சனி, 29 ஜூலை, 2017

என் அன்பு நண்பரின் வா .மணிகண்டன் அவர்களின் பதிவு ..நமது சமுதாய கம்பள விருட்சம் அறக்கட்டளையை ...இப்படித்தான் கொண்டுபோகவேண்டும் ....என்ற ஆவலுடன் ...நம் சொந்தங்களின் ஒத்துழைப்போடு கொண்டுபோகவேண்டும் ...வாழ்வது ஒருமுறை ...நம் எதிர்கால நம் குழந்தைகளின் நலனுக்காக ...

சூப்பர் 16

சூப்பர் 30 ஆனந்த் குமார் மீது எப்பொழுதுமே மிகுந்த மரியாதை உண்டு. பீஹார்காரர். கணிதத்தில் கெட்டிக்காரர். பட்டப்படிப்பு முடித்தவுடன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்கும் இடம் கிடைக்கிறது. ஆனால் அப்பா இறந்துவிட பொருளாதாரச் சூழலின் காரணமாக சேர முடியாமல் போகிறது. பீஹாரிலேயே தனிப்பயிற்சி வகுப்பு நடத்தத் தொடங்கியவர் ஆரம்பித்ததுதான் சூப்பர் 30. அவரது பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு உண்டு. சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறார். அவர்கள் முப்பது பேருக்கும் ஒரு வருடத்திற்கு தங்குமிடம் உணவு என எல்லாமும் இலவசம். ஆனந்தின் அம்மாதான் சமையல் செய்கிறார். இப்படி ஒவ்வொரு வருடம் தேர்ந்தெடுக்கப்படும் முப்பது மாணவர்களுக்கும் இந்தியாவில் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஐஐடி-ஜேஈஈ தேர்வுக்கு பயிற்சியளிக்கிறார். இதுவரை நானூற்றைம்பது மாணவர்களுக்கு பயிற்சியளித்து முந்நூற்று தொண்ணூறு பேர்களை ஐஐடிக்குள் அனுப்பியிருக்கிறார். இந்த வருடம் முப்பது பேருமே ஐஐடியில் சேர்ந்திருக்கிறார்கள்.

லேசுப்பட்ட காரியமில்லை. அத்தனையும் ஆனந்த்குமாரின் சொந்தச் செலவு. அவரை ரோல்மாடலாக வைத்துக் கொண்டு ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என வெகு நாளாக ஆசை. செய்யப் போகிற காரியத்துக்கான வடிவம் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் இருந்தது. எத்தகைய மாணவர்களைத் தேர்ந்தெடுப்பது, எந்தவிதமான பயிற்சியளிப்பது என்பது மாதிரியான தெளிவின்மை இருந்தது. இப்பொழுது நேரம் கனிந்திருக்கிறது. மாணவர்களைத் தங்க வைத்து உணவளித்துப் பயிற்சியளிப்பது சாத்தியமில்லை. ஆனால் மாணவர்களை செதுக்க முடியும். கால்நடை மருத்துவம், மீன்வளத்துறையியல், பொறியியல், பி.ஏ தமிழ், டிப்ளமோ, ஐடிஐ என பல்வேறு பாடங்களைப் படிக்கும் மாணவர்கள் இருக்கிறார்கள். படிப்பிலோ அல்லது விளையாட்டிலோ சூரக்குட்டிகள் இவர்கள். நிசப்தம் மூலமாக படித்துக் கொண்டிருப்பவர்கள். பெற்றோர் வாய்க்கப்படாதவர்கள், கூலி வேலைக்குச் செல்கிறவர்கள், நாடோடிகளின் பிள்ளைகள் எனக் கலந்த கூட்டம். அவர்களிலிருந்து பதினாறு பேர்கள். 
சூப்பர் 16. பதினாறு என்ற எண்ணிக்கையில் ஒன்றிரண்டு மாணவர்கள் கூடலாம் குறையலாம். இவர்களுக்கு வருடம் முழுமையும் தொடர்ந்து பயிற்சியளிக்கப்படும். ஆங்கிலம், தன்னம்பிக்கை, உலகை எதிர்கொள்ளல் என்று பல்வேறு வகையான பயிற்சிகள். ஒவ்வொரு மாதத்திலும் ஒரு நாள். தொடர்ந்து பயிற்சியாளர்கள் வருவார்கள். ஐ.ஏ.எஸ், ஐ.ஆர்.எஸ், பத்திரிக்கையாளர்கள் என்று கலவையானவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். தம்முடைய தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாக வருகிறவர்கள். ஒவ்வொருவரிடமும் வருடத்தில் அவர்களின் ஒரேயொரு நாளைக் கேட்டு வாங்கிக் கொள்வதாகத் திட்டம். ஒரு மாதம் வெளியிலிருந்து வருகிறவர்கள் பயிற்சியளிப்பார்கள். அடுத்த மாதம் நான் பயிற்சியளிப்பதாகத் வடிவமைத்து வைத்திருக்கிறோம். 
பயிற்சியாளர்களின் செயல்திட்டங்களை மாணவர்கள் செயல்படுத்துகிறார்களா என்ற கண்காணிப்பும் உண்டு.
ஏன் இந்தப் பணியைச் செய்கிறோம்? எதற்காக இவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்? வெற்றி பெற்ற பிறகு சமூகத்திற்கு இவர்கள் செய்ய வேண்டிய பங்களிப்பு என்ன என்பது பற்றியெல்லாம் பேச வேண்டியிருக்கிறது. மாணவர்களுக்கும் நமக்குமிடையில் ஒருவிதமான புரிதலும் நட்பும் உறவும் உருவாவதற்காகத்தான் ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் நான் அவர்களோடு பேச விரும்புகிறேன். இப்பொழுதே வாரத்தில் ஒரு முறையாவது ஒவ்வொருவருடனுடம் பேசாமல் இல்லை என்றாலும் இன்னமும் நெருங்க வேண்டியிருக்கிறது.
ஒரு வகையில் நெகிழ்த்தி வடிவமைத்தல்தான். 
ஒவ்வொரு மாணவரிடமும் தனித்தனியாகப் பேசியதிலிருந்து இந்த பதினாறு பேருக்குமே ஏதாவதொரு பிரச்சினை இருக்கிறது. வெளியிடங்களில் பேச முடிவதில்லை, மொழிப்பிரச்சினை, தன்னம்பிக்கைக் குறைவு என்று எதையாவது சொல்கிறார்கள். ஆனால் வெளிப்படையாகச் சொல்கிறவர்கள். அப்படி வெளிப்படையாகச் சொல்வதுதான் அவர்களின் பலமே. அதைச் சரி செய்து தருவதுதான் இத்தகைய தொடர்ச்சியான பயிற்சிகளின் நோக்கமும் கூட. இவர்களில் பலருக்கும் தெளிவான இலக்கு இருக்கிறது. அப்படி இல்லாதவர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும். இலக்குக் ஏற்ப சிலருக்கு ஏற்கனவே வழிகாட்டிகள் இருக்கிறார்கள். மீதமிருப்பவர்களுக்கான வழிகாட்டிகளைப் படிப்படியாக ஒதுக்க வேண்டியிருக்கிறது. இவ்வளவு தீவிரமாகச் செய்யும் போது வழிகாட்டிகளும் அதே அளவு தீவிரத்தன்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் இல்லை. எல்லாம் சரியாக அமையும். 
இத்திட்டம் குறித்து இனி தொடர்ந்து அவ்வப்பொழுது எழுதிக் கொண்டேயிருக்கிறேன். நிசப்தம் செயல்பாட்டில் இது அடுத்த கட்டம்.
பதினாறு மாணவர்கள் என்பது முதல் வருடத்திற்கு அதிக எண்ணிக்கைதான். தொடக்கத்தில் தடுமாற்றம் இருக்கும். ஆனால் பெருமளவு வெற்றியடைந்துவிட முடியும் என்கிற நம்பிக்கையிருக்கிறது. தெளிவான திட்டம் இருக்கிறது. செயல்படுத்திவிட முடியும். ஒவ்வொரு வருடமும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ‘ஐஐடி’ என்பது மாதிரியான ஒற்றை நோக்கமில்லை. வெறுமனே வேலைக்குச் செல்லுதல் என்பது மாதிரியான தட்டையான இலக்கும் இல்லை. ஒவ்வொருவருக்கும் துல்லியமான இலக்குகள்- நிர்ணயித்து அதை அடைந்து காட்டுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக