வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

Prakash Ramasamy ...

(கோயம்புத்தூர் -வடவள்ளி -திருவள்ளுவர் நகர் )

அரசியல் இல்லாத ஒரு ஸ்டேடஸ் போட்டு நிறைய நாளாகிவிட்டது.
எத்தனை நாட்களானாலும், அப்பாவின் சுறுசுறுப்பை, அண்மையை மிஸ் பண்ணுகிறேன். அம்மாவின் கலப்படமில்லாத அன்பையும். முடியாத இந்த வயதிலும் என் வீட்டை புதுப்பித்த அப்பாவிடமும் அம்மாவிடமும் நன்றியெல்லாம் சொல்லி, அசிங்கப்படுத்த விருப்பமில்லை.
ஒரு வெறியில், வாடகை வீட்டில் இருந்து எப்படியாவது சொந்த வீடு வாங்க வேண்டும் என்று, நாய் பேயாய் அலைந்து.. ஒரு 7-8 சென்ட் இடத்தில், ஒரு பெட்ரூம் கிட்சன் டைனிங் என்று ஒரு வீடு கட்டி முடித்த போது.. மனசு சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருந்தது.
நான் அந்த வீட்டில்.. இரண்டு மாசம் கூட முழுதாய் நான் தங்கவே இல்லை. என் குடும்பத்தில் அங்குதான் எல்லோரும் வளர்ந்தோம். ஆனாலும்.. அந்த வீட்டினுள்.. மிதந்து போகும் பவழமல்லி வாசனையும், வேப்ப மர காற்றும், அவ்வப்போது குடும்பத்துடன் வந்து போகும் மயிலும்.. அம்மாவின் ஊதுபத்தி, கல்பூர வாசனைகளுமே இன்றுமே நினைத்தவுடனேயே இருக்கும் என் இடத்தை அழகாக்கிவிடுகிறது.
ஆனால்.. கிரகப்பிரவேசம் அன்றடித்த மழையும் இருளும், என் 105 டிகிரி காய்ச்சலில் நினைவிழந்ததும், யாருமற்ற இருளின் சப்தங்களும், கரன்ட் போன பகல்களும் இரவுகளும்.. அவஸ்தையாக இருந்தாலும்.. இப்போது.. அந்த வீடு இன்று வரை அன்னியமாகி விடவில்லை எனக்கு.
மலைமேல வீடு கட்டி கிரகப்பிரவேசம்ன்னு படுத்தறானுங்க என்று என் காதுபட சொன்ன உறவினரை, சாப்டியா என்று விசாரித்த போது..லேசாக வழிந்தார்.
எனக்கு..கோவை தவிர வேறு எந்த ஊருமே.. தினமும் அதில் வாழ வேண்டும் என்று ஆசைப்பட வைத்ததே இல்லை. அம்மாவும் அப்பாவும்..சிறுவாணியும், காற்றும்... கோவை ஈர்ப்பாய் எப்போதும்.. என்னை வைத்திருக்கிறது. நண்பர் சிவா வந்தபோது பெருமையாய் சுற்றி காட்டினேன் வீட்டை. செல்ஃபி கூட அவரோடுதான் மொட்டை மாடியில்..
ஒரு வேளை.. ஒரு வேளை.. கோவை வர முடியாமல் ஏதாவது நேர்ந்து போனால்.. என்னை நொய்யலில் கரைத்துவிடு.. என்று மகனிடம் சொல்லி விடுவதிலும் ஒரு சின்ன சிக்கல் இருந்தாலும் என் ஊரின் மீதான கவித்துவமும் காதலும் மட்டும் இதில் நிறைய இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக