வியாழன், 9 ஜனவரி, 2020

உத்தியோகம் புருஷலட்சணம் எனில் மனைவிக்கான இலக்கணம் எது ?

உத்யோகத்திற்கு சென்று வீட்டுக்கு வரும் புருஷனை மனம் நோகாமல் வரவேற்று நல்லுணவு பரிமாறி முடிந்தால் களைப்பு நீங்க சிறிது நேரம் கை கால்களை பிடித்துவிட்டு அவரை கவனித்துக் கொள்வதே மனைவிக்குரிய லட்சணம்.

நான் சொல்வது பெண்ணியவாதிகளுக்கு முரண்பாடாக தெரியலாம். ஆனால் மனைவி வேலைக்கு எதுவும் போகாமல் வீட்டில் இருக்கும் பட்சத்தில் இப்படி நடந்து கொண்டால் இல்லறம் இனிக்கும்.

பொருளாதார தேவைகளுக்காக வேறு வழியின்றி இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பங்களில் இது நடைமுறையில் சற்று சிரமம் தான் என்றாலும் மாதத்தில் ஒன்றிரண்டு நாட்களாவது நான் சொன்னவற்றை பின்பற்றி பாருங்களேன்.

நான் என் திருமண வாழ்க்கையில் செய்து கொண்டிருப்பதை தான் உங்களுக்கும் பரிந்துரைக்கிறேன்.

”ஆணுக்கு தான் சேவைகள் செய்ய வேண்டுமா..? பெண் மட்டும் உயிரில்லையா…? அவளுக்கும் வலிகளில்லையா…?” என்றெல்லாம் கேட்பவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது. இரு மனங்களும் ஒன்றி ஒத்திசைப்பதே திருமண பந்தம். ஒவ்வொரு பெண்ணுக்கும் self esteem இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் கட்டிய கணவனிடம் பெண்ணியவாதியாக நடந்து கொள்ளாதீர்கள். அது குடும்பத்திற்கு நல்லதல்ல.

பெண்ணுக்கான இலக்கணங்களை வகுத்த நமது தர்ம சாஸ்திரங்கள் ஆணுக்கான இலக்கணங்களையும் வகுக்காமல் இல்லை. ஆனால் காலப்போக்கில் ஆணாதிக்க சமுதாயத்தில் மறைக்கப்பட்டிருக்கிறது.

இதோ அதற்கான ஆதாரம்:

கார்யேஷு தாஸி

கரனேஷு மந்த்ரி

போஜேஷு மாதா

சயனேஷு ரம்பா

ரூபேஷு லக்ஷ்மி

க்க்ஷமயேஷு தரித்ரி

ஷத் தர்மயுக்தா

குலதர்ம பத்னி

சேவை செய்வதில் வேலைக்காரியாகவும்

ஆலோசனை சொல்வதில் மந்திரியாகவும்

பசியறிந்து உணவு அளிப்பதில் தாயாகவும்

படுக்கையில் ரம்பையாகவும்

அழகில் லக்ஷ்மியாகவும்

மன்னிப்பதில் பூமித்தாயாகவும்

இந்த ஆறு தர்மங்களைக் கடைப்பிடிப்பவள் குலதர்ம பத்தினி ஆவாள்.

பெண்ணுக்கு எத்தனை நெறிமுறைகளை சொல்லிய நமது சனாதன தர்மம் ஆணுக்கு எந்த ஒரு நெறிமுறையும் விதிக்கவில்லையா ..? விதித்திருக்கிறது.

அவை இதோ

கார்யேஷு யோகி

கரனேஷு தக்க்ஷா

ரூபேச க்ருஷ்ணா

க்க்ஷமயேது ராமா

போஜ்யேஷு த்ருப்தா

சுக துக்க மித்ரா

ஷத் கர்மயுக்தா

கலு தர்மான்தா

காரியமாற்றுவதில் யோகியைப் போல நிலையானவனாகவும்

குடும்பத்தை பிள்ளைகளை காப்பதில் தக்க்ஷ பிரஜாபதியை போலவும்

அழகில் கிருஷ்ணனைப் போலவும்

ஒழுக்கத்தில் பொறுமையில் இராமனைப் போலவும்

மனைவி சமைத்த உணவை குறை காணாமல் உண்பதில் திருப்தி உடையவனாகவும்

மனைவியின் சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டு ஆதரவளிப்பதில் நண்பனாகவும்

இந்த ஆறு தர்மங்களை கடைப்பிடிப்பவன் சிறந்த கணவன் ஆவான்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் நம் தர்மம் சம நீதியே வகுத்திருக்கிறது . ஆனால் ஆணுக்கு சாதகமாக பல உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கிறது.

பெண்கள் முதலில் கொடுப்பவளாக இருங்கள். பிறகு நீங்கள் கேட்காமலே எல்லாம் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக