வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

நம்ம ...மணிஅண்ணணின் ..நிதர்சனமான பதிவு ...

நம்ம ஆளு

முன்னாள் அமைச்சர் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அந்தக் காலத்து மனிதர். இப்பொழுது தீவிர அரசியலில் ஈடுபடுவதில்லை. மாலை ஐந்து மணிக்கு வருவதாகச் சொல்லிவிட்டு ஏழு மணிக்குச் சென்று சேர்ந்தேன். திருமணம் ஒன்றுக்கு கிளம்புவதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தார். சட்டையை மடித்துவிட்டபடி அவர் வந்த போது எழுந்து வணக்கம் சொன்னேன். அவருக்கு அபாரமான ஞாபக சக்தி. கடந்த முறை சந்தித்த போது பேசியதையெல்லாம் நினைவுபடுத்தினார். எனக்கு இத்தகைய முன்னாள் முக்கியமான ஆட்களைச் சந்திக்கும் போது அந்தக் காலத்து ரகசியத் தகவல்களைக் கேட்கத் தோன்றும். அப்படி யாரும் அப்படியே சொல்லிவிட மாட்டார்கள். இன்றைக்கு பெருந்தலையாக உள்ளவரைச் சுட்டிக்காட்டி ‘அவரெல்லாம் நீங்க வளர்த்த ஆள்தானே?’ என்றுதான் ஆரம்பித்தால் கொசுவர்த்தி சுருள ஃப்ளாஷ்பேக் ஓடும். இத்தகைய ரகசியங்களை உடனடியாக எழுதப் போவதில்லை ஆனால் அவை எந்தக் காலத்திலும் யாருக்குமே சிக்காத ரகசியங்களாக இருக்கும்.

கல்லூரி ஆரம்பித்த அல்லக்கைகளின் கதையிலிருந்து எம்.ஜி.ஆர் விட்டு விளாசிய எம்.எல்.ஏ வரைக்கும் நிறையக் கிடைக்கும். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவருக்கு நேரமாகிக் கொண்டிருந்தது. 

‘அண்ணா நீங்க கிளம்புங்க..இன்னொரு நாளைக்கு வர்றேன்’ என்றேன். ‘டிபன் சாப்பிட்டுட்டு போங்க’ என்றார். இரவு உணவுக்கு இன்னொருவர் வீட்டுக்கு வருவதாகச் சொல்லிவிட்டு வந்திருந்தேன். எழுவதற்கு முன்பாக ‘நீங்க எடப்பாடி பக்கமா? டிடிவி பக்கமா?’ என்றேன். அவர் யோசிக்கவே இல்லை.

‘சுப்பராயனுக்கு அப்புறம் இப்போத்தான் ஒரு கவுண்டர் சி.எம் ஆகியிருக்காரு..எண்பத்தஞ்சு வருஷத்துக்கு அப்புறம்..இனி எந்தக் காலத்துல இதெல்லாம் சாத்தியம்ன்னு தெரியல...அதனால ஈபிஎஸ் பக்கம்தான்’ என்றார். குபீரென்றானது. ஊரில் சுற்றிக் கொண்டிருக்கும் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு மூன்று பேர்களாவது இதைச் சொல்லிவிட்டார்கள்.

இதற்கு முன்பாக இதே வசனத்தை உதிர்த்தவர் ஒரு விவசாயி. ‘இந்த ஆட்சியில் விவசாயிக்குன்னு என்னங்க செஞ்சிருக்காங்க? அவிநாசி அத்திக்கடவு திட்டம் கூட கெடப்புலதான் கெடக்குது’ என்றேன். 

‘அவரு ஆட்சியைக் காப்பாத்தறதே பெரும்பாடு...இத்தனை கசகசப்புல இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?’ என்று இயல்பாகச் சொன்னார். ஒன்றுமே செய்யாவிட்டாலும் பரவாயில்லை. என் சாதிக்காரன் ஆட்சி. இதுதான் அவரது மனநிலை. அவன் நல்லவனோ கெட்டவனோ- கவுண்டன். அவ்வளவுதான். 

படித்தவர்கள், ஓரளவு விஷயம் தெரிந்தவர்கள் என்று நாம் நம்புகிறவர்களே இப்படித்தான் இருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் ‘இருநூற்றைம்பது ரூபா வாங்கிட்டு ஓட்டுப் போட்ட உங்களுக்கு ஒபாமாவா முதலமைச்சர் ஆவாரு?’ என்று கலாய்ப்பதெல்லாம் டூ மச். சாதியும் பணமும் விரவிக் கிடக்கும் நம் மண்ணில் இந்த இரண்டுமில்லாமல் மாற்று ஆட்சியைக் கொண்டு வந்துவிடுவோம் என்று பேசுவதெல்லாம் எவ்வளவு தூரம் சாத்தியம் என்றே புரியவில்லை. 

எல்லாச் சாதியிலும் இப்படியான ஆட்கள்தான் இருக்கிறார்கள். விஜயேந்திரன் பார்ப்பனன் என்பதற்காகவே முட்டுக் கொடுக்கும் பிராமணர்கள், குற்றவாளி இசுலாமியன் என்பதற்காகவே ‘அதனால் என்ன’ என்று கேட்கும் இசுலாமியர்கள், ‘சசிகலா எங்காளு’ என்னும் தேவர்கள் என சகல சாதியிலும், சகல மதத்திலும் ‘இது நம்ம ஆளு’ என்கிறவர்கள் நிறைந்து கிடக்கிறார்கள்.

முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைதான முகம்மது அலி பற்றி ஒரு பேராசிரியர் சொன்ன விவகாரம் இது. நிகழ்ந்து முப்பத்தைந்து வருடங்கள் ஆகியிருக்கக் கூடும். டி.எஸ்.பி தேர்வினை தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்துகிறது. உத்தேசப் பட்டியலில் பேராசிரியரியரின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. தேர்வாணையத்தில் இருந்தவர்கள் மூலமாக இந்தத் தகவலைப் பேராசிரியர் தெரிந்து கொள்கிறார். பட்டியலில் முகம்மது அலியின் பெயர் இல்லை. ஆனால் பட்டியல் வெளியாகும் போது முகம்மது அலியின் பெயர் உள்ளே நுழைக்கப்பட்டு பேராசிரியரின் பெயர் கீழே தள்ளப்பட்டிருகிறது. பேராசிரியர் தேர்வாணையக் குழுவில் இருந்த தமது சாதிக்கார உறுப்பினரை அணுகிக் கேட்கிறார். ஆனால் பலனில்லை. ஓர் இசுலாமியப் பெரியவரின் அழுத்தமான பரிந்துரையினால் முகம்மது அலி டி.எஸ்.பி ஆகி, கருணாநிதியைக் கைது செய்து, டி.ஐ.ஜி ஆகி கடைசியில் முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைதானது வரைக்கும் வேறு கதை. 

நம் மண்ணில் சாதிப்பாசமும், மதப்பற்றும் நீரு பூத்த நெருப்பாக உள்ளே கனன்று கொண்டேயிருக்கிறது. அவ்வப்பொழுது அப்பட்டமாக எட்டிப் பார்த்தும் விடுகிறது. ‘நம்ம சாதி அதிகாரி’ ‘நம்ம சாதிப் பணக்காரன்’ என்று வாழ்த்துகிற, குலாவுகிற, சாதியால் ஒன்றிணைந்தவர்கள் இருக்கும் நிலத்தில் ‘இது சாதியில்லாத பூமி’ என்று யாராவது முழங்கிக் கொண்டிருக்கும் போது இதையெல்லாம்தான் சுட்டிக்காட்ட வேண்டும். நாய்க்கன் நாய்க்கனுக்கும் நாடார் நாடாருக்கும் கவுண்டன் கவுண்டனுக்குமாக ஆதரவு தெரிவிக்கும் பூமி இது. அவன் எவ்வளவு மோசமானவனாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டுமே-  என் சாதிக்காரன் என்ற ஓர் அடையாளம் போதாதா என்று நினைக்கிறவர்கள்தான் நிரம்பிக் கிடக்கிறார்கள். 

தேவனுக்கு எதிராக பள்ளன், பள்ளனுக்கு எதிராக பறையன், வேட்டுவனுக்கு எதிராக வெள்ளாளன், நாடாருக்கு எதிராக தேவன் என்று சாதிய ரீதியில் பிளவுற்றுக் கிடக்கும் சமூகம்தானே நாம்? அமைச்சர்கள் தொடங்கி அதிகாரிகள் வரையிலும், சாமானிய மனிதர்களில் தொடங்கி சாதியத் தலைவர்கள் வரையிலும் இப்படித்தான் பிளவுற்றுக் கிடக்கிறார்கள்.

பெங்களூரிலும் சென்னையிலும் இருந்தபடியே ‘இந்த முறை கொங்கு மண்டலத்தில் அதிமுக அடி வாங்கும்’ என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்தால் பெப்பரப்பே என்றுதான் ஆகும் போலிருக்கிறது. செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, கருப்பணன் என்று ஏகப்பட்ட கவுண்டர்கள் அமைச்சர்களாகக் கோலோச்சுகிறார்கள். ஆளுக்கு மூன்று அல்லது நான்கு தொகுதிகளுக்கு பொறுப்பேற்று தொகுதிக்கு பத்துக் கோடி என்று செலவு செய்தால் கூட கணிசமான தொகுதிகளை அள்ளியெடுத்துவிடுவார்கள். இதேதான் தென் தமிழகத்திலும் நிகழும். வட தமிழகத்திலும் நிகழும்.

விஜயகாந்த் தொடங்கி ரஜினி, கமல் வரைக்கும் இந்தப் புள்ளியில்தான் அடி வாங்குவார்கள். கட்சி ரீதியிலான கட்டமைப்பு மட்டுமே ஓட்டு வாங்கித் தருவதில்லை. ‘பணத்தால ஜெயிச்சுடுவாங்க’ என்பதைத் தாண்டியும் சாதி என்றொரு அம்சம் இருக்கிறது. இங்கே ஒவ்வொரு கட்சிக்கும் சாதிய ரீதியிலான கட்டமைப்பு மிக அவசியம். கேவலம்தான். ஆனால் இதுதான் நிதர்சனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக