கேள்வி : ஏன் எல்லா அம்மாகளும் அவர்களின் ஆண் மகன்களை எப்போதும் முக சவரம் செய்ய சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்?
என் பதில் :
இது ஒரு பதினாலு வயதிலேயே ஆரம்பித்து விடும்.
"டேய் தலைமுடி கண்ணை மறைக்குதுடா, அப்பா சலூன் போகும் போதும் நீயும் போய்ட்டு வந்துடு"
"இல்லமா, நான் இன்னொரு நாள் தனியா போய்க்கிறேன்"
அடுத்த வாரம்… "தலைல குருவி கூடு கட்டப் போறது. ஹேர்கட் பண்ணிட்டு வா"……. முறைப்புதான் பதிலாக வரும்.
மூன்றாம் முறை வாயைத் திறக்கு முன்பே,.." எனக்கு இஷ்டப்பட்ட போதுதான் சலூன் போவேன், நீ சொல்லத் தேவையில்லை"
"ஏற்கனவே லட்சணம், எப்படியாவது ஒழி " இது அம்மா. ஆயிற்றா? (பள்ளியிலிருந்து புகார் வருவது தனி)
இரண்டு வருடம் இது தொடரும். பிறகு ஒருநாள் அம்மா ஆச்சரியத்துடன் , "கண்ணா, உனக்கு தாடி மீசையெல்லாம் வர ஆரம்பிச்சுட்டதடா " என்று முகம் வருட வரும்போது தட்டி விடப்படும்.
பிறகு இதுவும் சேர்ந்துவிடும் பாடலில். "அங்கங்கே திட்டுதிட்டா முடி முளைச்சி நல்லாவே இல்லடா, இதுல முகப்பரு வேற, சகிக்கல, ஷேவ் பண்ணுப்பா ப்ளீஸ்"
"எல்லாம் எனக்குத் தெரியும், நீ போ"
இப்படி ஆரம்பிக்கும் சலூன் சண்டைகள் 21–22 வயது வரை தொடரும். அப்பாவிடம் புகார் போனாலும் பயனில்லை. "அவனிஷ்படியே விட்டுடு" என்றுதான் பதில் வரும். (அவரும் அந்த வயசுல அப்படித்தானே..!)
அதற்குப் பிறகு 22 வயதில் ஒரு transmission ஏற்படும் பாருங்கள்… அது வேற லெவல். பளிச்சென்று ஷேவ் செய்துகொள்வது, தாடி-மீசை ஷேப் செய்து கொள்வது என்று அழகாக ஆரம்பித்து விடும். மாதாமாதம் முகம் மெருகேறும், வருடாவருடம் வசீகரம் கூடும். அம்மாவிடம் அபிப்பிராயம் கேட்கப்படும். இத்தனைக்கும் எந்த அழகு /தோல் பராமரிப்பும் இருக்காது. கண்ணாடி முன் வெகு நேரம் நிற்கவும் மாட்டார்கள். மேக்கப் என்ற பெயரில் ஒரு இஞ்ச் பூசிக்கொள்ளவும் மாட்டார்கள்.
ஆண் குழந்தைகளுக்கு 25 வயதில் படிப்பின் காரணமாகவோ, வேலையின் காரணமாகவோ ஏற்படும் தன்னம்பிக்கை ஒரு கம்பீர அழகு.
ஆகவே அம்மாக்களே, ஒரு எட்டு வருடம் அவர்களை விட்டுவிடுங்கள். மீண்டும் அம்மாக்களிடம் வருவார்கள்.
நன்றி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக