூபாய்). சராசரியாக 12% கூட்டு வட்டி கிடைக்கும் ஒரு திட்டத்தில் 25 ஆண்டுகள் அவர் தொடர்ந்து முதலீடு செய்கிறார்.

25 வருடங்களில் அவர் தன் கையில் இருந்து போட்ட மொத்த அசல் தொகை 15 லட்சம் ரூபாய் மட்டுமே. ஆனால், கூட்டு வட்டியின் சக்தியால் அவருக்குக் கிடைத்த லாபம் மட்டும் தனியாக 74.86 லட்சம் ரூபாய்! இதனால், 25 வருட முடிவில் அவர் கையில் இருக்கும் மொத்தத் தொகை கிட்டத்தட்ட 90 லட்சம் ரூபாயை (89.86 லட்சம்) நெருங்கும். அவர் போட்ட பணம் 15 லட்சம், ஆனால் வட்டி மட்டுமே 74 லட்சம் என்பதுதான் கூட்டு வட்டியின் நிஜமான வலிமை.

இறுதிப் பார்வை

நடுத்தர வர்க்கத்தின் மிகப்பெரிய பலவீனம் "இன்றே பணக்காரனாக வேண்டும்" என்ற அவசரம். ஆனால், கூட்டு வட்டிக்குத் தேவை பொறுமை.

பணத்தை விரைவாக இரட்டிப்பாக்க நினைக்கும் போலித் திட்டங்களில் ஏமாறாமல், முறையான கூட்டு வட்டி தரும் நீண்ட காலச் சேமிப்புகளில் (PPF, Mutual Funds, EPF) முதலீடு செய்வதே நடுத்தர வர்க்கத்தின் நிம்மதியான எதிர்காலத்திற்கான ஒரே சாவி.


--
Sivakumar.V.K

Home Loan Consultant

புதன், 5 ஆகஸ்ட், 2026

ஐம்பதில் ஆட்டத்தைத் தொடங்குங்கள்...

 ஐம்பதில் ஆட்டத்தைத் தொடங்குங்கள்...

இப்போதெல்லாம் 50 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 50 வயதுக்குப் பிறகு தான் ஒரு பலமான, வளமான மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கிறோம்... பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸ் தான்...

வாழ்க்கையில் 50-ல் ஓரளவு உந்துசக்தி குறைந்து போகும். இனி என்ன என்ற சோம்பேறி சாய்தளம் நம்மை ஆள, அதனால் பல நோய்களும் நம்மை சூழ முற்படும்... 50 வயதுக்கு மேல் தவறாமல் செய்ய வேண்டிய அவசியமான விஷயங்கள்:

புதிய உந்துசக்தியை உருவாக்க புதிதான, உங்களுக்கும் தேவையான சவால் ஒன்றைக் கையிலெடுங்கள்...

உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள கடினமான இலக்கை முன்னிலைப்படுத்தி அதனை நோக்கி நிதானமாக, ஆனால் உறுதியோடு செல்லுங்கள்...

எப்போதுமே புதிய விஷயங்களைத் தேடுங்கள், புதிய மனிதர்களிடம் பேசுங்கள்...

60 வயதுக்கு மேற்பட்ட ஆட்களோடு உட்கார்ந்து முதியோர் அரங்கம் உருவாக்காதீர்கள்...

இளைஞர்களோடு பழகுங்கள். 25 வயதில் இருந்த உத்வேகம் அவர்களிடமிருந்து உங்களுக்கு மீளக் கிடைக்கும்...

அழகான உடைகளை ரசனையுடன் தேர்வு செய்து, மிடுக்காக உடுத்துங்கள். 50 வயதில் நரையும், திரையும், வழுக்கையும் அழகு தான்...

உலகின் மிகப்பெரிய சாதனைகளைச் செய்தவர்கள், நிறைய பேரை ஈர்க்கின்றவர்களில் 50+ காரர்கள் தான் அதிகம்...

பெரும்பாலான இளைஞர்களுடன், ஒத்த கருத்து நண்பர்களுடன் புதிய இடங்களுக்கு, புதிய அனுபவங்களைத் தேடிப் பயணம் செல்லுங்கள்...

வேறுபட்ட மனிதரோடு உரையாடுங்கள்..... திசையறியா ஆர்வமூட்டும் பயணங்கள் நம்மை பள்ளிப் பருவத்திற்கு இட்டுச் சென்று துள்ளிக் குதிக்க வைக்கும்...

புதிய நவீன சிந்தனையாளர்களின் புத்தகங்களைத் தேடி நிறைய படியுங்கள். உங்கள் மூளைக்கு தீனி போட நிறைய, நிறைய புதிய விஷயங்களைத் தேடிப் படியுங்கள்...

நகைச்சுவைக் கதைகளை, நிகழ்வுகளை, ஒளிமங்களை விரும்பிக் காணுங்கள்...

சிரித்துப் பேசுங்கள், பிறர் சிரிக்கப் பேசுங்கள், உங்களைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் நிலையாகும்...

விரோதிகளை விலக்குங்கள், பெருமைக்காரர்களை, பொறாமைக்காரர்களை கால விரயம் கருதி ஒதுக்குங்கள்...

மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் பேணுங்கள், நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி,

சிறு சிறு ஆசனங்கள் தவறாது செய்யுங்கள்...

வாரம் ஒரு முறையாவது உங்கள் இணை மனதினருடன் சிரித்து, மகிழ்ந்து, உண்டு, உறவாடுங்கள்...

மறந்தும் சாய்வு நாற்காலிவாசிகள் பக்கம் ஒதுங்கி விடாதீர்கள், உங்களை அவர்கள் பக்கத்திலேயே படுக்க வைத்து விடுவார்கள்...

பொதுச்சேவையில் நாட்டம் கொள்ளுங்கள். ஏரி, குளம், தூய்மை, சுற்றுச்சூழல், பசுமை, சமூக நேர்மை காத்தலில் ஆர்வம் கொள்ளுங்கள்...

மகன், மகள் மற்றும் குறிப்பாக மருமகளைத் திட்டாதீர்கள்... முதலில் நம்மைச் சார்ந்தவர்களுக்கு, பின்னர் அடுத்தவர்களுக்கு, உதவி தேவைப் படுபவர்களுக்கு, உங்களால் இயன்ற வகையில் உதவுங்கள். அவர்கள் நன்றியில் உங்களை நீங்களே புதிதாக ரசித்து மகிழ்வீர்கள்...

எப்போதுமே முதல் இன்னிங்சை விட இரண்டாம் இன்னிங்க்ஸ் தான் நாம் வாழ்ந்த வாழ்வின் அர்த்தங்களை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது...

மேற்சொன்ன விஷயங்களை சரியாகச் செய்தால் 50+ ஆரோக்கியம் பற்றிக் கவலைப்படத் தேவையே இல்லை.

மூளையும், மனசும், உடலும் சரியாக இயங்க ஏற்பாடு செய்து விட்ட பிறகு ஆரோக்கியத்தில் என்ன பிரச்சனை வந்து விடப் போகிறது...?

சாதித்தவர்கள் கோடிகளில் ஒருத்தராக இருக்கலாம். அதற்காக இந்த காலகட்டத்தில் கையில் இருப்பு உள்ளதை சவாலாக எடுத்துக்கொண்டு பதினைந்து, இருபத்தைந்து லட்சங்களை தொலைத்தவர்களில் நானும் ஒருவன். உங்களுடைய இந்த பதிவு கல்லூரி படிப்பு முடித்தவர்களுக்கு வேண்டுமானால் பயனுள்ளதாக இருக்கும்.

பெற்றோரின் கண்காணிப்பில் சவாலாக ஏதேனும் ஒரு வர்த்தகத்தில் இழப்பு ஏற்பட்டாலும் ஆறுதல் சொல்ல தாய் தந்தையர் இருப்பாங்க. ஐம்பது வயதிற்கு மேற்கொண்டு சவாலே சமாளி என்று பார்த்து, இழப்பு ஏற்பட்டால் முதலில் திட்டுவது மனைவியும் பிள்ளைகளும் தான்.