எனது நீண்டகால நண்பர் அவர்களின்
பதிவு
நன்றி ..
முள் கிரீடம்...
பதினைந்து வருடங்களுக்கு முன்பாக அம்மாவும் அப்பாவும் வேலூர் தொழில்நுட்பக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றார்கள். இளங்கலைப் பொறியியல் படிப்பை முடிக்கும் போதே வேலைக்குச் சென்றுவிட முடியும் என நினைத்திருந்தேன். ஆனால் அவ்வளவாக நிறுவனங்கள் வளாகத் தேர்வுக்கு வரவில்லை. நான்காம் வருடத்தின் இறுதிப் பருவம் நெருங்க நெருங்க பதற்றம் தொற்றிக் கொண்டது. சென்னை அல்லது பெங்களூருவில் தங்கி வேலை தேடுவதா என்று குழம்பி இறுதியில் ‘எம்.ஈ. படிக்கட்டுமா?’ என்று கேட்டதற்கு மறுப்பேதும் சொல்லாமல் வீட்டில் சம்மதித்தார்கள். அப்பொழுது வருடத்துக்கு ஒரு லட்சத்து அறுபதாயிரம் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. அது தவிர விடுதிக் கட்டணம். வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியின் நுழைவுத் தேர்வு எழுதியதில் எம்.டெக் படிப்பில் சென்ஸார் சிஸ்டம்ஸ் டெக்னாலஜியும், மெக்கட்ரானிக்ஸூம் கிடைத்தது. இரண்டாவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.
‘வங்கியில் கடன் வாங்கிக்கலாம்’ என்றேன். ‘என்னால முடிஞ்ச வரைக்கும் கட்டறேன்..முடியலைன்னா பார்த்துக்கலாம்’ என்றார் அப்பா.
காட்பாடியில் இறங்கிய போதே அம்மாவுக்கு அழுகை வந்துவிட்டது. விடுதியறையில் பெட்டி படுக்கையெல்லாம் வைத்துவிட்டுக் கிளம்பும் போது அழுது கொண்டேயிருந்தார். பையன் நம்மைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டான் என்ற வருத்தம் அவருக்கு. ஆனால் கல்லூரியின் வசதிகள் அவர்களுக்கு பிரமிப்பூட்டக் கூடியதாக இருந்தது. எனக்கும்தான். நூலகங்கள், ஆய்வகங்கள் அவற்றின் நவீனத்தன்மை என ஒவ்வொன்றும் பிரம்மாண்டமாக இருந்தன. பேராசியர்கள் அதைவிட பிரமாதப்படுத்தினார்கள். பி.வி.ஏ.ராவ் என்ற ஐ.ஐ.டியின் பேராசிரியர் ஒருவரின் வகுப்பில் அமர்ந்திருந்தது எந்தக் காலத்திலும் மறக்காது. சுத்தியல் எடுத்துத் தட்டும் போதே அதிர்ச்சியினால் நம் கைகள் வலிக்கத் தொடங்குகிறது. ஆனால் மரங்கொத்தி மரத்தைக் கொத்திக் கொண்டேயிருக்கிறது. அதன் தலைக்கு ஏன் ஒரு பாதிப்புமில்லை? என்று கேட்டுவிட்டு அவரே பதிலையும் சொன்னார். அதன் தலையில் இருக்கும் கொண்டை உட்பட அதன் தலையின் அமைப்பு அதிர்ச்சியை கிரகித்துக் கொள்வதாகவும் சொல்லியதோடு நிறுத்தாமல் அதை நிறுவுவதற்கென ஒரு சமன்பாட்டை எழுதி இதுதான் காரணம் என்றார்.
வாய் பிளந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
விவேகானந்தன் சண்முகநாதன் என்கிற மெக்கட்ரானிக்ஸ் பேராசிரியர் ஐ.ஐ.டி மும்பையிலிருந்து வந்திருந்தார். அவரது ஆய்வகத்தில் ரோபோ ஒன்றிருந்தது. ‘நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதுல ப்ரோகிராம் செய்’ என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். உண்மையிலேயே அந்தக் கல்லூரியில்தான் பொறியியல் படிப்பின் உயரங்களை உணர்ந்து கொள்ள முடிந்தது. வெற்றுப் பெருமைக்காகச் சொல்லவில்லை- வி.ஐ.டி அப்படியானதொரு பல்கலைக்கழகம்தான். வருமானத்தைத் திரும்பத் திரும்ப கல்லூரியின் வளர்ச்சிக்கெனவே திருப்புகிறார்கள். கற்பனைக்குக்கே எட்டாத வளர்ச்சி அது. எந்தவிதமான அழுத்தமுமில்லாமல் படிப்பு முடியும் போது தொண்ணூறு சதவீதத்தைத் தாண்டியிருந்தேன். ஏகப்பட்ட மென்பொருள் நிறுவனங்கள் வளாகத் தேர்வுக்கு வந்தன. எனக்குத்தான் மென்பொருள் துறையில் விருப்பமில்லை. சிடிஎஸ், டிசிஎஸ்ஸெல்லாம் விட்டுவிட்டு விஜய் எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தேன்.
அந்தக் கல்லூரியில் படித்த இரண்டு வருடங்களும் இன்னமும் கனவு போல இருக்கிறது. வண்ணத்துப்பூச்சிகள் நிறைந்த வண்ணக் கனவு. இப்பொழுது எதற்காகக் கல்லூரி புராணம் என்றால் காரணமிருக்கிறது. சமூக மாற்றங்களைச் செய்ததற்காக சிறந்த முன்னாள் மாணவர் என்ற விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். கல்லூரியில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி முன்னாள் மாணவர் தினத்தைக் கொண்டாடுவார்கள். வரும் ஜனவரியில் நடைபெறும் விழாவில் விருது தரப் போவதாக மின்னஞ்சல் வந்திருந்தது. சில விருதுகள் நம்மை சலனப்படுத்திவிடும். இந்த விருது அப்படியானதுதான். கண்டிப்பான அப்பாவிடமிருந்து முதுகில் ஒரு செல்லத் தட்டு வாங்குவது போல. என்னவோ தெரியவில்லை- அப்பாவின் நினைவு வந்து வந்து போனது. அவர் இருந்திருந்து இந்தத் தகவலைச் சொல்லியிருந்தால் மெலிதாக ஒரு புன்முறுவல் பூத்துவிட்டு ‘எப்போ தர்றாங்க?’ என்று மட்டும் என்னிடம் கேட்டிருப்பார். தேதியைச் சொன்னவுடன் அடுத்த வேலையை அவர் பார்க்கத் தொடங்கிவிடுவார். ஆனால் தமக்குத் தெரிந்த அத்தனை பேரிடமும் பெருமையாகச் சொல்லியிருப்பார்.
நாம் படித்த கல்லூரி நம்மை உற்சாகப்படுத்துவது மிகப்பெரிய ஆசுவாசமாக இருக்கிறது. அதே சமயம் விருதுகள் நம்மை உற்சாகமூட்டக் கூடியவையாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை. சற்று பதற்றமூட்டக்கூடியவையாகவும் இருக்கலாம். சமீபமாக நிறைய அழைப்புகள் வருகின்றன. புஷ்பவனம் கிராமத்திலிருந்து ஒரு பெண் அழைத்திருந்தார். ‘என் மகளுக்கு ஃபீஸ் கட்டுங்க..புயலில் எல்லாம் போய்விட்டது’ என்றார். அவரது மகள் தனியார் கல்லூரியில் படிக்கிறார். ‘தனியார் கல்லூரியில் படிப்பவர்களுக்கு உதவுவதில்லை’ என்று சொன்னால் ‘அப்ப எங்களை மாதிரியானவங்களுக்கு என்ன வழி’ என்று கேட்கிறார். பதில் சொல்லவே முடியாத தர்மசங்கடமான கேள்வி. இத்தகைய கோரிக்கைகளை நிராகரிக்கும் போது பயமாகவும் இருக்கிறது. பதற்றமாகவும் இருக்கிறது. அழைப்புகளைத் தவிர்க்கும் போது குற்றவுணர்ச்சியும் தொற்றிக் கொள்கிறது. விருது வாங்கும் போது இத்தகைய பதற்றமும் பயமும்தான் விரல்களில் சில்லிடும் எனத் தோன்றுகிறது.
அறக்கட்டளை என்பது தலையில் முள் கிரீடம் அணிந்திருப்பது போல. அதன் சுமையும் அதிகம். அழுத்தமும் அதிகம். ஆனால் அது வேகமாக இழுத்துச் சென்று கொண்டேயிருக்கிறது. குதிரையின் பின்னால் கட்டப்பட்ட ஒருவனைப் போல வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறேன். பாராட்டுகளுக்கும் புகழுக்கும் இணையாக வசையும் பேசுகிறார்கள். நண்பர்கள், தெரிந்தவர்கள், உறவினர்களின் பரிந்துரைகளை நிராகரிக்கும் போது அதன் விளைவுகள் அதிபயங்கரமானவையாக இருக்கின்றன. என்னால் இயன்றதெல்லாம் வெளிப்படையான கணக்கு வழக்கு மட்டும்தான். அதையும் மீறிய சொற்களின் கணைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அதையெல்லாம் தாங்கிக் கொள்ளும் மனவலிமையை இறைவன் அருளட்டும் என்று மட்டும் இந்தத் தருணத்தில் வேண்டிக் கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக