வள்ளல் பெருமக்களை வரலாற்றுச்சின்னங்களை வட்டார தெய்வங்களாக வழிபடும் மக்கள்
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கொழுமம் பகுதியில் வள்ளல் பெருமகன் குமணன் வாழ்ந்தமைக்கான சான்றுகளை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு வகையில் அந்தக்காலத்து மக்கள் வாழ்ந்த நீர்நிலைகளையும், மக்களின் வாழ்க்கை முறைகளையும் தொடர்ந்து ஆவணப்படுத்தி வரும் அவர்கள் தொடர்ச்சியான ஆய்வுகளில் குமணன் மகராசாவாகவும், தற்போது நாட்டுப்புற மக்கள் வழக்காறுகளில் நடுகல் தெய்வமாகவும் வைத்து வழிபட்டு வருவதை கொழுமம், ஆத்தூர், மடத்தூர் பகுதி மக்கள் உறுதிப்படுத்துகின்றனர்.
ஓவ்வொரு மாதமும் வெள்ளுவா, எனும் பௌர்ணமி நாளிலும் காருவா எனும் அமாவாசை நாட்களிலும் பொதுமக்கள் தம் விரும்பி உண்ணும் இயற்கை உணவுகளைப் படையலாக வைத்து வழிபாடு செய்கின்றனர். இன்னும் சிலர் அசைவ உணவுகளாக கோழி, ஆடு இவைகளை பலியிட்டும் வழிபாடு செய்து வருகின்றனர்.
கொழுமத்திற்கு அருகில் இருக்கும் வலசு கருப்பணசாமி கோயிலில் அமாவாசை நாளில் கடந்த காலங்களில் ஆடு ,கோழி பலி கொடுத்து வழிபாடுசெய்த மக்கள் வனச்சரகக் கட்டுப்பாட்டின் காரணமாக தற்போது வனத்திற்குள் சென்று வழிபாடு செய்ய முடிவதில்லை. எனவே, வனத்திற்குள் செல்லாமல் வனத்தின் முன்பகுதியில் நடுகல் வைத்து வழிபாடு செய்து வருவதையும் காணமுடிகிறது.
சங்க இலக்கியப்பாடல்களில் குமணனைக் காணவரும் பெருஞ்சித்திரனார் எனும் புலவர் கண்ணாடிப்புத்தூர், கொழுமம் வழியாக குமணனைக் காணச் சென்றதும், அவர் செல்லும் வழியில் சந்தன மரம், கமுகு மரம் இருந்ததையும், மான்கள், பசு மாடுகள் இருந்தையும் பாடல்களில் குறிப்பிடுகின்றார்.
அதுபோன்று தற்போதும் சந்தன மரங்களும், கமுகு மரங்களும் நீர் நிலைகளும் இருப்பதையும் உறுதிப்படுத்த முடிகின்றது.
அமாவாசை நாட்களில் பெரும்பாலான மக்கள் இந்த வலசு கருப்பணசாமி கோயிலுக்கு வந்து வழிபாடு செய்து விட்டு போகின்றனர். ஒரு குறிப்பிட்ட சாதி மக்க்ள என்றில்லாமல் இங்கு அனைத்து சாதி பொதுமக்களும் வருகின்றனர். குறிப்பாக மண்ணுடையார் சமூகத்தினர் பெரும்பாலும் இங்கு பூசை செய்து வருகின்றனர்.
வட்டார வழிபாடுகளில் இன்னமும் பழங்காலத்து பழக்கவழக்கங்கள் இருப்பதும், நடுகல் வழிபாடுகளில் கொழுமம், ஆத்தூர், மடத்தூர், சங்கராமநல்லூர் பகுதி மக்கள் காலையிலேயே தம் குடும்பத்துடன் மாட்டு வண்டிகளில் வந்து தங்கியிருந்து சமையல் செய்து விருந்து படைத்து வழிபாடு செய்து செல்கின்றனர்.
இவர்கள் இந்த வழிபாடு குறித்து சொல்லும் தம் மூதாதையர்கள் காலங்காலமாக வழிபட்டு வருவதைத் தொடந்து தாங்களும் வழிபட்டு வருவதாகவும், தம் வீட்டில் எந்த நல்லது கெட்டது நிகழ்வு நடந்தாலும் இங்கு வந்து படையலிட்டு வழிபாடு செய்து விட்டு செல்வதாகவும் கூறுகின்றனர்.






























கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக