செவ்வாய், 21 ஜூலை, 2020

கேள்வி : கணவன் மனைவி சண்டையில் மனைவி பேசும்போது கணவன் பேசாமல் இருக்க காரணம் என்ன?

என் பதில் :.

பேசி பிரயோஜனம் இல்லை எனும் நிலையில்.

தவறு நம் மீது இருக்கும் போது

தவறே செய்யாத போதும் தன் மீது திணிக்கப்படும் போது

"அப்படியே பழகிடுச்சுங்க. கேள்வி கேட்டா அடி விழும். எதுக்கு உடம்பை புண்ணாக்கிக்குவானேன்?"

"கேட்டு என்னங்க பிரயோஜனம்? அவ சொன்னதே தான் சொல்லுவா….!"

"அவ பரம்பரையில் லேடீஸ் சவுண்ட் ஜாஸ்தியா இருக்குமாம்!"

ஊரே வேடிக்கை பாக்குது. நாம் சைலண்ட் ஆனாதான் சண்டை நிக்கும்.

பழைய பஞ்சாங்கம் எல்லாம் கிண்டுறா. பூதம் வெளியே வரதுக்குள்ள கடைய சாத்திர்ரது நல்லது.

இப்படி கழுவி கழுவி ஊத்தற அளவுக்கு நாம் என்ன நல்லது பண்ணுனோம்?


யார் மேல இருக்குற கோபத்தை நம்ம மேல காட்றா? நம்ம மேலயா? புள்ளங்க மேலயா?

பின் குறிப்பு :

மனைவியுடனான சண்டையில் நான் மனைவியின் பக்கம் ! (உசுரு முக்கியமில்ல!)


திங்கள், 20 ஜூலை, 2020


 ஜூலை மாதம் என்றாலே ..வாழ்க்கையில் என் மலரும் நினைவுகள் 2004 வருடத்திற்கு சென்றுவிடும் .....எல்லோருக்கும் திருமணமான வருடம் ..என்றும் பசுமைகள் நிறைந்து இருக்கும் ...முதல் சினிமா ..பிடித்து இருந்தாலும் ..பிடிக்காவிட்டாலும் ...திருமணம் ஆனா புதிதில் மனைவியுடன் திரையரங்கு சென்று திரைப்படம் பார்ப்பது வாழ்க்கையில் பொக்கிஷம்  ...என்றும் பசுமைமாறா இருப்பது ..உடுமலை லதாங்கி திரையரங்கம் ...மகிழ்ச்சி தானே ..முதல் படம் ..என்றாலே வாழ்க்கையில் பசுமைதானே ...எனக்கு பிடித்த இயக்குனர் ....பிடித்த படம் நியூ ...வாழ்க்கையும் நியூ ....

எஸ்.ஜே.சூர்யா பிறந்த நாள் ஸ்பெஷல்...ஜூலை 20..

 நடிப்பை நேசிக்கும் நட்சத்திர இயக்குநர்...


தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநராக குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்து ஒரு நடிகராகவும் கவனம் ஈர்த்திருக்கும் சிலரில் ஒருவர் இன்று (ஜூலை 20) பிறந்த நாள் கொண்டாடும் எஸ்.ஜே.சூர்யா.

திரைத்துறையில் எத்தனையோ இயக்குநர்கள் அரிதாரம் பூசியிருக்கிறார்கள். எத்தனையோ நடிகர்கள் ஒரு சில படங்களையாவது இயக்கியிருக்கிறார்கள். ஆனால் எஸ்.ஜே.சூர்யா சற்று வித்தியாசமானவர். ஒரு இயக்குநராக நான்கு வெற்றிப் படங்களைக் கொடுத்த பிறகு நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கி நட்சத்திர அந்தஸ்தை நோக்கி அயராமல் பயணித்துக்கொண்டிருக்கிறார்.

பலரிடம் சினிமா கற்றவர்

திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூரில் பிறந்தவரான சூர்யா சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார். சினிமாவில் சாதிக்கும் வேட்கையுடன் சின்னச் சின்ன வேலைகள் செய்து சென்னையில் காலம் தள்ளினார். கே.பாக்யாராஜிடம் உதவியாளராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். அதையடுத்து 'கிழக்குச் சீமையிலே' படத்தில் இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதற்கடுத்து வசந்திடம் 'ஆசை' படத்திலும், சபாபதியிடம் 'சுந்தரகாண்டம்' படத்திலும் ஜேடி-ஜெர்ரியிடம் 'உல்லாசம்' படத்திலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

'நியூ' என்று தலைப்பிடப்பட்ட படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என்றதும் பலருக்கு இந்தப் படம் குறித்து சந்தேகம் எழுந்தது. ஆனால், அறிவியல் மிகை யதார்த்த வகைமையைச் சார்ந்த இந்தக் கதையை தன் சுவாரஸ்யமான திரைக்கதையால் ரசிக்க வைத்து மூன்றாவது முறையும் வெற்றிபெற்றார் எஸ்.ஜே.சூர்யா. அதோடு ஒரு நடிகராகவும் வெற்றி முகத்துடன் அறிமுகமானார். இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பில் மகேஷ்பாபு நாயகனாக நடித்திருந்தார்.

அடுத்ததாக இவர் இயக்கிய 'அன்பே ஆருயிரே' பிரிந்த காதலர்கள் ஒன்று சேரும் கதையை வித்தியாசமான வகையில் கையாண்டு வெற்றிபெற்ற படம். ரஹ்மான் இசையமைத்த இந்த இரண்டு படங்களிலும் மிகச் சிறப்பான பாடல்கள் அமைந்தன.

வாழ்த்துக்கள் ...


https://youtu.be/WE60s5KJXvY



ஞாயிறு, 19 ஜூலை, 2020

கேள்வி : சீனர்கள் ஏன் தமிழ் கற்கிறார்கள்?

பதில் :


இக்கேள்விக்குத் தாமதமாகப் பதில் எழுதுவது வருத்தமாக இருந்தாலும், இன்றாவது எழுத வாய்ப்புக் கிடைத்ததற்கு மகிழ்கிறேன்! இன்றுதான் இக்கேள்வியைக் கண்டேன்!

இன்னும் சிறப்பாக, 'மற்ற இந்திய மொழிகளையெல்லாம் விட்டுவிட்டு, சீனர்கள் ஏன் தமிழ் கற்கிறார்கள்?' என்று கேட்டிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்!

ஏனென்றால், ஏனைய இந்திய மொழிகளில் இல்லாத, தமிழ் மட்டுமே கொண்டிருக்கும் ஒரு உயிர்ப்பண்பே, சீனர்கள் தமிழ் மொழியைக் கற்க விரும்பும் சிறப்புக் காரணம்!

தமிழ்மொழி மட்டுமே தூய உயர்தனிச் செம்மொழி! வேதமொழி, சமஸ்கிருதம் உள்ளிட்ட, ஏனைய இந்திய மொழிகள்அனைத்தும் கலப்பு மொழிகள்!

எழுத்துமுறை(Orthography), ஒலியமைப்பு(Phonetics) போன்றவற்றில் அவை தமிழ்மொழியைப் போல் கொண்டிருந்தாலும், தத்தம் மொழிகளின் சொல்வளம் பெருக்க, உலகவழக்கில் இல்லாத சமஸ்கிருதமொழிச் சொற்களையே பெருமளவு கடன் வாங்கியவை!

உருது, இந்துஸ்தானி, சமஸ்கிருதம் என்ற கூட்டுக்கலவை மொழியான இந்தி, வட இந்திய பிராகிருதமொழிகள் பலவற்றையும் அழித்துவிட்டு, ஏனைய இந்திய மொழிகளையும் அழிக்கத் திட்டமிட்டு, இந்திய ஒற்றுமையையும், அமைதியையும் அழித்து வருகிறது!

சமஸ்கிருதச் சொற்கள் என்பவை, இறந்துபோன வேதமொழிச் சொற்களையும் உள்ளடக்கியது என்பதை நினைவில் கொள்க!

வழக்கிறந்துபோன செம்மொழியான சமஸ்கிருதச் சொற்களைக் கலப்பதாலேயே இந்திய மொழிகள் வளம் நாடுகின்றன. மேன்மேலும், சமஸ்கிருதத்தைக் கலப்பதாலேயே அவை வளர்ச்சியும் பெறுவதாக நினைக்கின்றன.
வழக்கிறந்துபோன செம்மொழிகளான இலத்தீன், கிரேக்க மொழிகளிலிருந்து சொற்களைக் கலந்து, மொழியை வளப்படுத்துதல் என்ற உத்தியையே மேலை ஆரிய ஐரோப்பிய மொழிகளும் கடைப்பிடிக்கின்றன.
இதேபோல், வழக்கிறந்துபோன செம்மொழிகளான Persian, Arabic மொழிச் சொற்களைக் கலப்பதாலேயே இஸ்லாமிய மொழிகள் வளம் நாடுகின்றன.
உலகின் மொழிகளின் வளர்ச்சி என்பது மேலே குறிப்பிட்ட மூன்று கலப்புமொழி வகைகளில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும்!

எல்லா மொழிகளும் உயர்மொழியாக ஏற்றுக்கொள்ளும் இறந்துபோன பொதுமொழியே, அம்மொழிகளின் ஒற்றுமைக்குக் காலனாக மாறிவிடுகிறது!

இவ்வுலகில், இன்றும் உயிருடன் செழிப்போடு உயிர்வாழும் இரண்டே செம்மொழிகள் தமிழ்மொழியும், சீனமொழியும் மட்டுமே!

தமிழும், சீனமும், பன்னாட்டுச் செம்மொழிகள்!

இவ்விரண்டு மொழிகளும் பிறமொழிச் சொற்களைக் கடன்பெறாமல், தாய்மொழிச் சொற்களை வைத்துக்கொண்டே புதிய புதிய கருத்துக்களைத் தெரிவித்து வந்தன.

தொடர்வண்டி, மின்னாற்றல், வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, இன்றியமையாதது போன்ற சொற்களைத் தமிழ் உருவாக்கியதுபோலவே, சீனமொழியும் உருவாக்கிக்கொண்டது!

தொடக்கத்தில் சீனமொழி அறிவியல் வளர்ச்சியில் பிற்பட்டு இருந்தாலும், இத்தாய்மொழி பண்பு காரணமாக, ஏனைய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி, அறிவியல் தொழில்நுட்ப அறிவில், இன்று உலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக சீனா விளங்குகிறது!

உலகின் தலைசிறந்த முதல் ஐம்பது பல்கலைக்கழகங்களில் சீனப் பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன! ஓர் இந்தியப் பல்கலைக்கழகம்கூட முதல் 200-களின் இல்லை!

கல்விவாய்ப்புகள் சீனாவில் பெரும்பான்மை மக்களிடம் சென்றடைந்துவிட்டது!

சீனமொழியைப் போல, தமிழ், உயர்தனிச் செம்மொழிகளில் ஒன்றாக நின்று, தனித்தமிழ் வளர்த்ததால், வழக்கிறந்துபோன சமஸ்கிருதத்தைச் சாராமல், சீனமொழியைப்போல், உயிர்ப்புடன் விளங்கி வருகின்றது!

தமிழ் உயர்தனிச் செம்மொழிகளில், Orthography-எழுத்துமுறை மற்றும் Phonetics-ஒலியியல் ஆகியவற்றில் தலைசிறந்த மொழி!

தமிழ், அதேவேளை, உலகத்தாய்மொழிகளில், ஒரே உயர்தனிச் செம்மொழியாக இயங்கி வருகின்றது!

சீன அறிஞர்கள், பண்டைய காலத்தில், தமிழே உலகப்பொதுமொழியாக இருந்திருக்க வேண்டும் எனக் கருதுகிறார்கள். தமிழ் மொழியை ஆராய்வதன் மூலம், உலகப் பொதுமொழியாக வளர்வதன் கூறுகளை நுணுக்கமாக ஆய்வுசெய்து, சீனமொழியை வளப்படுத்தவே சீனர்கள் தமிழ் மொழியைக் கற்கிறார்கள்!

தமிழ்மொழியில், சீனர்களைக் கவர்ந்த மொழி அம்சம், வேர்ச்சொற்கள் அடிப்படையாக, சொற்குடும்பங்கள், சொற்குலங்கள் தமிழில் கொத்துக்கொத்தாய் இருக்கும் பண்பே!

எடுத்துக்காட்டாக, பாறைத்துண்டைக் குறிக்கும் கல் என்னும் தமிழ் வேர்ச்சொல், கல்லுவது(தோண்டுதல்), கலித்தல், கணீரென ஒலித்தல், உணர்ச்சி மிகுதல், மிகுதல், கலி(சனி), கற்றல், கற்பித்தல், கற்பனை, கல்லூரி, கல்வி, கலை உள்ளிட்ட எண்ணற்ற சொற்களைக் கொண்டு, சொற்குடும்பமாக இயங்குகின்றது.

வேர்ச்சொற்கள் சொல் திரிந்தும், பொருள் திரிந்தும் மாறுபடும்போது, இன வேர்ச்சொற்குடும்பங்கள் உருவாகின்றன. பல சொற்குடும்பங்கள் சேர்ந்து சொற்குலங்கள் உருவாகின்றன. இத்தகைய பண்புகளை ஆய்ந்து, சீன மொழியை மேம்படுத்துவது சீனர்களின் ஆய்வுத் திட்டங்களில் ஒன்று!

சீன மொழியைப்போல, உலகில் உயிர்ப்புடன் வாழும் செம்மொழி தமிழ் என்பதும் அவர்களின் தமிழ்மொழி ஆர்வத்துக்குக் காரணம் என்றாலும், மேற்குறித்த ஆய்வுத் திட்டங்கள் சீனர்களிடம் உள்ளன.

கேள்வி : ஒரு கணவன் தன் வாழ்க்கைத் துணைக்கு தரும் நம்பிக்கை வார்த்தைகள் என்னென்ன?

என் பதில் :

கணவன் மனைவியிடம், “நான் இருக்கிறேன், உன்னைப் பார்த்துக் கொள்ள! கவலைப்படாதே! உன் தகப்பனாரிடம் நான் இவ்வாறுதான் வாக்களித்துள்ளேன்”, உன் தகப்பனார் நம்பிக்கையுள்ளதாகக் கூறினார்!


மனைவி, கணவனிடம், “நான் இருக்கிறேன் உன்னைக் கண்ணும் கருத்துமாகக் காக்க, கவலைப்படாதே, உன் தாயிடம் இவ்வாறுதான் வாக்களித்துள்ளேன்”, என்பது! ஆனால் மாமியார் அதனை நம்பினாளா, இவளுக்கு என்ன தெரியும் எனச் சொன்னாளா, மனைவி கணவனிடம் சொல்வதில்லை!

சனி, 18 ஜூலை, 2020

கேள்வி : ஏதோ குடும்ப பிரச்சனைக்காக கல்யாணம் தாமதமாகும் ஆண்களைப் பற்றி சமூகத்தின் கண்ணோட்டம் எப்படி இருக்கும்? அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன?

என் பதில் :..இதற்கு நான் பதில் அளிப்பது விட என் நண்பரின் தம்பியிடம் கேட்டு பார்த்தேன் ..நான் அதிகம் யாரையும் கேட்கமாட்டேன் ..உரிமையோடு பழக கூடிய தம்பியிடம் கேட்டுப்பார்த்தேன் ..அவரின் ஆதங்கம் ..கோபம் .கொட்டி தீர்த்துவிட்டார் ...

அந்த கொடுமைய என் வாயால எப்படி சொல்லுவேன் அண்ணா ..என்று . இந்த ஒரு வாட்டி சொல்றேன் ..

27 வயது தாண்டிவிட்டால் போதும்,

'எப்ப தான் கல்யாணம் சாப்பாடு போடுவே'

'எப்போ தான் பண்ணலன்னு இருக்கே'

இது போன்று கேள்விகளால் துளைக்க ஆரம்பித்து விடுவார்கள். ஏதோ அக்கறையின் காரணமாக கேட்கிறார்கள் என்று பல நேரம் சிறு சிரிப்போடு கடந்துவிடுவதுண்டு. ஆனால் சில நேரம் அப்படி முடியாது, 'நீங்கள் ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள்' என்று திருப்பி கேட்டுவிடுவது. அதற்கு பெரும்பான்மை பதில் 'செய்து வைத்தார்கள் செய்து கொண்டேன்' என்பது தான்.

இரத்தக்கண்ணீர் படத்தில் எம்.ஆர்.ராதா சொல்வது தான் நினைவுக்கு வரும், 'இந்தியாவுல எதுக்கு கல்யாணம் பன்றோம்னே பல பயலுகளுக்கு தெரியாது'.

அலுவலகத்தில் என்னை விட பத்து வயது மூத்தவர் எனக்கு சொன்ன அறிவுரை, அப்போது எனக்கு 28 வயது. 23 - 24ல் திருமணம் செய்து கொண்டால் தான் 25 - 26ல் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம். அடுத்து பணி ஓய்வு நேரம் வரும் பொழுது நம் பிள்ளை வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பித்திருக்கும் எந்த சங்கடமும் இருக்காது என்றார்.

இது ஏதோ முதலீடு பற்றியோ, ரீட்டையர்மென்ட் பெனிபிட் பற்றியோ பேசுவது போல இருந்தது. ஆனால் இதுவும் ஒரு திட்டமிடலே, வாழ்க்கையை இப்படி திட்டமிட்டு வாழ்பவர்கள் தான் பெரும்பான்மை. ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை, இந்த வாழ்க்கை பயணத்தில் என்னோடு பயணிக்கும் நபரை தேடுகிறேன், ஏதோ ஒரு நபரோடு பயணிப்பதை விட பிடித்த நபரோடு, கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அவளுக்காக நானும், எனக்காக அவளும் விட்டுக்கொடுத்து போகும் ஒரு பயணத்தை தான் விரும்புகிறேன்.

இங்கு பலர் திருமண வாழ்க்கை பணி ஓய்வு திட்டம் போல தான் நடத்துகிறார்கள். அதை விடுத்தது வேறு கோணத்தில் அணுகுபவரை விநோதமாகவும், தோற்றவன் போலவும் தான் பார்க்கிறோம்.

தனிப்பட்ட ஒருவரின் விருப்பு வெறுப்பு பற்றி எந்த கவலையும் இல்லாமல் இன்ன வயதில் இதை நான் செய்துவிட்டேன் நீ ஏன் இன்னமும் அதை செய்யவில்லை என்று ஒரு மரம் போல வாழ்பவர்கள் கேள்விகளுக்கு அதிகம் செவி கொடுப்பதில் எந்த பயனும் இல்லை. அதற்கு தரும் பதில், 'என் வாழ்வுக்கான திட்டம் என்னிடம் இருக்கிறது, அது மிகவும் அழகானது, அது பெரும்பனை மக்கள் வாழும் வாழ்க்கை போல இல்லை, அதனால் கூட எனக்கு அது அழகாக தெரியலாம். அதை வாழ்கிறேன்.' இது அவர்களுக்கு புரியப்போவதும் இல்லை.

நான் சென்னைக்கு வந்து 13 ஆண்டுகள் ஓடிவிட்டது, இதில் 2013ல் இருந்து தனியாகவே வசித்து வருகிறேன். இந்த ஊரடங்கு சமயத்தில் என்னோடு பேசும் பலர் 'பாவம் நீ வேற தனியா இருக்கே' எண்ணும்போது, தனியாக இருக்கிறேன் ஆனால் பாவமாக இல்லை என்பேன். இந்த தனிமையை பார்க்காதவர்கள், குடும்பம் என்ற சூழலில் இருப்பவர்கள் அது தான் சௌகர்யம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்கள் போல் அல்லாதவர்கள் எல்லோருமே பாவம் தான்.

இந்த சமூகம் ஒரு கோட்டில் இயங்க ஆரம்பித்து சில நூற்றாண்டுகள் ஆகி விட்டது. அதனை விட்டு வெளியே செல்வோரை ஒன்று கடவுள் போலவும் இல்லை முட்டாள் போலவுமே பார்க்கிறது. உண்மையில் அந்த கோட்டை விட்டு வெளியே வருவோர் இவர்களின் பார்வைகளை பற்றி கண்டுகொள்வதில்லை, பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

சிலர் தானாக அந்த கோட்டை விட்டு வெளியே வாராமல் வேறு சில வெளி காரத்திற்காக வந்து, ஏக்கத்தோடு அந்த கோட்டை பார்கிறார்கள். அவர்களை இரக்கப்பட்டே நோகடித்து விடுவார்கள். இரக்கம் காட்டுங்கள், அதை உதவியின் மூலம் மட்டுமே காட்டுங்கள், வார்த்தைகளால் இரக்கம் காட்டுவது போல ஒரு குரூரம் இல்லை.
கேள்வி : .(+18) ஒரு சில பெண்கள் ஆசையா பழகி ஒத்துழைப்பும் கொடுத்துவிட்டு, காலம் கடந்து அந்த ஆண் தனது கையை பிடித்து இழுக்க வந்ததாக பத்தினி வேஷம் போடுகின்றனரே! ஏன்?

என் பதில் :..


பெண்னை மட்டும் குற்றம் சாட்டுவது தவறு.

நான் ஒரு Investigator…அந்த முறையில்.

கொஞ்ச நாள் முன்னாடி என் பால்ய கால நண்பன் திடீரென்று என்னை அழைத்தான்.

ஒரு இக்கட்டான பிரச்சனையில் மாட்டிக் கொண்டு இருக்கிறேன்... எனக்கு எப்படியாவது உதவ முடியுமா என்று கெஞ்சினான்.

நேரா வருகிறேன் என்று வீட்டுக்கே வந்து விட்டான்.

ஒரு காலத்திற்குப் பிறகு எதிரே வந்திருப்பவர், எந்த பிரச்சினைக்காக வந்திருக்கிறார் என்று தெள்ள தெளிவாக தெரிய ஆரம்பித்துவிட்டது.

நீங்களே யூகிக்கும் போது நான் யூகிக்க மாட்டேனா?

ஆம்… பெண் பிரச்சனை தான்.

நானும் அவனும் ஒரே ஏரியா தான், ஆனால் பள்ளிகூடம் வேற வேற.

ஒரு பெண் தன்னை அடிக்கடி பணம் கேட்டு மிரட்டுவதாக கூறினான்.

முதலில் அப்பாவியாக வேடம் போடுவார்கள், பின்பு பேச பேச தான் விஷயம் ஒன்னு ஒன்ன வரும்.

அவன் சொன்னது... பத்தாவது படிக்கும்போது தான் அந்த பெண்னை காதலித்தகாவும் பின்பு பிரிந்து விட்டாதாகவும், பிற்காலத்தில் அவளை சந்தித்த பிறகு அந்த காதல் தொடர்ந்து அப்புறம் காமத்தில் முடிந்தது என்றான்.

நிறுத்து… மிச்ச கதையை நானே சொல்கிறேன் என்றேன்.

அது பேர் காதல் எல்லாம் கிடையாது தம்பி, வெறும் காமம் மட்டுமே.

அவளுக்கு கணவன் இல்லை என்று தெரிந்ததும், நல்ல ஜல்சா பண்ணலாம் என்று ஒடியிருப்பே… கரக்ட்டா?

ஆமாம் என்றான்.

பின்பு கசமுசா நடந்த பிறகு அவள் மேல் இருந்த ஈர்ப்பு குறைந்திருக்கும்….

அதனால் அவளை கழட்டி விட பார்த்த சரியா ?

ஆமாம் என்றான்.

இப்போ உன்னை கார்னர் பண்றாள் … அப்படி தானே என்றேன்.

ஆமாம் டா உனக்கு எப்படி தெரியும் என்றான்?

அதை நான் அப்புறம் சொல்லுறேன்.

இப்போ நான் உன்னை காப்பாற்றி விட்டால்… நீ என்ன செய்வாய் என்று கேட்டேன்?

இனிமேல் ஒழுங்கா இருக்கேன் மச்சி…. பிராமிஸ் என்றான்.

ஒரு வாரத்தில் அவனை அந்த பிரச்சனையில் இருந்து மீட்டு விட்டேன்.

இவன் மட்டும் அல்ல, நிறைய பேர் இப்படி பட்ட பிரச்சனையில் சாதரணமாக மாட்டி கொள்வார்கள், பின் அதிலிருந்து வெளியே வரமுடியாமல் தவிப்பார்கள்.

இதை தான் EMA என்போம், இதில் இரண்டு பேரும் தான் குற்றவாளி.

ஆண் வேலை முடிந்த பிறகு தப்பிக்க முயற்சி செய்கிறான், பெண் தன் பாதுகாப்பிற்காக அவனை தன் வட்டத்துக்குள் வைத்துக்கொள்ள விரும்புகிறாள்.

அப்படி அவன் ஒத்துக் கொள்ளாத போது, பெண்கள் எடுக்கும் அஸ்திரம் மிரட்டல் அல்லது பணம்.

இப்படி பள்ளி காதல், கல்லூரி காதல், ஆபீஸ் காதல், பக்கத்து வீட்டு காதல் என்று லிஸ்ட் போய் கொண்டே இருக்கும். இதில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு அதிகம் தான்.

ஆனால் சமீப காலமாக வரும் காதல் தான் ரொம்ப ஆபத்தான காதல்... அது App காதல்.

Tinder, Azar மற்றும் நிறைய டேடிங் காதலில் இருந்து மீள்வது இயலாத காரியம்.

உங்களை வலையில் விழ வைத்து, பிறகு வைச்சு செய்வார்கள்.

பார்த்து சூதனமா இருங்க.

Anything comes extra at a cost.

வெள்ளி, 17 ஜூலை, 2020

கேள்வி : தலைமை பண்புகளை வளர்த்து கொள்ள உதவும் நல்ல நூல்களை கூற முடியுமா?

என் பதில்கள் :

# பகவத் கீதை - ஓர் ஆழ்ந்த கடல் போன்ற நூல், தன்னெழுச்சி, ஆளுமை, மனிதம், எல்லாவற்றிற்கும் அதில் ஒரு விடை உண்டு.

மொத்தத்தில் ஒருவரை தலையாய பண்புகளின் உறைவிடமாக்க வல்லது. தலைமைக்குத் தேவை இவைதான்.

இதனை ஒரு குரு மூலம் படிப்பதோ கேட்பதோ முழுப் புரிதலையும் தரும். (சுவாமி தயானந்த சரஸ்வதியின் சொற்பொழிவுகள், போன்றவை.) மதங்களைத் தாண்டிய பொது மறை.

# திருக்குறள் - அறத்துப்பால், பொருட்பால் இரண்டிலுமே பல குறட்கள். பொருள் புரிந்து அனுபவித்து படியுங்கள். பல நல்ல புதிய உரைகள் உள்ளன.

தவிர நான் மிக விரும்பிப் படித்த - பலருக்கும் பரிச்சயமான - நூல் :

# The 7 Habits of Highly Effective People by Stephen R.Covey

மேலும் பரிந்துரைக்கும் புத்தகங்கள் :

# Developing the Leader within You -by John C.Maxwell

# Mastering Leadership…-by Robert J. Anderson & William A.Adams.

# The Coaching Habit: Say Less, Ask More & Change the Way You Lead Forever -by Michael Bungay Stanier

# Dale Carnegie யின் பல புத்தகங்கள் சுய முன்னேற்றத்திலிருந்து தலைமைப் பண்புகள் வரை அலசுகின்றன.

# தலைமைத்துவத்தின் 5 தூண்கள் ( தமிழ் மொழிபெயர்ப்பு ). - பால் ஜெ. மெயர் & ராண்டி ஸ்லெச்டர்



# தலைமைப் பண்புகள் பற்றிய மெய்யறிவு - ராபின் சர்மா

# தலைமைப் பண்புகள் - சுகி சிவம். (சொற்பொழிவு - YouTube ல் காணலாம்.)



கேள்வி :  அழகுக்கும் பேரழகுக்கும் என்ன வித்தியாசம்?

என் பதில் :..


அழகுக்கும் பேரழகுக்கும் உள்ள வித்தியாசம் -என் பார்வையில்


என்னவளின் முகமோ தேவதை போன்ற அழகு

அதைவிட

நான் பார்த்த அவளின் அகமோ இந்த உலகத்தின் பேரழகு

🌸 🌸

குழந்தை போல் பேசும் போது அவள் பேசும் மொழி அழகு

அதைவிட

வெட்கத்தால் முகம் சிவந்து மௌனத்தால் நோக்குவது பேரழகு

🌻 🌻

அவளுடன் சேர்ந்து இருக்கும் நேரம் மனதில் ஏற்படும் இனிமை அழகு

பின்

அவளை நினைத்து என் தனிமையை கடக்கும் நேரம் அவள் பேரழகு

🌹 🌹

என்னை பார்த்ததும் அவள் உதட்டில் பூக்கும் சிரிப்பு அழகு

அதைவிட

நான் பார்க்கும் முன்னே கண்ணீரை துடைத்து சோகத்தை மறைப்பது அவளின் பேரழகு

💐 💐

அவளின் விரல் கோர்த்து நடக்கும் போது போகின்ற வழி அழகு

பின்

என் விரல் மேலே பட்டதினால் அவள் காட்டும் பொய் கோபம் பேரழகு

🌸 🌸

விண் அழகு மண் அழகு யாவும் அழகு

அதைவிட

அவள் மடியில் தலை சாய்ந்து பார்க்கும் அமாவாசை வான் கூட பேரழகு

🌻 🌻

காரணமில்லாமல் திட்டும் போது அவளின் கோபம் அழகு

பின்

சமாதானம் ஆகி என்னை கட்டிப்பிடிப்பது பேரழகு

🌹 🌹

முத்தம் அழகு அதின்பின் நடக்கும் நித்தமும் அழகு

அதைவிட

என் தலைகோதி வருடிவிடும் அவளின் தாயன்பு பேரழகு

💐 💐

வாழ்க்கை ...வாழ்ந்துதான் பார்ப்போமே ...
கேள்வி : அடுத்த பத்து ஆண்டுகள் எந்த படிப்புக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்?

என் பதில் :


தற்போது கொரோன விர்க்கு பிறகு மருந்து,vaccine போன்ற தயாரிப்பு நிறுவனங்களுக்கு நல்ல அறுவடை தான்.

எனவே பார்மசி, வேதியியல் படிப்பு நல்ல துறைகள்.

மேலும் இந்த ஆராய்ச்சிகள் தொடரபடுவதல்,,Bio tech , படிப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு.

மருத்துவம் தொடர்பான எல்லா படிப்பிற்கும் நல்ல சமயம்

நன்றி ..வாழ்த்துக்கள் ..
கேள்வி : உங்களை மெய் சிலுக்க செய்த சில பட காட்சிகள் அல்லது பாடல் வரிகள் என்ன?

என் பதில் :..


ஹாரிஸ் ஜெயராஜின் மெல்லிசையில் ஹரிஹரன் குரலில் வந்த இந்த பாடல், நம் எண்ணங்களுக்கு உயிர் கொடுத்தால் எப்படி இருக்கும்.. அதுபோல... தனிமையின் சுதந்திரமாய், நம் மனதை வருடி செல்லும்…
உப்பு கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்,
உப்பு தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது,
மலையில் விழுந்தாலும் சூரியன் மறித்து போவதில்லை,
நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீட்டித்து கொள்கிறதே.
மேகமாய் நானும் மாறேனோ அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ!
சூரியன் போலவே மாறேனோ என் ஜோதியில் உலகை ஆள்வேனோ!
ஜனனம் மரணம் அரியா வண்ணம் நானும் மழை துளி ஆவேனோ!

https://youtu.be/D73-bfj0LqE

வியாழன், 16 ஜூலை, 2020

கேள்வி : நீங்கள் அனுபவித்த மிக மோசமான கார்ப்பரேட் கலாச்சாரம் எது? அதை மிகவும் மோசமாக்கியது எது?


என் பதில் :..நான் இந்த கேள்விக்கு பதில் அளிப்பதைவிட ..என் நண்பர் ரங்கா அவர்களின் பகிர்வு அருமையாக இருக்கும் ..பல கார்பொரேட் நிறுவனங்களில் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர் ..அவரிடம் பேசியபோது ..இந்த கார்பொரேட் உலகம் புரிந்தது ..

நீங்கள் சதுரங்கம், (செஸ் பா!) ஆடி இருக்கிறீர்களா? எட்டு சிப்பாய்கள் எப்பொழுதும் முன்னே, நேர் கோட்டில் தான் போக முடியும். அதிகபட்சமாக குறுக்கே இருப்பதை வெட்டலாம். பல சமயங்களில் பவர் அதிகமுள்ள குதிரை, பிஷப், யானை போன்றவற்றை காப்பாற்ற இந்த சிப்பாய்கள் தான் களபலி ஆகும்.

கார்ப்பரேட் உலகமும் அப்படி தான். பிரஷ்ஷராக சேர்ந்து, உற்சாகத்துடன் புதிய விஷயங்களை கற்றுக் கொண்டு, ஐந்து வருடங்களில் வேகமாக முன்னேறுவீர்கள். எல்லோருமே விக்ரமன் படத்தில் வருவது போல "லாலே லாலே லாலா" என்று பாடுவது மாதிரி இருக்கும்.

ஆறிலிருந்து எட்டு வருடம் ஆனதும், தளபதியாக கனவு காண்பீர்கள். தளபதி என்றால் இங்கு ஸ்டாலின் என்று பொருள் கொள்ளக் கூடாது. டீம் லீட் அல்லது பிராஜக்ட் லீட் என்று அர்த்தம்.

"உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை"என்று உங்களை பாராட்டி, சில பிரஷ்ஷர்களுக்கு பயிற்சி அளிடா என் தங்கமே! என்று உச்சி முகர்வார்கள். சில மாதங்கள் சென்ற பின், ஒரு வெள்ளிக்கிழமை, எம கண்டத்தில் (3 - 4.30 PM ) , கொஞ்சம் பேசலாம் வா! என்று ஒரு கேபினுக்குள் கூப்பிடுவார்கள். நீங்களும் நிலவுக்கு அனுப்ப வேண்டிய ராக்கெட்டை ஸ்டான்ட் போட்டு நிறுத்தி விட்டு, கை கிரீஸை(grease) துடைத்துக் கொண்டு போவீர்கள்.

"சில தவிர்க்க முடியாத காரணத்தால் உங்களை வீட்டுக்கு அனுப்பறோம், மூணு மாத சம்பளம் உங்க அக்கவுண்டில் போடப்படும், இங்க கையெழுத்துப் போட்டுட்டு கிளம்புங்க!"

என்று மூச்சு விடாமல், முக்கியமாக முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் ஒருவர் சொல்லுவார். நீங்கள் கிட்டத்தட்ட சிவாஜி மாதிரி நவரசத்தையும் முகத்தில் காட்ட முயற்சி செய்தாலும் பலனளிக்காது. ஒரு செக்யூரிட்டி உங்கள் பேட்சை வாங்கிக் கொண்டு, (லேப்டாப்பையும் தான்) வாசல் கேட் வரை கொண்டு விடுவார். உங்கள் நண்பர்களுடன் பேச எல்லாம் வாய்ப்பளிக்க மாட்டார்கள். இன்று நீங்கள், இரண்டு வாரம் கழித்து அவர்களில் ஒருவன்/ஒருத்தி, அவ்வளவு தான் விஷயம்.

மேலே சொன்ன சம்பவம், பெங்களூரில் என் நண்பனின் மனைவிக்கு நடந்தது. ஆபிஸ் வாசலிலிருந்து, போனில் கதறி அழுதார். இதை போல பல கதைகள் ஒவ்வொரு சீசனிலும் நடைபெறும். அவை எல்லாம் சொல்ல மறந்த கதைகள். ஆனால் ஊரறிந்த ரகசியம்.

சதுரங்கத்திலாவது கருப்பு/வெள்ளை சிப்பாய்கள் தம் நேரடி எதிரிகளோடு தான் சண்டை போடும். ஆனால் கார்பரேட்டில் வாடிக்கையாளரிடமும் அர்ச்சனை வாங்க நேரிடும், நமக்கு உறுதுணையாக இருப்பார் என்று நம்பும் நம் தளபதியிடமும் அர்ச்சனை, இது போதாது என்று, நாம் நட்பு என்று நம்பிக் கொண்டிருக்கும் நமது டீமில் இருக்கும் சிலரும், யூதாஸாக மாறி முத்தம் கொடுக்கறேன் பேர்வழி என்று நம் முதுகில், (சில சமயம் நெஞ்சில்) கத்தி சொருகி விட்டு செல்வார்கள்.

என் முதல் கார்ப்ரேட் வேலையில், எதிர்பாரா மருத்துவ விடுப்பு முடிந்து, இருபது நாட்கள் கழித்து நான் வருவதற்குள், எனக்கு ஆப்பு சொருக முயற்சி சீரும் சிறப்புமாக நடந்தேறியது. பெரிய தலைக்கு என்னைப் பற்றி தெரியுமாதலால், வேறு டீமுக்கு மாற்றி விட்டார். தூங்கும் போதும் காலாட்டிக் கொண்டே தூங்க வேண்டும் - எனது முதல் பாடத்தை அங்கு கற்றேன்.

அதுவரை திரேதா யுகத்து ராமனாக இருந்த நான், துவாபர யுகத்தின் கண்ணனாக இருந்தால் தான் பிழைக்க முடியும் என்று கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன். ஆனால் நடப்பது கலியுகமல்லவா?

அடுத்து பெங்களூரில், இரண்டு பெரிய தலைகளுக்கு இடையே நடந்த பனிப் போரில் நான் பகடை காயாக ஆக்கப்பட்டது சிறிது தாமதமாகத் தான் எனக்கு புரிந்தது. கலகலப்பாக இருந்த என்னை, நான்கு மாதங்கள் மவுன சாமியாராக்கியது. நான்கு மாதங்கள், தினமும் 14 மணி நேரம் வேலை செய்து என் பொறுப்பிலிருந்த விடயங்களை டெலிவரி செய்து விட்டு, நானாக மன நிம்மதியுடன் வெளியே வந்தேன். "எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதே! ஒப்பந்த பணியிலிருந்து நிரந்தரமாக இங்கு இருக்கிறாயா?" என்று கேட்டனர். உங்கள் அன்புக்கு நன்றி! என்று கையெடுத்து கும்பிட்டு விட்டு வந்தேன். முட்டாளாக இருக்கலாம், தவறில்லை, முட்டாளாகவே இருப்பது தான் தவறு.

அனுபவங்கள் தான் நம்மை புடம் போடுகின்றன. நான் ஏற்கனவே இங்கு பகிர்ந்த பதிலில், அந்த பெண் சிங்கத்தின் டீமில் வந்து சேர்ந்தேன். அருந்தி சில மணி நேரம் கடந்தும், உள்நாக்கில் தித்திக்கும் ஒரு நல்ல தேநீரைப் போல, சில நல்ல அனுபவங்களும் கிடைக்கும் என்று அங்கு தெரிந்து கொண்டேன். இப்பொழுதும் ஏதேனும் உதவி என்றால், தயங்காமல் ஒரு போன் கால் தூரத்தில் தான் சில நண்பர்கள் உள்ளனர்.

இங்கு அமெரிக்காவில் வேறு கதை. யாராக இருந்தாலும், இரண்டு வாரங்கள் தான் நோட்டிஸ். ஆட் குறைப்புகள் சர்வ சாதாரணம். இது போக, அரசாங்கத்தின் உதவியாக, விசா மறுப்புகள் வேறு. நித்ய கண்டம், பூர்ண ஆயுசு.

"தாமரை இலைத் தண்ணீர் போல ஒட்டி ஒட்டாமல் இரு!"

எல்லா விஷயங்களையும் கணினிமயமாக்க இந்தியர்கள் வேண்டும், ஆனால் அவர்களுக்கு விசா வழங்க மட்டும் ஆயிரம் யோசனைகள். நல்லா இருங்கடே!

சார்லி சாப்ளின் அழுதாலும், அதை சிரிப்பென்றே ரசிக்கும் உலகு இது. ஏனெனில் சாப்ளினின் ராசி அப்படி. ..

நன்றி :..
கேள்வி : தினசரி வாழ்க்கையில் நீங்கள் கடைபிடித்து வரும் சில சிறப்பான பழக்கங்கள் (ஹாபிட்) என்னென்ன?

என் பதில் :

1. அலுவலகத்தில்

22  வருடங்களாக பார்த்த வேலையிலும் சரி, இந்த முப்பது நாட்களாக பார்க்கும் வேலையிலும் சரி - எதிலும் விரைவான, உறுதியான முடிவெடுப்பது. எந்த வேலையையும் தள்ளிப் போடுவதில்லை.
நேரம் தவறுவதில்லை. வாட்சை பார்க்காமல் பொழுதை செலவளிப்பது என்றால் அலுவலகத்தில் மேலதிகாரியுடன்,அலுவுலக நண்பர்களுடன் , வீட்டில் பெற்றோர் ,மகன் ,மனைவியுடன் மட்டும்தான்.

மற்றபடி நேர அளவு நிர்ணயித்துதான் டீம் மீட்டிங்; தாண்டி விட்டால் ஸ்டாண்டிங் மீட்டிங்தான்.


வருமானத்தில் 5% வேலை சார்ந்த படிப்பு அல்லது பயிற்சிக்கு ஒதுக்குவது. வேலையில் அடுத்த நிலைக்கு எப்பொழுதும் தயார் நிலையில் இருப்பது.
அலுவலகத்தில் அனைவருக்கும் உரிய மரியாதையளிப்பது. அலுவலக அரசியலை தவிர்ப்பது.

2. வீட்டில்

ஒரு வேலையும் இல்லாவிட்டாலும், 6மணிக்குள்  எழுந்து கொள்வது
எழுந்த ஒரு மணி நேரத்துக்குள் உடற்பயிற்சி செய்வது. தொடர்ந்தார் போல மூன்று நாட்கள் தவற அனுமதிப்பதில்லை.

காலை உணவு என்றால் திடமான ஆரோக்கிய உணவு மட்டுமே. உணவகங்களில் அதிகம் உண்பதில்லை.

தினமும் ஒரு மணி நேரமாவது படிப்பது, முடிந்த அளவு வேலை சார்ந்த படிப்பு.
செய்ய வேண்டியவை அனைத்தும் பட்டியல் எழுதி, செய்து முடித்ததும் டிக் அடிப்பது.

காதல் செவ்வாய், காவிய புதன் என்று தேடிப்போய் தொலைக்காட்சியில் பார்ப்பதில்லை. சனி ,ஞாயிறு ஒன்றுதான் வரலாறு தேடல் பொழுது போக்கு ஞாயிறு.

3. பொதுவில் / வெளியில்

நமக்கு வேண்டாம் என்றால் தெளிவாக "நான் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டேன்" என்று காயப்படுத்தாமல் சொல்லிவிடுவது.

நேரத்தை வீணடிக்கும் எந்த செயலியையும் அலைபேசியில் வைத்திருப்பதில்லை. முடக்க முடியாத செயலிகளின் அறிவிப்புகளையாவது முடக்கிவிடுவது.

தவறாமல் வருமானத்தில் 20% சேமிப்புக்கென ஒதுக்குவது.
தேவையில்லாத ஆன்லைன் ஷாப்பிங், டிஸ்கவுண்ட் விற்பனையில் நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பதில்லை.

யாரிடமும் எதிர்பார்ப்பு வைப்பதில்லை. முக்கியமாக நம்மிடம் உதவி பெற்றவர்களிடம்.

ஆர்வம் காட்டாத நண்பர்களுக்கு அறிவுரை வழங்குவதில்லை.

4. இப்போதைய புது முயற்சிகள்

அலுவக வேலையை வீட்டுக்கு எடுத்துச்செல்லாமல் இருத்தல்.கொரோனாவுக்கு பிறகு வீட்டிலும் அலுவலக வேலை .

புகைப்படம், எழுத்து போன்ற பிற செயல்களில் ஈடுபட போதிய நேரம் ஒதுக்குதல்

நச்சு நபர்களை தொடர்பு எல்லைக்கு வெளியே நிறுத்தல்.
தேவையற்ற பேச்சுகளில் ஈடுபடாமல் இருத்தல்.
இரவு 12மணிக்குள் தூங்க முயற்சித்தல்.

பின்குறிப்பு

உங்கள் சூழ்நிலைக்கேற்ப அலுவலக பட்டியலையும், அலுவலக சூழ்நிலைக்கேற்ப பொதுவெளி பட்டியலையும், வீட்டுச் சூழ்நிலைக்கேற்ப மொத்த பட்டியலையும் மாற்றிக்கொள்ளவும்.

நன்றி ....

என் பதில் :.
பெண் குழந்தைகள் போன்றே ஆண் குழந்தைக்களுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது "பொன்மகன் சேமிப்பு திட்டம்" .
இந்திய அஞ்சல் துறை இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களில் சேமிப்பு பழக்கத்தை உருவாக்கும் வகையில் "பொன்மகன் பொது வைப்பு நிதி" திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் சேமிக்கப்படும் பணத்திற்கு 8.7 சதவீதம் வட்டி வழங்கப்படும். 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் கார்டியன் உதவியோடும், 10 வயதுக்கு மேற்பட்ட ஆண் குழந்தைகள் தானாகவும் பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு தொடங்கலாம்.
இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க வயது வரம்பு கிடையாது. குறைந்த பட்சம் ரூபாய் 100 பணம் செலுத்தி கணக்கை தொடங்கலாம். கணக்கு தொடங்கியதில் இருந்து 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும்.
கணக்கு தொடங்கியதில் இருந்து 7 ஆவது ஆண்டில் இருந்து 50 சதவீத தொகையை பெற்றுக்கொள்ளலாம். இதை திருப்பி செலுத்த வேண்டியதில்லை. 15 ஆண்டுகள் முடிந்த உடன் கணக்கை முடித்துக் கொள்ளலாம்.
தற்போது இந்த திட்டத்தில் முதிர்வு தேதிக்கு முன்பாகவே பணம் செலுத்திய தேதியில் இருந்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருந்தால் பணத்தை திரும்ப பெறுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது.
அதேசமயம், பணத்தை முன்கூட்டியே எடுப்பதற்கான உரிய காரணத்தை கூற வேண்டும். இத்திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு 80 சி பிரிவில் வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதுடன் உரிய வட்டியும், வட்டிக்கு வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி ...