புதன், 20 மார்ச், 2019

உடுமலைப்பேட்டை .....கல்திட்டை பாறைகள் பயணம்...(பாலா )
.பயணங்கள் முடிவதில்லை....மதகடிப்புதூர் ..சின்னார் ..தூவானம் ...ஆலம்பட்டி ..மறையூர்

                                         திருச்சியிலிருந்து நான், கண்ணன், தமிழகன் ஐயா ஆகிய மூவரும் காலை ஐந்து மணிக்குக் கிளம்பி பழனி சென்று அங்கிருந்து நாராயணமூர்த்தி அவர்களையும் சேர்த்துக்கொண்டு உடுமலைப்பேட்டையை நோக்கிப் பயமானோம். முதல்நாளே வந்து திருப்பூரில் தங்கியிருந்த சுகவன முருகன், வீரராகவன் ஐயா, சதாசிவம் ,உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் பொதிகை அச்சகம் -அருட்செல்வம் ,தமிழ் பேராசிரியர் கண்டிமுத்து ,சிவக்குமார் ஆகியோர் வேனில் 15 பேர்கொண்ட குழுக்களாக உடுமலைப்பேட்டையிலிருந்து  எங்களுடன் இணைந்துகொண்டனர். ஐவர் மலை ,மதகடிப்புதூர் பாறை ஓவியங்களை பார்வையிட்டு ,பயணத்தை தொடர்ந்தோம் ..அமராவதி அணைக்கு செல்லும் சாலையின் இடப்புறம் சாலை வழியாக  அனைவரும் மறையூர் பயணமானோம்.

அமராவதி அணைக்கு இடப்புறம் பிரிகிற இடத்தில தமிழக வனத்துறை செக்போஸ்ட் ஒண்ணு இருக்கு. அங்கே காரை நிறுத்தி அவங்க வெச்சிருக்கிற லெட்ஜர்ல பேரு அட்ரஸ் வண்டி விவரங்கள் எழுதிட்டு தான் போகணும். அது ரிசர்வ் ஃபாரஸ்டுங்கறதாலும், யானைகளின் வாழ்விடம்ங்கறதாலும் இந்தக் கெடுபிடிகள்.  அங்கே இருக்கிற ஃபாரஸ்ட் ஆஃபீசர்ஸ் சுருக்கமான இன்ஸ்டிரக்ஷன்ஸ் தர்றாங்க. மெதுவா போங்க, காரில் பாட்டு சவுண்டா வெக்காதீங்க, ஹாரன் அடிக்காதீங்க, யானைகளை பார்த்தா டென்சன் ஆகாதீங்க. காரை ஆஃப் பண்ணிட்டு கண்ணாடியெல்லாம் ஏத்திவிட்டுட்டு சைலண்டா இருங்க. யானை பாட்டுக்கு போயிரும்னாங்க. தனியா போவாதீங்க, எதாவது ஒரு வண்டியோட சேர்ந்தமாதிரி போங்கன்னு என்னமோ போருக்கு போற ரேஞ்சுக்கு அனுப்பி விட்டாங்க. ஏற்கனவே பயமில்லாமல் இருந்த நமக்கு இப்போதுதான் பயமெடுக்க ஆரம்பித்தது.  வண்டி ஓட்டுநரைக் வரவழைத்து வண்டி எண், வகை, புறப்பாடு போய்ச்சேரவேண்டிய இடங்கள், உரிமையாளர் பெயர், கையெழுத்து என கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள். ஆங்காங்கே அவர்களை வளப்படுத்தவும் வேண்டியுள்ளது.

              செக்போஸ்ட் வரைக்கும் நன்றாகஇருந்த சாலை, அதுக்கப்புறம்  மோசமா இருந்தது. ஆனைமலை வனவிலங்கு சரணாலயம் எங்களை ‘அன்புடன்’ வரவேற்றது. நாங்க பயத்தோடயே போனோம். ரெண்டு பக்கமும் அடர்த்தியான காடு. நடுவில் சின்னதா மேடும் பள்ளமும் குண்டும் குழியுமான ரோடு. 30 கிலோ மீட்டர் வேகத்துக்குள்ளாக போகவேண்டும் எச்சரிக்கைப் பலகைகளும், அப்பகுதியில் வாழும் விலங்குகளைப்பற்றியும் ஆங்காங்கே எழுதிப்போட்டிருந்தனர். யானைகள் ரெண்டு பக்கமும் இருக்கும் , அப்பப்போ சாலையைக்கடந்து மறுபக்கம் போவும்னு சொல்லியிருந்தாங்க. அதனால ஒவ்வொரு திருப்பத்திலும், திரும்பனதும் யானை நின்னிட்டு இருக்குமோன்ற பயத்திலேயே வண்டி ஓட்டிட்டுப் போனோம்.

      தமிழக கேரள எல்லை வந்ததும் அங்கே  இரண்டு செக்போஸ்ட்.. தமிழ்நாட்டோடது ஒண்ணு, கேரளாவோடது இன்னொண்ணு. தமிழ்நாட்டு செக்போஸ்ட்டில் திரும்பவும் ஒருமுறை டீட்டெயில்ஸ் எண்ட்ரி பண்ணனும். தமிழ்நாடு செக்போஸ்ட் முடிஞ்சு 100 மீட்டர்லேயே கேரளா செக்போஸ்ட்.அங்கேயும் ஒரு எண்ட்ரி. நிறுத்திவைக்கப்பட்ட வண்டிகளின் மேற்கூரைகளின் மீது குரங்குகள் தாவி உணவுப் பொருட்களைத் தேடுகின்றன. எங்க வண்டிக்குள் எட்டிப் பார்த்த குரங்கு ஒன்று என்ன நினைத்ததோ ஒன்றும் பேசாமல் சென்றுவிட்டது.

             தமிழக பகுதிகளில் தான் யானை நடமாட்டம் அதிகம். எல்லாமே சமதளமான இடங்கள், ரெண்டுபக்கமும் காடு, இது மலை பகுதி தான். ஆனால் ரெண்டே ரெண்டு ஹேர்பின் பெண்டு தான். மத்தபடி வளைஞ்சும் நெளிஞ்சும் கிட்டத்தட்ட நேரா மேலேறும் ஒற்றை ரோடு தான். அதனால் யானை நடமாட்டம் அதிகம். ஆனால் கேரளா செக்போஸ்டில் இருந்து மேலே போற ரோடு முழுக்க மலைப்பாதை. ஒருபக்கம் மலைப்பாறை, மறுபக்கம் அதல பாதாளம். அதனால் யானை வர வாய்ப்பே இல்லை.  ஒருபக்கம் பள்ளத்தாக்கு என்கிற பயத்தை தவிர வேறே எதுவும் இல்லை.

            அழகுன்னா அழகு, அப்படியொரு அழகு. விதம் விதமான மரங்கள், பறவை சத்தம் , சில்லென்ற காற்று, அருகே வந்து விளையாட்டுக் காட்டும் மேகங்கள் என்று இவையெல்லாம் சேர்ந்து மறக்க முடியாத பயணமாக மாற்றிவிட்டது.

                மறொரு செய்தி கேரளாவைப் பொறுத்தவரை, எல்லா சாலைகளிலும், முறையான தெளிவான அறிவிப்புப் பலகை வெச்சிருக்காங்க. யாரையும் வழி கேட்டு தொந்தரவு செய்ய தேவையில்லை. ஒவ்வொரு சாலை பிரிவு, ஜங்க்சன், ஊர், கிராமம், எல்லாத்தை பத்தியும் தெளிவா போர்டுகள் வெச்சிருக்காங்க.அது என்னமோ தெரிலைங்க நம்ம ஊர்ல "இந்த ரோட்ல போனா மூணாரு வரும் " அப்படிங்கர ரேஞ்சுலேயேதான் மூணாரு பத்தி நம்ம ஆளுகளுக்கு தெரிஞ்சிருக்கு . ஏன் என்று தெரியவில்லை? நம்ம ஊர்க்காரர்கள் அந்த பக்கம் எட்டியே பார்த்ததில்லை .(ஹி...ஹி... நானும் அப்படித்தான் இன்னும் மூணாறே போனதில்லை)

                                மறையூர் கேரளாவிலுள்ள இடுக்கி மாவட்டத்தின் ஒரு புகழ் பெற்ற சுற்றுலாப் பகுதியாகும். இது இயற்கை அழகும், வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டு அம்சங்களும் ஒருங்கே அமைந்துள்ளஒருஇடமாக விளங்குகின்றது. உடுமலைப்பேட்டையிலிருந்து  கிலோமீட்டர்  தொலைவில் மறையூர்  அமைந்துள்ளது. கேரளாவில் இயற்கையான சந்தனக் காடுகள் அமைந்த ஒரே பகுதி இதுவாகும். பண்டைக்காலக் கற்திட்டைகளும், பாறை ஓவியங்களும் இப் பகுதியின் கற்காலம் முதலான வரலாற்றைக் கூறி நிற்கின்றன.

           மறையூர் என்னும் பெயர் மறை , ஊர் என்னும் இரண்டு சொற்களால் ஆனது. மகாபாரத இதிகாசத்தின் முக்கிய கதை மாந்தரான பாண்டவர்கள் மறைந்து வாழ்ந்த காலத்தில் இப் பகுதியில் வாழ்ந்திருந்ததால் இதற்கு மறையூர் எனப் பெயர் வந்தது என்பது மரபு வழிக் கதை. எனினும் வரலாற்று அடிப்படையில் இதற்கு ஆதாரங்கள் இல்லை.

         மலைகள் நிறைந்த பகுதியாகையால் மலையூர் என்பது திரிந்து மறையூர் ஆகியிருக்கலாம் என்றும், மலைகளால் மறைக்கப்பட்டிருக்கும் ஊர் என்ற வகையில் மறையூர் என்று பெயர் பெற்றது என்றும், கிறிஸ்தவ ஆண்டு முறைத் தொடக்கத்தில் மறவர்கள் இப்பகுதியில் வாழ்ந்ததனால், மறவூர்,மறையூர் ஆனது என்றும் பலவாறான கருத்துக்கள் நிலவுகின்றன.

              இந்த பகுதி முழுவதுமே கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுக்காவுக்கு உட்பட்டதுன்னாலும், பெரும்பாலானோர் தமிழர்கள் தான். எல்லாருமே தோட்டத்தொழிலாளர்கள், விவசாயிகள், தமிழகத்தில் வேலை கிடைக்காமல் இங்கே வந்து பிழைப்பை நடத்துவோர்ன்னு தான் இருக்காங்க. எல்லாருமே தமிழ் பேசுறாங்க. இந்தத் தேவிகுளம் தாலுகாவை தமிழ்நாட்டோட சேர்க்கணும்னு பெரிய போராட்டமே 1956ல் நடந்தது. ‘பீர்மேடு, தேவிகுளம் போராட்டம்’ னு சொல்லப்படும் அந்த போராட்டம் மிக பிரபலம். ஆனால் கடைசி வரைக்கும் அந்த போராட்டம் வெற்றிபெறலை.

"தேவியாவது குளமாவது எல்லாமே இந்தியாவுலதானே இருக்குன்ணேன்...."

என்று காமராஜர் சொல்லிவிட்டார். தேவிகுளமும்,பீர்மேடும் கேரளாவுக்கே போயிருச்சு. ஆனாலும், எல்லா இடத்திலும் தமிழில் தான் அறிவிப்பு பலகைகள் இருக்கு. கேரள அரசின் அறிவிப்பு பலகைகளும் கூட தமிழில் இருக்கு. வியாபாரம், கடைகள், கைத்தொழில், விவசாயம்,தோட்டத்தொழில், ஹோட்டல். இது தான் அங்கே இருக்கிற பிழைப்பாதாரங்கள்.
               குறிச்சிக்கோட்டையை கடந்தபோது ‘ஒம்பதாறு’  என்ற ஊரைப் பார்த்த உடன் என் கணித மூளை வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டது. ஒம்பதாறுக்கும் மூணாறுக்கும் இடையே  ‘ஆறாறு’ என்று ஒரு ஊர் வருமே என்று கேட்டேன்.

‘அப்படி ஒரு இடம் கிடையாது’ என்று 'சீரியசாக' பதில் வந்தது.

‘என் கணிதம்’  தோல்வியடைவதைப் பற்றி யோசித்துக்கொண்டு இருக்கும்போதே சின்னாறு கடந்ததும் மலை உயரமும் மலையாளமும் தொடங்கியது.

                கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் அருகே உள்ள சின்னாறு வனவிலங்கு சரணாலயத்தில் பல்வேறு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு நட்சத்திர ஆமைகளும் வளர்க்கப்படுகிறது. காரணம் இந்த வனப்பகுதியில் உள்ள சீதோஷண நிலை நட்சத்திர ஆமைகள் வளர்வதற்கு ஏற்றதாக அமைந்து உள்ளது. இதனால் வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் நட்சத்திர ஆமைகள் பிடிப்பட்டால் அவைகள் சின்னார் வனப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்படுவது வழக்கம்.

                மறையூருக்கு சற்று முன்பாகவே சாலையின் வலதுபுறத்தில் ஆலம்பெட்டி பாறைஓவியங்கள் என்ற அறிவிப்புப் பலகையும் சில வாகனங்களும் தெரிந்தன. அங்கிருந்து ஓவியங்கள் இருக்குமிடத்துக்கு அழைத்துச் செல்வதற்கு குரும்பர் இன பழங்குடிகள் உள்ளனர். அரசே இவர்களுக்கான வேலைவாய்பாக இதை ஏற்பாடு செய்துள்ளது. ஒரு ஆளுக்கு 225 ரூபாய் வாங்குகிறார்கள், அதில் கூட்டிப்போகும் குரும்பருக்கு ஒரு பகுதியும், குரும்பர் இன முன்னேற்றத்திற்காக ஒரு பகுதியும் ஒதுக்கிக்கொள்கிறார்கள்.

  இதுபோன்ற திட்டத்தை தமிழகத்திலும் பாறைஓவியங்கள் போன்ற தொல்லியல் சார்ந்த இடங்களுக்கு பழங்குடிகளைப் பயன்படுத்தினால். பார்க்கப் போகிறவர்களுக்கும் எளிதாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் பழங்குடி மக்களுக்கான வேலைவாய்ப்பாகவும் திகழும் என்று எனக்குத் தோன்றுகிது.

 குரும்பர்கள் நாகராஜ், பழனிச்சாமி ஆகிய இருவரும் நம்மை பாறைஓவியங்கள் இருக்கும் காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்றனர். மலைமீது ஏறும்போது முதலில் டோல்மென்ஸ்(DOLMENS) எனப்படும் கல்திட்டைகள் நிறைய தென்பட்டன. கல்திட்டைகள் என்பவை பெருங்கற்காலத்தில் (MEGALITHIC AGE)வாழ்ந்த மக்கள் ஈமச்சடங்குகள் செய்யும் இடமாகும்.

 மலையேறி நடந்து செல்லும் வழியில் இவை நிறைய தென்பட்டன. நாங்கள் சென்ற வழியில் இருந்த ஒரு அருவியின் இடதுபுறத்தில் உள்ள பாறையில் ஓவியங்கள் உள்ளதை நாகராஜ் நமக்கு காண்பித்தார். அவ்ஓவியங்களில் இரண்டு மனிதர்கள் நிற்பது போன்ற நிலையிலுள்ள மூன்று இடங்களிலும், மான்போன்ற விலங்குகளும் சில குறியீடுகளும் காணப்படுகின்றன.

 இவையனைத்தும் வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ளன. சில உருவங்கள் கருப்பு நிறத்தில் காணப்பட்டாலும் அவை வெள்ளை நிறத்தில் வரையப்பட்டவையே, அவ்விடத்தில் சமையல் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட புகையால் அவை கருமையானத் தோற்றமளிக்கலாம்.
    ஒரு மலையிலிருந்து அடுத்த மலைக்குச் செல்லும்போது நாகராஜ், பழனிச்சாமி இருவரிடமும் மாறி மாறி குரும்பர்களைப் பற்றியும் அவர்கள் வாழ்க்கை நிலைப் பற்றியெல்லாம் கேள்விகள் கேட்டுக்கொண்டேயும் அதற்கு அவர்களின் பதிலை பதிவு செய்துகொண்டேயும் வந்தோம்.ஒரு மலையின் உச்சியை அடைந்தபோது பழனிச்சாமி தொலைவில் கையைக்காட்டி

"அங்க தூரமா பாருங்க அந்த மலையில வீடுங்க இருக்கு தெரியிதா?"

எனக்கேட்டதும் நாங்கள் எல்லோருமே அவர்காட்டிய திசையில் பார்த்தபோது அங்கு குடியிருப்பு பகுதி இருப்பதை நன்றாக பார்க்க முடிந்தது.

"அதுதான் சார் எங்க ஊரு ஆலம்பட்டி"

     இங்கு இருக்கும் பாறைஓவியங்கள் ஆலம்பட்டி ஓவியங்கள் எனஅழைக்கப்பட காரணம் இவ்வூரின் பெயரே. எப்பொழுதும் ஒரு பாறைஓவியத்தை அதன் அருகிலுள்ள ஊரின் பெயரால் அழைப்பது மரபு. வண்டி நிறுத்தியிருக்கும் இடத்தில் உள்ள பெயர் பலகையில் 'ஆலம்பெட்டி ' என்று எழுதிப்போட்டிருந்தனர், மலையாளிகளுக்கு 'பட்டி' என்றால் கொஞ்சம் அலர்ஜி என்பதாலோ என்னவோ ! ! !

                மலைகளுக்கிடையே சென்ற ஒத்தையடிப்பாதை வழியே அழைத்துச் சென்றவர்கள், ஒரு மலைச் சரிவில் பெரிய பாறைகளுக்கு இடையே இயற்கையாகவே அமைந்த குகைபோன்ற இடத்தினருகே வந்ததும், அனைவரையும் அருகே வரச்சொல்லி அங்கு வரையப்பட்டிருந்த சிவப்பு நிற ஓவியங்களைக் காட்டினார்கள். அப்பகுதியின் மொத்த நீளம் 60 அடியும் உயரம் 20 அடியும் இருக்கும். இயற்கையாகவே மூன்று பகுதிகளாக உள்ள இந்த பாறைகளில் செங்குத்தாக, சமமாக உள்ள பாறைப்பகுதிகளில் இத்தகைய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதில் இரண்டு மான்கள் மேய்ந்துக் கொண்டிருப்பது போன்ற ஓவியம் அளவில் பெரியதாகவும், அழகாகவும் வரையப்பட்டமை நமக்கு வியப்பை வரவழைத்தது. ஏனெனில்  அவ்வளவு உயரத்தை அடைந்து அங்கு காலத்தை வெல்லும் இத்தகைய ஓவியங்கலை வரைவதென்பது எளியவேலையல்ல என்பது புரிகிறது.

 மற்றொரு பாறையில் யானையோ அல்லது மாடோ செந்நிறத்தில் பெரிதாக வரையப்பட்டுள்ளது. இது சற்று சிதைந்த நிலையிலுள்ளதால் இதுபற்றி தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. அடுத்தப் பாறையில் பெரிய உருவங்களைக் கொண்ட ஓவியங்கள் இல்லை என்றாலும் சிறிய அளவிலான வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ள மனித உருவங்கள் காணப்படுகின்றன. மேலும் சிவப்பு நிறத்தில் வரையப்பட்டுள்ள எறும்புத்தின்னி, ஆமை, தேன்கூடு, மரம் முதலிய உருவங்களையும் காணமுடிகிறது.இவற்றில் எறும்புத்தின்னி, ஆமையின் ஓவியங்கள் மிக நன்றாக வரையப்பட்டுள்ளன.    இவற்றையெல்லாம் பதிவு செய்துகொண்டு கிளம்பினோம். அடுத்து நம்மை வேறுஒரு மலைக்கு அழைத்துச் சென்றார்கள்,

  மீண்டும் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக நடந்தோம். தொலைவில் ஒரு மலையைக்காட்டி அங்குதான் போய்கொண்டிருக்கிறோம் என்றார்கள்.இப்போது தொலைவில் பார்த்த மலையின் மேல் பகுதியில் நின்றுகொண்டிருந்தோம். அங்கிருந்து பார்க்கும்போது சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகளும் தெளிவாகத் தெரிந்தன. காலையில் நாங்கள் வண்டியில் வந்த சாலை பச்சை வனத்தில் கருமையான மலைப்பாம்பு படுத்துக்கிடப்பது போல தெரிந்தது. மதிய நேரம் ஆகிவிட்டதால் பசியெடுத்தது, ஆனால் எப்போதும் போலவே இம்முறையும் கிளம்பும் ஆர்வத்தில் உணவை எடுத்துவர மறந்துவிட்டோம். காலை உணவு உண்ட உணவகத்தில் எதற்கும் இருக்கட்டுமேயென்று பத்து சப்பாத்தி ஒரு தாளில் மடித்து வைத்தது நினைவில் வந்தது.  பிறகு அங்கேயே சாப்பிட முடிவெடுத்து சப்பாத்தியுடன் அவரவர்கள் எடுத்துவந்த பிஸ்கட்,, கடலைமிட்டாய், காராச்சேவு முதலியவற்றை உண்டு பசியாறிக்கொண்டோம்.

 இந்த ஓய்வு நேரத்தில் நாகராஜ், பழனிச்சாமி ஆகியோரிடம் குரும்பர்களின் பழக்கவழக்கங்களைப் பற்றியும், அவர்களின் நம்பிக்கைகள், சடங்குகள் ஆகியவற்றைக் கேட்டறிந்துக் கொண்டு அவற்றைப் பதிவும் செய்துகொண்டோம். நாங்கள் உட்கார்ந்திருந்த மலையில் சரிவில் சில ஓவியங்கள் இருப்பதாகவும் ஆனால் அங்கு செல்வது ஆபத்து என்றும் வேண்டுமானால் எங்களில் வயதில் குறைந்தவரும் வேகமாக மலையேறுபவரும் ஆபத்தென்றால் ஓடித்தப்பிக்கத் தெரிந்தவருமான ஒருவரை மட்டும் அழைத்துச் செல்ல சம்மதித்தனர். பின்பு அர்களாகவே கண்ணனை தேர்ந்த்தெடுத்து  அவரை நாகராஜ் கூட்டிச்செல்வதாக முடிவெடுத்தனர். நாங்கள் எல்லோரும் எங்களிடமிருந்த கேமராக்களை அவரிடம் கொடுத்தனுப்ப, சரிவில் இறங்கிய அவர்கள் எங்கள் பார்வையிலிருந்து மறைந்தனர்.

 மலைப்பகுதிகளில் நீண்டதொலைவில் நடக்கும் தருனங்களில் , சிறிது ஓய்வெடுத்தாலும் அது நமக்கு புத்துணர்ச்சியையூட்டும். அரைமணி நேரமிருக்கும் போன இருவரும் வந்துவிட்டார்கள். அத்துடன் முடித்துக்கொண்டு மலையிலிருந்து கீழே இறங்க ஆம்பித்தோம்.

   வந்த வழியிலேயே இறங்காமல் வேறு பாதையில் கூட்டிப்போனார்கள் எனவே எங்கள் வண்டி நின்ற இடத்தை விட்டு சற்றுத்தள்ளியே சாலையை அடைந்தோம். வரும் வழியில் அவர்கள் இருவரும் காட்டில் உள்ள மூலிகைககளைப் பற்றியும், அவர்களின் மருத்துவ அறிவுப் பற்றியும் கூறிக்கொண்டே வர அனைத்தையும் பதிவு செய்துக்கொண்டோம்.

 மலையிலிருந்தபோது தொலைவிலுள்ள மலையைக் காட்டி அங்கு மற்றொரு பழங்குடி இனம் முதுவன் வசிப்பதாகவும் அவர்கள் எப்போதுமே தலையில் முண்டாசுக் கட்டியிருப்பார்கள் என்றும் எக்காரணம்கொண்டும் அதை கழற்றமாட்டார்கள் என்றும் கூறியிருந்தார்கள். கீழே இறங்கிவரும்போது சாலையின் ஓரமாக அவர்கள்சொன்ன அடையாளத்தில் ஒருவர் சென்றுக்கொண்டிருப்பதைப் பார்த்து ஓடிச்சென்று அவருடன் பேச ஆரம்பித்தோம்.  

அவர் முதுவன்தானாம், தனது பெயர் .......       என அறிமுகப்படுத்திகொண்ட அவர் முதுவன் இனத்தைப்பற்றி விரிவாகவே பேசினார். முதுவன்கள் அந்தக் காலத்தில் சாமி சிலைகளை முதுகில் சுமந்து  சென்றவர்களாம், இப்போதும் தங்கள் குழந்தைகளை முதுகில் துணியால் கட்டி சுமந்து செல்வதை  வழக்கமாகக் கொண்டுள்ளனராம். அவற்றையெல்லாம் பதிவு செய்துகொண்டிருந்தபோது, வனத்துறை ஜீப் ஒன்று அருகில் வந்து நின்றது. நாம் கையில் மைக்கெல்லாம் வைத்திருப்பதைப்பார்த்த அந்த வனத்துறை அதிகாரி நம்மை பத்திரிக்கைகக்காரர்கள் என்று நினைத்திருப்பார்போல

" ட்ரைபில் பீப்பிள்ச டிஸ்டர்ப் பண்ணாதீர்கள் "

என்று கூற ,நமக்கும் அது சரியெனப்பட அத்துடன் பேட்டியை முடித்துக்கொண்டு, நாகராஜ் மனைவி கொடுத்த சூடான சுவையான தேநீரின் சுவையை நாக்கிலும் நாகராஜ், பழனிச்சாமி ஆகியோரின் நினைவுகளை மணத்திலும் தாங்கியவாறு மலையைவிட்டு இறங்க ஆரம்பித்தோம்.

             உடுமலைப்பேட்டை - மூனார் சாலையில் மறையூருக்கு முன்பாக 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது “அழிஞ்சுவாடு” என்னும் சிற்றூர். இங்கு கல்திட்டைகள்(Dolmens) நூற்றுக்கணக்கில் இருப்தாக கூறி சதாசிவம் நம்மை அங்கு அழைத்துச் சென்றார்.
மன்னிக்கவும் சொல்ல மறந்துவிட்டேன் இந்த மொத்த பயணத்தையும் திட்டமிட்டு அதை வெற்றிகரமாகவும் செயல்படுத்தியவர் இந்த சதாசிவம், அவருக்கு நம் அறிவோம் அறிவிப்போம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.

 இங்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கும் கல்திட்டைகள் இங்கு மட்டுமல்லாமல் ஆசியாவின் பல பகுதிகளிலும், ஐரோப்பாவில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் உள்ளிட்ட நாடுகளிலும் காணப்படுகின்றன. ரஷ்யா, அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளிலும், பெருமளவில் காணப்படுகின்றன.

இறந்தோரைப் புதைப்பது தமிழர் மரபு. அவ்வாறு தமிழரைப் புதைத்த இவற்றை ஈமக்குழிகள் என்பர். இவற்றைக் கற்பாறைகளைக் கொண்டு மூடிவைத்துப் பாதுகாக்கும் வழக்கம் இருந்துள்ளது. மூடப்படும் கல்லின் அளவு, மூடப்பட்ட விதம் ஆகியவற்றைக்கொண்டு இவற்றைக் கல்படை, கல்லறை, கல்குவை, கற்கிடை, கல்வட்டம், கல்திட்டை என்ற பெயர்களால் அழைக்கின்றனர். இத்திட்டைகளுக்குள் இறந்தோரின் உடல், அவருக்கு அடுத்த பிறவியில் தேவைப்படும் உணவுப்பொருட்கள் , அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் எனச் சிலவற்றையும் வைத்திருப்பார்கள்.

 தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் கொடைக்கானல் போன்ற பகுதிகளில் கல்திட்டைகள் பரவலாக காணப்படுகின்றன. கொடைக்கானல் காட்டுப்பகுதியில் மச்சூர், சோலைக்காடு, வில்பட்டி, பெருமாள் மலை, செண்பகனூர், தாண்டிக்குடி ஆகிய இடங்களில் இத்தகைய கல்திட்டைகள் காணப்படுகின்றன. இத்தகைய வரலாற்று சின்னங்களின் மூலமாக அவை உருவாகப்பட்ட காலத்திய சூழல்களை நாம் தெரிந்துகொள்கிறோம்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்திட்டைகளை நாம் மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. ஆனால், கிருஷ்ணகிரியிலும், கொடைக்கானலிலும் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கல்திட்டைகளின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு மடங்கு எண்ணிக்கை கூட தற்போது இல்லை. மேலும் பல பதுகைகள் சிதைக்கப் பட்டுவருகின்றன. கல்திட்டைகள் அமைந்துள்ள பகுதிகளைக் காணும் பொழுது, அவைகள் எவ்விதமான பாதுகாப்புமின்றி உள்ளன. தொல்லியல் துறையின் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தாலும், அதில் அந்த பகுதியின் முக்கியத்துவம், அவைகளின் பின்னணி உள்ளிட்ட எந்த செய்திகளும் இடம்பெறவில்லை.

                  அந்த இடங்கள் பெரும்பாலும் மறைவாக உள்ளதால், எவ்விதமான இடையூறும் இல்லாமல், மது அருந்துவதற்கு ஏதுவான இடமாக அது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த இடங்களைச் சுற்றிலும் காலி மது பாட்டில்கள் கிடக்கின்றன. ஒரு திட்டையில் இரண்டு பிளாஸ்டிக் பக்கெட்டுகள், சமையல் பாத்திரங்களையெல்லாம் பார்த்தோம். குடும்பமே நடத்துகிறார்கள் போலிருக்கிறது. இதுவே அயல்நாடுகளில் உள்ள இத்தகைய கல்திட்டைகள் மிகவும் பாதுகாப்பாக பாதுகாக்கப்படுகின்றன.

                   பள்ளி, கல்லூரி பாடத் திட்டங்களில் வரலாற்றுச் சின்னங்கள் குறித்த பாடங்களை இணைத்தல், அதற்கென தனி பாட வேளைகளை கட்டாயமாக்குதல், பள்ளி, கல்லூரி சுற்றுலாவில், பெரிதும் கவனிக்கப்படாத தொன்மையான இடங்கள் கண்டிப்பாக இடம்பெறும் வகையில் அரசுகள் உத்தரவு பிறப்பித்தல், பொதுமக்களுக்கும், புராதன சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு அருகேயுள்ள பகுதி மக்களுக்கும் விழிப்புணர்வு உண்டாக்குதல்  போன்ற  செயல்பாடுகள் மூலமாக நம் முன்னோர்களின் பழைய வரலாற்று எச்சங்களை நம் அடுத்த தலைமுறைக்கும் நிச்சயமாகக் கொண்டு செல்ல முடியும்.

            மேற்கே சூரியன் மறைய ஆரம்பித்தது. எங்கள் திட்டத்தில் மறையூரிலுள்ள பாறை ஓவியங்களைப் பார்க்க வேண்டியிருந்ததுது. அதை மற்றொரு பயணத்தில் பார்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து மலையைவிட்டு இறங்க ஆரம்பித்தோம்.

              மறையூரின் மற்றொரு சிறப்பு அங்கு ஓடும் ஜீப்புகள முன் கண்ணாடியின் மேலாக உள்ளங்கை அளவுக்கு பார்டர் , நடுவில் வெவ்வேறு பெயர்கள் எழுதிய ஜீப்புகள் மறையூருக்கும் மூணாறுக்குமாக டிரிப் அடிக்கின்றன.கேரளாவில் பஸ்களின் பெயரை பெண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளின் பெயரை பஸ்களுக்கும் வைத்திருப்பார்கள் என்று
கேள்விப்பட்டேன்.

 ஜீப்புகளும் விதிவிலக்கல்ல என்று அவற்றின் பெயர்களைப் பார்த்தாலே தெரிகிறது. வாடிக்கையாகப் பயணம் செய்பவர்களை பற்றி ஓட்டுநர்களும் , ஓட்டுநர் மற்றும் ஓனர்களைப் பற்றி பயணிகளும் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். குடும்ப விவகாரம் கூட தெரிந்து வைத்திருக்கிறது.

‘’உன் சம்சாரம் பிரசவத்துக்குப் போச்சே வந்திருச்சா?’’ என்கிற ரீதியிலான் கேள்வியும் பதில்களும் அவர்களிடையே இயல்பானது.தங்களது தோராயமான நாற்பது கிலோமீட்டர் பாதையில் உண்ணி அச்சன் வீடு எங்கே இருக்கிறது என்றும் சேட்டன் மாஸ்டர் வீடு எங்கே இருக்கிறது என்றும் ஜீப் ஓட்டிகள் அறிவார்கள்.

         இறங்கிவரும் வழியில் சாலையில் யானைகளைப் பார்க்க வாய்ப்புள்ளதாக சதாசிவம் கூற வண்டியே பரபரப்பானது. அனைவரும் இங்கும் அங்குமாக துளாவ ஆரம்பித்தனர். ஒரே மயான அமைதி.

திடீரென வீரராகவன் ஐயா கத்தினார்

 "அதோ".

ஆமாம் சாலையின் இடதுபுறத்தில் ஒரு யானை தன் குட்டியுடன் நின்றுக் கொண்டு எங்கள் வண்டியை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

 நாங்கள் சிரித்துவிட்டோம்.ஆமாம் அது கேரள வனத்துறையினர் வைத்திருந்த ஆளுயர 'பேனர்'. ஏனோ அன்றைக்கு யானைகள் நீர் அருந்திவிட்டு குடும்பத்துடன் சாலையைக் கடக்கும் அழகுக் காட்சியை காண முடியாமல் போய்விட்டது.

                ஒரேஒரு காட்டுப்பன்றி்தான் சாலையைக் கடந்தது அதுவும் எங்கே நாம் பார்த்துவிடப் போகிறோமே என்று வேகமாகவேறு ஓடிவிட்டது. ரொம்ப ஆர்வத்தில நண்பர் ஒருவர்  'ஒரு வேளை சின்ன யானை குட்டியாக இருக்குமோ?' என்று கேட்டுவைத்து எங்களை திடுக்கிட வைத்தார். ஒருவழியாக செக்போஸ்ட் வந்து நாங்கள் எங்கள் வண்டியில் திருச்சியை நோக்கியும் மற்றவர்கள் அவர்கள் வண்டியில் திருப்பூரை நோக்கியும் பயணமானோம்.

               பயணம் ...ஆம்... இந்த ஒற்றைச் சொல்லில்தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. நாமிருக்கும் இப்புவி சூரியனை சுற்றிப் பயணித்துக் கொண்டிள்ளளது. அதில் இருக்கும் நாமோ அதனுள்ளே பயணிக்கிறோம். என்னைப் பொருத்தவரை பக்கத்துத் தெருவுக்குப் போவதே பயணம்தான். ஒவ்வொரு பயணத்திலும் ஒவ்வொரு அனுபவம். அதனால்தான் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

மீண்டும் அடுத்தப் பயணத்தில் சந்திப்போம்...

பயணங்கள் தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக