திங்கள், 1 நவம்பர், 2021

 பெயர் என்பது, வெறும் ஒரு சொல் அல்ல; அது ஒரு பெரிய பண்பாட்டின் அடையாளம்; ......

ஒரு பெரிய #வரலாற்றைத் தாங்கி நிற்கப்போகும் சொல். ....

`#தேவராட்டம்' என்பது, ஆண்கள் தங்கள் கையில் ஒரு துணியை வைத்துக்கொண்டு, காலில் சலங்கையும் இடுப்பில் வேட்டியும் அணிந்துகொண்டு ஆடும் ஆட்டம். தேவர்கள் ஆடிய ஆட்டம் என்பதால், `#தேவராட்டம்' எனப் பெயர் பெற்றதாகக் கூறுகிறார்கள். இதை, #கம்பளத்துநாயக்கர் இனத்தைச் சார்ந்த ஆண்கள் ஆடுவார்கள்.

கலைக்கோட்டு மாமுனிவரின் மகள், ஆண் உறவின்றி புத்திரப்பேறு வேண்டும் எனத் தந்தையிடம் வரம் கேட்டாள். அவர், அவருக்கு எலுமிச்சைப்பழம் ஒன்றைக் கொடுத்தார். அந்தப் பழத்தின் மூலம் ஒரு குழந்தை பிறந்தது. அவர்கள் எலுமிச்சைப்பழத்தை `கண் பழம்' என்றும் அழைப்பர். தேவரிஷியின் வம்சத்தில் பிறந்த அந்தக் குழந்தையின் மரபினர் கண்பழத்தார் - #கம்பழத்தார் எனப் பெற்றனர். இவர்கள் தேவரின் ஆட்டத்தை அறிந்து ஆடினர். இவர்கள் ஆடிய ஆட்டம் தேவராட்டம் ஆனது என்று ஒரு கதையும்...

ஏழு உலகங்களையும் படைத்த பிறகு சிவபெருமானும் பார்வதியும் தேவர் உலகில் வீற்றிருந்தார்கள். அப்போது தேவர் உலகை உருவாக்கிய சிற்பி விஸ்வகர்மா புதிய இசைக்கருவி ஒன்றைப் படைத்தார். அது உடுக்கையைப் போன்று இருந்தது. ஆனால், உடுக்கையைவிட உருவத்தில் பெரிதாக இருந்த அந்த இசைக்கருவியைத் தேவர்களிடம் கொடுத்து இசைக்கும்படி சொன்னார். தேவர்கள் அந்தக் கருவியை `தேவதுந்துபி' என்று அழைத்தனர். தேவர்கள் அந்த இசைக் கருவியை இயக்க முயன்றனர், முடியவில்லை. அதை இயக்க யாருமே முன்வராத நிலையில், சிவனுக்கு மாலை கட்டுபவர் வந்தார். அவர் சிவனின் கால்களில் வீழ்ந்து வணங்கிவிட்டு தேவதுந்துபியை இயக்கினார். அந்தக் கருவியின் தாளத்துக்கேற்ப தேவர்களும் ஆடத் தொடங்கினர். அந்த ஆட்டம் `#தேவராட்டம்' எனப் பெயர்பெற்றது என்று ஒரு கதையும் என... #தேவராட்டம் தொடர்பாக இரண்டு நாட்டார் கதைகள் உள்ளன.

தமிழகத்தில் கோயமுத்தூர் ,திருப்பூர் ,உடுமலைப்பேட்டை யை சுற்றி இருக்கும் 64 கிராமங்களில் ,திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம் முதலான #கம்பளத்துநாயக்கர்கள் வாழும் பகுதிகளில் இந்த நிகழ்த்துக்கலை அதிகமாகக் காணப்படுகிறது.

#தேவராட்டத்தில் 8 முதல் 13 பேர் ஆட வேண்டும் என்பது பொதுமரபாக இருந்தாலும், ஆடுவோர் எண்ணிக்கையில் கட்டுப்பாடு இல்லை. 100 பேர்கூட ஒரே சமயத்தில் ஆடலாம். இந்த ஆட்டத்தின்போது ஆண்கள் ஒப்பனை செய்துகொள்வதில்லை. அண்மைக்காலமாக இந்தக் கலை மேடையில் நிகழ்த்தப்படுகிறது. அந்தச் சமயத்தில் ஆடுபவர்கள் ஒரே வண்ணத்தில் ஆடை அணியும் போக்கு காணப்படுகிறது.

இந்த ஆட்டத்தில் பாடல்கள் எதுவும் பாடப்படுவதில்லை. உறுமி என்னும் இசைக்கருவி இந்த ஆட்டத்தின்போது இசைக்கப்படுகிறது. அதற்குத் தகுந்தாற்போலவே ஆடுகின்றனர். இதைத் `தேவதுந்துபி' என்றும் அழைக்கின்றனர். `மாலா' என்னும் பிரிவினர் இந்தக் கருவியை இசைக்கின்றனர்.

இந்த ஆட்டத்தின் ஆடுகளம் சூழலுக்கேற்ப அமைகிறது. #தேவராட்டத்தில் பயிற்சிபெற்ற ஒருவர், தலைமை ஏற்று ஆடுவார். மற்றவர்கள் அவர் உடல் அசைவுகளைக் கவனித்து அவரைப் பின்பற்றி ஆடுவார்கள். நிலுடிஜம்பம், சிக்குஜம்பம் போன்ற பெயர்களில் 23 ஆட்டங்கள் உள்ளதாகக் கூறுகின்றனர். ஒவ்வொரு வகையான ஆட்டத்துக்கும் உறுமி மேளத்தில் இசைக்கப்படும் தாளக்கட்டுகள் மாற்றமடைகின்றன. ஆரம்பத்தில் பெண்கள், பார்வையாளர்களாக மட்டுமே இருந்தனர். தற்போது சில ஊர்களில் பெண்களும் #தேவராட்டம் ஆடுகின்றனர்.

#தேவராட்டத்தில் 18 அடவுகள் உள்ளன. இவற்றை அடிப்படை அடவுகள் எனக் கூறலாம். அடிப்படை அடவுகளை நான்கு நிலைகளில் வேறுபடுத்துவதன்மூலம் 72 அடவுகளை உருவாக்க இயலும். இந்த 72 அடவுகளும் விதவிதமான இசையை உடையவை. ஒவ்வோர் அடவும் தனித்தனியே ஆடப்படும்போது இந்த ஆறு இசை மட்டுமே மறுபடியும் மறுபடியும் இசைக்கப்படுகின்றன. இவ்வாறு ஆடப்படும் அடவுகள் இணைந்தே தேவராட்டமாக உருப்பெறுகிறது. இந்தக் கலையின் அடிப்படை அடவுகள் பதினெட்டும் கட்டாயமாக ஆடப் பட வேண்டும் என்ற நியதியும் உள்ளது.

ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு இடம்பெயர்ந்து வந்த #கம்பளத்துநாயக்கர்களின் இனக்குழு ஆட்டமாகத் #தேவராட்டம் கருதப்படுவதால்,

இந்தக் கலை ஆந்திராலிருந்து தமிழகத்துக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த ஆட்டத்தை, பிற சாதியைச் சார்ந்தவர்கள் பெரும்பாலும் ஆடுவதில்லை. கர்நாடகத்திலிருந்து தமிழகத்தில் குடியேறிய ஒக்கலிகள், குறும்பைக் கவுண்டர் ஆகிய சமூகத்தினரும் இந்தக் கலையை நிகழ்த்துகின்றனர்.

ஆந்திராவில் இதை `தேவுடு ஆட்டம்' என்கிறார்கள். #கம்பளத்து_நாயக்கர்களின் வாழ்வியல் சடங்குகளிலும் வழிபாட்டுச் சடங்குகளிலும் தேவராட்டம் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. பூப்புச் சடங்கில் 16-ம் நாள் பெண்ணை மந்தைக்கு அழைத்துச் சென்று சடங்குகளைச் செய்துவிட்டு வீட்டுக்கு வரும்போதும், திருமணம், கோயில் திருவிழாக்கள் போன்ற நிகழ்வுகளின்போதும் தேவராட்டம் ஆடப்படுகிறது. பிறப்பு, இறப்பு என எல்லா சடங்கிலும் தேவதுந்துபி இசைக்கப்படுகிறது.

ஆடி மற்றும் புரட்டாசி மாத வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் #சக்கம்மா வழிபாட்டின்போது தேவராட்டம் நிகழ்த்தப்படுகிறது. வீரபாண்டியில் உள்ள கௌமாரியம்மன் சித்திரைத் திருவிழாவில் ஐந்தாம் நாளன்று இரவில் பல ஊர்களைச் சேர்ந்த #கம்பளத்து_நாயக்கர்களும் வந்து தேவராட்டம் ஆடுவர்.

இப்படி `#தேவராட்டம்' என்ற சொல் வெறும் ஒரு நிகழ்த்துக் கலை சார்ந்த பெயர் மட்டுமல்ல; அது ஒரு பெரிய பண்பாட்டின் அடையாளம். எல்லா பெயர்களுக்குப் பின்னாலும் இப்படியான ஒரு பண்பாட்டுக்கூறு இருக்கிறது..........

இந்தக் கட்டுரை, அ.கா.பெருமாளின் `தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலை' என்ற நூலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.


நன்றி ....விகடன் .காம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக