கேள்வி : எந்த ஒரு முதலீடும் இல்லாமல் தன் மூளையை மூலதனமாக மாற்றி இந்த 2021-ல் நாங்கள் முன்னேற சிறந்த தொழில்கள் பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்ல முடியுமா?
என் பதில் :..
முதல்ல உங்க கைய குடுங்க சார். நீங்க தெரிஞ்சு கேட்டீங்களா அல்லது தெரியாம கேட்டீங்களா எனக்கு தெரியாது. ஆனா நீங்க கேட்டிருக்கற இந்த விஷயம் இன்னைக்கு இண்டஸ்ட்ரியில் ரொம்ப ஹாட். பணம் போடாமல் மூளையை மூலதனமாக்கி தொழில் செய்ய நிச்சயம் முடியும்.
பொதுவாக பிசினஸ் என்றாலே ஒரு பொருளை விலை குறைவான ஒரு இடத்திலிருந்து வாங்கி வேறு இடத்தில் விற்பனை செய்து லாபம் ஈட்டுவது என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை. காய்கறி கடை, கடை, துணிக்கடை, பாத்திரக்கடை போன்ற வழக்கமான தொழில்கள் இந்த வகையில் வரும்.
சம்பந்தப்பட்ட தொழிலுக்கு ஏற்ற மாதிரி முதலீடு தேவைப்படும். மேலும் கடை அமைந்திருக்கும் இடம், மக்கள் புழக்கம், எந்த வகையான வாடிக்கையாளரை கவர விரும்புகிறீர்கள் என்பதற்கேற்ப உள் அலங்காரம் போன்ற காரணிகள் இருக்கும்.
இது போல இல்லாமல், எந்த ஒரு பொருளையும் வாங்கி விற்காமல் ஒரு சேவையை இன்னொருவருக்கு வழங்கி அதன் மூலம் பணம் சம்பாதிப்பது மற்றொரு வகை பிசினஸ் மாடல். இன்சூரன்ஸ் முகவர், ரியல் எஸ்டேட் தரகர், திருமண புரோக்கர், டியூசன் சென்டர், கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம், இன்டர்நெட் வழங்கும் நிறுவனம், இ-காமர்ஸ் நிறுவனங்கள் போன்றவை இந்த வகையைச் சார்ந்தவை.
இந்த வகை விற்பனை மாடலுக்கு பொதுவாக பெரிய முதலீடு தேவையில்லை. மக்கள் கூடும் இடங்களில் பெரிய இடங்களில் கடை, கண்ணை கவரும் விளம்பரப் பதாகைகள், சீருடை அணிந்த பணியாளர்கள் தேவை இல்லை. ஆனால் மற்ற தொழில்கள் தருகிற அதே அளவு லாபத்தை முதலீடு இல்லாமல் அடையமுடியும். மற்றவர்களுக்கு முன்பாக எதையும் புரிந்து கொள்ளும் திறமை, கட்டாயம் இது உங்களுக்கு தேவைப்படக்கூடிய ஒன்று என்ற வகையில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் உத்தி, கொஞ்சம் தொழில்நுட்பத் திறமை, விடாமுயற்சி இவை இதற்கு தேவையானவை.
உங்கள் வீட்டிற்கு தினமும் கொண்டுவந்து பால் பாக்கெட் போட்டு விட்டு அதற்கு ஒரு ரூபாய் கமிஷன் வாங்கும் அடிப்படை சேவை ஆகட்டும், நீங்கள் விரும்பும் உணவை உங்கள் வாசலில் கொண்டுவந்து கொடுத்துவிட்டு செல்லும் ஃபுட் டெலிவரி சேவை ஆகட்டும், இது எல்லாமே இந்த selling the service என்ற இந்த வகையில் தான் வரும்.
இன்றைக்கு ஸ்டார்ட் அப் என்று சொல்லப்படுகிற தொடக்கநிலை தொழில்கள் பெரும்பாலும் இதை சார்ந்தவைதான். மூளையை மட்டுமே மூலதனமாக வைத்து பெரிய அளவில் சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு சின்ன உதாரணம் மூலம் பார்க்கலாம். இன்று சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் ஒரு பஸ் பிரயாண புக்கிங் செய்யக்கூடிய ஒரு தளம். இவர்கள் செய்தது எல்லாம் ஒரு வெப்சைட். விளம்பரம் செய்து அந்த வெப்சைட்டின் பெயரை மக்கள் மனதில் பதிய வைத்தது. இது மட்டும்தான் அவர்கள் செய்தது. பஸ் கம்பெனி வைத்து நடத்துபவர்கள் இந்த வெப்சைட்டில் உறுப்பினர்களாக ஆகிக் கொள்ள வேண்டும். பின்னர் அவர்களாகவே அந்த வெப்சைட்டுக்குள் போய், அவர்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள பயனாளர் கடவு சொல்லை பயன்படுத்தி இந்த ஊரில் இருந்து இந்த ஊருக்கு இத்தனை மணிக்கு பஸ், டிக்கெட் விலை இவ்வளவு, அந்த பேருந்து வசதிகள் குறித்த தகவல்கள் ஆகியவற்றை பதிவு செய்து விட வேண்டும். டிக்கெட் புக் செய்ய வருபவர்கள் தேடும்பொழுது இந்த தகவல்களை அவர்களுக்கு அந்த வலைதளம் காண்பிக்கும். இந்த தளத்தின் வழியாக ஒருவர் டிக்கெட் முன்பதிவு செய்து விட்டால் அந்தப் பணம் நேரடியாக பஸ் கம்பெனிக்கு போகாது. அதற்கு பதிலாக டிக்கெட் புக் செய்யும் தளத்தின் கணக்கிற்கு இந்த கட்டணம் வரவு வைக்கப்பட்டு விடும். அந்தப் பயணம் முடிவு பெற்றபின் அடுத்த வாரத்தில் 12.5 சதவீதம் கமிஷன் எடுத்துக் கொண்டது போக மீதி பணம் பஸ் கம்பெனி அக்கவுண்டிற்கு அனுப்பப்படும்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அட்வான்ஸ் புக்கிங் அது போதுமே பல நாட்களுக்கு முன்னதாக ஏன் பல மாதங்களுக்கு முன்னதாக கூட நடக்கும். கட்டணமாக செலுத்தப்பட்ட அத்தனை பணமும் பஸ் கம்பெனி அக்கவுண்டுக்கு போகாது பயணம் முடியும் வரை அந்த தளத்தின் அக்கவுண்ட்ல தான் இருக்கும் இது அவர்களுக்கு ஒரு பெரிய கையிருப்புத் தொகை. நாள் வட்டிக்கெல்லாம் கடன் வாங்கி பிசினஸ் செய்யும் இந்த காலத்தில் இத்தனை லட்சம் ரூபாய் எந்த முதலீடும் இல்லாமல் ஒருவருடைய அக்கவுண்டில் இருப்பது, அந்த தளம் நடத்துபவர்களுக்கு எவ்வளவு லாபகரமானது என்பதை யோசிக்க வேண்டும். திருப்பி கொடுக்கும்வரை அதை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பயன் படுத்தி கொள்ள முடியும்..
புக் செய்த டிக்கெட்டை கேன்சல் செய்யும்பொழுது அதற்கு கேன்சல் கட்டணம் என்று ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும். இதுவும் பஸ் கம்பெனிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. இந்த வகையிலும் நல்ல லாபம்.
ஃபீட்பேக் என்பது பேருந்தில் பயணம் செய்தவர்கள் பயணம் முடித்தவர்கள் கொடுக்கும் தகவல்கள். புக் செய்யும் பொழுது இவைகளும் காட்டப்படும் என்பதால் இந்த தகவல்கள் நல்லவதமாக இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். எனவே பஸ் முதலாளிகள் இந்தத்தளம் நிர்வாகிகளிடம் எதையும் பேச முடியாது. ரேட்டிங் குறைத்து விட்டால் புக்கிங் அடிவாங்கும். ஒரே தேதியில் ஒரே வழித்தடத்தில் போகும் பஸ்களில் எது முதலில் காட்டப்பட வேண்டும் என்பதற்குக் கூட உள் அரசியல் இருக்கிறது.
ஒரு பஸ் வாங்கி இன்சூரன்ஸ் கட்டி, ரூட் பர்மிஷன் வாங்கி, பராமரிப்பு செலவு பார்த்து, இரண்டு டிரைவர்களை அமர்த்தி அவர்களுக்கு சம்பளம் கொடுத்து, அலுவலகம் அமைத்து அதற்கு பணியாளர்களை வைத்து அவர்களுக்கு சம்பளம் கொடுத்து, சாதாரண நாட்களில் ஏற்படும் கட்டணம் குறைவு போன்ற இழப்புகளை சமாளித்து, அடிக்கடி உயரும் எரிபொருள் விலையை சமாளித்து, இதற்கெல்லாம் மேலாக அதே வழித்தடத்தில் இயங்கும் மற்றவர்களின் போட்டியை சமாளித்து ஒரு ஆம்னி பஸ் முதலாளி சம்பாதிப்பதை விட ஒரே ஒரு தளத்தை நிர்வாகித்து அதன்மூலம் அவர்கள் பெரும் லாபம் மிக மிக அதிகம். அதுமட்டுமில்லாமல் 0% ரிஸ்க். ஏதோ காரணத்தினால் அந்த தேதியில் பஸ் இயக்க முடியவில்லை என்றால் இந்த தளம் கவலைப்பட வேண்டியது இல்லை ஏனெனில் கட்டண பணம் அவர்களிடம் தான் இருக்கிறது. உடனே திருப்பிக் கொடுத்து பிரச்சினையை சரி செய்து கொள்ள முடியும்.
இதுதான் சேவையை விற்பது என்பது. யாரோ ஒருவர் ஒரு வழித்தடத்தில் பஸ் இயக்குகிறார். யாரோ ஒருவர் பயணிக்கிறார். இருவரையும் இணைக்கும் சேவையை மட்டுமே இந்த தளம் செய்கிறது. இந்த தளம் ஒரு குண்டூசியை கூட வாங்குவதும் இல்லை விற்பதும் இல்லை. ஆனால் மூளை விற்பனை மூலம் பணம் சம்பாதிக்கிறது. இதே போன்றதுதான் ஈகாமர்ஸ் தளங்களும். வலை தளத்தை நிர்வகிப்பதும், தொடர் விளம்பரம் மூலம் மக்கள் மனதில் தங்கள் தளத்தின் பெயரை நிற்க செய்வது மட்டுமே அவர்களின் வேலை.
இதில் இன்னொரு மிகப்பெரிய சாதகமான விசயம் என்னவென்றால் சரியாக போனியாக வில்லையென்றால் பெரிய நட்டமில்லை. நீங்கள் பெரிய முதலீடு எதுவும் போடாததால் இதை தூக்கி போட்டுவிட்டு வேறு வேலையை பார்க்கலாம்.
நன்றி ..என்றும் அன்புடன் உடுமலை சிவகுமார் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக