#புலவர்தளி ஜல்லிபட்டி பழனிச்சாமி அவர்களுக்கு ...
#மூன்றாமாண்டு அஞ்சலி ....
தேவராட்டம் (பாரம்பரிய கிராமிய கலைகள்)
தேவராட்ட கலைஞர் பழனிசாமி
மண்ணில் புதைந்த பல்வேறு வரலாறுகள், பேச்சளவில் மட்டுமாவது உயிரோடு இருக்க, கிராமப்புற பாடல்கள் முக்கிய பங்களிப்பு அளித்து வருகின்றன; அவ்வாறு, சுதந்திரத்துக்கு எதிராக போராடி, இறந்த பாளையக்காரர்களின் மறக்கப்பட்ட வரலாறுகளை தனது பாட்டுகளால், உயிர்ப்புடன் வைத்திருக்கிறார் ஜல்லிபட்டியை சேர்ந்த புலவர் பழனிச்சாமி. நாட்டின் சுதந்திரத்துக்கான போராட்டத்தில், தமிழகத்தை சேர்ந்த பல ஆட்சியாளர்களின் வரலாறு, இளைய தலைமுறைகளுக்கு தெரியாமல் மறைந்து வருகிறது. இத்தகைய போராட்டங்கள் குறித்த நாட்டுப்புற பாடல்கள், ஆட்சியாளர்கள் மட்டுமல்லாது, அந்தந்த பகுதியின் விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறப்பு பெற்றிருந்த கோவில்கள் மற்றும் மக்களின் பழக்கவழக்கங்களை வெளிப்படுத்துவதாக அமைகின்றன.
தங்கள் முன்னோர்கள் மற்றும் வழிகாட்டிகள் மூலம் இத்தகைய பாடல்களை மனப்பாடம் செய்து, கோவில் திருவிழாக்கள் மற்றும் இதர நிகழ்ச்சிகளின் போது பாடுவது நாட்டுப்புற கலைஞர்களுக்கு விருப்பமான ஒன்றாகும். அவ்வாறு, உடுமலை அருகே, தளியை தலைமையிடமாகக்கொண்டு சுற்றுப்பகுதியை ஆட்சி செய்த பாளையக்காரர் எத்தலப்பன், ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டுள்ளார்; போர் குறித்து சமரசம் பேச வந்த ஆங்கிலேய வீரனை, துாக்கிலிட்டு, தனது எதிர்ப்பை பதிவு செய்து இந்த ஆட்சியாளரின் வரலாறு, மறைக்கப்பட்டு; மறக்கப்பட்டு வந்தது.
வரலாற்று ஆய்வாளர்களின் முயற்சியால், எத்தலப்பன் குறித்த, கல்வெட்டுகள், திருமூர்த்தி அணையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட, அவரது வம்சாவளியினர் சிலைகள் என படிப்படியாக பாளையக்காரர்கள் வரலாறு வெளிவரத்துவங்கியது.
இந்நிலையில், எத்தலப்பன் குறித்து, பல்வேறு நாட்டுப்புற பாடல்களை கேட்டுத்தெரிந்து கொண்டு, இன்றளவும், பாளையக்காரர்கள் வழிபட்ட, ஜல்லிபட்டி கரட்டுப்பெருமாள் கோவில், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், தளி கோட்டை மாரியம்மன் கோவில், அப்பம்மா கோவில் உட்பட கோவில்களில், விசேஷ நாட்களில், பாடி வரலாற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார் ஜல்லிபட்டியை சேர்ந்த புலவர் பழனிச்சாமி.
மைவாடி ஜமீன் வகையறாவை சார்ந்த எங்கள் முன்னோர், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்துக்கு பிறகு, பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். அப்போது, தளி பாளையக்காரர் எத்தலப்பன் குறித்த பாடல்களை, எனது பாட்டி உட்பட பெரியவர்கள் எங்களுக்கு சொல்லித்தந்தனர்.
இன்று வரை அத்தகைய பாடல்களை மறக்காமல் பாடி வருகிறேன். இத்தகைய பாடல்கள் ஆவணப்படுத்தப்படாமல் இருப்பதால், பெரும்பாலான பாடல்கள் இளைய தலைமுறைக்கு தெரியாமல் அழிந்து விட்டன. செவிவழி கேட்ட பாடல்களை மட்டும் இன்றும் நினைவில் வைத்துள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.
இவரது பாடலில், பாளையக்காரர்கள் விவசாயத்தை பெருக்க ஏற்படுத்திய, ஏழு குள பாசன குளங்கள், பஞ்சலிங்கம் அருவி, திருமூர்த்திமலையின் சிறப்புகள், இப்பகுதியில் ஓடிய பாலாறு உட்பட 62 சிற்றாறுகள், மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைவாழ் கிராம மக்களுடன் ஆட்சியாளர்கள் வைத்திருந்த நல்லுறவு என பல்வேறு தகவல்கள் பதிவாகியுள்ளன. இத்தகைய பாடல்களை ஆவணப்படுத்தி, இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்வதே நாட்டுப்புற பாடல் கலைஞர்களுக்கு நாம் செய்யும் நன்றியாக அமையும்.
ஆவணப்படுத்தினால் அழிவு இல்லை
நாட்டுப்புற பாடல் வரிகள்...
காடுகள் வெட்டியே... மேடு சமம் செய்து... காளை மாடு கட்டி உழவு செய்து... கம்பு.. சோளம்... தினை பயிர் செய்து பண்புடன் வாழ்ந்தவர் எத்தலப்பன் உச்சிமலை நல்ல குருமலையாம்...
அந்த குழிப்பட்டி... மாவடப்பு எல்லாம் மலை...ஏழு குளம் வெட்டி... நீர் நிரப்பி எத்தலப்பன் வாழ்ந்த நன்நாளில்... பூலோகமே மெச்சி... மேலோங்கிய திருமூர்த்திமலை 62 தீர்த்தங்கள் அங்கு; அன்புடன் வாழ்ந்தனராம் அந்நாளிலே...
எக்திக்கும் கொட்டட்டும் எத்திலப்பன் வெற்றிமுரசு என்று பாட்டெடுத்து கவிபாடி
எண்திசையும் புகழ்பரப்பி
வரலாற்றை எடுத்துரைத்து எத்திலப்ப மன்னரின் வரலாற்றூ ஆய்வுக்கு புத்துயிர்கொடுத்த
கம்பளத்து பண்பாட்டின்
நாட்டுப்புற இசைக்குயில்
இன்றுடன் இசைப்பதையும்
இறுதிமூச்சையும் நிறுத்திக்கொண்டது!
நன்றி : தினமலர் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக