Peelamedu Day ....
கோவை நகருக்கே பெருமை சேர்த்த பூளைமேடு - வயது 308
கல்விக்கும், செல்வத்துக்கும் புகலிடமாகி, பல புகழ் பெற்ற மனிதர்களைப் பிரசவித்து, கோவை நகருக்கே பெருமை சேர்த்த பூளைமேடு என்ற ஊர்தான், அந்த மகிமைக்குரிய மண். அதென்ன புதுப்பெயர் பூளைமேடு...அது புதுப் பெயர் இல்லை; அதுதான் பழைய பெயர்.
பூளைமேடு,
கோவையின் முக்கிய அங்கம்; சொல்லப்போனால், இந்த நகரின் மூளை. பூளைச் செடிகள் பூத்த மேடான பகுதியாக இருந்ததால், 'பூளைமேடு' என்று அழைக்கப்பட்ட ஊர்தான், பேச்சு வழக்கில் மருவி, பீளமேடு என்றானது. அன்றைய பீளமேடு என்பது பீளமேடுபுதூர், பாப்பநாயக்கன் பாளையம், ஆவாரம்பாளையம், உடையம்பாளையம் ஆகிய ஊர்களை உள்ளடக்கியதாகும்.
சங்கனூர் பள்ளத்துக்கு தெற்கே பீளமேடு புதூர், வடக்கே பி.எஸ்.ஜி., தொழில் நுட்ப கல்லூரி பகுதி, கிழக்கே நவ இந்தியா முதல் விமான நிலையம் வரை உள்ள பகுதிகள் இதன் இன்றைய எல்லைகள். இங்குள்ள வரதராஜபெருமாள் கோவில், ரேணுகாதேவி கோவில் மற்றும் மாரியம்மன் கோவில் ஆகியவை பீளமேடு உருவான காலத்திலேயே தோன்றியவை.
ஒரு கொசுவர்த்தியைச் சுழற்றிக் கொண்டு 'பிளாஷ்பேக்'கிற்குள் போவோம்....
கி.பி., 1378க்கு பின், இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த தென்னிந்தியாவின் பெரும் பகுதி, விஜய நகரப் பேரரசால் மீட்கப்பட்டது. பிறகு, கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலத்தில் கி.பி.,1529 ல் மதுரையில் ஆட்சியில் அமர்த்தப்பட்டார் விஸ்வநாத நாயக்கர்; அதனைத் தொடர்ந்து கொங்கு மண்டலம் உட்பட தமிழகத்தின் பல பகுதிகள் நாயக்கர்கள் ஆட்சியின் கீழ் வந்தன.
நாயக்கர்களுக்கும், மைசூர் உடையார்களுக்கும் போர் ஏற்பட்டதால் கோவையின் பெரும்பகுதி மைசூர் மகாராஜாவின் ஆட்சிக்கு உட்பட்டதாக மாறியது. அவர்களின் ஆட்சிக்காலத்தில் கோவை பகுதியில் கன்னடர்கள் அதிகம் குடியமர்த்தப்பட்டனர். கி.பி., 1711 ல் கோவைக்கு மைசூர் மகராஜாவின் பிரதிநிதியாக மாதேராஜா என்பவர் நியமிக்கப்பட்டார். கி.பி.1710 ல் குருடிமலையில் பெய்த பெரும் மழையால் சங்கனூர் பள்ளத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, அதையொட்டியுள்ள கிருஷ்ணாபுரம், கணபதி, ஆவாரம்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல வீடுகளை அடித்துச் சென்றது; பலர் உயிரிழந்தனர்.
பலர், மேடான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். தாழ்வாக இருந்த கிருஷ்ணாபுரத்தில் வெள்ளச்சேதம் தொடர்ந்து ஏற்பட்டதால், மக்கள் மேடான பூளைமேடு பகுதியில் குடியேற விரும்பினர். கங்கா நாயுடு, கொத்தார் முத்து நாயுடு, பேகார் எல்லையப்ப நாயுடு, ராமன், சுப்பன், வெள்ளிங்கிரி, ஆசாரி, ராமபோயன் ஆகியோர் தலைமையில் மாதேராஜாவை சந்தித்து தங்கள் குடியிருப்பை பூளைமேடுக்கு மாற்றித் தரும்படி கேட்டனர்.
ஆரம்பத்தில் மறுத்த மாதேராஜா, பின்பு தெலுங்கர்களுடன் கன்னடர்களையும் சேர்த்து குடியேற அனுமதித்தார். 11.11.1711 அன்று பூளைமேட்டில் குடியேற பூமி பூஜை போடப்பட்டது. வீடுகள் கட்ட, குருடிமலை மற்றும் வெள்ளியங்கிரி மலையில் இருந்து மரங்கள் கொண்டு வரப்பட்டு 200 வீடுகள் கட்டப்பட்டன. அன்றைய பூளைமேடு கிராமத்தின் மக்கள் தொகை, ஆயிரம்.
ஊருக்குள்ளே பெருமாளுக்கும், மாரியம்மனுக்கும் தனித்தனி கோவில்களும் தனித்தனி கிணறுகளும் வெட்டப்பட்டன. இக்கிணறுகளை 1813ல் நம்புரார் சாமா நாயுடு மகன் ரகுபதி நாயுடு கோவிலுக்கு தானமாக அளித்தார். பூளைமேட்டில் ஒன்பது குளங்கள் இருந்தன; அதையொட்டி, காடுகளும் தோட்டங்களும் உருவாகின.
ஊரின் கிழக்கில் ஒரு தண்ணீர்ப்பந்தலும், அவிநாசி சாலையிலிருந்து மேற்கே செல்லும் பாதையில் (பயனீர் மில் சாலை) மயானமும் இருந்தன. இன்றைய பீளமேடு புதூரின் அன்றைய பெயர், கொள்ளுக்காடு. ஆரம்பத்தில் இப்பகுதியில் பத்து வீடுகளும் தோட்டங்களும் மட்டுமே இருந்தன. நாளடைவில், அதுவும் பெரிய ஊராக விரிவடைந்தது. கல்வி, மருத்துவம், தொழில், தொழில்கல்வி, மருத்துவக் கல்வி என பல துறைகளிலும் வளர்ந்து, கோவைக்கு சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெற்றுத்தரும் மூளையாக இருப்பது, இந்த பூளைமேடுதான். பெயருக்கேற்ப, பலரையும் வாழ்வில் உயர்த்தி விட்ட இந்த மண்ணுக்கு வயது 307;
வாருங்கள்...வாழ்த்துங்கள்.
வளரட்டும் பூளைமேடு...வாழ்த்துவோம் மகிழ்வோடு!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக