சனி, 23 மே, 2020

கேள்வி : ஒரு மகளுக்கும் தந்தைக்குமான உறவு எவ்வளவு ஆழமானது மற்றும் அழகானது என கவித்துவமாக கூற முடியுமா?

என் பதில் :...கோவையில் பணியில் இருந்தபொழுது என் வாடிக்கையாளர் வருவது கொஞ்சம் தாமதம் ஆனதால் ..சாய்பாபகாலணி பஸ் நிறுத்தம் அருகே நின்றுகொண்டிருந்தேன் ....நானும் ஏதோச்சையாக அவர்களை கவனித்துக்கொண்டிருந்தேன் ...


. வித்தியாசமாக தெரிய அவர்களை  ஊன்றி கவனித்தேன்.. .

அந்த பெண் நிறை மாத கர்பிணியாக இருப்பதால் ஜடை தைத்து போட்டோ ஸ்டூடியோவுக்கு சென்று போட்டோ எடுத்து, தன் கணவன் வீட்டுக்கு செல்ல பஸ ஏறுவதற்காக காத்திருக்க, பக்கத்தில் அறுபது வயது மதிக்க தக்க அந்த பெண்ணின் ஏழை தந்தை.

"எல்லாம் சரியா பைல மறக்காம எடுத்து வச்சிருக்கியமா"? என்று கேட்டு கொண்டிருக்க, அவர் முயன்றும் அடக்க முடியாமல் கண்ணீர் வழிய, ..

அந்த பெண் "எல்லாம் சரியா இருக்கும் பா, நீங்க உடம்ப பாத்துக்குங்க "

அந்த பெரியவர் தான் கண்ணாடியை , கழற்றி, கண்ணை மீண்டும் துடைத்து, வீட்டுக்கு போய் போன் பண்ணுமா? என்று சொல்லிக்கொண்டு தான் பையில் தேடி, மிச்சம் மீதி காசினை மகள் கையில் திணிக்க..

அவசர அவசரமா, "வீட்லதான் கொடுத்தீங்களேப்பா, அது இருக்கு "என்று மறைந்த தான் தாயின் உருவில் தன் அப்பாவை பார்க்க

இந்த முக்கியமான நேரத்தில் தன்னுடைய மனைவி இல்லையே என்று நினைத்து தந்தை கலங்க

தான் போய் விட்டால் தன் தந்தை ஒற்றை ஆளாய் என்ன படுபடுவாரோ என்று அந்த பெண் கண்ணீர் விட..

பஸ், பஸ் நிலையத்தில் நுழைந்தது, வயதான தந்தை, தான் முதுமையை பொருட்படுத்தாமல், அந்த பஸ்சில் முண்டியடித்து ஏறி, தன் பெண்ணுக்கு உட்காருவதற்கு சீட் பிடிக்க..

பஸ் நகர ஆரம்பித்தது "ஜாக்கிரதையா பாத்துகோமா ' என்று சொல்லிக்கொண்டே தந்தை பஸ் பின்னே ஒட.

தன் தந்தை ,பின்னே ஓடி வருவதை தலையை திருப்பி அடக்க முடியாத காண்ணீருடன், பெண் தன் கையை ஆட்டி விடை கொடுக்க..

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த, என் கண்களில் கண்ணீர் துளிர்த்ததை தடுக்க முடியவில்லை !

தந்தை ..மகள் ...பாசம் ..தாய் இல்லாமல் முதன்முறையாக பார்த்தது ..

நன்றி ...
கேள்வி :..காதல் தோல்வியில் கற்ற பாடங்கள் என்ன?

என் பதில் ..

உண்மையான காதல்ன்னு ஒன்னு சத்தியமா இந்த காலத்துல கிடையாது. வேணும்னா குமரிகண்டம் இருந்தப்ப இருந்திருக்கலாம். அது அழியும் போது இதுவும் கூடவே சேர்ந்து அழிஞ்சிட்டுன்னு நினைக்கிறேன்.

உங்கூட நூறு வருஷம் வாழனும், பயப்பட வேண்டாம்டி உன் புருஷன் நான் தான்டி இப்படியெல்லாம் டையலாக் பேசிக்கிட்டு வந்தா வேண்டாம்பா சாமின்னு ஓடிவந்துடுங்க.

அழகு, பணம் இதையெல்லாம் பார்த்து காதல் வராது. குணத்தை பார்த்து தான் காதல் வரும்னு சொல்றவங்களா நீங்க? செமையா அழப்போறீங்கன்னு அர்த்தம்.

காதல் ஒரு ரப்பர் பேன்ட் மாதிரி, காதலை யார் ரொம்ப பிடிச்சிருக்காங்களோ அவங்களுக்கு தான் வலி ரொம்ப அதிகமா இருக்கும். விட்டுட்டு போறவங்க அடுத்தவங்களுக்கு வலிச்சாலும் பரவாயில்லைன்னு நினைக்கிறவங்க.

இந்த கால காதல் சூவிங்கம் மாதிரி ஆரம்பத்தில் இனிக்கும் போக போக சுவையில்லாமல் போய்டும்.

காதல் தோல்வியில ஆண்கள் ஏமாறுறாங்க, பெண்கள் ஏமாறுறாங்கன்னு இல்லை. யார் உண்மையா காதலிச்சாங்களோ அவங்க தான் ஏமாறுறாங்க.
நம்ப கண்ணீருக்கு மதிப்பிருக்கு. நம்ப வேண்டாம்னு சொன்னவங்களுக்காக அதை வீணாக்க வேண்டாம்.

ஏமாத்துன அவங்களே சந்தோஷமா இருக்காங்க. உண்மையா இருந்த நீங்க ஏன் வருத்த படணும். போகட்டும் விடுங்க.

காதல் தோல்விக்கு பிறகு தான் தெரியும் நம்ம எவ்வளவு கண்மூடித்தனமா மத்தவங்களுக்காக வாழ்ந்திருக்கோம்னு. நாம முதலில் நமக்காக வாழனும்.

காதல் தோல்வி ஏற்ப்பட்டவங்க காதலை வெருக்காதீங்க. காதல் எப்பவும் அழகு தான். நீங்க காதலிச்ச நபர் காதலை அந்த கோணத்தில் காட்டிவிட்டார்.



நம்ப வாழ்க்கையில ஒரு சின்ன பகுதி தான் இந்த காதல். அதனால் ஏற்ப்பட்ட தோல்வி நம் வாழ்க்கை முழுவதையும் வீணாக்கிடவிட்டுட கூடாது.

ஏழு பில்லியன் மக்கள் இருக்காங்க இந்த உலகத்துல ஒருத்தவங்களுக்கு கூடவா உங்க மேல காதல் வராம போய்டும். சந்தோஷமா இருங்க.

நன்றி ..வாழ்கை வாழ்வதற்கே ....

கேள்வி :ஒரு ஆணாக, பிறரிடம் என்னை நான் எப்படி சிறந்த ஆளுமையாக காட்டுவது? பிறரால் சிறந்த ஆளுமை குணங்களாக கருதப்படுபவை எவை?


என் பதில் :..


ஒரு ஆணாக சிறந்த ஆளுமை காட்டுவது சுலபம் தான். நான் பார்த்த மிக சிறந்த மனிதர்களிடம் அவர்களை நினைத்தால் என் மனதில் தெரிவதை சொல்கிறேன்

ஆள் பாதி ஆடை பாதி - தலைமை பொறுப்பு அல்லது சிறந்த ஆண்கள் மிக நேர்த்தியாக, சிறந்த முறையில் ஆடை அணிவார்கள். அந்த காலணி ஆடை தலை சீவியது அவர்களின் நகம் எல்லாம் சரியா இருக்கும்.

ஆக ஆளுமையை காட்ட அழகாக நேர்த்தியாக உடை அணிய வேண்டும்

அளவோடு பேச வேண்டும் - ஆண்மைக்கான இலக்கணங்களில் கூட இதனை ஒன்றாக கருதுகின்றனர். ஜவ்வு ரம்பம் மாதிரி பேசுபவர்கள் சிறந்த அதிகாரிகள் இல்லை. அவர்கள் செயல் வீரராக இருந்து பேச்சினை குறைத்து கொள்கின்றனர்

தலைமை பண்பு ஏற ஏற பணிவு இன்னும் ஏறுகிறது - ஹுமிலிட்டி(Humility) என்கிற பணிவு அதிகம் இருக்கும். இது ஆளுமைக்கான சிறந்த குணம். ஏ பீ ஜெ கலாம் ஐயா அவர்களை கிட்ட பார்த்தது இதிலிருந்து...சில பிரபலங்கள் மற்றும் அலுவலக வீ பீ எல்லாரும் இந்த பணிவு மிக அதிகம் உள்ளவர்கள்.

செய்வதை விடாமல் செய்யும் ஒழுக்கம் பெற்றவர்கள் - அதாவது தினமும் 4.30 மணிக்கு எழ வேண்டும் என்றால் ஓர் நாள் கூட தவறாமல் அதனை செய்தனர். என் தந்தை அவர்களும் நல்ல பதவி சிறந்த பெயரில் இருந்தார்கள். அவர்கள் ஓர் நாள் கூட இந்த நேரம் என்கிற விஷயமோ, சுத்தம் இப்படி சில பண்புகள் தவறியதே இல்லை. அப்பா அவர்கள் பெற்றோர்களுக்கான ஓட்ட பந்தயத்தில் 50-60 வயதில் ஓடினால் கூட முதல் மூன்றில் வந்ததற்கு அவருக்குள் இருந்த இந்த ஒழுக்கம். இது ஆளுமையை அப்பட்டமாக காட்டும்,

பிறரிடம் கற்றுக்கொள்வது - எல்லோரிடத்திலும் கற்று கொள்ள நிறைய உண்டு. ஆளுமை காட்டுவதும் ஆண்மைக்கான இன்னோர் விஷயம் "எனக்கு மட்டும் உலகத்தில் அதிகம் தெரியும்...நான் எதுக்கு கத்துக்கணும்?" இப்படி இருக்க மாட்டார்கள். பலரிடம் இருந்து கற்று கொள்வார்கள். எந்த வயதிலும் கற்று கொள்வார்கள்.

திரு கலாம் ஐயா அவர்கள் நம் கிரிக்கெட் வீரர்களிடம் ஸ்பின் போலிங் பற்றி கற்றுக்கொண்டார் என்பது படித்து உள்ளேன்

புன்முறுவல் மற்றும் உணர்ச்சியை கட்டுக்கோப்பாக வைத்தல் - பெரிய தலைவர்கள் சிறந்த ஆண்கள் உணர்ச்சியை கட்டுக்கோப்பாக வைத்து எப்போதும் ஓர் புன்னகை செய்வார்கள். இது மிக அழகு. இந்த விடையை எழுதும்போது கூட ஓர் பெரிய மெண்டோர் ஐயாவின் முகம் வந்து செல்கிறது. கோடி நட்சத்திரம் பூத்த சந்தோஷம், அந்த புன்னகையில் உண்டு தெரியுமா? மருந்து மாதிரி இருக்கும்...அவர்களோடு உள்ள சில நிமிடங்கள் சொர்க்கம் போல இருக்கும்...ஆற்றல்கள் அதிகரிக்கும்.

நிறைய படிப்பார்கள் - இதற்கு மேலும் விளக்கம் தேவை இல்லை. எந்த மிக அழகான ஆளுமை காட்டும் ஆண் மகனும் எல்லா துறையிலும் படித்தவர்கள். அந்த படிக்கும் கருவி தான் மாறுபடலாம் தவிர கற்பது அதிகம்.

சுறுசுறுப்பாக இருப்பார்கள் - இதுவும் ரொம்ப விளக்க தேவை இல்லை. எப்போதும் ஓர் தேடல் இருக்கும். நேர்மறை எண்ணங்கள் நிறைய இருக்கும்....இதனை எழுதும் பொழுது எனக்கு பிடித்த ஓர் எழுத்தாளர் முகம் வந்து போகிறது....சுறுசுறுப்பா இருப்பாங்க...துடிப்பா இருப்பாங்க...இது ஆளுமை கொடுக்கும்

அளவான நகைச்சுவை கண்டிப்பாக இருக்கும் - இதுவும் ஓரளவு தலைவர்களிடம் உண்டு. தலைமை பொறுப்பு ஏற்க ஏற்க வேலை பளு டென்ஷன் அதிகம்...இதில் மிக கொடிய டெட்லைன் நேரத்தில் நம் பாஸ் அவர்களும் சிடுசிடு என்றோ உணர்ச்சி பிழம்பாக இருந்தால்,..வேலை ஊத்தி மூடிடும்.

என் மிக அருமையான சில மேல் அதிகாரிகள் நகைச்சுவை அழகாக உள்ளவர்கள்.

பஞ்சுவலிட்டி எனப்படும் நேரத்தை சரியாக கடைபிடித்தல் - இது மிக சிறந்த ஆளுமையை காட்டும்.


மிக முக்கியமான பண்பு..அருமையான பண்பு. பிறரின் நேரத்தையும் நாம் மதிக்கிறோம் என்பதை வேறு எப்படி காட்ட முடியும்?

நன்றி ...

வியாழன், 21 மே, 2020

வெள்ளையனைத் தூக்கில்போட்ட பாளையம் .....

ஆம்! 

வெள்ளையன்தான் எண்ணற்ற இந்தியர்களைத் தூக்கில் போட்டிருக்கிறான். சுட்டும் கொன்றிருக்கிறான்.

போரில் பல வெள்ளையர்கள் இறந்தும் இருக்கிறார்கள்.

ஆனால் வெள்ளையன் ஒருவனுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றிய குறுநில மன்னர் இருந்திருக்கிறார்!

அவர் தான் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள தளி பாளையப் பட்டு என்று சொல்லப்படும் சல்லிபட்டி பாளையகாரர் எத்தலப்ப நாயக்கர்! 

அங்கு தூக்கிலிடப்பட்ட வெள்ளைக்காரனின் சமாதி இன்றும் நல்ல நிலையில் உள்ளது.

ஆதாவது மைசூர் மன்னராக இருந்த திப்பு சூல்த்தானை வீழ்த்திய ஆங்கிலேயர்  வீரபாண்டிய கட்ட பொம்மனையும் வீழ்த்திய பின்னால் தங்களின் ஆதிக்கத்தில் அனைத்துப் பகுதிகளையும் கொண்டு வரும் நோக்கில் பாளையங்களுக்குத் தூதர்களை அனுப்புகிறார்கள்.

அப்படித் தளி பாளையப்பட்டுக்கு அனுப்பப்பட்ட தூதுவர்களின் தலைவன் ஆன்ரூ கெதிஸ்! 

அப்போது தளிப் பாளையக்காரராக இருந்த எத்தலப்ப நாயக்கர்  வெள்ளையர்களின் வருகையைக் கண்டு கொதித்துப் போனார்.

அவர்களைத் தூதர்களாக அங்கீகரிக்காமல் ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதிக் கைது செய்து தங்கள் எதிர்ப்பைக் காட்டுவதற்காக ஒருவனை மட்டும் இந்த இடத்தில் தூக்கில் போட்டனர்! 

அந்த இடத்துக்கு இன்றும் தூக்குமரத் தோட்டம் என்று பெயர்.

அந்த வெள்ளையனுக்கு ஒரு சமாதியும் அதன்மேல் கல் சிலுவையும் உள்ளது. 

சமாதியை மூடியுள்ள கல்வெட்டில் அங்கு வெள்ளையன் புதைக்கப்பட்ட விபரம் உள்ளது. 

அந்த இடத்தை விரிவாக ஆராய்ந்தால் இன்னும் பல வரலாற்று விபரங்கள் கிடைக்கலாம்.

அந்த இடம் வெள்ளையனைத் தூக்கிலிட்டுக் கொன்று புதைத்த இடம் என்று நம்ப நல்ல ஆதாரங்கள் உள்ளன!

முதலாவது அங்குள்ள கல்வெட்டில் வெள்ளையன் புதைக்கப் பட்ட செய்தி உள்ளது. 

இரண்டாவது அந்தக் கல்வெட்டில் ஆங்கிலேயனின் பெயர் உள்ளது. 

மேலும் பலவலுவான காரணங்கள் :  

அந்தக் காலகட்டம் திப்புசூல்தானை வீழ்த்தியபின்னால் ஆங்கிலேயர் அனைத்துப் பாளையங்களையும் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த காலம்....(ஏறக்குறைய 1800 ம் ஆண்டு) 

அந்தச் சமாதியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சிறு இரும்புத் தடுப்பு வேலை பழைய முறையில் அமைந்துள்ளது. ஆதாவது கொல்லுப் பட்டறையில் செய்யப்பட்டுள்ளது.

கல்வெட்டும் பழைய ஏடுகளில் காணப் படுவதுபோன்ற எழுத்துக்களைக் கொண்டுள்ளது. 

ஆதாவது எழுத்துக்களில் அதற்குக் கொஞ்ச காலம் முன்னதாக வீரமாமுனிவரால் கொண்டு வரப்பட்ட மாற்றம் அங்கு பின்பற்றப் படாமல் பழைய முறையில் அமைந்துள்ளது. மாற்றம் முழுமையாக அப்போது நடப்புக்கு வரவில்லை போலும்?....

எல்லாவற்றுக்கும் மேலாக தனியார் விவசாய நிலத்தில் அமைந்துள்ள அந்தச் சமாதி மட்டும் ஆங்கிலேயன் அடக்கம் செய்யப்பட்ட இடம் என்று அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளது!..

வீரபாண்டிய கட்டபொம்மனின் மறைவுக்குப் பின்னால் வெள்ளையனை எதிர்த்துப் போரிட்ட பாளையங்களின் அணியில் முக்கியப் பங்கு வகித்தது இந்த இடம் அமைந்துள்ள தளி பாளையப்பட்டு ஆகும்! 

வெள்ளையனுடன் நடந்த போரில்தான் எத்தலப்பநாயக்கரும் கொல்லப்பட்டார்!

அந்தச் சமாதியில் அமைந்துள்ள கல்வெட்டில் ஒரு தந்திரமான வாசகமும் உள்ளது.

ஆதாவது வெள்ளையனைத் தூக்கில்போட்ட இடம் என்று இருந்தால் வெள்ளைக்காரர்களால் சிக்கல் வரும் என்று தெய்விகமாகி அடங்கின சமாதி என்று  கல்வெட்டு இருக்கிறது!...

அந்த இடத்துக்குச் சென்று வந்த நமக்கே இவ்வளவும் தோன்றுகிறது என்றால் வரலாற்று ஆய்வாளர்கள் ஆராய்ந்தால் இன்னும் பல வரலாற்றுச் செய்திகள் கிடைக்கும். 

அந்தக் கால வெள்ளையர் ஆவணங்கள் ஆராயப் பட்டால் அங்கு தூக்கிலடப்பட்ட வெள்ளைக்காரன் பற்றி இன்னும் கூடுதல் தகவல்கள் கிடைக்கலாம்!..

பலரும் வந்து பார்வையிட்டாலும் அந்த இடம் வரலாற்றில் முக்கிய இடம் பெறவில்லை என்ற வருத்தம் அந்தப் பகுதி மக்களிடம் ஆழமாக இருக்கிறது!....

சமாதியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்பு துருப் பிடித்துப் போய் உள்ளது. இப்படியே விட்டால் விரைவில் அழியும் வாய்ப்பு உள்ளது.

அதனால் அதன் அடிப்படைத் தோற்றம் மாறாமல் எண்ணைப் பூச்சால் துருப் பிடித்தல் தடுக்கப் படவேண்டியது உடனடிக் கடமை ஆகும். 



இன்று, 22-05-2013...நான் இருக்கும் கோவை  நகரத்தில் உள்ள அனைத்து சிறுவர்பள்ளிக்கு மான ஓட்டப்போட்டி, சுமார் 2 km தூரம் ஓடிமுடிக்கவேண்டும். காலையிலையே எனது மகன் மிக ஆர்வத்துடன் barcelona football உடுப்புதான் போடணும் என்று அடம்பிடித்தும் சப்பாத்துகளில் jordan போட்டால்தான் காலுக்கு சௌகரியமாய் இருக்கும் என்றும் சொல்லி ஆயத்தமாகிப்போனான். அவன் தோற்றம் ஒரு வீரனுக்குரிய அம்சங்களுடன் நிறைந்திருந்தது எனக்கு இருப்புக்கொள்ளவில்லை, அவனுக்கு ஆச்சரியம் கொடுப்போமே என்றெண்ணி அவ்விடத்துக்கு நானும் போயிருந்தேன். அவனது வயதை ஒத்த 133 சிறுவர்கள் ஓடும் நேரமும் வந்தது. வரிசையில் நிற்கும்போது என்னை கண்டு கை அசைத்தான். துப்பாக்கியில் இருந்து ஒலி வரும் வரை அவன் நின்ற வேகம் காட்டிய ஆர்வம் எல்லாமே எனக்கு நம்பிக்கையை தந்தது. இதோ வெடி,, ஓடினான் ஓடினான் அவ்வளவு வேகம்,முகத்தில் இதுவரை நான் கண்டிராத ஒரு கடினத்தன்மை,கைகள் இரண்டும் முன்னோக்கி தூக்கி கால்கள் அவன் இடுப்பு உயரத்துக்கும் மேலாக எழும்பி அவன் வேகம் எடுத்தது குதிரைப்பாய்ச்சல்தான். 1km ஓடிவரும் இடத்துக்கு அவனைவிட வேகமாக நான் ஓடிப்போய் நின்று பார்த்தால் கிட்டத்தட்ட 50 பிள்ளைகள் வரை வந்துவிட்டார்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவனைக்காணோம். பிள்ளை விழுந்துட்டானோ என எண்ணி பதறியபடி நான் நிற்க தூரத்தில் அவனுடன் 5 சிறுவர்கள் சேர்ந்த போல நடந்துவந்தார்கள். அவனது முகத்தில்லிருந்த கடினம், ஆர்வம்,வெற்றி நோக்கிய வெறி எல்லாம் வியர்வையுடன் வழிந்துவிட்டிருந்தது. காற்றாட நடந்து காலின் கீழ் கிடக்கும் கற்களை பந்துகளாக்கி ஐவரும் கால்பந்து விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். ஷியாம்  ஓடு ஓடு என்று நான் கத்த,, அவன் என் அருகில் மிக நிதானமாய் வந்து பார்த்தீங்களா அப்பா முதல் அரைவாசி தூரம் நாங்கள் தான் முன்னுக்கு வந்தோம். இப்போ நாங்கள் களைத்துவிட்டோம் பின்னுக்கு வந்தவங்கள் ஓடுறாங்கள். அடுத்த முறை பின்னுக்கு ஓடிட்டு கடைசியில பிடிக்கணும் என்று அடுத்தவருட ஆசையை எனக்குள் விதைத்துவிட்டு ஓடினான். மொத்தமும் ஓடிமுடித்து வந்து இன்னுமொன்றும் சொன்னான், ''வெல்லுறது முக்கியமில்லை பங்குபெறுவதுதான் முக்கியம்'' என ஆசிரியர் சொன்னதாய். அவனை கட்டியணைத்து முத்தம் ஒன்று கொடுத்துவிட்டு வந்தேன்.

புதன், 20 மே, 2020


கேள்வி :..உங்களது திருமணத்திற்குப்பின் முதல் வாரத்தில் என்னென்ன நடந்தது.?

பதில் :..நான் எனது திருமண மலரும் நினைவுகள்  சொல்லி சொல்லி போர் அடித்திவிட்டது ...நமது சொந்தம்  ரஞ்சிதா கணினி பேராசிரியர் -ரெங்கநாயக்கன்பட்டி திண்டுக்கல் மாவட்டம்,வத்தலகுண்டு ),  கணவர் கேரளா(இடுக்கி மாவட்டம் , புற்றடி).தனது மலரும் நினைவுகளை பதிவாக அனுப்பியிருந்தார் ...

முதல் நாள் : திருமணம் ஆகி மறுநாள் காலையில் நானும் என் கணவரும் அங்கு உள்ள கோவிலுக்கு செல்வதற்கு தயாராகி கொண்டு இருந்தோம். எனக்கு அங்கு இருப்பதற்க்கே மிகவும் புதுமையாக இருந்தது. ஜூன் மாதம் என்பதால் அப்பொழுது கேரளாவில் மழை காலம் என்பதால் எனக்கு ஊட்டியில் இருப்பது போல ஒரு அனுபவம் இருந்தது.

கோவிலுக்கு நானும் என் கணவரும் சென்றோம் ….. அப்பொழுது ஊரை நன்றாக சுற்றி பார்த்தேன் மிகவும் அழகாக இருந்தது. ரோட்டின் இரு புறமும் எங்கு பார்த்தாலும் செம்பருத்தி செடியாக இருந்தது. பின்பு கோவிலுக்கு அருகில் சென்றோம் வித்தியாசமாக இருந்தது.தமிழ்நாட்டில் இருப்பது போல் இல்லை அங்கு , சாமிக்கு சூடம் ஏற்றுவது மற்றும் திருநீறு கொடுப்பது எதுவும் இல்லை, எனக்கு எல்லாமே வித்தியாசமா இருந்தது , அதுமட்டும் இல்லாமல் எனக்கு மலையாளம் தெரியாது என்பதால் மிகவும் கடினமாக இருந்தது….அப்பொழுது நினைத்தேன் என்னடா இது இப்படி இருக்கே ஊரு, நாம எப்படி இருக்க போறோமோ மலையாளம் வேற பேச தெரியாதே எப்படி சமாளிக்க போறோம் என்று நினைத்துக்கொண்டே வீட்டிற்கு வந்தோம்.

இரண்டாம் நாள் : இன்று காலையில் எழுந்த உடன் என் கணவரின் வீட்டை சுற்றி பார்க்க ஆசையாக இருந்தது. என் கணவர் எல்லாவற்றையும் சுற்றி காட்டினார்.. அவரின் வீட்டை சுற்றி, ஏலக்காய் தோட்டமாக இருந்தது. என் வாழ்க்கையிலே ஏலக்காய் செடியே நான் பார்த்ததே இல்லை. அன்று முதல் முதலாக பார்த்தேன், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. செம்பருத்தி செடியை வைத்து எல்லாம் ஏலக்காய் தோட்டத்திற்கும் வேலி வைத்து அடைத்து இருந்தனர். தமிழ்நாட்டில் வீட்டில் செம்பருத்தி செடி இருந்தாலே ஆச்சரியமாக இருக்கும் ஆனால் எங்கு பார்த்தாலும் செம்பருத்தி செடிகளும் அதன் பூக்களும் கண்ணில் தென்பட்டது.


அன்று மாலையில் அங்கு உள்ள ஒரு நீர்விழ்ச்சி காண சென்று இருந்தோம்,அந்த இடத்தின் பெயர் அருவிக்குழி. அந்த இடத்தை பற்றி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை, அவ்வளவு பிடித்து இருந்தது எனக்கு. மிகப்பெரிய பாறை ஒன்று இருந்தது , அதன் மேலே ஏறி நின்று பார்த்தால் தமிழ்நாடு தெரிந்தது…. குறிப்பாக சொன்னால் தேனி மாவட்டம் கம்பம் பகுதி நன்றாக தெரிந்தது.

மூன்றாம் நாள் : திருமணம் ஆகி மூன்றாம் நாளான இன்று நாங்கள் மறுவீட்டிற்கு செல்ல வேண்டும். அன்று காலை உணவு, எனது அத்தை இட்லி, வடை, மட்டன் குழம்பு, மீன் குழம்பு, என்று அசத்திவிட்டார் . எல்லாம் சாப்பிட்டு விட்டு நாங்கள் அனைவரும் மறுவீட்டிற்கு (என் வீட்டிற்கு) சென்றோம். மாலை நேரம் ஒரு 6 மணி இருக்கும் வேளையில் எனது வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். 5 நாட்கள் இருக்க வேண்டும் என்று அனைவரும் சொல்லிவிட்டார்கள். எனது ஊரு கொஞ்சம் கிராமம் என்பதால் என் கணவருக்கு அங்கு இருப்பதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தது.

நான்காம் நாள் : என் ஊரில் நிறைய கோவில்கள்இருக்கிறது. காலையில் எழுந்தவுடன் என் அம்மா என்னிடம் குளித்துவிட்டு நீயும் உன் கணவரும் நம் ஊரில் உள்ள எல்லா கோவிலுக்கும் போய்விட்டு வாருங்கள் என்று சொன்னார்.

என் கணவருக்கோ கடவுள் நம்பிக்கை என்பது கொஞ்சம் கம்மிதான் , இருந்தாலும் கல்யாணம் நடந்த மூன்று நாட்கள் தான் ஆகி இருக்கிறது இப்பவே எப்படி நான் வரவில்லை என்று சொல்ல முடியும் என்பதற்காக என்னுடன் வந்தார். நாங்கள் இருவரும் பைக்கில் சென்றோம் ….முதல் முதலாக என் கணவருடன் பைக்கில் சென்ற அனுபவம் அதை மறக்கவே முடியாது.

அன்று மாலையில் சென்னையில் இருக்கும் எனது சித்தி தொலைபேசியில் அழைத்து இருந்தார். என்னையும் என் கணவரையும் விருந்துக்கு சென்னைக்கு வாருங்கள் என்று சொன்னார். என் கணவர் நல்லது என்று நினைத்து கொண்டு அன்று இரவே நானும் என் கணவர் , என் தங்கை நங்கள் மூன்று பேரும் சென்னைக்கு சென்றோம்.

ஐந்தாம் நாள் : சென்னை வந்து சேர்த்தோம் … அன்று ஒரு நாள் முழுவதும் வீட்டில் இருந்து ரெஸ்ட் எடுத்து விட்டு, மாலையில் சித்தி , சித்தப்பா , சித்தி பசங்க இரண்டு பேரும் , நாங்கள் மூன்று பெரும் சேர்ந்து அனைவரும் மெரினா கடற்கரைக்கு சென்றோம்…மாலை நேரத்தில் சென்று இருந்ததால் கூட்டம் அலைமோதி கொண்டு இருந்தது.

நானும் என் கணவர் மட்டும் தனியாக சென்று இருவரும் கைகளை பிடித்து நடந்து கொண்டு சுற்று கொண்டு இருந்தோம்.

பிறகு அலைகளை பார்த்தபடி ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டோம். இருவருக்கும் மனம் விட்டு பேசுவதற்கு சரியான இடமாக இருந்தது .அலைகளை பார்த்து ரசித்துக்கொண்டே நாங்கள் இருவரும் மனம் விட்டு பேசிக்கொண்டு இருந்தோம் , நேரம் போனதே தெரியவில்லை. பின்பு ஹோட்டலுக்கு அனைவரும் சேர்த்து சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு சென்று விட்டோம்.

ஆறாம் நாள் : இன்று என் சித்தி எங்கள் இருவருக்கு விருந்து சாப்பாடு செய்து இருந்தார்.மட்டன் , சிக்கன் , முட்டை , நாங்கள் இருவரும் நன்றாக சாப்பிட்டோம், பிறகு எங்களுக்கு புதிதாக ஆடை எடுத்து கொடுத்தார்கள் . சிறிது நேரம் ஆனதும் என் வீட்டில் இருந்து போன் வந்தது. என் அப்பா என் கணவரிடம் பேசினார். நாளை மறுவீடு முடிந்து உங்களுடைய வீட்டிற்கு செல்ல வேண்டும். நீங்கள் இருவரும் இன்று இரவு கிளம்பி வாருங்கள் என்று சொன்னார். இரவு கிளம்பினால் நம் வீட்டிற்கு போவதற்கு காலை ஆகிவிடும் , அதனால் இப்பொழுதே கிளம்ப முடிவு செய்து நாங்கள் மூன்று பேரும் சென்னையில் இருந்து கிளம்பிவிட்டோம்.

ஏழாம் நாள் : அன்று காலையில் 8 மணிக்கு மேலே கிளம்ப ஆரபித்தோம். எல்லோரும் முகத்திலும் ஒரே கவலை. எனக்கோ கிளம்புவதற்கு மனமே இல்லை. என்ன செய்வது போய்த்தான் ஆக வேண்டும் , எல்லோரும் கிளம்பி என் கணவரின் வீட்டிற்கு சென்றோம். அங்கு என் அத்தை சம்மந்த வீட்டுக்காரர்கள் வருகிறார்கள் என்று தடபுடலாக சமையல் செய்து வைத்து இருந்தார்.எனக்கோ என்னை இங்கு விட்டு செல்ல போகிறார்கள் என்று கவலை ஒருபக்கம் வந்து வந்து போனது.

என் அம்மா தனியாக அழைத்து என்னிடம் பேசினார் ,,,,என்னை அறியாமல் அழுது விட்டேன் , என் அம்மா என தங்கை அனைவரும் என்னை கட்டி பிடித்துக்கொண்டு அழுதனர். பின்பு எனக்கு ஆறுதல் சொல்லி விட்டு நாங்கள் அடிக்கடி உன்னை பார்க்க வருவோம், சந்தோசமாக இருக்கணும், பெரியவர்கள் சொல்வதை கேட்க வேண்டும், பார்த்து பத்திரமாக இரு, அழக்கூடாது எதுவாக இருந்தாலும் போன் பண்ணி எங்களிடம் சொல்லு. அங்கு நாங்கள் எப்படியோ அதே போல தன இங்கு உன் அத்தையும் மாமாவும் அதனால் அவர்களை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள்.

பிறகு அனைவரும் சந்தோசாக ஊருக்கு சென்று விட்டார்கள்.....இன்று நினைத்தாலும் பசுமையான அருமையான மலரும் நினைவுகள் ...வாழ்த்துக்கள்  தோழி ..தோழருக்கு ..

நன்றி ..

திங்கள், 18 மே, 2020

கேள்வி : ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் சுத்தம் செய்துகொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதைப் பற்றி தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கமாக கூறமுடியுமா?


என் பதில் :அருமையான கேள்வி ..நான் சொல்வதை விட பல் மருத்துவரிடம் கேட்டு பதில் அளித்தால் நன்றாக இருக்கும் ...எங்கள் அக்கா மகள் Dr .சொர்ணமாலா முருகராஜ் -திருப்பூர் ..அவர்கள் கொடுத்த பதில் ..நீங்கள் தெரிந்துகொள்வதற்காக ...

முதலில், தற்போது கிடைக்கும் உணவுகள் எல்லாம் கடிக்க மெதுவாக இருப்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் பயங்கரமாக கடித்து சாப்பிட இங்கே தற்போது ஒன்றும் இல்லை. உடலை மட்டும் இல்லை, வாயை கூட சோம்பேறி ஆக்கி வைத்திருக்கு இந்த சமூகம்.

நீங்கள் எப்படி பல் துலக்கினாலும், floss செய்தாலும், பல்லில் உணவு துணுக்குகள், பிரியாணியில் உள்ள மட்டன் பீஸ் போல பல்லில் ஒட்டிக்கொள்ளும். அதை எடுக்க ஊக்கு தேடி பாதி உசிர் போய்விடும். உணவில் உள்ள சர்க்கரை ( even carbohydrates) உங்கள் பல்லை பதம் பார்த்து விடும். இதனால் தான் சாப்பிட்ட பின் வாயை தண்ணீர் கொண்டு கொப்பளித்து துப்ப சொல்கிறார்கள். இப்படி செய்தே திருடனை பாரதியார் விரட்டியதை மறக்க வேண்டாம்.

6 மாதம் ஒரு முறை பல் மருத்துவரிடம் காண்பிக்கும் பொழுது அவர் பல்லில் சொத்தை ஏதும் இருக்கிறதா, இல்லை வேறு ஏதும் பிரச்சனை இருக்கிறதா என்பதை பார்த்து கூறிவிடுவார். அது இல்லாமல் சில நேரம் தேனீர் அதிகமாக குடிப்பவர்களுக்கு மஞ்சள் காரை வாயினுள் அதிகமாக படிந்துவிடும் அதை மருத்துவரிடம் சுத்தம் செய்யலாம்.

ஒரு 200 ரூபாய் பல் மருத்துவரிடம் கொடுத்தால் நம் குடி முழுகிப் போய்விடாது. இதற்கும் உங்களுக்காக நீங்கள் செய்து கொள்ளும் முக்கியமான செலவு அது. விஜய் படம் அஜித் படம் வந்தால் 300 ரூபாய் செலவு செய்து பார்க்கத் தூண்டுகிறது, இதற்கு செலவு செய்ய என்ன குறை? வெளிநாடுகளில் பல் மருத்துவர்களின் கட்டணம் மிக அதிகம் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.

மற்ற படி, உங்களது பல்லை, ஈறுகளை நன்றாக வைத்திருக்க, oil pulling செய்யலாம். நல்லெண்ணெய் என்ன விலை விக்கிறது என்று நினைக்க வேண்டாம். தேங்கா எண்ணெயிலும் பண்ணலாம்.ஆனால் கடையில் கிடைக்கும் refined oil வேண்டாம். அது வெறும் சூப்பி போட்ட பணங்கோட்டை போன்றது. செக்கு எண்ணெய் சிறப்பு.

எப்படி செய்வது?

10 - 15ml எடுத்து, காலை எழுந்த உடன் ஒரு 10 நிமிடமாவது கொப்பளிக்க வேண்டும். முதலில் வாய் வலிக்கும். அப்புறம்? அதுவே பழகிடும்.

என்ன பலன் ?

இயற்கையான முறையில் உங்கள் பல் பாதுகாக்கப்படும். பல் ஈறு, சொத்தை, பல் வலி வராது. ரூட் கேணல் செய்யவேண்டிய அவசியம் வராது. சிரித்தமுகத்தோடு ஸ்ரீநித்யா (Shrinithyaa Gopalan) @ மாதிரி பின்னி எடுக்கலாம். ..

நன்றி ...

ஞாயிறு, 17 மே, 2020

பாளையக்காரர்கள் காலத்து பாசன முறை கல்வெட்டு.....
உடுமலை: பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில், மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து மழைக்
காலத்தில், வீணாக செல்லும் தண்ணீரை தடுத்து, அணை கட்டி விவசாயத்திற்கு பயன்படுத்தியது, உடுமலை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டு தகவல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை திருமூர்த்தி மலையிலிருந்து பாலாறு உருவாகி, சமவெளிப்பகுதிக்கு செல்கிறது. பி.ஏ.பி., திட்டத்தில் திருமூர்த்தி அணை கட்டும் முன், பாலாற்றில் சென்ற தண்ணீரை தேக்கி, விவசாயத்திற்கு பயன்படுத்த தளி பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, மேடான பகுதியிலிருந்து வரிசையாக கீழ்நோக்கி ஏழு குளங்கள் அமைக்கப்பட்டு, தற்போதும் அக்குளங்கள் பயன்பாட்டில் உள்ளன. இக்குளங்களின் தொன்மையை உறுதிப்படுத்தும் வகையில், பெரியகுளத்தில், நீர் மட்டத்தை அளக்க
இதே போல், குளங்களை பாதுகாத்த வீரர்களுக்கு சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. இவ்வரிசையில், திருமூர்த்தி மலையில் இருந்து மேற்கு நோக்கி பாயும் பாலாற்றின் குறுக்கேயும், தளி பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில் அணை கட்டப்பட்டு, விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில், திருமூர்த்திமலை பகுதியில், ஜல்லிபட்டி பழனிச்சாமி, அருட்செல்வன், , சிவக்குமார் உட்பட குழுவினர் ஆய்வு நடத்தினர். ஆய்வில், மொடக்குப்பட்டி ரோட்டில், பாலாற்றின் கரையில் இருந்த கல்வெட்டு கண்டறியப்பட்டது. அருகில், தளி பாளையக்காரர் சிலையுடன், பாறையில் செதுக்கப்பட்டிருந்த கல்வெட்டு படியெடுக்கப்பட்டது. கல்வெட்டில், அணை கட்டப்பட்ட ஆண்டு, மறைந்துள்ளது. சித்திரை மாதத்தில் தளி பாளையக்காரர் எர்ரமநாயக்கர் என்பவரால், அணை கட்டப்பட்டு, பாசன பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. தடுப்பணை போன்ற இந்த அணை சுவர்கள் இடிந்து ஓடையில் கிடக்கின்றன.
ஆய்வு நடுவத்தினர் கூறுகையில், 'தளி பாளையக்காரர் காலத்தில், பல்வேறு பாசன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, திருமூர்த்தி அணையின் கழிவு நீர் ஓடையாக மாறியுள்ள பாலாற்றின் கரையிலுள்ள பாறையில் இந்த கல்வெட்டு உள்ளது. சிலை காலப்போக்கில் சேதமடைந்துள்ளது. அப்பகுதி எர்ரம நாயக்கரின் பெயரால், ஏராம் வயல் என அழைக்கப்படுகிறது. அங்குள்ள சிலைக்கு குறிப்பிட்ட நாட்களில், மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். உடுமலை பகுதியில் நீர் பாசன முறைகள் சிறப்புற்றிருந்தது
முற்காலத்தில், அமைக்கப்பட்ட கல்மானி தற்போதும் உள்ளது.
கொரோனா என்பது நோய் அல்ல..! 

கொரானா கால நினைவுகள்

வணக்கம்.

கோடைக் காலம், குளிர்காலம் என்று நாம் இதுவரையிலும் சொல்லி கொண்டிருந்த காலத்தோடு இனி கொரானா காலம் என்றும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நிகழ் காலம், இறந்த காலம், எதிர்காலம் என்று மூன்று காலங்களைப் பற்றித்தான் நாம் இதுவரையிலும் பேசியுள்ளோம். ஆனால் அடுத்த 25 வருடங்கள் கழித்துக்கூட இப்போது நாம் அனுபவித்து கொண்டிருக்கும் கொரானா காலத்தை தலைமுறைகள் பேசப் போகின்றார்கள்.

தமிழகத்தில் 1980க்கு முன்னால் பிறந்த அனைவருக்கும்  வறுமை, பசி, பட்டினி, என்று எல்லாமே ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கலந்து இருந்தது. கடைசியாக 1974 ல் பஞ்சம் ஒன்று வந்தது.  அதற்குப் பின்னால் சூழல் மாறியது.  தமிழகம் பல வகைகளில் முன்னேற்றம் அடைந்தது.  1990க்கு பிறகு மொத்த இந்தியாவின் முகமும் மாறியது.  ஏற்கனவே வளர்ந்து கொண்டிருந்த தமிழகத்தின் முகம் முழுமையாகவே மாறியது. 

தமிழர்களின் வாழ்க்கைத் தரம் மாறியது.  வசதிகள் கூடியது.  ஏழை, பணக்காரன் என்ற இரண்டு அடுக்கு மாறியது. நடுத்தரவர்க்கத்தின் எண்ணிக்கை அதிகமானது. கூடவே  உயர் நடுத்தரவர்க்கம் என்ற புதிய வர்க்கம் உருவானது.

கம்யூனிஸ்ட் கொள்கைகள் செல்லக்காசாக மாறியது. பணமே பிரதானம். செல்வமே கடவுள் புதிய கொள்கை உருவானது.

காண்பதெல்லாம் வாங்கு. பார்ப்பதெல்லாம் அனுபவிக்க என்ற தத்துவம் தமிழர்களை வழிநடத்தத் தொடங்கியது.

நுகர்வோருக்கு தரம் தேவையில்லை. விளம்பரங்கள் போதும் என்ற எண்ணம் தான் விற்பனையை வளர்த்தது. கடன் வாங்குவது தவறில்லை என்ற கொள்கையும்  இயல்பானது.

சுதந்திரம் முக்கியம் என்றார்கள். கூட்டுக்குடித்தனம் தவறு என்றார்கள். அவரவர் பாதைகள் வேறு. பயணம் வேறு. எண்ணங்கள் வேறு. எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். என்றார்கள். சிந்தனைகளை மாற்றிக் கொள்ளுங்கள்  என்று வந்தவர் போனவர் அனைவரும் அறிவுரை சொன்னார்கள்.

ஆனால்.......... நம்புவார்களா? மாட்டார்களா? என்று தெரியாது. 

ஆனால் இப்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் ஆச்சரியமான உண்மைகள். எல்லாவற்றையும் கொரனா உருவாக்கியது. அதுவே உறுதிப்படுத்தியது. இப்போது நாம் கொரானா கால நினைவுகள் குறித்துப் பேசப் போகின்றோம்.

“இப்படியான ஒரு காலத்தை நாங்கள் கடந்து வந்தோம்” என்று இன்னும் 25 வருடங்கள் கழித்து நம் தலைமுறைகளிடம் சொன்னால் என்ன பதில் வரும்?

கொரனா காலம் என்பதனைப் பற்றியோ கோவிட் 19 உருவாக்கிய தாக்கத்தையே அவர்கள் எப்படி உணர்வார்கள் என்பதே குழப்பமாக உள்ளது.

சீனா தான் காரணம் என்பதும், வூகான் மாநிலத்தில் உருவான வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தியது என்று சொன்னால் நம்பும்படியாக இருக்குமா?

வீட்டுக்குள் இருந்து உயிர் பிழைத்தோம். தனித்து இருந்து தப்பித்தோம். என்று சொன்னால் எதிர்கால மருத்துவ உலகம் சிரிக்காதா?

இயற்கையில் உருவானதா? செயற்கை சமாச்சாரமா? என்ற ஆராய்ச்சி முடிவே ஆறு மாதங்கள் ஆகியும் தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் இன்னமும் தடுமாறிக் கொண்டு இருக்கிறது. ஆட்சியாளர்கள் குழம்பிப் போய் உள்ளனர். மனிதர்களின் மொத்த வாழ்க்கையும் நிலை குலைந்து போய் விட்டது.

மானிட இயக்க விதிகள் மாறிப் போனது. மகா பெரிய கோடீஸ்வரர்கள் தங்கள் சொத்தை இழந்தார்கள். அளவாக செல்வம் உடையவர்கள் உணவு இல்லாதவர்களுக்கு வழங்கினார்கள்.

அரசு ஊழியர்கள் அன்போடு பணிபுரிந்தார்கள். சாலைகள் சந்துகள் வீடுகள் எங்கும் கிருமி நாசினியை முதல் முறையாக பீய்ச்சியடிக்கப்பட்டது. நொடிக்கு ஆயிரம் வாகனங்கள் நகரும் சாலைகள் அனைத்தும் வெறிச் சோடியது. முக்கிய நகர்ப்புற சாலைகளில் கூட விலங்குகள்  பயமின்றி பயணித்தது. புகையின்றி காற்றைச் சுகமாகச் சுவாசித்தது. மனிதர்களுக்கு பயணமே இல்லாத வாழ்க்கையானது.

தமிழக அரசு   மருத்துவமனைகள்  கோவிலாக மாறியது. மருத்துவர்களும், சுகதாரப் பணியாளர்களும் கடவுளாக மாறினார்கள். 
செலவில்லாத சுகப் பிரசவம் அதிகமானது. 
கொரானா நோயை நெஞ்சக நோய் என்று தமிழில் அழைத்தார்கள். 
நோயாளிகளுக்கு பாசத்துடன் உணவு வழங்கினார்கள்.
‘கபசுர குடிநீர்’ கண்கண்ட கடவுளாக வந்து சேர்ந்தது.
எல்லாமே அரசு செலவு. 
தனியார் மருத்துவமனைகள் தடுமாறி இயக்கமற்று கிடந்தார்கள்.

உலகில் டாலர் முதல் பணம் வரைக்கும் செல்லாக்காசானது வல்லரசு நாடுகள் தடுமாறியது. வசதியிருந்தவர்களும் அரசு மருத்துவமனைகளில் தான் அடைக்கலாம் ஆக வேண்டியிருந்தது.

இங்கு ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்பதும் புரியாமல் எதைத்தான் செய்ய வேண்டும் என்பதனையும் அறியாமல் குழம்பிக் கிடந்த போது கொரானா கற்றுக் கொடுத்த பாடங்கள் ஒன்றா இரண்டா?

2020 ல் ஒரு அலைபேசி தான் உலகம். ஒவ்வொருவரும் ஒரு உலகத்தை வைத்திருக்கின்றனர்.  கண்டம் கடந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் காட்சியாக வந்து நம் அலைபேசியில் விழுந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் கொரானா வைரஸ் ன் உருவத்தை நுண்ணோக்கி வழியாக மட்டுமே பார்க்க முடியும் என்பது என்னவொரு விந்தை. அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பின்னால் நவீனத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி இன்னமும் உச்சத்தில் இருக்கும். அப்போது கொரனா நினைவுகள் குறித்து அறியப் பழைய நினைவுகளை புரட்டிப் பார்த்தால் எப்படி உணர்வார்கள்?

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பஞ்சங்கள் பசியைக் கொண்டு வந்தது. பசி வறுமையைக் கொண்டு வந்தது. வறுமை கொத்துக் கொத்தாக மக்களைச் சாக வைத்தது. ஆனால் இன்று? பஞ்சம், பசி, பட்டினி எல்லாமே வெறும் வார்த்தையாக மாறியுள்ளது. ஒப்பீட்டளவில் மனிதர்களின் வறுமை என்ற எல்லைக்கோட்டைக் கடந்து வந்துள்ளான். முயற்சிக்கின்றான். வாய்ப்பும் உள்ளது. வசதிகளும் இழுத்துச் செல்கின்றது. ஆசைகள் இழுத்துச் செல்கின்றது.

தற்போது மனிதர்களுக்கு எதுவும் அனுபவிக்கக் கூடியது என்ற எண்ணத்தால் ஒவ்வொரு நாடும் சந்தையாக உள்ளது. ஒவ்வொரு தனி மனிதனும் நுகர்வோராகவே உள்ளான்.

இதன் காரணமாகக் கோரானா உருவாக்கிய ஒழுக்க விதிகளைப் பின்பற்ற முடியாமல் சாலைக்கு வரும் போது காவல்துறையிடம் சிக்கி உக்கி போடுகின்றார்கள். கும்மி தட்டுகின்றார்கள். கடைசியாகக் கதறி மன்னிப்பு கேட்டு வீட்டுக்கு ஓடுகின்றார்கள்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் இங்கு வந்த பஞ்சங்கள் அனைத்தும் வெறுமனே கும்மிப்பாடல்களாக, ஒழுங்கற்ற கோர்வையற்ற செய்திகளாகவே உள்ளது.  முழுமையாக எங்கும் எவரும் ஆவணப்படுத்தப்படவே இல்லை.  அதன் தாக்கத்தை இன்று வரையிலும் எவரும் உணர வாய்ப்பில்லாமலே போய்விட்டது. ஆனால் இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கொரானா காலமென்பது காணொளிக்காட்சியாக உள்ளது. எழுத்து வடிவில் உள்ளது. இதற்கு மேலாக சமூக வலைதளங்களில் ஒவ்வொருவரும் எழுதிய அவரவர் அனுபவங்கள் சார்ந்த ஆவணமாகவும் உள்ளது. 

ஒரு தகவல் உண்மையா என்பதற்கு எதிர்காலத்தில் சோதித்துப் பார்க்கப் பலரின் எழுத்துக்கள் ஆவணமாக இருக்கிறது என்பதே தற்போதைய கொரானா காலத்தின் ஒரே சிறப்பு.

இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் பல எல்லைக்கோடுகள் உண்டு. மொழி, மதம், பண்பாடு, கலாச்சாரம் போன்ற பல பிரிவினைகளையும் உடைத்துச் சுக்குநூறாகி அதெல்லாம் இருக்கட்டும். நீ முதலில் வீட்டுக்குள் போய் உட்கார். நான் சொல்லும் வரைக்கும் வெளியே வராதே என்று 2020 என்று ஒவ்வொருவரையும் மாற்றும் என்று எந்த ஜோசியராவது 2020 புத்தாண்டு பலனில் சொன்னார்களா?

இப்படியான ஒரு வாழ்க்கை முதல் ஆறு மாதங்களில் நாம் வாழ வேண்டியிருக்கும் என்று எவரும் நினைத்திருக்கவே மாட்டார்கள்.  பரம ஏழை முதல் பகாசூர பணக்காரர்கள் வரைக்கும் வரை,  கிராமம் முதல் நகரம் வரை. சென்னை முதல் நியூயார்க் வரை.  மெல்பேர்ன் முதல் வான்கூவர் வரைக்கும் உலகத்தின் குறுக்கும் நெடுக்கும் கண்டங்களாகப் பிரிந்து வாழ்ந்த மக்களை, வயது வித்தியாசமின்றி, பொருளாதார உயர்வு தாழ்வின்றி அனைவரும் இப்போது ஒரே மாதிரியான வாழ்க்கையைத் தான் வாழ வேண்டும்.  என்ன வசதிகள் இருந்தாலும் வீட்டுக்குள் மட்டும் தான் இருந்தாக வேண்டும் என்று சிறிய கிருமி மிரட்டிவிட்டதே?

மனைவியுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்கள் கடந்த 50 நாளில் ஒன்று சேர்ந்து அன்பு ஆறாக ஓடியுள்ளது.  அதன் விளைவு அடுத்த வருடம் பல கோடி புதிய ஜீவன்கள் இந்தப் பூமிக்கு வரப் போகின்றார்கள் என்று எச்சரிக்கின்றார்கள்.

குழந்தைகளைக் கவனிக்காமல், மனைவியுடன் பேச நேரம் இல்லாமல் வேலை வேலையென்று ஓடிக் கொண்டிருந்த விரைவு வாழ்க்கையை கொரானா மாற்றியுள்ளது.   கிமு, கிபி என்பது போல  இனி கொமு கொபி என்பதாக மாறியுள்ளது. அதாவது கொரானாவிற்கு முன், கொரானாவிற்கு பின் என்பதாக இனி வரும் காலம் மாறப் போகின்றது. கொரானா வைரஸ் ன் உருவத்தை நுண்ணோக்கி வழியாகப் பார்த்து உத்தேசமாகப் படம் வரைந்து பாகம் குறித்துள்ள நவீன விஞ்ஞானம் நமக்கு உணர்த்தியதை விடச் சமூக விஞ்ஞானத்தில் நடந்துள்ள மாற்றங்கள் அபாரமானது.

வீட்டைச்சுற்றியுள்ள இயற்கை குறித்து அக்கறை வந்துள்ளது.

பொதுச் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு அதிகமாகியுள்ளது.

அரசு மருத்துவமனைகள் அசிங்கமல்ல என்ற எண்ணம் உருவாகியுள்ளது.  பொதுத்துறை நிறுவனங்களும் ஒரு நாட்டுக்குத் தேவை என்பதனையும் உணர்த்தியுள்ளது.

உணவு கலாச்சாரம் மாறியுள்ளது.

பீகார் அருகே உள்ள கிராமத்திலிருந்து இமயமலையின் முடுகளைப் பார்க்கும் அளவிற்கு இடையே உள்ள 180 கிலோ மீட்டர் வானவெளியும் படு சுத்தமாக மாறியுள்ளது.

பல நூறு வருடங்கள் பல மனிதர்கள் சாதிக்க முடியாமல் அழுக்காக அசிங்கமாக இருந்த கங்கை நதியின் நீர் இப்போது இளநீர் போல மாறியுள்ளது.

கொரனா வருவதற்கு முன்பே டெல்லி மக்கள் முகமூடி போட்டுத்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இப்போது டெல்லி காற்றின் மாசு நம்ப முடியாத அளவிற்கு முழுமையாக குறைந்துள்ளது. இலவசமாகத் தருகிறேன். என்னிடம் உள்ள கச்சா எண்ணெய்யை எடுத்துக் கொண்டு போ என்று இப்போது நடக்கும் கூத்தை எதிர்காலத்தில் சொன்னால் யாராவது நம்புவார்களா?

கொரனா என்பது நோயல்ல.
பூமிப் பந்தை சுத்தப்படுத்த வந்த தேவதை.

தவறான பாதைக்கு சென்று கொண்டிருக்கும் மனிதகுலத்திற்கு வழிகாட்ட வந்த மாபெரும் சக்தி.




வெள்ளி, 15 மே, 2020

கேள்வி :1...எப்போதும் பாசிட்டிவாக இருப்பது எப்படி?

கேள்வி :2...எப்போதும் பாசிட்டிவ் ஆக இருந்து என்ன பயன்?

என் பதில் :...



நம் தனிப்பட்ட வாழ்விலும் உலகப்பொது விஷயங்களிலும் யாதொரு நெகடிவ் விஷயமே இல்லை என்ற நிலை வருமாயின் நாமெல்லாம் எப்படி நடந்துகொள்வோம்? யோசித்து பதில் சொல்லுங்களேன்!


கம்பி மேல் நடக்கும் வீதி வித்தைக்காரர் கையில் ஒரு நீளமான கோலை வைத்துக்கொண்டு நடப்பார். கவனித்ததுண்டா?


நம் அணுகுமுறை என்ற அந்த கோலின் ஒரு முனை நேர்மறை. இன்னோர் முனை எதிர்மறை. நாம் நடுநிலைமையை பிடித்துக்கொண்டு தான் வாழ்க்கை என்ற கயிறை கடக்க முடியும். பாசிட்டிவ் பக்கமே சாய்ந்து கொண்டிருந்தாலும் விழத்தான் செய்வோம்.


எப்போதும் பாசிட்டிவ் ஆக இருக்க கடவுளால் கூட முடியாது. முதல்நாள் பட்டாபிஷேகம் என்ற உறுதிமொழி வந்த போதும் மறுநாள் வனவாசம் என்ற கட்டாயம் வந்த போதும் சலனமே காட்டாமல் சமன்பட்ட ஒரு மனநிலையும் முகக்குறிப்பும் காட்டிய இறைவன் தான் காட்டில் மனைவியை பிரிந்து புலம்பும் பொது உன்மத்தம் பிடித்த நிலைக்கு போகிறார்!


இரு முனைகளும் அவசியம்; இடைப்பட்ட நிலையை பற்றிக்கொள்ளுதலும் அவசியம். அவ்வப்போது சாய்ந்து மீள்வதும் அவசியம்!

நன்றி...பாஸிட்டிவ் எனர்ஜி ....வாழ்க்கைக்கும் ...வேலைவாய்ப்புக்கும் ...

வியாழன், 14 மே, 2020

இது இப்போ அதிக குழந்தைகளும் சொல்லும் ஒரு மாதிரி உரையாடல் ..
நான் ஏழரைக்கு எழுந்திருப்பேன் . ..எட்டு மணிக்கு ஸ்கூல் போவேன்... அம்மா தான் வேன்லே ஏற்றி விடுவா ... தாத்தா கூட்டிட்டு வருவார் வேன் நிக்கிற இடத்திலேந்து.... அதுக்கப்புறம் .. பாட்டு, டேன்ஸ், டிராயிங், கீபோர்ட் க்ளாஸ்க்கு பாட்டி இல்லைன்னா தாத்தா கொண்டு போய் விடுவாங்க ... திரும்ப வீட்டுக்கு போய்ட்டு ஹோம்வர்க் செய்வேன்... டிவி சீரியல் பார்ப்பேன் பாட்டிகூட .... அப்புறம் தூங்கிடுவேன் .... (நான் பேசிய ஐந்து குழந்தைகளில் நால்வர் இதைத் தான் சொல்கின்றனர் .. சிறு சிறு மாறுதல்கள் மட்டும் )
"அம்மா எப்போ வருவாங்க.?."
"தெரியாது.... நான் தூங்கிடுவேன்... அவங்க வரதுக்குள்ளே"
"காலையிலே எப்போ போவாங்க அம்மா?"
"தெரியாது.... சாப்பாடு சாப்பிட்டுட்டு தான் போவாங்க.."
" அப்பா .. எப்போ போவாரு ?"
" அவரு நான் எழுந்திருக்கறதுக்கு முன்னாலேயே போய்டுவாரு"
" சாயந்திரம் எப்போ வருவாரு?"
"தெரிலே ... நான் தூங்கிடுவேன் "
" சண்டே அன்னைக்கு என்ன பண்ணுவீங்க "
"சொந்தக்காரங்க வீட்டுக்கு போவோம் .. இல்லேண்ணா ஏதாவது பங்க்ஷன் போவோம்... "
இதிலே குழந்தைக்கு நல்லது .. கெட்டது சொல்லிக் கொடுக்க பெற்றோர்களுக்கு நேரமெங்கே .........???
பெற்றோர் வளர்ப்பதில்லை .. குழந்தைகளே வளர்றாங்க அப்படின்னு சொல்லிடுவோம் இனிமே ...!!!
பாளையக்காரர்கள் ஜமீனாக இருந்த காலத்தில், ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம உரிமை கொடுத்தனர் என்பதை விளக்கும், கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

நெகமம் அடுத்த சின்ன நெகமம் கிராமத்தில் அமைந்துள்ளது, ஸ்ரீசெல்வ சென்ராயப் பெருமாள் கோவில். இக்கோவில் தெற்குப்புறமுள்ள சுவரில் இருந்த கல்வெட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த நிலையில், புதிதாக கோவிலின் வடக்கு மற்றும் மேற்குப்புற சுவரில் இருக்கும் கல்வெட்டை, கோவையை சேர்ந்த கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் ரமேஷ் கண்டறிந்துள்ளார்.அவர் கூறியதாவது:கோவில் அர்த்த மண்டபத்தில், சுண்ணாம்பு பூசப்பட்டிருந்த சுவற்றில் கல்வெட்டு காணப்பட்டது. சுண்ணாம்பு பகுதியை சுத்தம் செய்து பார்த்தபோது, எழுத்துக்கள் தெளிவாக தெரிந்தன. அதில், 'உசர்வாரி வருடம் ஆவணி மாதம் 21ம் தேதி பெரிய நெகமத்தில் இருக்கும், காணியாளருடைய சேரக்குல வம்சத்தில் குமாரசாமி பிள்ளையின் புத்திரர்களில் பூமி நாத பிள்ளை என்கிறவர், நெகமம் பாளையக்காரராகிய முத்து வல்ல கெண்டம தேவய நாயக்கருடைய எசமானி வெள்ளையம்மாள் உத்தரவு பிரகாரம்.சின்ன நெகமம் ஸ்ரீசென்ராயப் பெருமாளுக்கு அஷ்த்தகிரி கருங்கல், கற்பகிரி மகா மண்டபம், துளசி மண்டபம், தீர்த்த கிணறு, கல்கருட கம்பம், பொங்கு மடப்பள்ளி, துாங்கு மஞ்சத்தொட்டி, நகரை சுத்தி மதில் எழுப்பியதில் அடங்கலான வேலைகளையும், மேற்படி எசமானி வெள்ளையம்மாள் உத்தரவு பிரகாரம் வேலைகள் முடித்து வைத்த கொடை உபயம்,' என கல்வெட்டு செய்தியாக உள்ளது. கல்வெட்டையும், அதில் உள்ள எழுத்துக்களை ஆய்வு செய்ததில், கல்வெட்டு காலம் கி.பி., 1840ம் ஆண்டு என தெரிகிறது.

மேலும், ஆவணி மாதம் என குறிக்கப்பட்டுள்ளதால், ஆகஸ்ட் மாதத்தில் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது.ஏற்கனவே இருந்த கோவில் சிதிலமடைந்த காரணத்தால், கோவில் புனரமைக்கும் பணி, 1840ல் நடந்துள்ளதை இக்கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. ஆங்கிலேயர் ஆட்சியில், பாளையக்காரர்கள் ஜமீன்தார் முறையில் வாழ்ந்துள்ளனர். அப்போது, ஆண்களுக்கு நிகராக பெண்களும் தனது அதிகாரத்தை செலுத்தியுள்ளனர் என்பதற்கு சாட்சியாக, இக்கல்வெட்டு குறிப்பு விளக்குகிறது

நன்றி : தினமலர் ..செந்தில்ராம் ....ஜூலை 28....2019....
Raja Pandian📚📚✍️✍️✍️

செல்வசென்ராயப்பெருமாள் கோயில்

சின்ன நெகமத்தில் இருக்கும் இக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம், கருடகம்பம் என்றழைக்கப்படும் விளக்குத்தூண் ஆகிய அமைப்புடன் விளங்குகிறது. அர்த்தமண்டபத்தின் தெற்குச் சுவரின் இடப்பக்கமாக அதன் கீழ்ப்பகுதியில் பதின்மூன்று வரிகளைக்கொண்ட கல்வெட்டு காணப்படுகிறது. கோயில் சுவர் முழுதும் வெள்ளைச் சுண்ணாம்பு பூசப்பட்டிருப்பினும், கல்வெட்டு அமைந்திருக்கும் பகுதி மட்டும் சுண்ணாம்புப் பூச்சு இல்லாமல் செங்காவி வண்ணம் பூசப்பட்டிருப்பதால் எழுத்துகள் தெளிவாகப் புலப்படும் நிலையில் இருந்தது.

கல்வெட்டு தெரிவிக்கும் செய்திகள்

1 கல்வெட்டின் காலம்
கல்வெட்டு “ஸ்ரீ றாம செயம்” எனத்தொடங்குகிறது. அதனை அடுத்து கலியுக சகாப்தம் 4941-ஆம் ஆண்டும், சாலிவாகன சகாப்தம் 1762-ஆம் ஆண்டும், தமிழ் ஆண்டுகளில் ஒன்றான சார்வரி ஆண்டின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த மூன்று குறிப்புகளைக்கொண்டு கல்வெட்டின் காலம் கி.பி. 1840 என்று உறுதியாகின்றது. கல்வெட்டில் ஆவணி மாதம் குறிக்கப்பட்டுள்ளதால், 1840-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

கல்வெட்டு

கல்வெட்டு-மூன்று பகுதிகளாக

2 நெகமம் பாளையக்காரர் கொண்டம நாயக்கர்
கல்வெட்டில் நெகமம் ஊரானது நிகமம் என்று குறிக்கப்பெறுகிறது. நிகமம் என்பது வணிக நகரைக் குறிக்கும் பெயராகும். எனவே, பழங்காலத்தில் நெகமம் ஒரு வணிக நகரமாக இருந்தது என்று அறிகிறோம். அதோடுமட்டுமல்லாமல், நெகமம் நாயக்கர் காலத்திலிருந்த ஒரு பாளையம் என்றும் அறிகிறோம். நிகமம் பாளையக்கார்ரின் பெயர் கொண்டம நாயக்கர் என்றும், அவர் பாலமவார் குலத்தைச் சேர்ந்தவர் என்றும் கல்வெட்டு கூறுகிறது.

3 முத்துவல்லக்கொண்டம தேவய நாயக்கர்
மேற்படி பாளையக்காரர் கொண்டம நாயக்கரின் மகன் பெயர் சுப்பராய தேவய நாயக்கர் என்றும் அவருடைய மகனின் பெயர், அதாவது கொண்டம நாயக்கரின் பேரன் பெயர் முத்துவல்லக்கொண்டம தேவய நாயக்கர் என்பதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும், இந்த முத்துவல்லக்கொண்டம் நாயக்கரின் மாமனார் பெயர் ஆவலச்சோத்தய நாயக்கர் என்றும், இவர் ஆவலப்பம்பட்டியின் அதிகாரர் (தலைவர்) என்றும், அவரது குலம் சேனை சல்லிவார் குலம் என்றும் கல்வெட்டு கூறுகிறது.

4 வெள்ளையம்மாள்-கோயில் திருப்பணி
ஆவலச்சோத்தய நாயக்கரின் மகளான வெள்ளையம்மாள் என்பவரை மேற்படி முத்துவல்லக்கொண்டம தேவ நாயக்கர் மணந்ததாகவும், இந்த வெள்ளையம்மாள் சின்ன நெகமம் சென்னராயப்பெருமாள் கோவிலைப் புதுப்பித்துத் திருப்பணி செய்ததைக் கல்வெட்டு குறிக்கிறது. கருவறை (கல்வெட்டில் கெற்பகிரி என்பது பெயர்), அர்த்தமண்டபம் (கல்வெட்டில் அஷ்த்தகிரி என்பது பெயர்) ஆகிய இரண்டையும் செங்கல் கட்டுமானத்திலிருந்து கல் கட்டுமானமாக வெள்ளையம்மாள் கட்டுவித்துள்ளார். மகாமண்டபம், திருமதிள் (மதில் சுவர்) ஆகிய இரண்டையும் செங்கல் கட்டுமானமாகக் கட்டியுள்ளார். இவை தவிர கல்லாலான கருடகம்பம், தீர்த்தக்கிணறு, துளசி மண்டபம், மடப்பள்ளி ஆகியனவும் வெள்ளையம்மாளால் கட்டுவிக்கப்பட்டன என்று கல்வெட்டு தெரிவிக்கிறது. ஆக கோவில் முழுமையும் புதுப்பித்துத் திருப்பணி செய்துள்ளார்.

5 பாளையக்காரர், வெள்ளையம்மாள் ஆகியோரின் சிற்பங்கள்
கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் நால்வரின் உருவங்கள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் சிறப்பாகும். முன்மண்டபம் நான்கு கல் தூண்களைக்கொண்டுள்ளது. அவற்றில் மூன்று தூண்களில், கல்வெட்டில் குறிப்பிடப்பெறும்

1. பாளையக்காரர் கொண்டம நாயக்கர்
2 அவரது பேரன் முத்துவல்லக்கொண்டம தேவ நாயக்கர்
3 முத்துவல்லக்கொண்டம நாயக்கரின் மனைவியான வெள்ளையம்மாள்

ஆகியோரின் கற்சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்களாக அழகாக வடிக்கப்பட்டுள்ளன. சிற்பங்களின் மேற்பகுதியில் அவரவர் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பல கோயில்களில் மண்டபத்தூண்களிலோ, விளக்குத்தூண்களிலோ அவற்றைக் செய்வித்த ஆண் மற்றும் அவர் மனைவி ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. பெயர் பொறித்துள்லதைப் பெரும்பாலும் அரிதாகவே காண இயலும். இங்கே, பெயர் பொறித்த உருவங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவதாக உள்ள தூணில் முத்தம்மாள் என்பவருடைய சிற்பம் உள்ளது. இவர் பாளையக்காரர் கொண்டம நாயக்கரின் மனைவி என்பதில் ஐயமில்லை. ஏனெனில், இரு தூண்களில் இரு ஆண்களின் சிற்பங்களூம், அவர்களுக்கு நேர் எதிரே இரு பெண்களின் சிற்பங்களும் காணப்படுவதால் இதை யூகிக்கலாம்.

6 கோயிலின் பழமை
திருப்பணி செய்யப்பட்ட காலம் கி.பி. 1840 என்பதால், கோயில் அதற்கு முன்பே செங்கல் கட்டுமானத்தோடு இருந்திருக்கும் என்பது கண்கூடு. எனவே, ஏறத்தாழ கோயில் 200 ஆண்டுகள் பழமையானது என அறிகிறோம். கோயில், போயர் குலத்தவரின் குலக்கோயில் என்பதைத் தற்போதுள்ள ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது.
7 சில செய்திகள்
· கி..பி. 1798-1805 காலகட்டத்தில், பாளையக்காரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப்போரிட்டனர். இறுதியாக, ஆங்கிலேயர் பாளையக்காரரை ஒழித்தனர். எதிர்ப்புக்காட்டாத எஞ்சிய பாளையக்காரர்களுக்கு ஜமீந்தார் பதவியை ஆங்கிலேயர் அளித்து ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் இணைத்துக்கொண்டனர். வரி வசூல் உரிமையை மட்டும் அவர்களுக்கு அளித்து, படை வைத்திருக்கும் உரிமையைப் பறித்துக்கொண்டனர்.
· இவ்வாறு, ஜமீந்தார் பதவி நிலவியிருந்த ஆங்கிலேயர் காலத்திலும், தங்களின் பாளையக்காரர் பெயர் மரபை மறவாது காட்டும் எண்ணம் சின்ன நெகமம் சென்னராயப்பெருமாள் கோயிலின் கல்வெட்டில் வெளிப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.
· கல்வெட்டின் காலம் கி.பி. 1840. இந்த ஆண்டு கி.பி. 1840-ஆம் ஆண்டை நமக்கு நினைவுபடுத்துகிறது. இந்த ஆண்டில்தான் ஆங்கிலேய ஆட்சியர் ”பிளாக் பர்ன்” (Black Burn) மதுரைக்கோட்டையை அழித்து நகரை விரிவாக்கம் செய்தார்.
· சின்ன நெகமம் கல்வெட்டில், காலக்கணிப்புக்குத் தேவையான பல குறிப்புகள் உள்ளன. கலி ஆண்டு(4941), சக ஆண்டு(1762), தமிழ் வியாழ வட்ட ஆண்டு(சார்வரி), ஆவணி மாதம் முதல் தேதி என்னும் குறிப்புகளுடன் பஞ்சாங்க்க் குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. 📚📚📚✍️✍️✍️✍️