வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

 கேள்வி : வாழ்க்கை இவ்வளவு அழகானதா என்று ரசித்த தருணம் எது?


என் பதில் :...

சமீபத்தில் ஒரு நபருடன் பேசும் வாய்ப்பு எனக்கு  கிடைத்தது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் பேசுகிறோம் என்று நினைக்கிறேன்.


ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட 5 மணி நேரங்கள் எங்களுடைய உரையாடல் தொடர்ந்தது. வெகு நாட்களுக்குப் பிறகு மனதில் ஏதோ ஒரு நிறைவு ஏற்பட்டது. ஒரு கன உணர்விலேயே இருந்த என்னுடைய மனம், இந்த உரையாடலுக்கு பிறகு இலகுவானது.


மனிதர்களை சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் எப்படியெல்லாம் மாற்றுகிறது.

மனிதனுடைய மனநிலை எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இடம் பொருள் ஏவலுக்கு தகுந்தார் போல, நிச்சயம் அது மாறவே செய்கிறது.

இன்று எனக்கு உயிராய் இருப்பது, நாளை வேண்டாததாய் மாறலாம். நான் வேண்டாம் என வெறுத்து ஒதுக்கியது, சில காலம் கழித்து தேவைப்படலாம்.

இன்று என் மனதை ஆட்கொண்டிருப்பவர் மனதை, வேறு யாரேனு எதிர்காலத்தில் கவரலாம். அவர் நம்மை விட முக்கியத்துவம் வாய்ந்தவராக மாறலாம்.

சூழ்நிலைகள்.


தேவைகள்.


சூழ்நிலைகளுக்கேற்ற தேவைகள்.


சூழ்நிலைகளுக்கேற்ற, தேவைகளுக்கேற்று முடிவுகள்.


முடிவுகளின் விளைவுகள்.


விளைவுகளின் பாதிப்புகள்.


பாதிப்புகளின் உணர்வுகள்.


இவை அனைத்தும் தான், ஒரு மனிதனின் இன்ப துன்பங்களை நிர்ணயம் செய்கிறது.


சூழ்நிலைகளைக் காரணம் காட்டி பிரிவு, முறிவு, கோபம், வெறுத்தல் என அனைத்தையும் ஒரு மனிதன் நமக்கு பரிசாக அளித்தாலும், அந்த உண்மையான உணர்வுகளுக்குத் தெரியும், நம் நினைவுகள் என்றும் கவிதைகள் தான் என்று😊😊😊…


ஒரு விடயம் வேண்டாம் என்பதற்கு தான் காரணம் தேவையேயன்றி, வேண்டும் என்பதற்கு காரணம் தேவையில்லை.


அது சூழ்நிலைகள், தேவைகள், முடிவுகள், விளைவுகள், பாதிப்புகள், உணர்வுகள் என அனைத்திற்கும் அப்பாற்பட்டு இருக்குமாயின், நிச்சயம் அதை நாம் அடைய முற்படுவோம்…

ஆனால் இவ்வுலகில் யாரும், இந்நிலைகளுக்கு அப்பாற்பட்டு இருப்பதில்லை என்றே நினைக்கிறேன்.

இந்த பதிவின் ஆழம் உங்களுக்கு புரிகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதை நான் உணர பல அனுபவங்களைக் கடந்து வந்துள்ளேன்.

(நானும் என்றேனும் உங்கள் நினைவுகளாய் மாறலாம். அன்று எழுதுங்கள் எனக்கு கவிதைகள்)

இப்படிக்கு

#####நினைவுகளின் கவிதைகள்😊..

இந்த புரிதல் எனக்கு ஏற்பட்டதை எண்ணி, இத்தருணம் வாழ்க்கையை ரசிக்கிறேன்.. 




கொங்கல் நகரம் ....

உடுமலை பகுதியில் சேதமாகும் வரலாற்று சின்னங்கள் : அகழ்வாய்வு செய்து பாதுகாக்க எதிர்பார்ப்பு...

உடுமலை அருகே பெருங்கற்காலத்தை சேர்ந்த வரலாற்று சின்னங்கள் விழிப்புணர்வு இல்லாமல், மக்களால் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் தொல்பொருள் துறையினர் அகழ்வாய்வு செய்து, பெருங்கற்கால சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மத்திய தொல்லியல் துறை மற்றும் தொல்பொருள் துறையினர் நடத்திய அகழாய்வில் பெருங்கற்காலத்தை சேர்ந்த கல்திட்டைகள், பானை ஓடுகள், முதுமக்கள் தாழி ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. பழங்கால வரலாற்றை கண்டறிவதில், இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. கொங்கு மண்டலத்தில் இதுபோன்ற சின்னங்கள் அரிதாகவே கண்டறியப்பட்டுள்ள நிலையில், உடுமலை அருகே கொங்கல் நகரம் பகுதியில், பெருங்கற்காலத்தை சேர்ந்த வரலாற்று சின்னங்கள் விழிப்புணர்வு இல்லாமல் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன.

கிராம மக்களால் மசராயப் பெருமாள் என அழைக்கப்படும் கோவில் அருகில் நூற்றுக்கணக்கான கல்திட்டைகள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன.இவ்வாறு, நூற்றுக்கணக்கான கல்திட்டைகள் பெரியளவில் நடந்த போரில் இறந்தவர்களுக்காக ஒரே இடத்தில் அமைக்கப்படுவதுண்டு. கல்திட்டைகளின் வரலாறு தெரியாமல் படிப்படியாக சிதைக்கப்பட்டுள்ளது. அமைப்பின் நான்கு பகுதிகளிலும் இருக்கும் பெரியளவிலான கற்கள் உடைக்கப்பட்டு, மசராயன் கோவில் சுற்றுச்சுவருக்கும், இதர பணிகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் மக்களால் "பாண்டி வீடு' என அழைக்கப்படும் இந்த கல் திட்டைகள், அதன் முக்கியத்துவம் தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளன. கல்திட்டைகளில் புதைக்கப்படும் பழங்கால மண் பானைகள் ஏராளமாக இப்பகுதியில் கிடைத்துள்ளன. அவற்றை பயன்படுத்தினால் பிரச்னை ஏற்படும் என்ற மூடநம்பிக்கையால் பல முதுமக்கள் தாழிக்கள் இப்பகுதியில் உடைக்கப்பட்டுள்ளன. தற்போதும், ஒரு சில பணிகளுக்காக இப்பகுதியில் மண் எடுக்கும் போது, முதுமக்கள் தாழிக்கள் கிடைக்கின்றன. கறுப்பு, சிவப்பு நிறத்துடன் அழகிய வரிகளுடன் காணப்படும் இந்த பானைகள் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதாகும். நூற்றுக்கணக்கான கல் திட்டைகள் உடைக்கப்பட்ட நிலையில், தற்போது கொங்கல் நகரம் பகுதியில் 10க்கும் குறைவானவையே உள்ளன.முதுமக்கள் தாழிக்களும் உடைக்கப்பட்டு, சிறிய ஓடுகள் மட்டும் காணப்படுகின்றன. மசராயன் கோவிலின் பின்பக்கத்தில் காணப்பட்ட சுரங்கம் போன்ற சிறிய அமைப்பும் மண் மேடாக மாறியுள்ளது.

கொங்கு மண்டலத்தில் பெருங்கற்காலம் குறித்த வரலாற்று சின்னங்கள் குறைந்தளவு கிடைத்துள்ள நிலையில், இப்பகுதியில் மன்னர்கள் காலத்தில் பெரியளவிலான போர் நடந்ததற்கான வரலாற்று சின்னங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நூற்றுக்கணக்கான கல்திட்டைகள் ஒரே இடத்தில் இருந்த கொங்கல் நகரத்தில் தொல்பொருள் துறையினர் அகழ்வாய்வு நடத்தி தகவல்களை சேகரித்தால் கொங்கு மண்டலத்தின் வரலாறு குறித்த தெளிவு கிடைக்கும். மசராயன் கோவில் ஆய்வு தேவை: கல்திட்டைகள் அருகிலுள்ள மசராயன் எனப்படும் கோவிலும் வரலாற்று சின்னமாகவே உள்ளது. போரில் இறந்த மன்னன் அல்லது வீரன் நினைவாக அவனது பெயரை வெளிக்காட்டும் வகையில் "மாசு மருவில்லா வீரன்' என்ற பெயரில், இந்த கோவில் கட்டப்பட்டிருக்கலாம். காலப்போக்கில் அது மசராயன் என மருவியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த கோவிலிலும் சுற்றுப்பகுதிகளிலும் ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

புதிராக உள்ள கல்திட்டை, முதுமக்கள் தாழி: கொங்கல் நகரம் கிராமத்தில் கல்திட்டைகள், முதுமக்கள் தாழி போன பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட மிகச்சிறந்த வரலாற்று சின்னம் எந்த தகவலையும் அளிக்காமல் புதிராக காணப்படுகிறது. மசராயன் கோவிலுக்கு சேர்ந்ததாக கூறப்படும் நிலத்தில், 20 அடி உயரத்தில் மிகப்பெரிய கல் கம்பீரமாக காணப்படுகிறது. பாதி உயரம் மண்ணில் புதைந்து காணப்படும் இந்த கல், இப்பகுதியை ஆண்ட பாளையக்காரர்களின் நடுகல் அல்லது அதற்கு முந்தைய மன்னர்கள் காலத்தின் நடுகல்லாகவும் இருக்கலாம். உப்பாறு படுகை எனப்படும் குடிமங்கலம் பகுதியில் அமைந்துள்ள கொங்கல் நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் எந்த மலை தொடரும் இல்லை. இந்நிலையில், இதுபோன்ற உயரமான கல் பிற பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டு நடப்பட்டிருக்கலாம். கல்திட்டைகள் அமைந்துள்ள பகுதியில் இந்த கல் காணப்படுவதால், இப்பகுதியை ஆண்ட மன்னரின் நடுகல்லாகவும், இதன் அருகில் முதுமக்கள் தாழி, ஈமத்தொட்டி ஆகியவை இருக்க வாய்ப்புள்ளது. உள்ளூர் மக்களிடையே இந்த கல் குறித்து பல்வேறு கதைகள் உலவி வருகிறது. இந்த கல் அமைந்துள்ள பகுதியிலும் அகழ்வாய்வு மேற்கொண்டால், பல்வேறு வரலாற்று சின்னங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

அழிந்து வரும் வரலாற்று சின்னங்கள்: கடந்த சில ஆண்டுகளுக்குள் உப்பாறு படுகை எனப்படும் குடிமங்கலம் பகுதியில், பல்வேறு வரலாற்று சின்னங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. குடிமங்கலம் நால்ரோட்டில் காணப்படும் கல்வெட்டு, பல்வேறு மன்னர்கள் மற்றும் பாளையக்காரர்களின் நடுகல் சிற்பங்கள் பராமரிப்பு இல்லாமல் அழிந்து வருகின்றன. கொங்கல் நகரம், சோமவாரப்பட்டி ஆகிய பழமையான கிராமங்களில் உள்ள கோவில்களிலும் பல்வேறு ஆதாரங்கள் பராமரிக்கப்படுவதில்லை. வரலாற்று சின்னங்களை பாதுகாத்து, பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

கொங்கல் நகரத்தில் ஆய்வு தேவை: இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் கூறுகையில், கற்களால் உருவாக்கப்பட்ட வீடுகள், ஆயுதங்கள், பாறை ஓவியங்கள், குகைகள் மற்றும் இறந்தவருக்கு கற்களால் கல்லறைகள் அமைத்தது மற்றும் மண்ணாலான பானைகள் பயன்படுத்தப்பட்ட காலமே பெருங்கற்காலம் எனப்படுகிறது. மன்னராட்சிக்கு முந்தைய காலங்கள் மற்றும் வனத்தை சார்ந்து மட்டும் மக்கள் வாழ்ந்தது பெருங்கற்கால நாகரிகம் எனப்படுகிறது. உடுமலை பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையில் உடுமலை அருகே மூணாறில் குகைகளில் மனிதர்கள் வாழ்ந்ததற்கு ஆதாரமாக பாறை ஓவியங்கள், முதுமக்கள் தாழி, பழங்கால கல் வீடுகள், கல்திட்டைகள் மற்றும் வனவிலங்குகள் வேட்டைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் என, வரலாற்று சான்றுகள் பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொங்கல் நகரம் பகுதி கி.மு., 1,800 ஆண்டுகளில் இப்பகுதியில் முதுமக்கள் வாழ்ந்ததும், பல்பொருள் வணிகத்தில் இப்பகுதி சிறந்து விளங்கியதற்கான சான்றுகளும் காணப்படுகிறது. கொங்கல் நகரம் கிராமம் உப்பாறு படுகையிலும், கேரள மாநிலத்திற்கான ராஜபாட்டை எனப்படும் பெருவழித் தடத்திலும், சோமவாரப்பட்டி என மருவியுள்ள சோமவாரப்பட்டணம் எனப்படும் வணிக தலத்தின் அருகிலும் அமைந்துள்ளது. பெருங்கற்காலம் மற்றும் அதன் தொடர்ச்சியான மன்னர்கள் ஆட்சி, பாளையக்காரர்கள் ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், நடுகற்கள் கொங்கல் நகரம் பகுதியில் உள்ளது. வரலாற்று சின்னங்களை முழுமையாக அகழ்வாய்வு செய்வதால், இப்பகுதியின் தொன்மை தெரிய வரும்' என்றார்.

நன்றி ..தினமலர் ...

 கேள்வி : வாழ்க்கை உங்களுக்குக் கற்பித்த மிகப்பெரிய பாடம் எது?


என் பதில் :..இதற்கு பதில் .என் நண்பரின் தம்பியிடம் பேசிய போது கிடைத்த 

போட்டி தேர்வுகள்...நம்பிக்கையூட்டும் பதிவு...💯

நன்றி: பிரசன்னா ச... அவர்களே!!!வங்கி துணை மேலாளர்


March 31 2018... IBPS PO result நாளை என அறிவித்தது.... அன்று இரவு முழுக்க அண்ணனிடம் இருந்து "டேய் Exam நல்லா தான பண்ணிருக்க? interview ல சொதப்பலயே?" என phone callகள்...இந்த சமூகம் ஜெய்கிறவன தான் நியாபகம் வச்சிக்கும் னு நல்லா தெரியும் அவனுக்கு..அந்த பயத்தின் வெளிப்பாடே இந்த அழைப்புகள்.. என்ன விட அவனுக்கு பதட்டம் அதிகமா இருந்தது....அன்று இரவு

கீழ்பாக்கத்தில் உள்ள நண்பன் வீட்டுக்கு சென்றுவிட்டேன்.... ஆனாலும் மனசு முழுக்க result பத்தின யோசனை தான்...

"உன்னால முடியாது டா இதெல்லாம்..."

"பேசாம IT லயே இரு இப்பல்லாம் வேலை கிடைக்கிறதே கஷ்டம் ..."

"Bank exam க்கு அவனவன் 3,4 வருஷம் படிச்சிட்டி இருக்கான்... அவங்களே இன்னும் செலக்ட் ஆகல"... என என்னை சுற்றி எல்லாரும் பேசியது repeat mode இல் ஓடிக்கொண்டிருக்கிறது... எல்லாரும் சொல்ற மாறி இவன்ஆயுடுவானோ னு அம்மாக்கு கவலை.. ஆனால் அந்த நேரத்திலும் ஒரு மனுஷன் "தம்பி நீ கண்டிப்பா select ஆவ...நிம்மதியா தூங்கு"னு சொன்னாரு... அவரு தான் என் அப்பா😘


அடுத்தநாள் April 1... காலை 11.30 மணிக்கு result என link update ஆனது... நேற்று வரை நிதானமாக இருந்த மனசு ஒருகணம் தடுமாறியது... மச்சா இங்க உப்புமா டா வா சாப்டலாம் என கூப்பிட... அப்போது மணி 9.45... அடுத்த அரை மணி நேரம் நண்பர்களுடன் கல்லூரி நாட்களை பற்றி ஜாலியாக பேசிக்கொண்டிருந்தோம்...

திடீரென whatsapp group இல் அழைப்பு

Result came என்று ஆனால் அப்போது மணி 10.30 ..அடுத்த 5 நிமிடத்தில்

" மச்சா Bank of India ல selected டா..."

நா Allahabad bank நா corporation bank என message கள் பறந்தன...எல்லாரும் 4 to 5 வருடம் bank exam try பண்ணியவர்கள்...

என்னுடைய batch mates யாருடைய msg ம் அதில் இல்லை ... சற்றே நம்பிக்கை இழந்து போனேன்... ரூமில் ஒரு cot இல் ஓரமாக 5 நிமிஷம் யாரிடமும் சொல்லாமல் பொறுமையா website page இல் reg number ஐ பயத்துடன் type செய்தேன்..

கீழே Submit பட்டனை நோக்கி விரல் போக... ஒரு வருடம் சரியான தூக்கம் இல்லாம...நேரத்துக்கு சாப்பிடாம உக்காந்து கஷ்டப்பட்டது எல்லாம் கண் முன் rewind ஆகிறது... Rural bank interview யில் சொதப்பி merit list இல் என் பெயரை தவறவிட்ட நொடிகள் என் முன் நகர்கிறது..

7 முறை final list இல் பெயர் இடம் பெறாத வலி banking படித்தவனுக்கு மட்டும்தான் தெரியும்... அது 8வது முறை... கனத்த இதயத்துடன் விரல்கள் பட்டனை அழுத்தியது... Page ஓபன் ஆனது...

மூன்று வினாடிகள் "உனக்கு எதுக்குடா இந்த risk லாம் " "இதெல்லாம் கஷ்டம் டா பேசாம IT லயே இரு" என திரும்ப திரும்ப ஓட ஒருகட்டத்தில் இதுக்கு மேல எப்டி தான் டா படிக்கிறது என கண்கள் கலங்கியது... இன்னமும் result என்னவென பாக்க மனசு வரல... ஒரு கட்டத்தில் கண்களை திறந்து பார்க்க....🎉🎉🎉 CANARA BANK 🎉🎉🎉

என்பது மட்டும் தெரிந்தது... அவ்வளவு தான்.. பக்கத்தில் இருந்த செவுற்றில் ஓங்கி அடிக்க ஆரமித்தேன்...ஒவ்வொரு அடிக்கும் "இனிமேல் என்னால முடியாதுன்னு சொல்லுவீங்களா டா ..எனக்கு maths வராதுன்னு சொல்லுவீங்களடா" னு மனதில் ஓடிக்கொண்டிருந்தது... சத்தத்தைகேட்டு எல்லாரும் டேய் என்னடா ஆச்சி என சற்று பயந்தே போனார்கள்...

முதலில் அம்மாக்கு phone செய்தேன்.. ம்மா Canara bank மா என்றேன்..." டேய் result 11.30 க்கு தான் னு அண்ணா சொல்லிட்டான் april fool பண்ற நேரமாடா இது... நானே result என்ன ஆகுமோ னு பயந்துட்டு இருக்கேன் என்றவளிடம் நா என்னத்த சொல்ல😋😋...ஒரு கட்டத்தில் result தெரிந்ததும் அம்மக்களுக்கே உரிதான ஆனந்த கண்ணீர் தான்... சிறிது நேரத்தில் அப்பா விடம் இருந்து கால்...

அப்பா....

அவர் தம்பி என்றதும் தேம்பி தேம்பி அழ ஆரமித்தேன்...எப்போதும் உனக்கு merit list ல தான் கிடைக்கும் னு சொல்லிட்டே இருப்பாரு... இப்ப அவருக்கு ரொம்ப சந்தோஷம்...


" வாழ்க்கைல ஜெய்கனும்'னா கொஞ்ச காலம் செவுடனா இருக்கனும்"


நன்றி ...

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

வீடு வாங்கியவுடன் நீங்க செய்ய வேண்டிய முக்கியமான வேலை இதுதான்..!

வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தைச் செய்து பார் என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள். இந்த இரண்டுமே நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. ஆனால் நடைமுறையில் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

சரி கஷ்டப்பட்டு ஒரு வீட்டை வாங்கிவிட்டோம். அதன் பின்னர்ச் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகள் என்ன என்பது குறித்துப் பலருக்குத் தெரிந்திருக்காது. எனவே வீட்டை வாங்கியவுடன் உடனே என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்துத் தற்போது பார்ப்போமா!!

பத்திரத்தைப் பத்திரமாக வைக்க வேண்டும்:

ஒரு வீட்டின் பத்திரம் என்பது மிகவும் முக்கியமானது. அதனால்தான் அதற்குப் பத்திரம் என்றே நம் முன்னோர்கள் பெயர் வைத்துள்ளனர். மேலும் பத்திரத்தின் ஒரிஜினலை தேவைக்கேற்ப இரண்டு அல்லது மூன்று ஜெராக்ஸ் காப்பிகள் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். ஒருவேளை நீங்கள் வீட்டின் மேல் வங்கி லோன் வாங்குகிறீர்கள் என்றால் வங்கிக்கு ஒரிஜினலை சமர்ப்பிக்கும் முன்னர்த் தேவையான காப்பிகளை எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியமானது.

டிஜிட்டல் மயத்திற்கு மாற்றுங்கள்:

இப்போது உலகமே டிஜிட்டல் மயத்திற்கு மாறிய பின் உங்கள் டாக்குமெண்ட் மட்டும் டிஜிட்டலில் மாறாமல் இருக்கலாமா? முதல் காரியமாகப் பத்திரத்தை ஸ்கேன் செய்து கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் ஒரு காப்பியை வங்கி லாக்கரில் வைத்துக் கொள்ளலாம். ஜெராக்ஸ் காப்பி நாளடைவில் மங்கிவிடும். ஆனால் டிஜிட்டல் காப்பி உங்கள் தலைமுறைக்கும் ஃப்ரஷ் ஆக இருக்கும்.

வீட்டு லோன் வாங்கும் முன் என்ன செய்ய வேண்டும்:

வீட்டு லோன் வாங்க முடிவு செய்துவிட்டால் வங்கி கேட்டிருக்கும் அனைத்து டாக்குமெண்ட்களையும் தவறாமல் சமர்ப்பிக்கவும், ஒவ்வொன்றாகச் சமர்ப்பிக்க வேண்டாம். மொத்த டாக்குமெண்ட்களும் தயாரானதும் சமர்ப்பியுங்கள். ஆனால் அதற்கு முன்னர் அனைத்து முக்கியமான டாக்குமெண்ட்களையும் தேவையான காப்பிகளை எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். வங்கியிடம் நீங்கள் லோன் ஒப்பந்தம் போடும் முன் இவைகளைச் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்டர்மார்க் மிகவும் அவசியம்:

ஒரு வீட்டை வாங்கி முடித்தவுடன் உடனே நாம் செய்ய வேண்டிய அடுத்த வேலை வீட்டின் சொத்துவரியில் உள்ள பெயர் மாற்றம், மின்சாரக் கனெக்ஷனில் உள்ள பெயர் மாற்றம் ஆகியவற்றைச் செய்யவேண்டும். இதற்கெனச் சில ஏஜண்டுகள் இருக்கின்றனர். ஆனால் அவர்களை அணுகும்போது அடோப் ரைட்டரில் வாட்டர் மார்க் செய்யப்பட்ட காப்பிகளை மட்டும் கொடுக்கவும். ஒரிஜினலை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து ஏஜண்டுகளிடம் கொடுத்தால் அதை அவர்கள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உண்டு. எனவே சுதாரிப்பாக இருந்து கொள்ளுங்கள்

இதையும் நீங்கள் கண்டிப்பாகச் செய்யணும்:

ஒரு வீட்டை வாங்கி முடித்ததும் டயர்டு ஆகி ஓய்வு எடுக்கத் தொடங்கிவிடக்கூடாது. வீட்டுப் பத்திரம் கைக்கு வந்தவுடன் நீங்கள் அந்த வீட்டின் முக்கியமான டாக்குமெண்டுகளை உங்கள் பெயருக்கு மாற்ற வேண்டும் குறிப்பாகத் தண்ணீர் கனெக்ஷன், எலக்ட்ரிக் கனெக்ஷன், சொத்து வரி பெயர் மாற்றம், பட்டா பெயர் மாற்றம் மற்றும் என்.ஓ.சி ஆகியவற்றைப் பெயர் மாற்றம் செய்ய வேண்டியது மிகவும் முக்கியம்.

வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டும்:

வீடு வாங்கியவுடன் பத்திரம் உங்கள் பெயருக்கு மாறியவுடன் புதிய வீட்டின் முகவரியை உங்கள் அனைத்துச் சான்றிதழ்களிலும் மாற்றிவிட வேண்டும். குறிப்பாகச் சொத்துவரி, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வங்கி பாஸ்புக், ரேஷன் கார்டு, மற்றும் உங்களிடம் உள்ள அனைத்து முக்கிய ஆவணங்களிலும் புதிய முகவரி இருக்கும்படி மாற்றம் செய்யுங்கள். இது சின்ன வேலைதானே என்று அசால்ட்டாக இருந்துவிட வேண்டாம். இது மிகவும் அவசியமானது என்பதை நீங்கள் பின்னால் உணர்வீர்கள்

குடியிருப்பாளர்கள் சங்கத்திலும் பெயர் மாற்றம்:

நீங்கள் வீடு வாங்கிய பகுதியில் குடியிருப்பாளர்கள் சங்கம் இருந்தால் உடனே அதில் உங்கள் வீட்டின் ஜெராக்ஸ் காப்பியை கொடுத்து இணைந்துவிடுங்கள். சங்கத்தின் நிர்வாகிகளிடம் இதுகுறித்த மேல்விபரங்களைக் கேட்டு இதையும் செய்துவிட்டால் அவ்வளவுதான் உங்கள் வேலை முடிந்தது. அப்பாடா!!! இப்போது புரிகிறதா முதல் லைனில் உள்ள வீட்டை கட்டிப்பார்! என்ற பழமொழியின் அர்த்தம்.

சிவக்குமார்..V.K..
வீட்டு கடன் பிரிவு
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர்
அழைப்பு எண் :9944066681..
.WHATSAPP.. :9944066681
Email:siva19732001@gmail.com

Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs)

Coimbatore,Pollachi, Udamalpet
 — in Udumalaippettai.

புதன், 5 ஆகஸ்ட், 2020

கேள்வி : ஒரு வீட்டை சொந்தமா வாங்குவதற்கு நீங்கள் என்ன ஆலோசனை வழங்குவீர்கள்?

என் பதில் :

சரியான இடத்தில் சரியான இடத்தில் வீட்டை தேர்வு செய்யுங்கள். அதை வாங்குவதற்கு குறைந்தது 60 லிருந்து 70 சதவிகிதம் பண வசதியை ஏற்படுத்திக் கொண்டு 30 சதவீதத்திற்கு கடன் வாங்குங்கள் .

முடிந்தவரை நீங்கள் வேலை செய்யும் இடத்திற்கு அல்லது உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு அருகாமையில் அல்லது உங்கள் துணைவியார் பணிபுரியும் இடத்திற்கு அருகாமையில் அமைவது நல்ல பலனைத் தரும் .

 வாழ்க்கை துணை மற்றும் இரு குழந்தைகள் கொண்ட நான்கு பேருக்கு ஆயிரம் சதுரடி இருந்தால் போதுமானது. நல்ல காற்றோட்டம் தண்ணீர் மற்றும் உடன் குடியிருக்கும் குடியிருப்போர் நல்லவராக இருப்பின் 10 சதவீதம் வரை வீட்டின் விலை உயர்த்தி வாங்கலாம்.

சிவக்குமார்.V.K.
வீட்டு கடன் பிரிவு
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர்
அழைப்பு எண் :9944066681..
.WHATSAPP.. :9944066681
Email:siva19732001@gmail.com

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

கேள்வி : பெனிட்டிரேஷன் டெஸ்டிங் (penetration testing) என்றால் என்ன?

சற்று விரிவாகக் கூறுங்கள்.

என் பதில் :..

பெனிட்ரேசன் டெஸ்டிங்கிற்கு முன்னாடி நாம தெரிஞ்சுக்க வேன்டிய விஷயம் சில இருக்கு.

வழக்கமா உங்களுக்கு முக்கியமான பொருட்களை எங்க வைப்பீங்க? அது பாதுகாப்பான இடத்துல இருக்குதான்னு எப்படி உறுதி செய்வீங்க?

டிவி, பிரிட்ஜனா வீட்டுல வைப்போம். காசு, பணம்னா பேங்க்ல வைப்போம். ஒரு வேளை தங்க நகையா இருந்தா இரும்புப் பெட்டியில வைப்போம். முக்கியமா எல்லாத்தையும் பூட்டி வைப்போம்.

உறுதி தானே, பூட்ட ஒரு தடவை இழுத்துப் பார்ப்போம். கதவா இருந்தா, அதை ஒரு தடவை தள்ளியோ இழுத்தோ பார்ப்போம்.

அதெல்லாம் சரி தான். ஆனால் இந்த பேங்க் அக்கவுண்ட்ல இருக்கற பணம் பத்திரமா இருக்கானு எப்படி தெரிஞ்சுக்கறது?

அவங்களும் பெரிய பூட்டா போட்டு பூட்டி வெச்சிருப்பாங்க. லாக்கர் வசதிகள் இருக்கும்.

தொழில்னுட்பம் வளர வளர நம்முடைய விரல் அசைவில் எல்லாப் பணத்தையும் வேற ஒரு அக்கவுண்டுக்கு மாற்ற முடியும்.

என்ன தம்பி ரொம்ப லென்த்தா போறீங்க, இதுக்கும் பென் டெஸ்டிங்கிற்கும் என்ன சம்பந்தம்?

உங்கள் கடவுச்சொல் தெரியாமலும், உங்கள் வங்கிக் கணக்கைப் பார்க்கவும், பணப் பரிமாற்றம் செய்யவும் முடியும். வங்கி மட்டுமில்லை, நீங்கள் இணையத்தில் செய்யும் அத்தனையையும் கவனிக்க முடியும். ஹிஸ்டரியில் போய் கிலியர் செய்தால் எல்லாம் போய்விடும் என்று நினைக்க வேண்டாம்.

ஒரு இணையதளம் அல்லது ஒரு செயலி இருக்கிறதென்றால், அதனுடைய பாதுகாப்பு அம்சங்களை சோதனை செய்யும் ஒருமுறை தான் பென் டெஸ்டிங்க்.

இந்த சோதனையின் முடிவில், உங்கள் இணையதளம், அல்லது செயலியில் எங்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது என்பதனை கண்டறியலாம்.

உதாரணமாக, சாப்ட்வேர் அப்டேட் செய்யப்படாத கருவிகள், தேவையில்லாமல் திறந்து இருக்கு போர்ட்டுகள், எந்த அணுக்கமும்‌ கேட்காமல் இயங்கும் சார்வீஸ்கள் போன்ற பெரிய லிஸ்ட் வரும்.

அதன் பிறகு அங்கு என்ன வகையான தரவு உள்ளது, அதன் மதிப்பு என்ன, அதை மாற்ற முடியுமா என்று ஆராய்வது.

இந்தியாவின் முக்கிய தரவான ஆதார் தகவல்கள் திருடப்பட்டது இந்த பென் டெஸ்டிங்க் செய்யாமல் விட்டதால் அல்லது சரியாக செய்யாமல் விட்டது தான்.

"எதிரியை எப்போதும் குறைத்து எடைபோடாதே, உன்னுடைய பலவீனம் என்பதையும் தெரிந்து கொள்" என்ற தத்துவமே பென் டெஸ்டிங்க்.

எடுத்துக்காட்டாக, Nessus (Nessus Product Family) என்ற இக்கருவியை நம் வலைத்தளத்தின் மீது ஏவினால், நம் வலைப்பக்கம்  தளத்தின் அத்தனை பலவீனத்தையும் பட்டியலிட்டு விடும்.

இதையெல்லாம் சரி செய்துவிட்டால், நாம் பாதுகாப்பாக இருப்போமா? நிச்சயமா சொல்ல முடியாது, ஆனால் இரண்டாவது பூட்டு போட்டது போல தான்.


வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு.இது தொழில்நுட்பம் உலகம் ...

நன்றி ...
கேள்வி : மிக உயர்ந்த ஆறுதலையும் அமைதியையும் அளிக்கிற வாழ்க்கை தத்துவம் எது?

என் பதில் :.

எது தேவையோ அதுவே தர்மம்….😊

நேற்று ஆரண்ய காண்டம் என்னும் ஓர் அற்புதப் படைப்பைக் கண்டேன். இத்திரைப்படத்தைக் கண்டதும் மனிதர்கள் மீதான பார்வை எனக்கு முற்றிலுமாக மாறியது. நானும் பலமுறை பல மனிதர்களைக் கண்டு, இதை ஏன் இவர்கள் தேவையின்றி செய்து கொண்டிருக்கிறார்கள், இதனால் இவர்களுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது என்றெல்லாம் பல விடையங்களை நினைத்து வெகுண்டிருக்கிறேன். இந்த திரைப்படத்தின் மூலம் அதற்குண்டான பதில் எனக்கு கிடைத்தது.

மனிதர்களாக பிறந்த அனைவருமே தத்தம் ஏதோ ஒரு செயல்களை செய்து கொண்டிருக்கிறோம். இதில் ஒரு சிலர் செய்யும் செயல்களைக் கண்டு, மற்றொருவர் தவறாகவும் இழிவாகவும் பேசியிருக்கிறோம்.

எடுத்துக்காட்டாக, மனிதர்களை நல்லவர்கள் கெட்டவர்கள் என பிரித்துக் கொள்வோம். இல்லை, நல்லவர்கள் போன்று நடிப்பவர்கள். கெட்டவர்களாக உண்மையாய் இருப்பவர்கள் என வைத்துக்கொள்வோம். தன்னை நல்லவர்களாக நினைப்பவர்கள் தீயவர்களை வசை பாடுவார்கள் இவர்கள் இப்படி இருக்க கூடாது அப்படி இருக்க கூடாது கொடியவர்கள் பயங்கரமான தண்டனை அளிக்க வேண்டும் என்றெல்லாம் கோபப்படுவார்கள்.

ஆனால் கொலை செய்பவன் கற்பழிப்பவன் தீவிரவாதி என பலதரப்பட்ட கெட்ட விடயங்களை செய்பவனுக்கு அது தவறு என தெரியும் அல்லவா? இருந்தாலும் அதை ஏன் அவன் தொடர்ந்து செய்கிறான் என்று நீங்கள் நினைத்துள்ளீரா?

எளிமையாகக் கூற வேண்டும் என்றால், உங்களுடைய ஏதோ ஒரு தேவை நீங்கள் செய்யும் செயல் மூலம் கிடைக்கிறது. அவனுடைய ஏதோ ஒரு தேவை அவன் செய்யும் செயல் மூலம் கிடைக்கிறது அவ்வளவுதான் வித்தியாசம். இதுபோன்று ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு தேவை இருக்கும். அந்த தேவைக்கு ஏற்றார் போல அவனுடைய செயல்பாடுகள் இருக்கும் அவ்வளவுதான்…
இதை நாம் புரிந்துகொண்டால், யாரைப் பற்றிய தவறான பிம்பமும் நம் மனதில் எழும்பவே எழும்பாது.
பசியால் வாடுபவனுக்கு சோறு தேவை.
பணக்காரனுக்கு நிம்மதி தேவை.
Engineer-களுக்கு வேலை தேவை.
கற்பழிப்பவனுக்கு காமம் தேவை.
கொலை செய்பவனுக்கு வஞ்சம் தீர்த்தல் தேவை.
சோம்பேறியாய் இருப்பவனுக்கு சுகம் தேவை.
(#எனக்கு_என்னுடைய_யூடியூப்_சேனலுக்கு_Subscribers_தேவை.😅)
இதுபோன்று ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு தேவை இருக்கிறது. அதற்கேற்றவாறு அவன் செய்யும் செயல்களை தர்மமாக மாற்றிக் கொள்கிறான்…
எது தேவையோ அதுவே தர்மம்😊..
நமது தேவைகளே அனைத்தையும் தீர்மானிக்கின்றது…
Yuvan God of BGM
https://youtu.be/E1GkdjarAWQ

கேள்வி : ஒருகாலத்தில் நகைப்பாக கருதப்பட்ட எந்த தொழில் இப்பொழுது மதிக்கப்படுகிறது?

என் பதில் :..

1)முன்பெல்லாம் வீடு வாடகைக்கு பிடித்துக் கொடுப்பதற்கோ, விற்பனைக்கோ புரோக்கர்கள் எனப்படும் இடைத் தரகர்கள் பெரிதும் இருந்தனர்.

வாங்குபவர், விற்பவர் என ரெண்டு தரப்பிலும் கமிஷன் பெற்றுக் கொள்வார்கள் என்பது ஊரறிந்த ரகசியம். சமூகத்தில் இவர்களை ஒரு வித வெறுப்புணர்வுடனே பார்த்து வந்தனர்.

இப்பொழுதெல்லாம் வீடு வாடகைக்கு பார்க்க, சகட்டு மேனிக்கு இணைய தளங்கள் வந்து விட்டன. அதில் நம் பட்ஜெட்டுக்கேற்ப, விருப்பத்துக்கேற்ப, வீடுகள் கிடைக்கிறது.

புரோக்கர் செய்த வேலையை தான் இந்த தளங்கள் செய்கின்றன. ஒரே வித்யாசம், வாடகைக்கு செல்பவர் பணம் கட்ட தேவையில்லை என்று எண்ணுகிறேன். சில தளங்களில் வரும் பயனர் அனுபவத்தை வைத்தே, அந்த தளத்தின் மதிப்பு உயர்கிறது.

வீடு வாங்க விழைபவர்களுக்கு அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், மிக தெளிவாக ஒவ்வொரு கட்டமாக நமக்கு விளக்கி, வழி நடத்திச் செல்வார்கள். ரியல் எஸ்டேட் ஏஜென்ட் ஆவதற்கு லைசென்ஸ் மற்றும் தனியாக சான்றிதழ் படிப்பு ஒன்று படித்திருக்க வேண்டும்.

வாங்கும் நம்மிடம் ஒரு டாலர் கூட வசூலிக்க மாட்டார்கள். விற்பவர் தான் கமிஷன் தர வேண்டும். மாதம் ரெண்டு வீடு விற்றாலே தினமும் காலை உணவோடு கேசரியும் சாப்பிடலாம்.

2) முப்பது வருடங்களுக்கு முன்னால், திருமணங்கள் கல்யாண தரகர் தயவில் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டன.

இந்த தரகர்கள் ஜிப்பா அணிந்திருப்பார்கள், கையில் வெத்தலை பெட்டியுடன் ஜோல்னா பையில் பெண்/பையன் பற்றிய தகவல்களுடன் சுற்றுவார்கள் என படங்களில் ஒரு நகைப்புக்கிடமான வகையில் காட்டுவார்கள்.

எந்த தரகர் விட்ட சாபமோ… இப்பொழுதெல்லாம் பையனை பெற்றவர்கள் தான், மேட்ரிமோனி தளங்களுக்கும், அதன் அலுவலகங்களுக்கும் காவடி எடுக்க வேண்டியுள்ளது. இதுல கட்டும் பணத்துக்கேற்ப, பல ஸ்கீம்கள் வேற.

பிளாட்டினம் - பெண்ணின் வாட்ஸப் நம்பர் மற்றும் டிக் டாக் வீடியோவையே காட்டுவோம்.
கோல்டு - பெண்ணின் தங்கை நம்பர் கிட்டும்.
சில்வர் - பெண்ணின் அம்மா வாட்ஸப் நம்பர் தான் இருக்கு.
ஈயம் - பொண்ணு சென்னையில தான் இருக்கு, முடிஞ்சா கண்டுபிடிச்சுகோ!
பித்தளை - தமிழ் நாட்டுல ஏதோ ஒரு ஊருல பொண்ணு இருக்கு, ஒரு வெத்தலையும், மை டப்பாவும் தருவோம். நீ தான் கண்டுபிடிக்கணும்.

இரும்பு: ஏழு கடல், ஏழு மலை தாண்டி ஒரு குகைக்குள்ளே பொண்ணு இருக்கு. ஓசில படம் பாக்கலாம்னு மேட்ரிமோனி அக்கவுண்ட் திறந்த உனக்கெல்லாம் நம்பர் தர முடியாது. ஓடிப் போயிடு! என்று மனசாட்சியே இல்லாமல் மெசேஜ் அனுப்புகிறார்கள் என்று ஒரு 90ஸ் Kid மூக்கை சிந்தியது.

இப்பொழுதெல்லாம் விடுமுறைக்கு ஊர் பக்கம் சென்றால், நம்மை நைசாக தள்ளிக் கொண்டு போய், கழுத்தில் கத்தி வைக்காத குறையாக, "அட்லாண்டாவில் தெரிந்த பொண்ணு/பையன் இருந்தா சொல்லு! " என்று நாலு மேட்ரிமோனி ஐடி தந்து விடுகிறார்கள்.

"ஒன்னும் கவலைப்படாதீங்க, நல்ல பையனை, அந்த செந்தூர் ஆண்டவன், உங்க கண் முன்னாடியே நிக்க வைப்பான்! " என்று நான் யதார்த்தமாய் ஆறுதல் சொல்ல நினைத்தாலும், சமூகம் எக்குத்தப்பா நினைக்குமே? என்று கப்சிப்பாக வேண்டியுள்ளது.

எது எப்படியோ, பிறரை ஏய்த்துப் பிழைக்காமல், தம் முயற்சியில் பொரிகடலை வித்து சம்பாதித்தாலும், அதுவும் கவுரவமான வேலை தான்.

நன்றி ..வாழ்த்துக்கள் ..

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

கேள்வி : ஒரு பெட்ரோல் பங்க் வைப்பதற்கான செலவு எவ்வளவு? அதன் மூலம் கிடைக்கும் லாபம் எவ்வளவு?


என் பதில் :

சற்று பெரிய பதில். பொறுமையாக காணவும்.

முதலில் இந்த கேள்விக்கான பதிலை எழுத விபரங்களை தந்த என் நண்பரின் தம்பிக்கு நன்றி. அவர் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணி புரிந்தவர். மிக்க அனுபவம் வாய்ந்தவர். அவருடன் கலந்து ஆலோசித்து எழுதிய பதில் இது.

பெட்ரோல் பங்க் வைப்பதற்கு எவ்வளவு செலவாகும் என்பதற்கு முன், அந்த தொழிலை தொடங்குவதைப் பற்றி சற்று அறிவது அவசியம்.

முதலாவதாக பெட்ரோல் பங்க் எந்த ஊரில் அமைக்க திட்டம் உள்ளதோ அங்கு அதற்கு தகுந்த சொந்த நிலம் தேவை. நிலம் உள்ளவர்கள் எல்லா விபரங்களுடன் ஒரு எண்ணெய் நிறுவனத்திற்கு டீலர்ஷிப்க்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் நிலத்தை பார்வையிட்டு அது அமைந்துள்ள இடம், அங்குள்ள விற்பனை வாய்ப்புகள் போன்ற பலவற்றை பரிசீலனை செய்து நிறுவனத்திற்கு தங்கள் பரிந்துரைகளை அனுப்புவர்.

அப்படி சொந்த நிலம் இல்லாதவர்கள் விண்ணப்பித்தால், இதை அமைப்பதற்கான நிலத்தை நிறுவனம் அடையாளம் காட்டும் ஏரியாவில் வாடகைக்கு ஏற்பாடு செய்வதாக முறைப்படி உறுதி அளிக்க வேண்டும். பின்பு ஆய்வுகுழு ஒரு இடத்தை தேர்ந்தெடுப்பர். அதற்கு அருகாமையில் கிடைக்கும் நிலத்தை பரிசீலித்து, பரிந்துரைக்கு பிறகு விண்ணப்பதாரர் நேராகவோ அல்லது நிறுவனம் மூலமாக குத்தகைக்கு (Lease) எடுத்து அமைப்பது. ஒரு நல்ல இடம் அமைவதுதான் இந்த தொழிலுக்கு மிக முக்கியமான அம்சம்.

பங்க் அமைக்க இடம் முடிவாகி டீவர்ஷிப் கிடைத்த பிறகு அதற்கு தேவையான சேமிப்பு வசதிகள் போன்றவற்றை அமைப்பதற்கு பத்து முதல் பதினைந்து இலட்சம் வரை செலவாகலாம். அதற்கு மேல் தொழில் நடத்த மூலதனம் சேர்த்து இருபத்தைந்து இலட்சம் தேவைப்படும். பணவசதி உள்ளவர்கள் விற்பனையை பொறுத்து மொத்தத்தில் நாற்பது இலட்சம் வரைகூட செல்லலாம்.

எண்ணெய் நிறுவனம் அளிக்கும் கமிஷன் தான் இலாபம். இது வியாபாரம் சூடு பிடித்து, அக்கம்பக்கத்தில் மற்ற நிறுவனங்களின் போட்டி இல்லை என்றால் போட்ட முதலீட்டை திரும்பப்பெற மூன்று ஆண்டுகள் வரை தேவை. அதன்பிறகு நேர்மையாக தொழில் செய்தால் இருபது சதவிகிதம் வரை இலாபம் இருக்கும். இடம், விற்பனை, போட்டி போன்ற பலவற்றால் நட்டம் ஏற்படும் அபாயமும் உள்ளது.

முன்பெல்லாம் பெட்ரோல் பங்குகளில் எரிபொருள்கள் விற்பனை மட்டுமே செய்தனர். அதில் கிடைத்த வருமானம் மிக அளவாகவே இருந்தது.

ஆனால் தற் போதெல்லாம் ஒரு ஒரு பெட்ரோல் பங்கிலும் வரும் வாடிக்கையாளர்களுக்கு உபயோகமாக பல வசதிகளை செய்து தருவதன் மூலம் அதிக இலாபம் ஈட்டுகிறார்கள். உதாரணமாக போதிய இடமிருப்பதை பொறுத்து பயணிகள் இளைப்பாற, உண்ண தேவையான வசதிகள், பல்வேறு பொருள் விற்பனை, போன்றவை. அளவில்லாத வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். எனவே, இலாபம் ஈட்டுவது என்பது அவரவருடைய தொழில் செய்யும் திறமையை பொறுத்தது.

மேலே கூறப்பட்டவை எல்லாம் ஒரு வழிகாட்டி போன்றது. இதில் இன்னும் நிறைய தொழில் நுணுக்கங்கள் இரகசியங்கள் இருக்கலாம். அவை தொழிலில் இறங்குபவர்கள் அனுபவத்தில் கற்க வேண்டியவையாகும்.

நன்றி ...

சிவக்குமார்.V.K 
வீட்டு கடன் பிரிவு 
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

உடுமலை 8 வது புத்தக திருவிழா முதல் நாள் நிகழ்ச்சி கலந்து கொண்ட மகிழ்ச்சியானநேரம்....📚📚🌱🌱🌷🌷🌳🌳
இன்று புத்தக கண்காட்சியில் கலந்துகொண்டபோது .முதன் முதலில் தேடும் நூல் ...நாம் படிக்கவேண்டிய நூல் இருக்கும் ..அந்த புத்தக அறையை நோக்கி மனமும் ..கண்ணும் ...தேடுகிறது ...இதை வாங்கி படிக்கும் சுவராஸ்யம் என்றும் குறைவதில்லை ..நண்பர்கள் ..எழுத்தாளர்கள் ...விமர்சனம் செய்திட்ட பதிவுகள்களை கொண்டு அந்த நூலை தேடுவது மன இயல்பு ..
தற்பொழுது வாசிப்பை ..நேசிப்போம் ..நூலக துறை பல்வேறு நிகழ்வுகள் ,விழிப்புணர்வு கருத்தரங்கம் ..நூலின் வாசிப்பு திறன் மேம்படுத்த உதவுகிறது ...இந்த புத்தக கண்காட்சியை அதிகம் வாழ்வின் பொக்கிசமாக பயன்படுத்தி கொள்ளவேண்டும் ...
இன்று நடைபெற்ற புத்தக திருவிழா ..துவக்க நிகழ்ச்சிகள் அருமை ..குழந்தைகளின் தற்காப்பு கலைகள் ,சிலம்பம் ,களரி ..நிகழ்ச்சி ஒரு மணிநேரம் நம்மை நகர விடாமல் செய்துவிட்டது ..முதல் நாள் நிகழ்வு அருமை அருமை ..குழந்தை செல்வங்களுக்கு வாழ்த்துக்கள் ...
என்று அன்புடன் உடுமலை சிவக்குமார்
📚📚வாசிப்பை ..நேசிப்போம் ..📚📚
👍🌷🌷வாட்ஸாப் எண் -9944066681 🌱🌱📚📚
தொழிலோ வியாபாரமோ தொடங்குபவரா ?

பெரிய வெற்றித்தான் உங்கள் இலக்கா ?

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதில் சில முக்கியமானவை இங்கு உங்களுக்காக

1) நம்பிக்கை – ( CONFIDENCE )
உங்கள் தொழிலில் நீங்கள் வெற்றி பெற மிகவும் முக்கியமான ஒன்று நம்பிக்கை. அதாவது உங்கள் மேலும் உங்கள் தொழிலின் மீதும் இது மிகவும் அவசியம். நம்பிக்கை வையுங்கள் பெரிய வெற்றி ஓரு நாள் உங்களை தேடி வரும்.

2) சின்ன சின்ன வெற்றிகளை புறந்தள்ளாதீர்கள். பெரிய வெற்றிகளை அடைவதே நம் லட்சியம் அதற்கான வழியில் சிறிய சிறிய வெற்றிகளும் தோல்விகளும் தேடி வரும் அவற்றை குறைத்து மதிப்பிடாதீர்கள் அவையே உங்களுக்கு வழிகாட்டி.

3) தொழிலோ வியாபாரமோ பெரிய பயணம், அதில் கடக்க வேண்டிய தூரம் மிகவும் அதிகம். அதனை ஒரே நாளிலோ தொடங்கிய சில நாட்களிலோ அடைந்து விட முடியாது அதற்கான பொறுமையும் அவசியம்.

4) தோல்விகள் நிச்சியம் வரும் அதனை நாம் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறோம் என்பதே இங்கு முக்கியம் இன்று தோல்விகளை கண்டு நாம் பின்வாங்கினால் 2 அடி தூரத்தில் உள்ள வெற்றியை நாம் இழந்து விடுவோம் அதனால் அஞ்ச வேண்டாம் வெற்றி நிச்சியம் ஒரு நாள் நமக்கு.

5) தோல்விக்கான காரணத்தினை ஆராயுங்கள் நாம் செய்த தவறு என்ன அதனை எப்படி மாற்றிக்கொண்டால் வெற்றி என்பதனைப் பற்றி சிந்திப்போம்
6) மதிப்பளிங்கள் – நீங்கள் செய்யும் வேலையை நீங்களே மதிக்கவில்லை என்றால் ? கெளரவக்குறைச்சலாக நீங்களே உங்கள் தொழிலை நினைத்தால் மற்றவர் எப்படி மதிப்பார்கள் உங்களை.

7) அதிகம் பேசுவதை தவிருங்கள். அடுத்தவர் பேசுவதனைக் காது கொடுத்து கேளுங்கள் அதில் உங்களுக்கு ஒரு விஷயமிருக்கலாம் அதனை பயன்படுத்தி நீங்கள் முன்னேறலாம்.

8) குழப்ப வேண்டாம், திட்டமோ செயல்முறைகளோ எளிதாக இருக்கட்டும். பக்கம் பக்கமாக திட்டம் போட்டால்தான் நமது வேலை பெரிய வேலை என்றும் மற்றவர்கள் மதிப்பார்கள் என்பது சுத்த பேத்தல்.

9) எப்போதும் உம்மென்று இறுக்கமாக இருக்கவேண்டாம். சிரித்த முகத்துடன் தொடங்குகள் எல்லாம் வெற்றித் தான்.

10) இவற்றை விட மிகவும் முக்கியமானது நிங்கள் செய்யும் தொழிலில் ஞானம், அதில் எதுவும் முடிவடைவது இல்லை. தினம் தினம் புது புது விஷயங்கள் நிறைய வருகிறது அதனை தேடி தேடி கண்டுபிடியுங்கள் உங்கள் வசமாக்குங்கள் வெற்றி உங்கள் வீடு தேடி ஓடி வரும்.📚📚📚✍️✍️✍️

என்றும் அன்புடன் ..



சிவக்குமார்.V.K. 
வீட்டு கடன் பிரிவு 
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681


சனி, 1 ஆகஸ்ட், 2020

கிராமத்து திண்ணை பேச்சு .......(Old Facebook)

இப்போது நமது கிராமத்து உறவுகளெல்லாம் ஃபேஸ்புக்,வாட்ஸாப்ப்  வாயிலாக; திண்ணைப் பேச்சின் புதிய வடிவம். ஆனால், இது ஒரு போதை தரும் திண்ணை. அதன் வலையில் விழுந்தவர்களுக்கு அதன் முகத்தில் விழித்தால்தான் அன்றைய தினம் நகரும். அது ஒரு இலவச சாளரம்.........

முன்பு வீட்டில் பெரியவர்கள் இருப்பார்கள் இழுத்து வைத்துப் பேச. அவர்களும் காணாமல் போனார்கள். அவர்கள் இல்லாமல் போனதில் கதைசொல்ல இப்போது எவருமில்லை......இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் பேச்சுக்காக ஏங்கப்போகிறோம் நாம்.
ஊஞ்சல்.. ஆடி 18...

தளி ஜல்லிபட்டி ...உடுமலைப்பேட்டை ...

ஆடி-18...... (உடுமலை-ஜல்லிப்பட்டி- தளி )ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.....
ஊஞ்சல்........ குழந்தைகளின் குதூகலம்....... !!!!!!! (தளி ஜல்லிபட்டி )
என் சிறுவயதில் ஆடி 18 யை தூரி நோன்பு என்றுதான் அழைப்போம் ..ஒரு நாள் முன்பே ஜல்லிபட்டி கிராமத்திற்கு சென்றுவிடுவோம் .எப்பொழுத்தான் சீக்கிரம் விடியோமோ என்று எங்கள் பாட்டி வீட்டில் பெரிய நீளமான வீட்டின் முன்புறம் உள்ள குழந்தைச்செல்வங்களுடன் கதைகள் பேசி தூங்குவதற்கே இரண்டு மணி ஆகிவிடும் ...காலையில் பொம்மையன் கோவில் முன்பு ..பெரிய நடு மரங்கள் நட்டு ...பெரிய அகல மர பலகையிலான உட்காருவதற்கு வசதியாக அமைப்பார்கள் ...அதற்கு சந்தனம் குங்குமம் ,மாவில்லை கட்டி ,மஞ்சள் துணியில் நவதானயங்கள் உள்ளேவைத்து அந்த ஊஞ்சலுக்கு ..கோவிலில் பூஜை செய்து ...குழந்தைச்செல்வங்களுடன் முதன் முறையாக ஆடும்போது ... ரோல் கோஸ்டர் ,ஜயண்ட்வீல் எல்லாம் கொஞ்சம் தள்ளி நிற்கவேண்டும் ...கிராமத்து பெரியவர்கள் தோட்டத்து வேளைக்கு சென்று வந்த பின்னர் இரவில் ..ஊஞ்சல் ஆடி பாட்டு பாடி தங்களின் களைப்பை போக்கிக்கொள்வார்கள் ..

ஊஞ்சல் அல்லது ஊசல் (swing) என்பது ஒரு உல்லாசப் பொழுதுபோக்கு விளையாட்டு ஆகும். இது சங்க காலம் தொட்டே ஆடப்படும் விளையாட்டுகளில் ஒன்று. உடுமலை கிராம பகுதிகளில் இதனைத் தூலி என்றும் தூரி என்றும் வழங்குகின்றனர். சிறுவர்கள் விழுதுகளைப் பிடித்துக்கொண்டு ஊஞ்சலாடுவர். மரக் கிளைகளில் கட்டப்பட்ட ஊஞ்சலில் அமர்ந்து சிறுவரும் சிறுமியரும் ஊஞ்சலாடுவர். தாமே காலால் உந்தி ஆட்டிவிட்டுக்கொண்டும், பிறர் ஆட்டிவிட்டும் ஆடுவர்.குழந்தை ஊஞ்சலில் ஆடும்போது இன்பம் கண்டு தூங்குகிறது. பெரியவர்கள் தாமே ஊஞ்சலாடி மகிழ்கின்றனர்....

முப்பது வருடங்களுக்கு முன்பாகக் கூட ஆடி பதினெட்டு தினத்துக்காக மரத்தில் ஊஞ்சல் கட்டி தூரி ஆடியதுண்டு.ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீடடில் இருக்கும் உபகரணங்களிலே அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.
முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆனந்தமாக ஆடினார்கள்.பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.
இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்.

இப்பொழுதும் பசுமையாக எண்ணங்களில் வாழ்க்கை சக்கரத்தை நகர்த்திகொண்டுஇருக்கிறோம் ...நம் தலைமுறை குழந்தைகளுக்கு இதை மறவாமல் கொண்டுபோகவேண்டியது நம் கடமை ..பண்பாடு ..கலாச்சாரம் இதில் தான் உள்ளது. இதை நம் குழந்தைச்செல்வங்களுக்கு கற்றுக்கொடுப்போமா ...??????????

அனைவருக்கும் ..ஆடி 18...வாழ்த்துக்கள் ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 
9944066681..