கோயம்முத்தூர் ...உடுமலைப்பேட்டை ...ஜல்லிபட்டி ...திருமூர்த்திமலை ....காளாஞ்சிப்பட்டி ...
மூன்று நாள் விடுமுறை. மகனை எங்கேனும் அழைத்துச் செல்ல வேண்டும் என விரும்பியபொழுது, சந்தைமயமாக்கப் பட்ட கேளிக்கை கூடாரங்களுக்குச் செல்ல விருப்பமில்லை. மாறாக இயற்கைச் சூழலும் , எதார்த்தமும் கலந்த ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும் எனத் தோன்றியது. அதனால் எனது விருப்பத் தேர்வாக, அருகாமையில் இருந்த ஒரு விவசாயப் பண்ணைக்குச் சென்றோம். விவசாய முறையைப் பார்க்க வேண்டும் என்கிற எனது நெடுநாள் ஆசையும் நிறைவேறியது.
பண்ணை உரிமையாளரிடம் பேச்சுக் கொடுத்து உரையாடியபொழுது நம் நாட்டு விவசாய முறைக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து ஓரளவு அறிந்துகொள்ள முடிந்தது. அவர் சொன்னார். 200 ஏக்கர் பண்ணை, அதில் இருபது ஏக்கர் நிலத்தை குழந்தைகள் கேளிக்கை மற்றும் பார்வைக்கு ஒதுக்கியுள்ளனர். அதில் பல்வேறு கால்நடைகள், முயல்கள், பறவைகள் மற்றும் குதிரைகளும் இடம்பெற்றிருந்தன.. தங்கள் குழந்தைகளுடன் வந்து அங்கே மகிழ்ச்சியுடன் நேரம் செலவிடுவதைப் பார்க்கிற பொழுது அவர்களுக்கு வேளாண் தொழிலின் மீதுள்ள மதிப்பும் மரியாதையும் புரிந்தது.
பண்ணையில் சுற்றிக் கொண்டிருந்த பொழுது எனது கண்ணைக் கவர்ந்தது அங்கே காட்சிக்கு வைக்கப் பட்டிருந்த இந்த பெர்குசன் டிராக்டர். காரணம் இந்த டிராக்டருடன் எனது பால்ய நினைவுகள் பல பின்னிப் பிணைந்துள்ளன. எனக்கு வியப்பு என்னவென்றால், இங்கே நான் பார்த்த டிராக்டர் அதன் வடிவமைப்பில் எவ்வித மாறுபாடும் இன்றி அப்படியே நூறு சதம் நம் ஊரில் சிறுவயதில் பார்த்த எம்.எப். டிரக்டர் போன்றே இருந்தது.. இது எப்படியும் 30-40 ஆண்டுகள் பழமையானதாக இருக்க வேண்டும். எனவேதான் ஒரு காட்சிப் பொருளாக வைத்திருக்கிறார்கள் போலும்.
எது எப்படியோ, இதைப் பார்த்த மாத்திரத்தில் எனக்குள் ஒரு குதூகலம் பிறந்துவிட்டது. ஏறி அமர்ந்து ஆசை தீர ஆராய்ந்து, பழைய நினைவுகளை அசை போட்டுப் பார்ந்தேன். எங்கள் ஊர்ப் பக்கம் 25 ஆண்டுகள் முன்பு வரை இத்தகைய டிராக்டர்கள் அரிதினும் அரிது. எருது பூட்டி தான் உழுவார்கள். அண்மைக் காலம் வரையிலும் , எருது உழவுதான் ஆழமான உழவு என்கிற நம்பிக்கை இருந்து வந்துள்ளது. ஒரு பழமொழி கூட உண்டு... அகல உழுவதைக் காட்டிலும் ஆழ உழுவதே சிறந்தது என்பார்கள். வேகமாக வளர்ந்து வரும் இன்றைய அவசர பொருளாதார நிலையில் உழவுக்கே மதிப்பு குறைந்துவருகிற பொழுது ஏர் பூட்டி உழுது விவசாயம் செய்வதற்கு விவசாயிக்கு ஏது அவகாசம்! எருதுகள் மறைந்து வாடகைக்கு டிராக்டர் அமர்த்தி உழும் நிலை முற்றிலுமாக மாறியதை என் வயதிற்கே, என் கண்முன்னாலேயே பார்க்க நேர்ந்தது.
இந்தத் தொடரின் ஆரம்ப காலத்தில் தான் விவசாயத்தை பிரதான தொழிலாகச் செய்து வந்த எனது தாத்தா வீட்டில், அந்த டிராக்டர் வாங்கினார்கள். அந்த கிராமத்திலேயே அதுதான் முதலோ அல்லது இரண்டாவதோ டிராக்டர். அடேங்கப்பா.. எது எத்தகைய ஒரு திருவிழாவாக இருந்தது என எண்ணிப் பார்க்கிறேன். உரலில் பருத்திக் கொட்டையும் புண்ணாக்கும் ஆட்டி , அதைத் தன் காளைகள் பருகிக் களைப்பாற, அதன் கழுத்து மணிகள் ஒலிப்பதை தேவலோக இன்னிசையாகக் கருதி , கயிற்றுக் கட்டிலில் மல்லாந்து படுத்தவாறு முகமலர்ந்து துயில் கொண்ட அந்த விவசாயியின், நிம்மதியான தூக்கத்தை மட்டுமின்றி வழி வழி பேணிப் பாதுகாத்து வந்த தன் வேளாண் வாழ்க்கை முறையையே உழுப்ப வந்த , நவீனமயமாக்கலின் முதல் பெருங் கரங்கள் தான் இந்தப் பேரியந்திரங்கள்.
அப்போது ஒரு டிராக்டர் வைத்திருப்பது கவுரவங்களில் தலையாயதாகக் கருதப் பட்டது. உழவுக்கு மட்டுமின்றி குல தெய்வம் கோவில்களுக்கு, சினிமாக்களுக்கு, கல்யாணம், காதுகுத்து, கருமாதி என நல்லது கெட்டது களுக்கு, சில சமயங்களில் அரசியல் கூட்டங்களுக்கும் கூட்டமாகச் செல்வதற்கும் அவை பெருந்துணையாக இருந்தது என்பது மறுப்பதற்கில்லை. இன்றைக்கு நமக்கு கார் எப்படியோ அதைப் போல அல்லது அதற்கும் மேலாக அன்றைக்கு விவசாயிக்கு டிராக்டர். அப்போது வெளிவந்த படிக்காதவன், வேலைக்காரன், இதுதாண்டா போலீஸ் படங்களுக்கு டிரக்டர் கட்டிக் கொண்டு ஒட்டு மொத்த கிராமமும் சென்றபொழுது நானும் போனது நினைவிருக்கிறது!
தன் குடும்பத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு காது குத்தி, கடா வெட்டி, சிகை மழித்துக் கொண்டாடுவதைப் போல புதிதாக வந்த அந்த டிராக்டரையும் தன் குடும்பத்தின் புதுவரவாக நடத்தினார்கள். எங்கள் வீட்டில் டிராக்டர் வாங்கியதும் முதன் முதலாக அவர்கள் மேற்கொண்ட பயணம்,தளி அருகே உள்ள திருமூர்த்தி மலை கோவிலுக்கு. வாங்கிய டிராக்டர் நலமாக இருக்க, அதன் மூலம் விவசாயம் செழிக்க, திருமூர்த்தி அருள் வேண்டி, ஒரு ஆட்டுக் கிடாய் படையல் இடுவாதாக நேர்ந்துகொண்டு, வளர்த்து வைத்திருந்தார்கள்.
அன்றைய தினம், சுற்றம் சூழ பெண்டிர் குழந்தைகள் அனைவரும் டிராக்டரின் டிரைலரில் ஏற்றி அமர்த்தப் பட்டனர். அதில் நானும் ஒருவனாக , அந்த ஆட்டுக்கிடாய் அருகில் அமர்ந்திருந்தேன். ஆண்களில் நான்கைந்து பேர் இஞ்சினில் அமர்ந்து வருவர். மற்றவர்கள் பேருந்திலோ அல்லது தங்கள் மொபெட் வாகனங்களிலோ வந்து சேர்வர். சுற்றிலும் பெண்கள் கெக்கலி கொட்டி ஊர்கதை உலகக் கதைகளை மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டு வர , 15 கிலோமீட்டர் பயணம், மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில், வழி நெடுகிலும் தூக்கியடிதுக் கொண்டு, ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போலத் தொடர்ந்து, கோவில் வந்து சேர்ந்தோம். அங்கே பூசாரி ஒருவர் வந்து டிராக்டருக்கு மாலை, மரியாதை, பூஜை, புரஸ்காரம் எல்லாம் செய்து முடித்த பிறகு எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த கிடாவெட்டு நடந்தது.
விசேச ஒன்றுகூடல் போல இருந்ததால் அவரவர் ஆங்காங்கே பலகதைகள் பேசிக் கொண்டிருக்க, நான் ஒதுங்கி ஆடு வெட்டிக் கூறுபோடுவதை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். வெட்டிக் கொண்டிருந்த எம்பெருமாள் ஒரு கையில் மீசையை திருகி விட்டுக் கொண்டு, மறுகையில் ஆடுத் தலையை தூக்கி காட்டியவாறு, என்னடா விளையாடாம இதப் போயி இவ்வளவு ஆர்வமா பாத்துகிட்டு இருக்க.. எனக் கூறியவாறு அதன் மூளையை வெட்டி எடுத்தார். இந்த பாத்தியா இதுதான் மூளை. நமக்கும் மண்டைக்குள்ள இப்பிடித்தான் இருக்கும். இது இல்லன்னா கழுதைய சோலி முடிஞ்சதுன்னு அர்த்தம் எனக் கூறி சிரித்துக் கொண்டே, அருகில் இருந்த ஒருவனை அழைத்தார். அவனிடம் இந்தாடா இந்த மூளைக் கறிய சின்னப் பயலுக்கு வறுத்துக் கொடு எனக் கட்டளையிட்டார். அவன் ஒரு வாணலியை சூடேற்றி, நல்லெண்ணெய் விட்டு, மஞ்சள், மிளகு உப்பு போட்டு இன்ஸ்டண்டாக வறுத்துக் கொடுத்தான். உருகி ஓடிய கொழுப்புடன் சேர்ந்து மிளகு மனம் கமழ மூளைக் கறி நாக்கில் உருகி, தொண்டையைக் கடந்து, வயிற்றில் நிலை கொண்டது நினைவிருக்கிறது.
என்னிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே தன் வேலையில் மும்முரமாக இருந்த எம்பெருமாள், டவுன் பள்ளிக்கூடத்துல படிக்கிற, நல்லா மூளைய வளத்து , ஒரு டாக்டராவோ, கலெக்டராவோ வரணும் . அதான் உனக்கு மூளக் கறி கொடுத்திருக்கேன் கேட்டியா.. என்றார். பின்னர் ஒருகணம் யோசித்துவிட்டு, கலெக்டர் வேணாம்டா .. தண்ணி வரல, கரண்டு வரல்லன்னு ஒரே அக்கப்போரு .. நீ ஒரு நல்ல டாக்டரா வரணும். ஆபரேசனா பண்ணி அறுத்து எறியணும் பாத்துக்க எனக் கூறிவிட்டு, வெறித்தனமாக ஒரு கறித்துண்டை அறுத்து சட்டியில் வீசினார். வெகுளியான அந்த மனிதர்களை இன்று எண்ணிப் பார்த்தாலும் சிலிர்த்துப் போகிறேன்.
ஒரு பக்கம் பெரிய சமையல் நடந்து முடிந்திருந்தது. வரிசயாக பந்தியில் அமர்ந்து இலையில் பரிமாறினார்கள். சாப்பிட்டதும் இளைப்பாறினார்கள். ஒரு சில ஆடவர்கள் தூரத்தில் இருந்த ஒரு ஆலமர நிழலில் மதுப்புட்டியுடனும் சீட்டுக் கட்டுகளுடனும் ஒதுங்கி மறைந்தார்கள். மாலை ஆனதும் ஊர் திரும்ப ஆயர்த்தமானோம். மறுபடியும் அதே டிரெய்லர் இருக்கை. கிளம்பும்போழுதே லேசாக இருட்டத் தொடங்கி விட்டது. பின்னர் பாதி வழியில் ஒரு அடிகுழாய் அருகில் வண்டி நின்றது. ஹெட் லைட் வெளிச்சத்தில் முன்னே வட்டமாக அமர்ந்து, மீதமிருந்த உணவை இரவு உணவாக உண்டு , அடிகுழாயில் கைகழுவிக் கொண்டு புறப்பட்டோம். ஊர் வந்து சேர்ந்த பொழுது நான் நன்றாக தூங்கிவிட்டேன் போலும். மறுநாள் விழித்துப் பார்த்த பொழுது எங்கே இருக்கிறோம் என உணர ஒருசில நிமிடங்கள் தேவைப்பட்டது.
அந்த வயதில் சாலையில் ஒரு டிராக்டர் போனால், விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள் நாங்கள், அதன் பின்னாலே ஓடி, டிரைலரில் தொத்திக் கொள்வோம். யாராவது பெரியவர்கள் பார்த்து ´´ ஓடுற வண்டியில இப்படி ஏறுரீங்கலேடா .. விழுந்து கையக் கால ஒடச்சுக்காதீங்கடா எனத் திட்டுவார். உடனே நாங்கள் ´´ ஏ ... காத்தடிக்குது கமலடிக்குது தாத்தாவை தூக்கியடிக்குது... ஏ.... ´´ என்று எதையாவது கத்திக்கொண்டு ஓடுவோம். அவர் கடுப்பாகி, குரங்குப் பயலுகளா எனக் கத்தியவாறு கையில் பிரம்புடன் கொஞ்ச தூரம் விரட்டுவார்.
வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் நிறுத்தி வைக்கப் பட்ட டிராக்டரில் ஒரு செட்டாக பஸ் கண்டக்டர் விளையாட்டு விளையாடுவோம். எங்கள் டிராக்டர் என்பதால் கவுரவமான டிரைவர் சீட்டு எனக்குக் கிடைத்துவிடும். பின்னர் வளர்ந்து 12-14 வயதில் இந்த டிராக்டரை எப்படியாவது ஒட்டிவிட வேண்டும் என்கிற ஆசை தணலாக எரிந்து கொண்டிருந்தது. இதற்காகவே டிராக்டர் ஒட்டிக் கொண்டிருக்கும் எனது மாமாவிற்கு உதவியாக ஸ்பானர் எடுத்துக் கொடுப்பது, கிரீஸ் கன் எடுத்துக் கொடுப்பது, டிஸ்டில் வாட்டர் பாட்டில் எடுத்து வருவது, பின்னால் கழப்பை சரியாக பூட்டுண்டு விட்டதா எனப் பார்த்துச் சொல்வது போன்ற சில்லறை வேலைகளை வலிந்து செய்திருக்கிறேன். பல சமயங்களில் கொடுக்க மாட்டார். சில நேரங்களில் அவரது கடைக்கண் அருட்பார்வை பட்டு, உழவு முடிக்கிற வேளையில், அரை பாத்தியோ , கால் பாத்தியோ, கொஞ்ச நேரம் ஓட்டக் கொடுப்பார். அதுதான் நான் முதன் முதலாக இயக்கப் பயின்ற நான்கு சக்கர வாகனம்.
இதில் ஒரு எதார்த்தத்தைக் கவனித்தேன். புதிதாக வாங்கிய மாருதி 800 காரில் முதன் முதலாக குடும்பத்துடன் செல்வது இந்தப் பண்ணைக்குத்தான். வரும் வழியில் அந்தக் காரின் நேர்த்தி, தொழில்நுட்பம், சொகுசு குறித்து வியந்தவாறு ஓட்டிக் கொண்டு வந்தேன். வந்த இடத்தில் நான் முதன் முதாலாக ஓட்டிப் பழகிய வாகனத்தைப் பார்க்கிறேன். என்ன விந்தை இது?!
என்னதான் ஒய்யாரமாக மாருதி 800 வை ஓட்டிக் கொண்டு வந்தாலும், அன்றைக்கு வாழ்வைப் போராட்டமாகக் கொண்டிருந்த அந்த எளிமையான மனிதர்களின் தாக்கத்திலும் பராமரிப்பிலும் வளர்ந்ததுதானே எனது சிந்தனை, செயல், வாழ்க்கைதரம் எல்லாம் என்கிற உண்மை தோன்றி இனித்தது. அந்த கிராமியச் சூழலும், எதார்த்த வாழ்க்கை கொண்ட அதன் மனிதர்கலும், தந்த அனுபவங்கள்தான் என் வாழ்வில் நான் பெற்ற விலைமதிப்பற்ற பொக்கிசங்களாகக் கருதி நான் மகிழ்வது!
ட்ட்ரூஊஊஊம் ... ட்ட்ரூஊஊஊம் ... வழி.. வழி.... போகட்டும்... போகட்டும் .. ரைஐஐஐஐட்....
கோயம்முத்தூர் ...உடுமலைப்பேட்டை ...ஜல்லிபட்டி ...திருமூர்த்திமலை ....காளாஞ்சிப்பட்டி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக