புதன், 7 அக்டோபர், 2020

கேள்வி : என் மாமனாருக்கு என்னை பிடிக்காது. ஒருவருடம் எங்களை பிரித்துவிட்டார் நான் என் சிறிய தவறுகளுக்காக மனம்திருந்தி அவளிடம் அழுதேன் ஆனாலும் அவள் தகப்பன் பேச்சை கேட்டு என்னை விவாகரத்து செய்துவிட்டாள். அதிக மன அழுத்தத்தில் உள்ளேன் .எப்படி விடுபடுவது? வருத்தங்கள். \\தகப்பன் பேச்சை கேட்டு விவாகரத்து செய்துவிட்டாள் ...

 கேள்வி : என் மாமனாருக்கு என்னை பிடிக்காது. ஒருவருடம் எங்களை பிரித்துவிட்டார் நான் என் சிறிய தவறுகளுக்காக மனம்திருந்தி அவளிடம் அழுதேன் ஆனாலும் அவள் தகப்பன் பேச்சை கேட்டு என்னை விவாகரத்து செய்துவிட்டாள். அதிக மன அழுத்தத்தில் உள்ளேன் .எப்படி விடுபடுவது?

வருத்தங்கள். \\தகப்பன் பேச்சை கேட்டு விவாகரத்து செய்துவிட்டாள் ...


என் பதில் :..

தகப்பன் என்று அவரையும் விட்டாள் என்பதிலிருந்து அவள் என்று பிரிந்தவரையும் குறிப்பிடுவதிலிருந்தே சொல்வதிலிருந்தே உங்களுக்கு அவர் தந்தை மற்றும் மகள் இருவர் மீது இன்னும் உள்ள கோபம் புரிகிறது. எந்தப்பெண்ணுக்கும் தந்தை என்றால் உயிர். தந்தைகளுக்கும் பெண் என்றால் உயிர். அவர்களுக்கும் சுயமரியாதை என்ற அவர்களால் போடப்பட்ட கோடு ஒன்று உள்ளது. அது என்றோ கடந்து விட்டது. அவரும் முடிவெடுத்திருக்கிறார் அல்லது முடிவுக்கு உடன்பட்டிருக்கிறார்.


ஒத்துவரவில்லை. போராட்டங்களுக்குப் பின் பிரிந்துவிட்டீர்கள். நம்மூரில் ரத்து அவ்வளவு எளிதில்லை. கோர்ட்டுக்கு அத்தனை முறை போகிற அவஸ்தைக்கு தலையெழுத்து என்று சேர்ந்தே வாழ்ந்துவிட நிறைய வாய்ப்பு இருந்திருக்கும். ஆகவே அதையும் தாண்டிவரும் அளவுக்கு வெறுப்பு அடைந்திருக்கிறீர்கள்…


இயல்பான ஒன்று தானே. எதற்கு மனவருத்தம்.. அதுவும் ஆழ்ந்த மன அழுத்தம்.. . விகாரமாக முகம்காட்டிய கண்ணாடியை உடைத்து குப்பையை அள்ளிப்போட்டாயிற்று. இதில் எதற்கு வருத்தம்… விட்டுக்கொடுத்தல் என்பது இருவருக்கும் இருக்கவேண்டிய பொறுப்பு. உங்களுக்கு ஈகோ இருந்திருக்கலாம். சுயமரியாதைக்கும் ஈகோ விற்கும் மெல்லிய கோடு தான் வித்தியாசம். நீங்கள் காயப்படாமல் விலகியிருக்க மாட்டீர்கள். தவறு உங்கள் பக்கமே என்றாலும் வரம்பு தாண்டும்போது தீ விரலைச் சுடுவதுபோல் உங்கள் வரம்பை எங்கேயோ சீண்டியிருக்கவேண்டும். அதனால் தான் பிரிவுவரை சென்றிருக்கிறீர்கள். உங்கள் துணைவருக்கு உங்களை பிடிக்கும் பட்சத்தில் தக்கவைத்துக்கொள்ள சமமான பொறுப்பு அவருக்கும் உண்டு என்பதை ஒருபோதும் மறவாதீர்கள். வெறுமனே பிரிந்திருந்தால் மன்னிப்பு கேட்கலாம் காலில்கூட விழலாம் ஏதோ ஒன்று செய்து சேர முயற்சி செய்யலாம். ரத்து என்கிற கடைசிப்படி தாண்டிவிட்டு பின்னர் படிகளைத் தேடுவதில் அர்த்தம் இல்லை. உங்களுக்கு உள்ளூர துணைவரைப் பிடித்திருந்தாலும் ஒரு முடிவு எடுத்துவிட்டீர்கள். அவரும் நல்லதாப்போச்சு என்று ரத்து வரை சென்றுவிட்டார்.இனி என்ன ஒட்டினாலும் உடைந்த கண்ணாடி உடைந்தது தான். ஏற்கனவே தெரிந்த விகார முகம் திரும்ப ஒட்டினால் அகோரமாகத் தெரியும். சொல்லி சொல்லி காண்பித்து அப்படியே விலகி இருந்திருக்கலாம் என்ற நினைப்பு ஒவ்வொரு சின்ன சலசலப்பிலும் தோன்றி நிலைமை இன்னும் மோசமாக வாய்ப்புள்ளது.


நீங்கள் தனியாளா, உங்கள் பெற்றோர் என்ன செய்தார்கள் என்றெல்லாம் தெரியவில்லை. யாராகிலும் நீங்கள் ஒன்றுசேர்ந்து வாழவே முயற்சி செய்திருப்பார்கள். குழந்தை உண்டா இல்லையா என்று தெரியவில்லை. இருந்தால் வருத்தத்தில் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கிறது. இல்லாவிட்டால் அது என்ன சொல்லிக்கொடுத்ததோ அதை ஒரு பாடமாக வைத்துக்கொண்டு வேறு துணை தேடுங்கள். அல்லது சும்மா இருந்துவிடுங்கள்.


வருத்ததிலிருந்து விலக வயது துணையிருக்கும் பட்சத்தில் இன்னொரு துணை தேடுவதில் ஒரு தவறும் இல்லை. மனமாற்றம் எளிதல்ல என்றாலும் தொடர்பாதிப்பிலிருந்து வெளிவரலாம். வீட்டு ஆசாமிகள் என்ன செய்தார்கள் செய்கிறார்கள் என்று தெரியாமல் எதை என் போன்றவர்கள் சொன்னாலும் ஏற்காதீர்கள். ஆழ்ந்து யோசித்து முடிவெடுங்கள். சிலநாள் குழப்பம் இருக்கும். காயம் ஆறும்வரை காத்திருங்கள். வடு மறையாது. அதற்காக கையை வெட்டிக்கொள்ளாதீர்கள். பாடங்களை மறக்காமல் புதுவாழ்விற்கு தயார் ஆகிவிடுங்கள். உலகம் மிகவும் பெரியது. சில சம்பவங்கள் படிப்பினைகள். கற்று ஏற்றுக்கொண்டாயிற்று. மீண்டும் அதே பள்ளி செல்ல வேண்டியதில்லை.


நன்றி ....வாழ்க்கை ஒருமுறைதான் ..வாழந்துபாருங்கள் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக