புதன், 8 ஜனவரி, 2020

கல்யாணத்தேன்நிலா காய்ச்சாதபால்நிலா என்ற பாடலில் ஏன் "காய்ச்சாத" பால் நிலா என்கின்றார் கவிஞர்? காய்ச்சிய பாலை விட காய்ச்சாத பால் எவ்விதத்தில் நிலவோடு பொருந்துகின்றது?

இந்த பாடல் இடம்பெற்ற படம் " மௌனம் சம்மதம்"! இதில் ஹீரோ மம்முட்டி ஒரு சட்டம் படித்த வழக்கறிஞர்! சட்டம் என்றால் ஆங்கிலத்தில் "LAW" என்று அர்த்தம்!

தமிழில் " லா" என்று சொல்லி பாடலை முடிக்க வேண்டும்! முழுக்க முழுக்க இந்த கதை கோர்ட்டில் நடக்கும்! சட்டத்தைப் பற்றி " லா" பேசும் ஒரு லாயர் என்பவர் தன் காதலியை பார்த்து பாடும் போது லா லா என்று பாடுவது மூலம் தன் வழக்கை பற்றிய சட்டத்தைப் பற்றிய நினைப்பில் இருக்கிறேன் என்று மறைமுகமாக காதலி புரிந்துகொள்ள அப்படி பாடுகிறார்!

கல்யாண தேன் நி"லா"

காய்ச்சாத பால் நி"லா" எல்லா வரிகளும் லா லா என்று முடியும்!

மம்முட்டி நல்ல வக்கீலா என்று அமலாவுக்கு அந்த படத்தில் சந்தேகம் வரும்! தன்னை ஒரு மிகச்சிறந்த வக்கீல் என்று காட்டிக் கொள்வதற்காக மம்முட்டி டூயட் பாடல் பாடும்போது கூட காதலியிடம் தொழில் நினைவாகவே இருப்பதாக காட்டிக் கொள்கிறார்! தூங்கும் போது குறட்டை விடும் போது கூட லா லா என்று ஒருவர் குறட்டை விட்டால் அவர்தான் சிறந்த வக்கீல்!

மம்முட்டி ஒரு பொறியாளராக இருந்து அமலா மம்முட்டி இடம் ஒரு கட்டடம் கட்டும் காண்ட்ராக்ட் கொடுத்து இருந்தார் என்றால் அப்பொழுது பொறியாளர் மம்மூட்டி தாண் ஒரு நல்ல பொறியாளர் என்று தன் காதலிக்கு காட்டும் விதமாக

கல்யாண தேன் பொறி

காய்ச்சாத பால் பூரி

நீதானே கடலை பொரி

நான்தானே கார்த்திகைப் பொரி

என்று கவிஞர் பாட்டு எழுதி இருப்பார்!

கவிஞர் எல்லா வரிகளிலும் லா என்ற சட்டத்தை கொண்டு வந்தது பாராட்டவேண்டும்! சட்டம் ஏற்றப்பட்டு பாராளுமன்றத்தில் அங்கீகாரம் ஆகும் வரை அது ஒரு ஆர்டினன்ஸ் என்றுதான் சொல்லுவார்கள்!

அதுதான் காய்ச்சாத சட்டம்! இப்போது குடியுரிமைச் சட்டம் என்பது காய்ச்சி கொண்டிருக்கிறார்கள்! 370வது சட்டம் காய்ச்சப்பட்டு விட்டது!

மம்முட்டி பாடல் சட்டம் இன்னும் இயற்றப்படவில்லை! அதனால் அதை காய்ச்சாத பால் நிலா என்று மறைமுகமாக கவிஞர் குறிப்பிடுகிறார்!

காய்ச்சாத சீம்பால் போல் சுவையான ட்ரிவியா செய்தி : மம்முட்டி சினிமாவில் நடிப்பதற்கு முன் உண்மையிலேயே ஒரு லாயர் ஆக தொழில் செய்தவர்!

அவரை கௌரவிக்கும் விதமாக கவிஞர் ஒருவேளை அப்படி எழுதி இருக்கலாம்!

அதுவும் தவிர பாலை ரொம்ப காய்ச்சினால் பால்கோவா ஆகிவிடும்! ஒருவேளை மம்முட்டிக்கு கதைப்படி சர்க்கரைவியாதி இருந்து அதன் காரணமாகவும் காய்ச்சாத பால் நிலா என்று பாடி இருக்கலாம்! யார் கண்டது!

குறிப்பு :..நம் சொந்தங்கள் வக்கீல்கள் குழுவில் இருப்பதால்...அழகான பதிவு ..அப்புறம் வீட்டுக்காரம்மா வக்கீலுக்கு இந்த பதிவு dedicated ... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக