ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

கேள்வி : மினிமலிசம் என்றால் என்ன?

 கேள்வி : மினிமலிசம் என்றால் என்ன?


என் பதில் :..


எப்படி தன்னம்பிக்கைக்கும் தலைக் கனத்துக்கும் ஒரு மெல்லிய நூலிழை தான் வேறுபாடோ


 மினிமலிசத்துக்கும், கஞ்சத்தனத்துக்கும் ஒரு நூலிழை தான் வேறுபாடு.


நம் தேவை என்பது எப்பொழுது விருப்பமாக மாறி, பின்பு ஆவலாக மாறி, கடைசியில் வெறியாக மாறி நம்மையே முழுங்கி விடும்.


ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்:


ஒரு வருடத்தில் குறைந்தது எத்தனை தடவை புதுக் துணிமணி எடுப்போம்?


பொங்கலுக்கு ஒன்று,

பிறந்த நாளுக்கு ஒன்று,

தீபாவளிக்கு ஒன்று,

எதுக்கும் சந்தேகத்துக்கு ஒன்று - ஆக நாலு செட் உறுதி.

இதுவே நீங்கள் மாதமொருமுறை ஏதாவது ஒரு மாலுக்கு செல்லும் பொழுதெல்லாம், அங்கிருக்கும் குளோபஸ், டிரண்ட்ஸ், நைக்கி போன்ற கடைகளில் ஒரு செட் விதம் எடுத்து வந்தால் வருடத்துக்கு 12 செட்.


மேலே சொன்ன நம்பர்கள் எல்லாம் ஆண்களுக்கு என்று பாவிக்கவும். பெண்களின் கணக்கெல்லாம் எகிறி விடும்.


திருமதி பீலா ராஜேஷ் அவர்கள் மினிமலாக புன்னகை செய்த மாதிரி, ஆனால் செய்யாமல், கொரோனா அறிக்கை வாசித்த பொழுது என்றைக்காவது ஒரு தடவை கட்டிய புடவை டிசைன் மறுபடி ரிப்பீட் ஆகி இருக்கா?


அதுவே இப்பொழுது ராதா கிருஷ்ணன் ஒரு மாதத்துக்கே மூணு சட்டை தான் மாத்தி மாத்தி அணிகிறார். மூணும் ஒரே டிசைன்(கட்டம் போட்டது) வேறு. அப்புறம் எப்படி தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை குறையும்?


இருக்கும் பொருட்களை செம்மையாக பயன்படுத்துவதே மினிமலிசம்.


2011 முதல் 2014 வரை ஒரே கார் வைத்து சமாளித்தோம்.  அலுவலகம் செல்ல பொது பேருந்து, மற்றும்  ரயில் இருந்தது. குளிர் காலங்களில் மட்டும் கொஞ்சம் சிரமம். அதனால் என்ன?


சமாளித்து விடக் கூடியது தான். அதன் பின் வேலையிடம் மாறியது, சரியான நேரத்துக்கு ஆபிஸ் செல்ல வேண்டும், பொது போக்குவரத்து இல்லை. இப்பொழுது இரண்டு கார்கள் அத்தியாவசிய தேவையாயிற்று.


அலுவலக உணவிடத்தில் எல்லா நாட்டு உணவும் கிடைக்கும் தான். அதுவும் அந்த இத்தாலிய லசானியா என்ற ஐட்டம் இருக்கே! ஆசைக்கு ஒரு நாள் சாப்பிடலாம். ஆனால் என்றுமே வீட்டு உணவு தான் நிரந்தரம்.


நீங்கள் மினிமலிஸ்டா? அல்லது மெட்டிரியலிஸ்டா? என்பதை சோதிக்க, வருட முடிவில்:


உங்கள் உடை அலமாரி அல்லது பீரோவை திறந்து பார்க்கவும்.

எத்தனை மின்னணு பொருட்கள் (Gadgets) புதிதாக வந்துள்ளது என்று செக் செய்யவும்.

எத்தனை வீட்டு உபயோக பொருட்கள் என்று முக்காடிட்டு வீட்டு பரணில் குந்தியுள்ளது என்று பார்க்கவும்.

சமூகம் கொஞ்சம் பெரிய இடமென்றால் எத்தனை நகைகள், வளையல்கள் புதிதாக?

வீட்டில் எந்த பொருளின் மீதும் தடுக்கி விழாமல் நடக்க முடிகிறதா? (இது எப்பொழுதும் பொருந்தும்)

மேலே சொன்னது எல்லாம் நம்மை அழுத்தி மூச்சடைக்க செய்யும் அதிகப்படியான எடைகள். நமக்கும் இறைக்கும் உள்ள தொலைவை அதிகப்படுத்தும் விஷயங்கள்.


எப்பொழுதெல்லாம் மினிமலிஸ்ட்டாக இருக்க கூடாது?


புதிய விஷயங்கள் படிப்பதில், தெரிந்து கொள்வதில்

விசய ஞானமுள்ள புத்தகம் சேகரிப்பதில் (புதிய புத்தகம் தான் என்றில்லாமல், பழைய புத்தகமும் மதி)

பிறருக்கு உதவி செய்யும் போது

உணவு தயாரிக்கும் பொழுது (கடுகில்லை என்றால் பரவாயில்லை, ரவையே இல்லாமல் எப்படி உப்மா?)

வாய் விட்டு சிரிப்பதில் (அதுக்காக இளிச்ச வாயனாக இருக்கக் கூடாது)

ஜப்பானில் மினிமலஸ்டிக் வாழ்வை டன்சரி(Danshari) என்ற ஜென் தத்துவத்தில் இருந்து உதித்தது என்று சொல்கிறார்கள்.


சமூகத்தில் மினிமலிஸ்ட்டுகளை தவறாக புரிந்து கொண்டு, போகும் போது "என்னத்த தலையில் கட்டி கொண்டு போக போகிறார் இவர்?" என்று எள்ளி நகையாடலாம்.


ஆனால் வாழும் காலத்தில், அவர் அனுபவிக்கும் மன நிம்மதி, ஜென் நிலை அவ்வளவு லேசில் அனைவருக்கும் கை கூடுவதில்லை.


நன்றி ...நாளை பொது போக்குவரத்து ஆரம்பமாகிவிடும் ..பாதுகாப்பான பயணம் இன்றியமையாது ..இதையும் சமாளிப்போம் ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக