திங்கள், 15 நவம்பர், 2021

கம்பளத்தார் வாழ்வியல் ...


காலங்கள் மாறினாலும் புதுமைகள் பல புகுந்தாலும் 

பழமையும் பாரம்பரியமும் மாறவில்லை.....


இன்று காலை 9-10.30 முகூர்த்த நேரத்தில் தேனியிலேயே அதி நவீன வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய திருமண மண்டபத்தில் நடந்த கம்பள சமுதாய ஜமீன்தார் வீட்டு திருமணம். போடி ஜமீன் தேவாரம் ஜமீன் சாப்டூர் ஜமீன் இனைந்து நடத்திய திருமணம். 


பல்வேறு புதுமைகள் புதுப்புது வசதிகள். நாகரீக வளர்ச்சி. பலதரப்பட்ட மக்கள் பல்வேறு வி.ஐ.பிகள் வருகை. ஆனாலும் பலருக்கும் ஆச்சரியம். மண்டபத்தின் விஸ்தாரமான மேடையில் கம்பள மணப்பெண் அமர்வதற்கு 12 கம்பங்களுடன் கூடிய பச்சைப்பந்தல். பாலமர கிளைகளும் சிகரமானு கிளைகளும் நிரவப்பட்ட பந்தல். 


மணமகன் அமர்வதற்கும் பாரம்பரிய பச்சைக்குடில். இரு குடிசைளுக்கு முன்பும் தோரண கம்பங்கள். ஐந்து உருமிகள் (தேவதுந்துமி) தவிர வேறு எந்த வாத்தியமும்  கிடையாது. முதலில் மணமகன் வருகை. தலையில் உருமால் மார்பில் மஞ்சள் துணி கவசம். வலது தோளில் சக்க பந்த. இடுப்பில் வேஷ்டி. கையில் மூங்கில் கம்பு, போர்வாள். இதுவே மணமகனின் தோற்றம். அடுத்து மணமகள் வருகை. புத்தம்புதிய வெண்ணசீர முழு உருவத்தையும் நிறைத்து விட்டதால் வேறு எதையும் பார்க்க தேவையில்லாமல் போனது. திருமண சடங்குகள் அனைத்தையும் செய்தவர் சாலிபெத்த எனும் கம்பள பெரியவர்தானே தவிர பிராமண புரோகிதருக்கு அங்கு இடமில்லை. 


திருமண சாலிகள் தொடங்கியது முதல் நிறைவுவரையிலும் கம்பளத்தாரின் பாரம்பரிய தேவராட்டம். தேவராட்டம் ஆடிய இளைஞர்கள் எல்லோருக்குமே தலையில் உருமால் இடுப்பில் வெள்ளை வேஷ்டி மட்டும். யாருமே சட்டை அணியவில்லை. ஆக கம்பள சமுதாய திருமணங்களைப் பொறுத்தவரை சாமானியர் ஆனாலும் ஜமீன்தார்கள் ஆனாலும் காலங்கள் மாறினாலும் புதுமைகள் பல புகுந்தாலும் பழமையும் பாரம்பரியமும் மாறவில்லை. அவர்களின் பண்பாடும் கலாச்சாரமும் அசையவே இல்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக