என் அம்மா ...கொண்டம்மாள் குமாரசாமி ...-மூக்குத்தி
இன்று திடீரென்று ஒரு சம்பவம் நிகழ்ந்து மனநிலையை கொஞ்சம் புரட்டிப் போட்டது.. காலையில் பிரட் வாங்க கடைக்குச் சென்றேன்.. உள்ளேநுழைய வழி விடாமல்பதின் வயது சிறுமிகள் ஐந்தாறு பேர் நடுவில் நின்று எதோ ஒரு பரிசினை தங்கள் தோழிக்கு எப்படி பார்சல் செய்வது என்பது பற்றி பேசியபடி நின்றார்கள். கடைக்குள் இருந்த கடைக்காரர் என் முகம் பார்த்ததும் எட்டி, என்ன வேண்டும் என்றார்.. நான் வீட் பிரட் என்றதும் அவர் வீட்பிரட்டை எடுத்து என் பக்கம் நீட்டினார் என்றாலும் அதை அவர் எட்டிக் கொடுக்கும் படியானதூரத்திலோ அல்லது நான் எக்கி வாங்கும்படியான தூரத்திலோ இருவரும் இல்லை.. நடுவில் நின்ற குழந்தைகள் தடையாக நின்றார்கள். அந்த குழந்தைகளின் உற்சாகத்தை கலைக்கும் மன திடம் எனக்கும் இல்லாதிருந்தது..
திடுமென என் பின்னால் இருந்து ஏம்மா கடைக்கு வந்தவங்களை வழிமறிச்சுக்கிட்டு நிக்கிறீங்களே.. கொஞ்சம் வழி விடுங்கம்மா என்ற குரல் கேட்டது. திடுக்கிட்ட அந்த குழந்தைகள் எனக்கு வழி விட நான் திரும்பிப் பார்த்ததும் மூக்குத்திதான் முதலில் கண்ணில் பட்டது. சாத்வீகமான புன்னகையுடன் மூக்குத்தி அணிந்த பெண் ஒருவர் அங்கே நின்றிருந்தார். கடைககாரர் பிரட்டை கொடுக்கவும் நான் பணத்தைக் கொடுக்கவுமான பரிமாற்றம் முடிந்தபின் அவரை ஒரு புன்னகையோடு நான் பார்த்தேன்.
சாதாரணமாக இப்படி கடையில்எதிர்ப்படும் பெண்கள் எல்லாம் நமக்கு உதவியே செய்தாலும் நாம் அளிக்கும் புன்னகைக்கு பதில் புன்னகைகள் தர மாட்டார்கள். அப்புன்னகைகள் தப்பர்த்தம் கொள்ளப்பட்டுவிடும் என்ற பாதுகாப்பு உணர்வு காரணமாகக்கூட இருக்கலாம்.. ஆயினும் எனது விடைபெறும் புன்னகைக்கு அவர் அதிசயமாக பதில் புன்னகையையும் கொடுத்தார்.
வீடு வரும் வரை அந்த மூக்குத்தி என்கூடவே வந்தது..
உலகில் சிறந்த புன்னகை மூக்குத்திதான் என்று எனக்குத் தோன்றிது.. எப்படி நிகழ்ந்ததென்று தெரியாது..மூக்குத்திகள் மீது எனக்கு பெரிதான பிரேமை உண்டு.. அதற்குக் காரணம் என் அம்மா மூக்குத்தி அணிந்ததாக இருக்கலாம்.. எப்போது என் அம்மாவைப் பார்த்தாலும் முதலில் மூக்குத்திதான் தெரியும். ஒரு பெரிய கல் மேலாக இருக்க அதிலிருந்து நீர்த்துளி போல நான்கு கற்கள் தொங்கும் மூக்குத்தியைத்தான் என் அம்மா இது வரை அணிந்திருக்கிறாள்.
ஒரு வேளை நான் பிறந்து கண் விழித்ததும் முதன் முதலில் கண்டது அவளது மூக்குத்தியாகக் கூட இருக்கலாம்.. நான் வீட்டில் பிரசவிக்கப்பட்ட மகவு. எனக்கு பெரிசா வலியே குடுக்காம பொறந்த புள்ள நீதான் என்று அம்மா சொல்வாள்.. அப்படிப் பிறந்து அம்மாவிடம் கொடுக்கப் பட்டிருந்தால் முதன் முதலாக அவள் முகத்தைப் பார்த்ததை விட மூக்குத்தியைத்தான் நான் பார்த்திருக்கக் கூடும்.. அப்போதே அந்த மூக்குத்தி அம்மாவின் அடையாளமாக என் மனதில் பதிந்திருக்கக் கூடும்.. எல்லாமே அவதானிப்புதான்.. எதுவும் நிச்சயம் கிடையாது.. ஆனால் மூக்குத்திகள் எப்போதும் என்னை வசீகரித்தபடியே இருந்தன என்பது மட்டும் உண்மை..
பார்த்தபடிஇருக்கும்போதே உடன் படித்த சிறுமிகளும், அக்காக்களும் தங்கைகளும், திடும் திடுமென மூக்கு குத்திக் கொண்டுவந்து நிற்பார்கள். முந்தைய நாள் வரை சிறுமிகளாக நம்முடன் ஆடித் திரிந்தவர்கள் மூக்கு குத்தி கொண்டதும் ஒரு அம்மாவின் அடையாளத்தோடு திடீரென பெண்ணாகிவிடும் அதிசயம் எல்லாம் அப்போது நான் கண்டதுதான்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக