சலிப்பூட்டும் அன்றாட வாழ்க்கையிலிருந்து தப்பிக்க டட்சுஜோகு! (DATSUZOKU) |
சலிப்பூட்டும் வழக்கமான அன்றாட நடைமுறை எல்லோரையும் சற்று அலுப்படையத்தான் செய்கிறது. |
காலையில் எழுந்திருந்து அவசரம் அவசரமாக அலுவலகம் செல்வது, அங்கு ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்வது, மீண்டும் வீட்டுக்கு வந்து படுக்கைக்குச் செல்வது – என்ன போர் அடிக்கும் வாழ்க்கை இது என்று அடிக்கடி சொல்லி வருத்தப்படுவது! – இது எல்லோருக்குமான ஒரு அனுபவம் தான்! |
இந்த சலிப்பிலிருந்து மீண்டு உற்சாகம் பெற ஏதேனும் ஒரு வழி உண்டா? |
உண்டு என்கின்றனர் ஜப்பானியர். |
அதற்கான வழிமுறையின் பெயர் டட்சுஜோகு (DATSUZOKU) |
டட்சு என்ற ஜப்பானிய வார்த்தையின் அர்த்தம் தப்பிப்பது என்பதாகும். |
ஜோகு என்ற வார்த்தைக்கு அர்த்தம் ரொடீன் – அதாவது அன்றாட நடைமுறை – என்பதாகும். |
அதாவது அன்றாட நடைமுறை வாழ்க்கையிலிருந்து தப்பிப்பது தான் டட்சுஜோகு! |
டட்சுஜோகு தருவது இன்பமயமான ஒரு ஆச்சரியத்தைத் தான்! |
ஒரு அரைநாள் விடுமுறை கிடைத்தது என்றால் உங்கள் ஊரில் உள்ள ஒரு மியூஸியத்திற்குச் சென்று அங்குள்ளவற்றைப் பார்த்து ஆச்சரியப்படலாம். |
ஒரு டான்ஸ் வகுப்பிற்கோ அல்லது ஒரு இசைப் பள்ளியிலோ சேர்ந்து ஒரு புதிய கலையைக் கற்கலாம். |
ஒரு புதிய க்ளப்பில் சேர்ந்து பல புதிய நண்பர்களைப் பெறலாம். நல்ல ஒரு ஹோட்டலுக்குச் சென்று புதிய உணவு வகை ஒன்றை சாப்பிட்டு மகிழலாம். |
ஒரு புதிய புத்தகத்தைப் படிக்கலாம். பணம் செலவழிக்க வழி இல்லையே என்றால் நூலகம் இருக்கவே இருக்கிறது. |
மாலையில் நடைப்பயிற்சி செய்ய மெரீனா பீச் இருக்கவே இருக்கிறது. |
சற்று யோசித்துப் பார்த்தால் ஏராளமான வழிகளால் உங்கள் சலிப்பூட்டும் நடைமுறையை ஒழித்துக் கட்டலாம். |
எதிர்பாரா அழைப்புகள் வந்தால் அதை ஏற்று விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம். |
இந்த உத்தியைப் பயன்படுத்தி மகிழ்ச்சி அடைவோரின் அனுபவங்கள் பிரமாதமானவை. |
ஒருவர் தன் வீட்டைச் சுற்றி இருந்த வெற்று நிலத்தை அழகிய தோட்டமாக மாற்றினார். அவருக்கு மட்டும் அது ஆச்சரியத்தைத் தரவில்லை, சுற்று வட்டாரமே அவரைப் பார்த்து வியந்து போற்றியது. |
இன்னொருவர் ஒரு பக்கக் கதை மட்டும் கட்டுரை எழுத ஆரம்பித்தார். அது அவருக்கு புகழை மட்டும் தரவில்லை. நல்ல ஒரு புதிய வருவாயையும் அளித்தது. |
டட்சுஜோகுவினால் அன்றாடம் அந்தக் கணத்தில் வாழ்வது என்ற நல்ல ஒரு நடைமுறையும் உருவாகும். அன்றாடம் புதிய அனுபவங்கள், புதிய சூழ்நிலைகள், சவால்கள், கருத்துக்கள் ஆகியவற்றால் நாம் எதையும் சமாளிக்கும் திறனைப் பெறுகிறோம். ஒரு வலுவும் தானே உருவாகிறது. |
சலிப்பில்லாத வாழ்க்கைக்கு ஒரு உன்னத வழி டட்சுஜோகு! |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக