மூங்கிலணை காமாட்சி அம்மன், தெய்வனாம்பதி,
தேவதானப்பட்டி, மஞ்சள் ஆறு ..பயணம் .....
மூங்கில் பெட்டியில் மஞ்சளாற்றில் மிதந்து வந்து மூங்கில் புதர்களில் அணைத்து நின்றதால் மூங்கிலணை காமாட்சி அம்மன் என வழங்கலாயிற்று.பகைவர்கள் வெல்லும் சக்தியை இத்தலத்து அம்பாள் தருகிறாள்.தவிர திருமண வரம், குழந்தை வரம், தொழில் மற்றும் மன அமைதி ஆகியவை கிடைக்கப் பெறலாம்.புதிய காரியங்களை தொடங்க அனுமதி பெற கௌலி குறி கேட்டலும் இங்கு உண்டு.
காஞ்சி காமாட்சி அம்மனுக்கு அடுத்தபடியாக புகழ் பெற்று விளங்குவது தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன். காஞ்சி காமாட்சியே மூங்கிலணை காமாட்சி அம்மனாக இருந்து வருவதே இதற்கு காரணம். குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இந்த அம்மனை குலதெய்வமாக வழிபடலாம்.
இங்குள்ள அம்மனுக்கு சிலையோ விக்ரகமோ இல்லை. கர்ப்பகிரகத்திற்கு முன் உள்ள அடைக்கப்பட்ட கதவிற்கு தான் பூஜை நடைபெறுகிறது, என்றாலும் கதவுக்கு உள்ளே 16 கால் மண்டபமும் அதன் முன் கர்ப்பகிரகமும் உள்ளது.
அங்கு அம்மன் பெட்டிக்குள் இருப்பதாக வருடம் ஒருமுறை கற்பகிரக கூரை மேயும் ராஜகம்பளத்தார் கூறுகின்றனர்.உடைக்காத தேங்காயும், உரிக்காத வாழைப்பழமும்தான் படைக்கப்படுகிறது.துள்ளு மாவுதான் சிறப்பான நைவேத்தியம்.நெய் வாங்கி ஊற்றுவது நேர்த்திக்கடனாக உள்ளது.
திருவிழா காலத்தில் சேரும் இந்த 50 பானை நெய் வருடம் முழுவதும் தீபத்திற்கு உபயோகிப்பர். இந்த நெய்பானைகளில் ஈயோ எறும்போ மொய்ப்பதில்லை.
தல விருட்சம் : மூங்கில் மரம்
தீர்த்தம் : மஞ்சள் ஆறு
Location: தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கும் வத்தலக்குண்டுக்கும் நடுவே உள்ளது.
மஞ்சளாறு அல்லது வத்தலகுண்டு ஆறு என்பது தமிழ்நாட்டின், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓடும் வைகையின் ஒரு துணையாறு ஆகும். பழனி மலைகளில் உருவாகி கிழக்கு நோக்கிப் பாய்ந்து குன்னுவாரன்கோட்டை அருகே வைகையில் கலக்கிறது.
மொத்தம் 470 ச. கி.இந்த அணை பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது கட்டப்பட்டது. மஞ்சளாறு என்பது திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓடி வைகை ஆற்றில் கலக்கும் ஒரு துணையாறாகும். இந்த ஆறு மொத்தம் 470 சதுர கிலோ மீட்டர் ஆற்றுப்படுகையும் 21 சதுர கிலோமீட்டர் நீர்த்தேக்கப் பகுதியையும் கொண்டுள்ளது .
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 57 அடியாகும். மூலாறு, வறட்டாரு, தலையாறு ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் மஞ்சளாறு அணைக்கு வந்து சேர்கிறது. அணையில் தேங்கும் நீர் மூலம், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள 10-க்கு மேலுள்ள கண்மாய்களில் நீர் தேக்கப்பட்டு 5 ஆயிரத்து 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன.
தேவதானப்பட்டி, செங்குளத்துப்பட்டி, கெங்குவார்பட்டி, தும்மலப்பட்டி, கணவாய்ப்பட்டி, வத்தலக் குண்டு, கட்டக்காமன்பட்டி, கரட்டுப்பட்டி, குன்னுவாரன் கோட்டை ஆகிய பல பகுதிகள் இந்த அணையால் பாசன வசதி பெறுகின்றன.
அணையில் தண்ணீர் திறந்துவிடும் காட்சியும் மடைகளில் நுரைபொங்க நீர் வெளியேறும் பாய்வதும் கண்கொள்ளாக் காட்சிகள்.
மஞ்சளாறு அணை தேவதானப்பட்டி அருகே இருந்தும் ஊருக்கு உள்ளே பாய்வதில்லை. அருகிலுள்ள மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலை ஒட்டிப் பாய்ந்து அப்படியே ஒதுக்குப்புறமாகவே சென்று வத்தலக்குண்டு வழியாக ஓடிப் பின்னர் வைகையில் கலக்கிறது.
ஆனால் மஞ்சளாறு அணையிலிருந்து வெட்டப்பட்ட வாய்க்கால் வழியே நீர் திறந்து விடும்போது, தேவதானப்பட்டி பெரிய பாலம் வழியே கடந்து, சந்தைப்பேட்டையைச் சுற்றிக் கொண்டு எங்கள் உயிர்நிலைப் பள்ளியைச் சுற்றி அகழிபோல் கடந்து அப்படியே வாடிப்பட்டி, சில்வார்பட்டி ஆகிய ஊர்களுக்குச் செல்லும்.
அந்த வாய்க்காலில் தண்ணீர் ஓடும்போது ஊர் மேலும் செழிப்பாக இருக்கும். வாய்க்காலின் அருகே உள்ள குளங்கள், கண்மாய்கள் பெருகிவிடும். அது மட்டுமல்ல போகுமிடங்களிலுள்ள கிணறுகள் கையால் எட்டித் தொட்டுவிடுமளவிற்கு நிரம்பி விடும்.
வாய்க்காலில் குதிப்பது, குளிப்பது போன்ற பல சாகச நிகழ்சசிகள் நடைபெறும்.
வெள்ளை அதிகாரிகள் மலையிலிருந்து கீழிறங்கும்போது அதனை முன்கூட்டி அறிவிக்கும் வண்ணம் அங்கு ஒரு பெரிய முரசைக் கொட்டுவார்களாம். அந்த முரசுக்குத்தான் வெள்ளைக்காரர் வைத்த பெயர் டாம் டாம் (TomTom). அந்தப் பெரிய முரசு அந்த இடத்தில் இருந்த பாறையின் மேல் நிறுவப்பட்டதால் அங்கே இருந்த பாறைக்குப் பெயர் டம்டம் பாறை என்றாயிற்று. நம் மக்கள் அதனை “தம்பட்டாம் பாறை” என்றே அழைக்கிறார்கள்.
அங்கேயிருந்து புறப்படும் காட்டாறு , தலையாறு என்றழைக்கப்பட்டு, நீர்வீழ்ச்சியாக கீழிறங்கி வரும் ஆறே மஞ்சளாறு என்பது.
கொடைக்கானல் மலையில் ஏறும் இடத்தில் காட்ரோடு தாண்டிப் போகும்போது கீழே பார்த்தால் மஞ்சளாறு ஓடுவது தெரியும். அதோடு அதனை தடுத்து நிறுத்தியுள்ள அணையும் நன்கு தெரியும்.
இதுவரை இந்த அழகான காட்சியான அணையைப் பார்க்காதவர்கள் அடுத்த முறை கொடைக்கானல் மலையில் ஏறும்போது உங்களின் இடதுபுறம் தெரியும் காட்சியினை காணத்தவறாதீர்கள்.
முடிந்தால் பஸ்ஸில் போனால் இடதுபுறத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள். காரில்போனால் அந்த இடத்தில் நிறுத்தி அங்கிருந்து கீழே பார்க்கலாம். அதே மாதிரி டம்டம் பாறையினருகில் நின்று தலையாற்றுக் காட்சிகளைப் பார்த்துச் செல்லலாம்.
இனிமையான பயணம் ..நன்றி
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக