செவ்வாய், 21 ஜனவரி, 2020

வீட்டு கடன் பாக்கி தொகையினை மொத்தமாக ஒரே தவணையில் சுமார் 4 அல்லது 5 லட்சம் செலுத்தி கடனை அடைக்கலாமா. அச்சமயம் ஏதாவது concession in interest அல்லது தொகை குறைப்பு கிடைக்குமா?


இந்த கேள்விக்கான பதிலுக்கு செல்லுமுன், வீட்டுக்கடன் பற்றிய சில விஷயங்களை முதலில் தெரிந்து கொள்வோம்:


உங்கள் மாத வருமானத்துக்கேற்ற மாதிரி வீட்டுக்கடன் வாங்கவும். முடிந்த வரை வீட்டின் மதிப்பில் 30% வரை கையிருப்பிலிருந்து தேத்தி விடவும். சில தேசிய வங்கிகள் வீட்டின் மதிப்பில் 80% தான் கடனே வழங்கும்.


எல்லா வங்கிகளும், வீட்டுக் கடன் என்னவோ 20/30 வருடங்களுக்கு தருவார்கள். அதற்காக 20வது வருடம் தான் கட்டி முடிப்பேன் என்று சபதம் எடுக்காதீர்கள்.


எந்த வங்கியாக இருந்தாலும், நாம் கட்டும் மாதாமாதம் இ.எம்.ஐ(EMI) என்ற தொகையில் பெரும்பகுதியை, வாங்கிய கடனின் வட்டிக்குத் தான் பிடித்துக் கொள்வார்கள்.


எ.கா: EMI இருபதாயிரம் மாதம் கட்டுகிறீர்கள் என்றால் அதில் 80% அதாவது 16 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு போயிடும், மீதி 4 ஆயிரம் அசலுக்கு.


இது பெரிய தேவ ரகசியமெல்லாம் ஒண்ணுமில்லை. உங்கள் மாதாந்திர வீட்டுக்கடன் அறிக்கையில், வங்கிகள் தெளிவாக அனுப்புவார்கள்.


காரணம், நீங்கள் 20 வருடம் கட்டப் போகும் வட்டி தான், அந்த வங்கியின் வருமானம். எனவே வட்டியைத் தான் முதலில் வசூலிக்க நினைப்பார்கள். எனக்கு தெரிந்து, அரசு மற்றும் தனியார் வங்கிகள் Concession in Interest தருவதில்லை.


ஆகவே, உங்களுக்கு ஏதேனும் அலுவலக போனசோ அல்லது திடீரென்று பூர்வீக சொத்து விற்றதில் உங்கள் பங்காக, கணிசமான தொகை கையில் வந்தால், உங்கள் வங்கியை தொடர்பு கொண்டு, உங்கள் வீட்டுக் கடனில் அந்த பணத்தை, எந்த அபராதமுமின்றி சேர்ப்பிக்க முடியுமா? என்று முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.


அதற்கு அவர்கள் ஒத்துக் கொள்ளும் பட்சத்தில், அவர்கள் மனசு மாறுவதற்குள், அல்லது


"ஜி.ஆர்.டியில் வளையல் திருவிழா நடக்குது. ஆர் யூ ஓகே பேபி?" என்று நயன்தாரா கேட்பதை பார்த்து, நீங்கள் மனசு மாறுவதற்குள், உடனே சென்று கட்டி விடுங்கள்.


இதனால் உங்களுக்கு என்ன லாபம்?


நீங்கள் வாங்கிய வீட்டுக் கடன் 25 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது அதில் ஐந்து லட்சத்தை கட்டி விட்டால், உங்கள் மாதாந்திர இ.எம்.ஐ அப்படியே இருக்கும், ஆனால் வீட்டுக் கடனின் கால அளவு (மாதங்கள்) குறைந்து விடும்.


இப்படியே வருடத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு வருடத்துக்கு ஒரு முறை என கணிசமான தொகையை செலுத்தி வாருங்கள்.


கொஞ்சம் புத்திசாலித்தனமாக செயல்பட்டால், எட்டு வருடத்தில் அதிக வட்டி கட்டிக் கொண்டிருக்காமல், உங்கள் முழு வீட்டுக் கடனையும் அடைத்து விடலாம்.


இது எனது சொந்த அனுபவம். எட்டு வருடத்தில் வீட்டுக் கடன் அடைத்து, வங்கியிலிருந்து வீட்டு பத்திரத்தை வாங்கும் பொழுது கிடைக்கும் நிம்மதி இருக்கே! அதெல்லாம் அனுபவித்து தான் தெரிந்து கொள்ளணும்.


வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்கலாம், கொஞ்சம் புத்திசாலித்தனமாக நமது நிதியை நிர்வகித்தால், எட்டு வருடத்தில் நீங்கள் ஹவுஸ் ஓனர்.


மொத்தமாக 35 லட்சம் அல்லது 40 லட்சம் சேர்த்து விட்டு தான் வீடு வாங்குவேன் என்று அடம் பிடித்தால், அடுத்த மூன்று வருடத்தில் வீட்டின் விலை மேலும் 10 லட்சம் உயர்ந்து விடும்.


வீட்டு கட்டுமான பொருட்களின் விலை, வேலையாட்கள் கூலி என எல்லாமே உயர்ந்து விடும்.


என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்

வீட்டு கடன் பிரிவு 
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக