40 ஆண்டுகளுக்கு முன்பு ‘பேனா நண்பர்கள்’(Pen Friends) என்ற கான்சப்ட் இருந்தது. வீட்டில் நூற்றுக்கணக்கான தபால் கார்டுகள், இன்லண்ட் கவர்கள் வாங்கி வைத்துக் கொண்டு இப்படியான போன நண்பர்கள் மூலம் நட்பு வட்டத்தை பெருக்கிக் கொள்வது வழக்கம்.
அதே போல் கரப்பாடி பூபாளம் பா.முருகேசபாண்டியன், சின்ன வதம்பச்சேரி சுந்தரராஜன், சின்ன வதம்பச்சேரி உமா சுந்தரராஜன், வதம்பை மணியன், ஒண்டிப்புதூர் அழகிரிசுவாமி, ஒண்டிப்புதூர் கே.சரவணன், இடையர்பாளையம் பெருமாள்சாமி, மயிலம்பட்டி பூவை தங்கராசன்.. என வானொலி நேயர்கள் நிறைய பேர் இருந்தார்கள்.
அயன்புரம் சத்தியநாராயணன், வேலாயுதம்பாளையம் சம்பத், கோவை ரம்யா, ராம்நகர் கோ.சு.சுரேஷ், பெங்களூர் கேஜிஎஃப் பழனிசாமி, பாப்பம்பட்டி பைந்தமிழன் இப்படி வார, பருவ இதழ்களை வாசித்து விட்டு அவற்றுக்கு கடிதம் எழுதும் வாசகர்களும் நிறைய இருந்தார்கள்.
இவர்கள் எல்லாம் பின்னாளில் துணுக்கு, சிரிப்புத் துணுக்கு, கவிதை, கதை, கட்டுரை எழுதி அவாதானிக்கவும் தொடங்கினார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் முகம் தெரியாது இருந்தாலும், ஒருவருக்கொருவர் சந்திக்காமலே பேனா நண்பர்களாக நட்பாக்கிக் கொண்டதுண்டு.
ஒருவரின் வாசகர் கடிதமோ, துணுக்கோ, சிரிப்போ, கதையோ, கட்டுரையோ, பத்திரிகை அல்லது வானொலியில் வந்து விட்டால் மற்றவர் அடையும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. பதிலுக்கு இவர்கள் அவர்களுடன் ஓடும் ஒலிம்பிக் ஓட்டக்காரர்கள் போல் ஓட்டமாய் ஓடி தங்கள் படைப்புகளையும் அச்சில் ஏற்றுவது உண்டு. அந்தக்காலத்தில் யாரும் எந்த பத்திரிகை ஆசிரியருடன், வானொலி நிலையத்தாருடன் நெருக்கம் பாராட்டிட முடியாது.
அப்படியே நெருக்கம் பாராட்டினாலும் முகத்தை பார்த்து விட்டோம் என்பதற்காக அவர்கள் படைப்பை அவர்கள் அங்கீகரித்து அச்சில் வைத்ததும் கிடையாது. சிறு வாசகர் கடிதம் ஆனாலும் தனிச்சுவையுடன் விளங்க வேண்டும். தாய், ஜனரஞ்சனி, கல்கி, விகடன், குமுதம், குங்குமம், சிறுகதைக்கதிர், தினமணிக்கதிர் என வரும் இதழ்கள் கடைக்கு வந்தவுடனே வாங்கி, அதே வேகத்தில் அதை அட்டை டூ அட்டை முழுவதும் படித்து விட்டு பத்து, பதினைந்து வாசகர் கடிதங்கள் எழுதியவர்களும் உண்டு.
அதில் ஒரு பக்கத்தில் வரும் வாசகர் கடிதங்கள் பத்து என்றால் அதில் மூன்று கடிதங்கள் ஒரே நபரின் பெயரிலும், புனைப்பெயரிலும் வருவது உண்டு. அப்படி நான் எழுதிய காலத்தில் ஒரு முறை தாய் வார இதழில் எனது கடிதங்கள் மட்டும் ஏழு பிரசுரிக்கப்பட்டிருந்தது. அவற்றில் மூன்று மட்டும் என் பெயர் மற்றும் புனைப்பெயரில் இருந்தது. மற்றவை யாவும் வேறு எனக்கு முகம்தெரியாத வாகர்களின் பெயரில் இருந்தது.
அப்போதெல்லாம் இப்படி கடிதம் எழுதும் வாசகர்களுக்கும் தபாலில் புத்தகங்கள் காம்ப்ளிமெண்ட் காப்பீஸ் வரும். அதை வாங்குவதில் கிடைக்கும் உற்சாகமே தனி. இந்த மாதிரியான சூழலில் வாசகனின் வாசிப்பு என்பது எப்படியெல்லாம் இருந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். அப்போதெல்லாம் அச்சில் ஏதாவது ஒரு பத்திரிகையில் நான்கைந்து கதைகள்/கட்டுரைகள் அச்சில் வந்துவிட்டாலே அத்தனை பேருக்கும் அவர் ஒரு பிரபல எழுத்தாளர் ஆகி விடுவார்.
அவர் தொடர்ந்து எழுதுவரானால் ரொம்ப பிரபலமான எழுத்தாளராக மாறி விடுவார். அப்படி அப்போது எழுதும் எழுத்தாளர்களை மேற்சொன்ன வாசகர்கள் அறிந்திராமல் இருக்கவே மாட்டார்கள். அப்படியான எழுத்தாளர்களில் சிலர்தான் விமலாரமணி, ராஜேஷ்குமார், ராஜேந்திராகுமார், பிரதீபா ராஜகோபாலன், புஷ்பா தங்கதுரை, ஆர்னிகா நாசர், சத்தியராஜ்குமார் இப்படி... பலர் அந்த எழுத்தாளர் வீடு தேடி சென்றே ஆட்டோகிராப் வாங்கி வருவதுண்டு.
அந்த எழுத்தாளரைப் பார்த்தேன்; அவர் கதை எப்படி எழுதுகிறார் தெரியுமா? என மற்றவர்களுக்கு அதை சொல்லிச் சொல்லி மாளும் போதே அது ஒரு சிறுகதை போல் நாவல் போல் விரியும். இன்றைக்கு அஞ்சலில் கடிதம் எழுதுவதே வழக்கொழிந்து விட்டது. எது எடுத்தாலும் இ.மெயில், ஃபேஸ் புக், டிவிட்டர், மற்றும் வெவ்வேறு இணையதளங்கள்தான். நிறைய எழுத்தாளர்கள், நிறைய பத்திரிகைகளில் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதுகிறார்கள்.
இப்போதைய இந்த நட்பில், எழுத்தில், ஆழ்வாசிப்பில் முந்தைய அளவு அளப்பறிய பாசமும், நேசமும் நட்பும் இருக்கிறதா? அந்த அளவு இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. போதாக்குறைக்கு பத்திரிகை, மீடியாக்களில் முந்தைய காலம் போல் இல்லாமல் சிறு பத்திரிகைளில் அறிமுகமான பலர் வெகுஜன பத்திரிகைகளில் நிரம்பி விட்டார்கள். சிறுபத்திரிகை குரூப்பிஸம் இதில் நிரம்பி விட்டது. அதனால் வலிய பிரபல்யப்படுத்தப்படும் கவிஞர்கள், எழுத்தாளர்கள் எனப்படுவோர் மிகுந்து விட்டார்கள்.
அதில் இடதுசாரி, வலதுசாரி, இண்டலக்ஷூவல், அதி இண்டலக்ஷூவல், நவீனத்துவவாதி, பின்நவீனத்துவவாதி, மேஜிக்கல் ரியலிசவாதி என்றெல்லாம் அரசியல் மறைமுகசாயங்களும் கோலோச்சுகின்றன. அன்றைக்கு ஞானபீடம் தரப்பட்ட சித்திரப்பாவையோ, சாகித்ய அகாடமி வாங்கிய வேங்கையின் மைந்தன், அக்கரைச் சீமையிலே, அகல் விளக்கு, சக்கரவர்த்தித் திருமகனோ, அலை ஓசையோ எடுத்து படிச்சா படிச்ச மாதிரி இருக்கும். இன்னும் பல முறை படிக்கத் தூண்டும். அப்படி விருதுகள் பெற்ற நூல்களை மற்றவர் பரிந்துரை ஏதும் இல்லாமல் நம்பி வாங்கலாம். அதில் வாசிப்பு சுகமென்பது இமாலயம் அளவு இருக்கும்.
ஆனால் இப்போது பாருங்கள் ஒருவர் தான் ஒரு வெகுஜன பத்திரிகையில் இத்தனை தொடர் எழுதியிருக்கிறேன், இத்தனை கதைகள் எழுதியிருக்கிறேன் என்று சொன்னால் கூட யாருக்கும் அவர்கள் பெயர் தெரியமாட்டேன் என்கிறது. அவர்கள் எழுத்தை வலியப்படித்தாலும் மனதில் நிற்பதில்லை. இவ்வளவு ஏன்? சாகித்ய அகடாமி உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வாங்கின நூல் என்று முத்திரை பதித்திருந்தாலே அது சாமான்ய வாசகன் படிக்க முடியாத நூல் என்ற அர்த்தத்தை கொடுத்து விடுகிறது.
இது எனக்கு மட்டும்தானா? எல்லோருக்குமேவா? எல்லோருக்கும் என்றால் இந்த சூழல் தமிழ் சூழலில் மட்டுமா? மற்ற மொழிகளிலும் உள்ளதா? அப்படி தமிழுக்கு மட்டும் என்றால் இதை திரும்ப மீட்டெடுப்பது எப்படி?
சரி, இத்தனை விஷங்களை எதற்கு இந்த நேரத்தில் இங்கே நான் குறிப்பிட வேண்டும்?
வேறொன்றுமில்லை. இன்றைக்கு என் முகநூல் நட்பில் இணைந்திருக்கும் பலரை என் பக்கங்களில் அறிமுகம் செய்து வருகிறேன். அந்த நண்பர்கள் நேற்று எனக்கு நட்பாயிருக்கலாம். பல வருடங்களுக்கு முன்பு இணைந்திருக்கலாம். நேரில் அறிமுகமாகியிருக்கலாம். போனில் பேசியிருக்கலாம். போனிலோ, நேரிலோ பேசாமல் பார்க்காமல் கூட இருக்கலாம்.
அவர்கள் எல்லாம் என் கருத்துக்கு/கட்டுரைக்கு மிகுந்த சந்தோஷத்தோடு பின்னூட்டமிட்டவர்களாக இருக்கலாம். கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொண்டிருக்கலாம். எந்த ஒரு நிபந்தனையும், எதிர்பார்ப்புமின்றி படித்ததும் பிடித்துப் போய் குறிப்பிட்ட விஷயத்தை ஷேர் செய்து கொண்டே இருக்கலாம்.
நாம் இவ்வளவு செய்கிறோமே, இந்த ஆள் நம்மை கவனிக்கிறானா? நாம் பதிவிடுவதை வாசிக்கிறானா? என்னதான் நினைக்கிறான்? என்று யாரும் நினைத்து விடக்கூடாது அல்லவா?
அதற்காகவே, அவர்கள் பதிவுகளில் எல்லாம் நான் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். இன்னமும் நுட்பமாக அவர்களை கவனித்துக் கொண்டிருக்கிறேன். அதில் எனக்கு இன்ன சந்தோஷமும் இருக்கிறது என்பதை இந்த அறிமுகம் மூலம் அறிவிப்பு செய்ய முடிகிறதென்றால் அதுவும் பெரிய சந்தோஷம்தானே, அந்தக் கால பேனா நட்பு போல... சரிதானே?
🙂 கா.சு.வேலாயுதன், கோவை, 21.08.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக