கேள்வி : இளம் வயதில் பழகும் எந்தெந்த பழக்கங்கள் என்னை பெரிய பணக்காரர் ஆக்கும்?
என் பதில் :..எனக்கு தெரிந்த அண்ணன் ஜெபசிங், வயது 55...அளித்த பதில்
எனக்கு தங்க தட்டுல சாப்டனும்னு எல்லாம் துளியும் ஆசை இல்லை.
நம்மள நம்பி கடன் கேட்குறவங்களுக்கு இல்லனு சொல்லாத அளவுக்கு,குடுத்த பணத்தை அவங்க திரும்ப தரணும்னு எதிர்பார்க்காத அளவுக்கு ஒரு அளவு பணம் இருந்தால் போதும் அதை சம்பாதிக்க வழி சொல்லுங்கள் என்று கேட்பவர்களுக்கான பதிவு இது.
இந்த பதில் எலான் மஸ்க் பற்றியது இல்லை. எனக்கு தெரிந்த சீரியல் செட், ஒலியும் ஒளியும் மற்றும் பந்தல், சேர் வாடகை தொழில் செய்யும் ஒரு அண்ணாவைப் பற்றியது.
வயது 55 தான். கல்வி அறிவி 5ம் வகுப்பு. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்த குடும்பம். இப்பொழுது மாத வருமானம் பல லட்சங்கள், பொருட்கள் கையிருப்பு சில பல லட்சங்கள் (குறைந்த பட்சம் 50 லட்சம் தேறும்). 10 நபர்களுக்கு தினம் 1200 ரூபாய் சம்பளம் வழங்கும் முதலாளி.
ண்ணே எப்படிண்ணே இவ்வளவு பெரிய ஆளாகுனீங்க?
இந்த தொழில் உங்கள் குடும்ப தொழிலும் இல்லை. உங்களுக்கு சப்போர்ட்டும் இல்லை உங்க அப்பா பண உதவியும் செய்யல. அப்புறம் எப்படிண்ணே பணக்காரனாகுனீங்க என்று கேட்கையில் அந்த அண்ணா இந்த பதிலை தான் சொன்னார்.
பள்ளிக்கூடத்துக்கு போகவே எனக்கு பிடிக்காதுமா. அம்மா முகத்தை கூட பார்த்தது இல்லை அக்கா தான் வளர்த்தாள். பள்ளிக்கூடத்துக்கு போகலனா அடி அடினு அடிப்பா. நான் குளத்துக்குள்ள போய் உட்கார்ந்துடுவேன். 15 வயசு இருக்கும்மா பொள்ளாச்சிக்கு ஒரு மளிகை கடைக்கு வேலைக்குப் போனேன். கூட்டுட்டு போன அண்ணா உன் சாதிய சொல்லாதல வேலை குடுக்க மாட்டானுவ, வேற சாதினு சொல்லிக்கனு சொல்லியே கூட்டுட்டி போனாரு. ஏழு எட்டு வருசம் வீடு கடைனு வாழ்ந்துட்டேன்.
ஊருக்கு வந்ததும் பந்தல் போடுறவங்க கூட கம்பு நட தான்மா போனேன். ஆனால் எனக்கும் நாலு பேருக்கு சம்பளம் குடுக்கனும்னு ஆசையா இருந்துச்சு. எல்லாரும் எட்டு மணி நேரம் வேலை செய்தால் நான் நாள் பூரா ஓனர் கூடவே சுத்துவேன் தொழில் கத்துக்கிட்டேன் சின்னதா நாலு பெஞ்ச் 30 டியூப் லைட் மட்டும் வாங்கி தொழிலைதொழிலை துடங்கினேன்.
எல்லாரும் ஏழாயிரம் ரூபாய்க்கு ரெண்டு நாள் ராத்திரி மட்டும் லைட் எரிய விட்டானுங்கனா நான் அதே ஏழாயிரம் ரூபாய்க்கு 5 நாள் லைட் எறிய விடுவேன். இப்படி தான் வாடிக்கையாளர்கள் கிடைத்தார்கள்.
சூப்பர்ண்ணே. ஜாதியை காண்பித்து உங்கள யாரும் துரத்தலையா?
அட நீ வேறம்மா. கோயில்களில் ஆர்டர் தாரேனு கூப்டுவாங்க, அப்புறம் ஜாதியை தெரிஞ்சிகிட்டு போயிட்டு வாங்க தம்பினு அனுப்பி விட்ருவாங்க. தூத்துக்குடியை பொறுத்தவரைக்கும் ஆலயத்தில் சீரீயல் எறியனும்னாலே ஜாதி வேணும்மா.
அப்புறம் எப்படிண்ணே இப்படி வந்தீங்க?
அசன ஆர்டர் எல்லாம் பெரிய பெரிய ஆர்டர் அதை எனக்கு தர மாட்டாங்க. இந்த லெந்து நாட்களில் வீட்டு ஜெபம் நடத்துவாங்க ஒரு 200 சேர் போட சொல்லுவாங்க. அந்த சின்ன சின்ன ஆர்டரை நல்லா செஞ்சி குடுப்பேன்மா. அப்படியே இப்ப கொஞ்சம் கொஞ்சமா அவங்க வீட்டு விசேசங்களுக்கும் ஆர்டர் குடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.
ம்ம்ம்ம்ம் மனிதர்கள் இப்படித்தான்ல?
எப்படிண்ணே பைசா எல்லாம் கலெக்ஷன் ஆகிடுமா?
இழுத்தடிப்பாங்க இந்தா தாரேன் அந்தா தாரேனு.
டென்சன் ஆகாதாண்ணே?
தொழில்னு வந்தால் வளைந்து நெளிந்து தான்ம்மா போகனும். இந்தா போன வாரம் மேலத் தெருவுல அந்த சார் வீட்ல ஜெபக் கூட்டம்னு 300 சேர், 22 லைட் கட்டுனேன் இன்னும் துட்டு தரல இனியும் தர மாட்டாரு. அதுக்காக அவரை பகைத்துக் கொள்ளக் கூடாது. இன்னைக்கு இதை விட்டு பிடிச்சா தான் நாளைக்கு சர்ச்ல கன்வென்ஷன் வந்தால் நமக்கு ஆர்டர் தருவாரு. இந்த 300 சேர் வாடகைக்கும் சேர்த்து கன்வென்ஷன்ல கலெக்சன் பண்ணிக்க வேண்டியது தான் என்றார்.
இன்று பணக்காரராக உலா வரும் இந்த அண்ணனிடம் கற்றுக் கொண்டது இது தான்.
தொழிலாளியாக இருக்கும் வரைக்கும் நம்மால் பணக்காரனாக முடியாது. பணக்காரனாக விரும்பினால் தொழில் தான் சிறந்தது. தொழில் ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள்.
ரெண்டாவது உழைப்பு. இராப்பகல் பார்க்காமல், கடிகாரத்தை பார்க்காமல் உழைக்க வேண்டும்.
மூன்றாவது எவரையும் பகைத்துக் கொள்ளாமல் வளைந்து நெளிந்து செல்லும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொழில் தொடங்கிட்டு முரண்டு பிடித்தால் தொழிலை இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான்.
இளம் வயதில் ஏழ்மையில் இருந்து பணக்காரனாகிய அந்த ஒரு அண்ணனை தான் எனக்குத் தெரியும். அண்ணாவிடம் கேட்டதை எல்லாம் எழுதிவிட்டேன்.
முயற்சி செய்து பாருங்கள். நம்மிடம் கடன் என்று கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாத அளவிற்கு வாழ்ந்துட்டோம்னாலே அந்த வாழ்க்கை சந்தோசமா தானே இருக்கும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக