ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

கணவருக்கு தெரியாமல் இந்த பெண் ரகசியமாக செய்த காரியத்தால்தான் நாம் எல்லாம் இன்று கார் ஓட்டுகிறோம்..

உலகின் முதல் காரை முதல் முறையாக ஓட்டியது ஒரு பெண் என்பது ஆச்சரியம் அளிக்கும் செய்திதான். அந்த காரை தனது கணவருக்கு தெரியாமல் 106 கிலோ மீட்டர்கள் அவர் வெற்றிகரமாக ஓட்டியதன் விளைவாகதான் பென்ஸ் நிறுவனம் பிறந்தது. இதுகுறித்த சுவாரசியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். மிக அதிக அளவில் உருவாக்கப்பட்ட மற்றும் மலிவான விலை கொண்ட உலகின் முதல் கார் எது? இந்த கேள்விக்கு பலரின் பதில் நிச்சயமாக, ஃபோர்டு மாடல் டி (Ford Model T) என்பதாகதான் இருக்கும். நம்மில் பெரும்பாலானோர் அப்படிதான் நம்பி கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. கார்ல் பென்ஸ் என்பவர்தான், நன்கு இயங்க கூடிய வகையிலான உலகின் முதல் காரை உருவாக்கியவர். அந்த கார்ல் பென்ஸ் வேறு யாருமல்ல. லக்ஸரி வாகன உலகில் இன்று கோலோச்சி கொண்டிருக்கும் மெர்ஸிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர்தான் கார்ல் பென்ஸ். கார்ல் பென்ஸ் கண்டுபிடித்த கார், நான்கு சக்கரங்களை கொண்டது கிடையாது. அது ஒரு 3 வீலர். மோட்டார்வேகன் மாடல் III என்ற பெயரில், அந்த காருக்கு காப்புரிமை வாங்கினார் கார்ல் பென்ஸ். இந்த உண்மை கதையில் இருந்து ஆச்சரியம் அளிக்கும் ஓர் விஷயத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. உலகின் முதல் கார் டிரைவர் ஒரு பெண் என்பதுதான் அந்த ஆச்சரியம் அளிக்கும் செய்தி. இப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த பெண் பெர்த்தா பென்ஸ். கார்ல் பென்ஸின் மனைவிதான் அவர். தனது கணவர் கண்டுபிடித்த காரை, அவரது அனுமதி இல்லாமலேயே 106 கிலோ மீட்டர்கள் ஓட்டினார் பெர்த்தா பென்ஸ். இந்த சம்பவம் நடைபெற்றது 1888ம் ஆண்டில். தனது கணவர் கண்டுபிடித்த மோட்டார்வேகன் மாடல் III காரை, அவரிடம் சொல்லாமலேயே சாலைக்கு எடுத்து வந்து விட்டார் பெர்த்தா பென்ஸ். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் கூட அவர் முறைப்படி அனுமதி பெறவில்லை. ஜெர்மனி நாட்டின் மான்கெய்ம் என்ற பகுதியில் இருந்து 106 கிலோ மீட்டர்கள் (66 மைல்கள்) தொலைவில் உள்ள பிபோர்ஸ்கெய்ம் என்ற பகுதி வரையிலான ஓர் சவால் நிறைந்த பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார் பெர்த்தா பென்ஸ். ஆனால் அந்த கால கட்டத்தில் அது சட்ட விரோதமான விஷயமாக கருதப்பட்டது. எனினும் குறிப்பிடத்தகுந்த தொலைவிற்கு, ஆட்டோமொபைல் ஒன்றை ஓட்டி சென்ற முதல் நபர் என்ற வரலாற்றை இதன் மூலமாக படைத்து விட்டார் பெர்த்தா பென்ஸ். பெர்த்தா பென்ஸ் இதை ஏன் செய்தார்? என்பதிலும் கூட ஓர் சுவாரசியமான உண்மை அடங்கியிருக்கிறது. முதலில் தனது கண்டுபிடிப்பு இன்னும் சாலையில் பயணிக்கும் அளவுக்கு முழுமையாக தயாராகவில்லை என்றுதான் கார்ல் பென்ஸ் நினைத்தார். ஆனால் பெர்த்தா பென்ஸ் வேறு விதமாக யோசித்தார். தனது கணவரின் கண்டுபிடிப்பு மிகச்சிறப்பானது என பெர்த்தா பென்ஸ் கருதினார். அதனை மார்க்கெட்டிங் செய்தால், பொருளாதார ரீதியில் மிகப்பெரிய வெற்றி அடையும் என்றும் அவர் நினைத்தார். எனினும் அதனை தனது கணவருக்கு நிரூபித்து காட்ட வேண்டுமல்லவா? எனவேதான் கணவரிடம் அனுமதி கூட பெறாமல், காரை எடுத்து கொண்டு கிளம்பி விட்டார் பெர்த்தா பென்ஸ். எனினும் இடையில் ஒரு சில முறை, மெக்கானிக்கலாக சில பிரச்னைகள் ஏற்படவே செய்தது. அதனை சமாளித்துதான் பெர்த்தா பென்ஸ் பயணித்தார். விஸ்லோக் என்ற இடத்தில், உள்ளூரை சேர்ந்த வேதியியலாளர் ஒருவரிடம் கூடுதல் எரிபொருட்களையும், பெர்த்தா பென்ஸ் வாங்கி கொண்டார். இந்த காரை உருவாக்கும் திட்டத்திற்காக கார்ல் பென்ஸ், பெர்த்தா பென்ஸ் இருவரும் மிகப்பெரிய அளவிலான பணத்தை முதலீடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெர்த்தா பென்ஸின் இந்த பயணத்திற்கு, அவரது மகன்கள் ரிச்சர்ட் மற்றும் எயூகன் ஆகியோரும் உதவி செய்திருந்தனர். 1888ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவங்களை நினைவு கூறும் வகையிலான வீடியோ ஒன்றை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆட்டோமொபைல் ஒன்றின் முதல் டிரைவர் ஒரு பெண் என்பதை அந்த வீடியோ கூறுகிறது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம். இறுதியில் பெர்த்தா பென்ஸ் தனது இலக்கை வெற்றிகரமாக அடைந்ததும், அது குறித்த தகவல்களை, டெலிகிராம் மூலமாக, தனது கணவர் கார்ல் பென்சுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அதன்பின்தான், கார்ல் பென்சும், காட்லீப் டெய்ம்லர் என்பவரும் இணைந்து மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தை தொடங்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக