ஞாயிறு, 17 மார்ச், 2019

வலைப் பதிவுகளின் பிதாமகன்..வலைச்சரம் சீனா அய்யா 
வலைப் பதிவுகள் இன்றும் இருக்கிறதென்றால் இவர் தான் காரணம் –
‘வலைச்சரம்’ மூலம் வலைப்பதிவுகள் எழுதுபவர்களை ஊக்கப்படுத்தி, வலைப்பதிவுகளை உயிர்த்துடிப்புடன் காத்து வருகிறார்,
வலைச்சரம் மூலம் எழுத்தாளர்களானவர்கள் நிறைய நண்பர்கள்.
இளைஞர்களின் நண்பர்,
நிறைய இளைஞர்களுக்கு தொழில் முனைவுக்கு உதவியிருக்கிறார்,
இடது கை கொடுப்பது வலது கைக்குத் தெரியாது என்பது இவருக்கு நிரம்பப் பொருந்தும்,
நிறைவான வாழ்வு,...
வலைச்சரம் சீனா அய்யா காலமானார்.
அன்பின் அப்பா !
அடியெடுத்து வைக்கையில்
விரல் பிடித்தாய் !
மடியமர்த்தி எண்ணெழுத்து
எழுத வைத்தாய் !
படிப்படியாய் வாழ்க்கைப்பாடம்
பயிற்றுவித்தாய் !
நொடிப்பொழுதும் கலங்காமல்
துணை நின்றாய் !
தோள் நின்ற தந்தைக்குத்
துணை நின்ற பொழுதுகளும்,
விரல் பிடித்த தந்தைக்கு
வழி காட்டிய நினைவுகளும்,
தனித்திருக்கும் போதிலும்
நினைத்து மகிழ ஆசை !
மாறும் பிறவி யாவினிலும்
மகளாய்ப் பிறக்க ஆசை !
Miss you Appa.....
இந்தக் கவிதையை எழுதியவர் (தற்போது இங்கிலாந்தில் வசிக்கின்றார்) இன்று காலையில் எழுதியிருக்க என் பார்வையில் சில மணி நேரத்திற்கு முன் தான் முகநூல் வாயிலாகத் தெரிந்தது.  எழுதியவர் பெயர் திருமதி சுஜாதா.  அவர் அப்பாவின் பெயர் சிதம்பரம்.   
இந்தப் பெயர் சொன்னால் பலருக்கும் தெரியாது.  சீனா என்றால் கொஞ்சம் பேருக்குத் தெரியும்.  வலைச்சரம் சீனா அய்யா என்றால் உலகமெங்கும் வாழும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கும் குறிப்பாக இணையத் தொடர்பில் உள்ள அனைவருக்கும் நிச்சயம் தெரிந்த பெயர் தான்.  
சீனா அய்யா காலமான செய்தி சில மணி நேரத்திற்கு முன் தான் எனக்குத் தெரிய வந்தது.  
மற்றொருமொரு சோகம்.  
சில நினைவுகள். பலவித எண்ணங்கள் படிப்படியாக ஒவ்வொன்றாக வந்து கொண்டேயிருக்கின்றது.
++++++++++++++++++
நடிகர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா நடத்திய பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களை ஒருமையில் அழைத்தார் என்று அவரை சகட்டுமேனிக்கு கட்சி அடிப்படையில் பலரும் பொளந்து கட்டிக் கொண்டு இருந்தனர். அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன் முகநூலில் ஒருவர்  தன் தரப்பு நியாயமாகச் சிலவற்றை எழுதியிருந்தார்.
"பலரும் பத்திரிக்கை சுதந்திரத்தைப் பற்றி எழுதுகின்றார்கள். 
எழுதுகின்றவர்கள் எவரும் களத்தில் இல்லை என்பதும் அவர்களுக்கு இங்குள்ள எதார்த்தம் புரியவில்லை என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும்.  காரணம் நான் களத்தில் இருப்பதால் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதனை தெளிவாகச் சொல்ல முடியும்.  ஒரு வாரம் முழுக்க என் பெயர் பத்திரிக்கையில் வர வேண்டுமென்றால் குறைந்தபட்சம் ஐயாயிரம் ரூபாய் செலவழித்தே ஆக வேண்டும்.  அதுவே தொலைக்காட்சி மற்றும் ஏனைய மீடியா உலகில் என் பெயர் வர வேண்டுமென்றால் பத்தாயிரம் செலவழித்தே ஆக வேண்டும்.  இது தான் உண்மை.  காரணம் மீடியா என்றால் பணம்.  பணம் மட்டுமே மீடியா" என்று எழுதியிருந்தார்.  
இதை இங்கே எழுதுவதற்குக் காரணம் சீனா அய்யா இறந்துவிட்டார் என்ற செய்தியை நான் வாசித்த போது இவர் நினைத்து இருந்தால், நிச்சயம் பல வழிகளில் சம்பாரித்து இருக்க முடியும்? 
காரணம் இணைய உலகில் குறிப்பிட்ட காலகட்டத்தில் முக்கியமானவராக இருந்தார்.  
குறிப்பிட்ட நபர்கள் நடத்தி வந்த வலைச்சரம் என்ற தளம் இவரிடம் வந்து சேர்ந்தது.  தன்னுடைய வயது மூப்பு, உடல் நலப் பிரச்சனைகள் என்று ஆயிரம் இருந்தாலும் தெரிந்தவர், தெரியாதவர் என்று பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் ஆசிரியர் பொறுப்பு கொடுத்துக் கௌரவித்தார்.   
முகநூல், ட்விட்டர் என்று தொடங்கி பத்தி எழுத்தாளராக வளர்ந்து எழுத்தாளர் ஆக வளர்ந்தவர்கள் பல பேர்கள்.  ஆனால் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு வலைச்சரத்தில் தன் தளம் யாராவது அறிமுகம் செய்துள்ளார்களா? என்று ஏங்கிப் பார்த்தவர்கள் எத்தனையோ பேர்கள்.?  எந்த லாப நோக்கமும் இன்றி, எவரிடமும் எதையும் எதிர்பார்க்காமல், தன்னால் முடிந்த அளவுக்கு வலைச்சரத்தை மிகத் தெளிவாக அழகாக நடத்திய சீனா அய்யாவுக்கு என் கண்ணீர் அஞ்சலியை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.
++++++++++++++
நாலைந்து வருடத்திற்கு முன்பு அமெரிக்காவில் உள்ள ஒரு நண்பர் கூறிய வார்த்தையிது.  
"இங்கு எல்லோரும் அவசரப்பட்டு செய்தித்தளம், மற்ற தளங்கள் என்று தொடங்கி விடுகின்றார்கள்.  ஆனால் ஐந்தாண்டுகளில் அந்த தளம் காணாமல் போய்விடும்.  காரணம் நிதி பற்றாக்குறை, கவனிக்க ஆள் இல்லாதது, விருப்பங்கள் மாறிப் போய்விடுவது, அந்த தளத்தைப் படிக்க ஆள் வராமல் தேங்கிப் போய்விட அப்படியே போட்டு விட்டு நகர்ந்து விடுகின்றார்கள்.  அவர்களுக்கும் மன உளைச்சல் தான் மிஞ்சும்" என்றார்.  
கடந்த ஒன்பது வருட இணைய அனுபவத்தில் இதே போலப் பல தளங்களைப் பார்த்துள்ளேன்.  ஆனால் இன்றும் வலைச்சரம் உள்ளது.  ஒரே பிரச்சனை. மக்களின் மனோபாவம் மாறிவிட்டது.  தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வெவ்வேறு பாதைகள் உள்ளது.  
அதனால் வலைச்சரத்தில் எழுத விருப்பமில்லாமல் போய்விட்டது.  
சீனா அய்யாவிற்குப் பிறகு பிரகாஷ் இப்போது நடத்திக் கொண்டிருந்தாலும் பெரிய அளவுக்கு அதனைக் கொண்டு செலுத்த முடியாமைக்குக் காரணம் இப்போதைய சூழல் மாறிவிட்டது.  
அதாவது வலைச்சரம் என்பது பல நூறு பேருக்கு ஏணிப்படியாக இருந்தது. 
ஏணிப்படி மேலேறிப் பார்த்ததுண்டா? அது அப்படியேதான் இருக்கும்.  
சீனா அய்யாவும் அப்படித்தான்.  
அவர் இணைய உலகத்தில் ஆயிரக்கணக்கான பேர்களுக்கு ஏணிப்படியாக இருந்தவர்.  எந்த எதிர்பார்ப்புமின்றி தன்னுடைய ஓய்வு காலத்தைத் தமிழ் இணைய உலகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த காரணமாக இருந்தவர்களில் இவரும் முக்கியமான ஒருவராக இருந்துள்ளார் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியும். 
+++++++++++++=
"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்பார்கள்.  நிச்சயம் சீனா அய்யாவின் மனைவி என்பவர் அய்யாவைக் கடைசி வரைக்கும் குழந்தை போலவே பார்த்துக் கொண்டிருந்தவர்.  
தனக்குத் தெரிந்த வகையில், தன்னால் முடிந்த வரையில், தனக்குப் பிடித்த துறையில் உழைத்துள்ளார். உண்மையாக வாழ்ந்துள்ளார்.
நான் அவருக்கு கடமைப்பட்டுள்ளேன்.  என் எழுத்துலக வளர்ச்சியில் அவரின் பங்களிப்பு மற்றும் ஆசிர்வாதங்களும் உண்டு.  
அவர் ஆலமரம்.  வேர்கள் எப்போதும் மண்ணுக்குள் தான் இருக்கும்.  நாம் கிளைகள்.  இன்று வெளியே தெரிகின்றோம் என்பதற்குக் காரணம் அந்த வேர்கள் தான். 
நான் உயிருள்ள வரைக்கும் சீனா அய்யா மற்றும் அவர் குடும்பத்தினர் குறித்த எண்ணங்கள் என் மனதில் இருந்து கொண்டேயிருக்கும்.  குடும்பத்தில் பிறந்து இருந்தால் குடும்ப உறுப்பினரா? அவரும் தமிழ் இணைய குடும்பத்தில் நிரந்தர தலைவர் தான்.
அவரின் புகழும், நல்லெண்ணங்களும் அவர் தலைமுறையைக் காத்தருள வேண்டுகின்றேன்.
சீனா அய்யா மறைந்தாலும்(திரு Chidambaram Kasiviswanathan )..அவரிடம் கற்ற வாசிப்பு மறைய போவதில்லை ..
அவரின் ஆத்மா சாந்தியடைய ..என் ஆழந்த இரங்கல்கள் ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681







வெள்ளி, 15 மார்ச், 2019

.உடுமலை ..தளி ரோடு மேம்பாலம் ...இந்த புகைப்படம் எடுப்பதற்கு ..ஒரு வார காலம் ஆனது ...சரியாக .காலை 5.45.....சூரியன் ..சிலுவை ..வட்டத்துக்குள் எடுக்கவேண்டும் என்ற ஆசை ..இதை எடுப்பதற்கு காரணம் பொறுமை எனும் தாரக மந்திரத்தை படிப்பதற்கு .....

வியாழன், 14 மார்ச், 2019

கோவை ..ஓவியர் ஜீவானந்தன் ...அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .......

கல்லூரி பருவத்தில் பிரகாஷ் சந்திராவும் நண்பர்களும் ஆரம்பித்த சித்ரகலா அகாடமியில் மாணவ உறுப்பினராக இணைந்தேன். ஓரிரு வருடத்தில் செயலாளர், பின் உதவி தலைவர், பின் தலைவர் என பொறுப்புகள் என் தலையில். அவர்தான் என் நவீன ஓவிய குருவாக திகழ போகிறார் என்று குழந்தை பருவத்தில் நிச்சயமாக நினைத்திருக்க மாட்டேன். எத்தனை எத்தனை ஓவியக்காட்சிகள்...எத்தனை ஓவியர் கள் என் வாழ்க்கை பாதையில் ! நவீன ஓவியங்கள் குறித்து பல அன்பர்கள் ‘புரியவில்லை’, ‘ஏமாற்று வேலை’ என்றெல்லாம் விமர்சிக்கும்போது எனக்கு மிகவும் கோபம் வரும். இப்போதெல்லாம் வருவதில்லை என்பது ஒரு நல்ல விஷயம்! ஏனென்றால் எனக்கும் இந்த சந்தேகங்கள் வந்துவிட்டன. ஓவியங்களை ரசிக்கும்போது நான் பார்ப்பவை ஓவியரின் உத்திகள், வண்ணங்களின் பயன்பாடு, ஓவியத்தின் உள்ளடக்கம் மட்டுமே. ஓவியங்கள் பார்வை யாளர்களுடன் தொடர்பு கொள்ளும் ஒரு ஊடகம் என்பதில் எப்போதும் எனக்கு நம்பிக்கை உண்டு. அவனை அது தொட வில்லை என்றால் அந்த படைப்பு ஒரு தோல்வி என்றும் திடமாக எண்ணுகிறேன். சில அதி நவீன ஓவியர்களுடன் ஏற்படும் சூடான விவாதங்களில் காரசாரமாக பேசியிருக்கிறேன். ஓவியம் என்பது அவர்களின் சொந்த மன வெளிப்பாடு என்று சொல்லிக்கொண்டு கன்னா பின்னா என்று வரைந்து வைத்த ஓவியர்களிடம், அப்ப இதை எதுக்கய்யா எங்கள் பார்வைக்கு வைக்கிறீர்கள், உங்கள் வீட்டுக்குள்ளேயே வைக்க வேண்டியதுதானே என்றெல்லாம் சண்டை போட்டிருக்கிறேன்.
இப்படி ஒரு சண்டையை ஆதிமூலம் அவர்களுடன் போட்டவுடன்தான் என் ஞானக்கண்ணை அவர் திறந்து வைத்தார்! பிறகு திறந்த மனதுடன் நவீன ஓவியங்களை ரசிக்க தொடங்கினேன். அவருடைய மனவெளி ஓவியங்களில் மனதை பறி கொடுத்தேன். மருதுவின் வீச்சுகள் எனக்கு வீரம் கொடுத்தன...கான்வாஸில்!
என் வளர்ப்பு முழுக்க முழுக்க சினிமா பேனர் பின்னணியில். என் தந்தை முறையாக ஓவியம் படித்ததுபோல் நான் பயிலவில்லை.புகைப்படத்தை போல தத்ரூபமாக ஓவியமும் திகழவேண்டும் என்ற பாரம்பரிய மன ஓட்டமே என்னையும் நடத்தி சென்றது. உருவங்களை சிதைத்து புதிய பாணியை உருவாக்கிய பிக்காசோவுக்கு இளமைக்காலம் இப்படித்தானே! பணிக்கர் முதல்வரான பிறகுதானே, சென்னை ஓவியக் கல்லூரியிலிருந்து இத்தகைய கலைஞர்கள் உருவானார்கள்! பிரகாஷ் சந்திரா போன்ற கலைஞர்களின் தொடர்பு என்னை மனமாற்றத் திற்கு உள்ளாக்கியது! சினிமா பேனர்களில் புதிய உத்திகளை கையாள தொடங்கினேன், என் தந்தையின் எதிர்ப்பை மீறி....புது வண்ண க்கலவைகள், பாரம்பரிய வண்ண பூச்சுகளில் மாற்றம் என்று உருவாக்கியபோது அதற்கும் ரசிகர்கள் உருவானார்கள்.
ஓவிய காட்சிகளில் பல வகையான ஓவியங் களை பார்க்கிறேன். என் நண்பர் நெடுஞ் செழியன் எப்போதுமே பரிசோதனை முயற்சி களில் ஈடுபடுபவர். உத்திகளில் எப்போதும் அதீத ஈடுபாடு. அசுர உழைப்பாளி. முன் னாள் சென்னை ஓவிய கல்லூரி முதல்வர் பாஸ்கரன் பூனைகளை அதிகம் வரைந்தால் இப்போதைய கும்பகோணம் ஓவியக்கல்லூரி முதல்வர் மனோகரனின் ஓவியங்களில் வித விதமான உயிர்ப்புள்ள ஆடுகள் அதிகமாக மேயும் . ரஞ்சித் துணிகளின் சுருக்கத்தில் ஆழ்ந்து விடுவார். சந்தான கிருஷ்ணனுக்கு கதவு களின் மீது காதல் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்!!!!
நான் முதலில் பார்த்த ஓவிய கண்காட்சி எனது பன்னிரண்டு வயதில். ஆர்.எஸ்.புரம் லேடீஸ் கிளப்பில் யூசுப் புராவும் பிரகாஷ் சந்திராவும் நடத்திய நவீன ஓவிய கண்காட்சி . என்னை விட நான்கு வயது இளைய தம்பியும் நானும் தனியாக சென்றோம். ஒரு ரூபாய் நுழைவு கட்டணம்...அது கூட கையில் இல்லை...திரு திரு என்று நின்று கொண்டிருந்த எங்களை பரிதாபமாக பார்த்த பிரகாஷ்ஜி இலவசமாக அனுமதித்தார். ஆர்வமுடன் பார்த்த எங்களிடம், எப்படி இருக்கின்றன ஓவியங்கள் என்று ஆங்கிலத்தில் வினவினார். 'ஒன்றுமே புரியவில்லை' என்று பதிலளித்த என்னை பார்த்து வெடிச்சிரிப்பு சிரித்தார்...'வயதானால் புரிந்துவிடும்' என்று சொல்லி தட்டிக் கொடுத்தார்!!!
வயதானது...புரிந்துவிட்டதா என்ன?
ஓவியர் ஜீவானந்தன் ......
கோவை ..ஓவியர் ஜீவானந்தன் ...அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .......என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681


உங்களின் அன்பால் ...வலைபூக்கள் ...தமிழ் இந்து பத்திரிகை படித்தது சார் ...இன்னும் உங்களை ..கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனை ..சிஃனலில் (அவிநாசி ரோடு ...)முதன்முறையாக சந்தித்து பேசியது நினைவில் ..மலரும் நினைவுகள் சார் ...
பொள்ளாச்சி கூட்டு வன்புணர்வு – அறிவுரைகளும்!ஆணாதிக்க சைக்கோக்களும்!!
– அதிஷா.--(பத்திரிகையாளர் )

ஒரு ரேப் போதுமாக இருக்கிறது தங்களுடைய துறுப்பிடித்த அறிவுரைகளோடு ஆணாதிக்க சைக்கோக்கள் கிளம்ப… பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்துக்கொள்ளாதே, ஆண்களிடம் சாட் பண்ணாதே, டிக்டாக் வீடியோ பண்ணாதே, பெரியாரியம் மார்க்ஸியம் தலித்தியம் கற்றுத்தருவதாக கூறி ஏமாற்றிவிடுவான், உலக சினிமா பாக்காதே… ஆண்களோடு ஊர்சுற்றாதே, ட்ரெக்கிங் போகாதே, போராட்டத்திற்கு போகாதே, ஷால் போடு… எவ்வளவு அறிவுரை.

அறிவுரைகளைக்காண அருவருப்பாக இருக்கிறது. இதன் தொடர்ச்சிதான் பெண்கள் கல்லூரிக்கு போகக்கூடாது, காதல் பண்ணக்கூடாது, புத்தகம் படிக்க கூடாது மாதிரியான வக்கிர எண்ணங்கள் எல்லாமே. பெண்கள் என்ன செய்ய வேண்டும் என இந்த உலகமகா உத்தம ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள் . 24 மணிநேரமும் உள்தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு ஃப்ரிட்ஜூக்குள் போய் கால்மடக்கி உட்கார்ந்து கொள்ள வேண்டுமா? வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடவேண்டுமா.

பர்தா போட்டுக்கொண்டால் ரேப் நடக்காது என்று சொல்கிற மதவாத முட்டாள்களுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு. ஒட்டுமொத்த ஆண்சமூகமுமே குற்றவாளிகள் என்று சித்தரிப்பது இன்னொருவகை பைத்தியகாரத்தனம். எத்தனையோ ஆண் குற்றவாளிகள் இருந்தும் இரண்டு பாலினத்தவர்களிடையேயான பரஸ்பர நம்பிக்கையில்தான் பல கோடி ஆண்டுகளாக இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதை சாக்காக வைத்துக்கொண்டு அடிப்படைவாத அறிவிலிகளைப்போல காதலுக்கு எதிராக ஆண்பெண் நட்புக்கு எதிரான பரப்புரைகளை முன்னெடுப்பது இன்னும் கேவலம்…  பாதுகாப்பாக இரு என்று அறிவுரை சொல்வது வேறு… ஆனால் குனிந்த தலை நிமிராமல் கட்டைவிரல் பார்த்து நட, அடக்க ஒடுக்கமாக இரு என்பது வேறு. அடிப்படைவாத மயிராண்டிகள் சொல்வது முடங்கிவிடு என்பதுதான்.

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் பெரும்பாலான ஒற்றுமை ஒன்று உண்டு. இந்த அயோக்கியர்களின் முக்கியமான ஆயுதமே குழந்தைகளுக்கு தங்கள் பெற்றோர்கள் மீது இருக்கிற அச்சம்தான். உலகிலேயே குழந்தைகள் தன் வீட்டில் போய் எதையாவது சொன்னால் குழந்தைகளையே சந்தேகித்து அவர்களையே குற்றவாளியாக்கி மிரட்டுகிற வினோதமான சமூகம் நம்முடையது. இந்த பாலியல் சைக்கோக்கள் இதைத்தான் பயன்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகளின் தவறுகளுக்காக காத்திருப்பார்கள். அந்த தவறை பெற்றோரிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டுவார்கள். தங்களிடம் பணியவைப்பார்கள். இதில் அந்தக்குழந்தையின் குற்றம் என்ன இருக்கிறது. பொள்ளாச்சியில் நடந்திருப்பதும் அவ்வகை குற்றமே.

குழந்தைகள் மீதான குற்றங்களில் மட்டுமல்ல பெண்கள் மீது நடக்கிற பெரும்பான்மை சைபர் குற்றங்களில் நடப்பது இதுதான்.  பொள்ளாச்சி வன்கொடுமையில் நடந்ததும் இவ்வகை குற்றம்தான். இந்த வீடியோவை வெளியிட்டால், இந்த புகைப்படத்தை இணையத்தில் பரவவிட்டால் வீட்டில் என்ன சொல்வார்களோ, சமூகம் தன்னை என்ன நினைக்குமோ என்கிற அச்சம்தான் இந்தப்பெண்களை எல்லாம் முடக்கிவிடுகிறது. இதுதான் இந்த குற்றவாளிகளுக்கு வசதியாக இருக்கிறது. இந்தியாவில் பாலியல் வன்கொடுமை ஒன்றில் மட்டும்தான் குற்றவாளிகளை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவரை தண்டிக்கிற வினோத வழக்கமெல்லாம் வைத்திருக்கிறோம். Victim Shamingஐ ஒழிக்காமல் ஒரு மண்ணாங்கட்டி மாற்றத்தையும் நம்மால் உருவாக்கிவிட முடியாது.

நாம் தொடங்கவேண்டிய இடம் வீடு. குழந்தைகள் எத்தகைய தவறு செய்திருந்தாலும் அதை வீட்டில் வந்து உரையாடுவதற்கான வெளியை உருவாக்க வேண்டும். நாம் சொன்னால் பெற்றோர்கள் காதுகொடுத்து கேட்பார்கள் என்கிற நம்பிக்கையை விதைக்கவேண்டும். நாம் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாமல் போய்விடுவார்களோ என்கிற அச்சம் உருவாகிவிடாத படி சிறுவயதிலிருந்தே வளர்க்க வேண்டும். பாலின பேதங்களின்றி வளர்க்க வேண்டும். ஆம்பளை சிங்கம், பொம்பளை மயில்… என்றெல்லாம் பிதற்றிக்கொண்டிருக்க கூடாது.
தவறு செய்தாலும் அதை திருத்திக்கொள்வதற்கான வாய்ப்பையும், பரவால்ல பாத்துக்கலாம் என்று தோள் தட்டிக்கொடுக்கிற நம்பிக்கையும்தான் இவ்வகை குற்றங்களை தடுக்கும். ஏனெனில் என்னதான் கல்வி வந்தாலும் இன்னமும் இங்கே சாதி இருக்கிறது, மதவெறி இருக்கிறது, ஆணாதிக்கம் இருக்கிறது. அதற்கெல்லாம் மேல் இவ்வகை பாலியல் மனநோயாளிகள் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறார்கள். இருப்பார்கள்.

– அதிஷா.(பத்திரிகையாளர் )

புதன், 13 மார்ச், 2019


கொங்கு மண்டலமும் குற்றங்களும்....


தமிழகத்திலேயே கோவையில்தான் கல்லூரி மாணவர்களிடையே மிக அதிகளவு கஞ்சாவும், போதை மாத்திரைகளும் கிடைப்பதாக ஒரு பேராசிரியர் சொன்னார். தனியார் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் அவர். மிகைப்படுத்திச் சொல்கிறார் என நினைத்தேன். ஆனால் விசாரித்துப் பார்த்தால் அவர் சொன்னதில் உண்மையில்லாமல் இல்லை. மாணவர்களுக்கு எங்கிருந்தோ கஞ்சா கிடைக்கிறது. தனியார் மருத்துவமனைகளிலிருந்து மயக்க மருந்துகள் கடத்தப்பட்டு அவை ‘ஷாட்’களாக கல்லூரி மாணவர்களுக்கு விற்கப்படுகிறது. மிகச் சாதாரணமாக எக்ஸ்டெஸி மாத்திரைகளை வாங்குகிறார்கள். இப்படி இன்னமும் நமக்குத் தெரியாதவையெல்லாம் மாணவர்களுக்குச் சாத்தியமான சமாச்சாரங்கள்.

தமிழகத்தில் மிக அதிகளவிலான பண மோசடிகள் நடக்கும் ஊர்களில் திருப்பூரும் ஒன்று. கடன் வாங்கிவிட்டு தலைமறைவாவது தொடங்கி, செக் மோசடிகள், கந்துவட்டி என பட்டியல் மிகப்பெரியது. கொங்குப்பகுதியைச் சார்ந்தவன் என்ற முறையில் ஊர் மீதான பெருமிதம் இருந்தது. இங்கேயிருக்கும் மக்கள் மரியாதை தெரிந்தவர்கள்; பண்பானவர்கள் என்கிற எண்ணமெல்லாம் நிறைய இருந்தது. இன்னமும் இருக்கிறதுதான். வெள்ளந்தியான மனிதர்களைப் பார்க்கும் போதும், கிராமங்களில் வேளாண்மை செய்தும் பிழைத்துக் கொண்டிருக்கிறவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் அதே பகுதியில்தான் பணமே பிரதானம் என்று எந்தவிதமான அறமும் இல்லாமல் ஒரு பெருங்கூட்டம் மிக வேகமாக வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. 

அறமில்லாத இடத்தில் எல்லோருமே வெட்டுப்படுவதுதான் நியதி. அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. 

‘குற்றங்கள் எல்லா ஊர்களிலும்தான் நடக்கிறது. இன்றைக்கு ஒரு பிரச்சினை பூதாகரமானவுடன் இந்தப் பகுதியே அப்படித்தான்னு சொல்ல வேண்டுமா?’ என்று கோபம் வரத்தான் செய்யும்.  ஆனால் இதையெல்லாம் எப்பொழுது பேசுவது? ஒரு பிராந்திய மனநிலை என்றிருக்கிறதல்லவா? அங்கே நிலவும் பொது உளவியல் என்ன என்பது பற்றியதான விவாதங்கள் அவசியமில்லையா? புனிதமான பிம்பங்களை உடைத்து உண்மையிலேயே என்னதான் பிரச்சினை என்று புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது.  

நான்கு பேர்கள் நல்ல மனிதர்கள் என்றால் அதில் ஒருவராவது கபட எண்ணம் கொண்டவராக இருக்கிறார். மற்ற நான்கு பேர்களைப் போலவே அவர்களும் தும்பைப்பூ வெண்மையில் உடை தரித்து, ஆன்மிகம், கடவுள் எனப் பேசி மதத்தையும், சாதியையும், பணத்தையும் முகமூடியாகத் தரித்துக் கொள்கிறார்கள். மற்ற நான்கு பேர்களும் இவரை நம்பத் தொடங்குகிறார்கள். மற்றவர்களிடம் இந்த வேடதாரியைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறார்கள். அதைப் பார்க்கும் பிற சல்லிகளும் அதே வேடங்களை இம்மி பிசகாமல் ஏந்திக் கொள்கிறார்கள். இப்பொழுதெல்லாம் யாரையும் நல்ல மனிதர் என்று நம்புவதைவிடவும், பார்க்க பாந்தமானவராக இருக்கிறார் என்று கருதுவதைவிடவும் ‘தமது எல்லாவிதமான குற்றவுணர்ச்சிகளையும் மறைப்பதற்கான வேடமாகவும், நியாயப்படுத்துதலாகவும் இப்படியொரு தோற்றத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு பேசித் திரிகிறார்களோ’ என்று பதற்றமாக இருக்கிறது. அதற்கேற்ற வேடங்களில் பொருத்தமானவற்றை இந்தப் பகுதியே வழங்குகிறது.

அரிவாளை எடுத்து வெட்டி வீசுகிறவர்களைவிடவும் சாந்தமானவர்களாக நடிக்கிறவர்கள் பேராபத்துக் கொண்டவர்கள். கொங்கு மண்டலம் முழுக்கவும் அப்படியானவர்கள் விரவியிருக்கிறார்கள் என்று நினைக்கும் போதே மனம் பதைபதைக்கிறது.

இன்னொரு புள்ளியையும் பார்க்க வேண்டியிருக்கிறது. அறம் சார்ந்து சம்பாதிப்பவர்களும் கூட ‘சம்பாதிப்பதெல்லாம் நம் பிள்ளைக்குத்தானே’ என்று  ஏகபோகமாக வாரி வழங்குகிறார்கள்.  அறம், வாழ்க்கை நெறிமுறைகள் என்பதையெல்லாம் தாண்டி ‘சந்தோஷமா இரு கண்ணு’ என்று தமது பிள்ளைகளுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள். பணம் கொழிக்கும் ஓர் இளம் சமூகம் என்ன செய்வதென்று தெரியாமல் தறிகெட்டுத் திரிகிறது.  ஒரு கூட்டத்தில் தீய வழிக்கான தேடல்களோடு இருப்பவர்கள் இரண்டு பேர் இருந்தால் போதாதா? இன்னமும் நான்கு பேர்களை வளைத்துக் கொள்வார்கள். பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறது. நாளை அவன் சம்பாதிக்கும் போது ‘எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்’ என்றே முழுமையாக நம்புகிறான்.

அரையும் குறையுமாக பிரச்சினைகள் பற்றித் தெரிய வந்தாலும் கூட ‘நம் பையன் இதைச் செய்ய மாட்டான்; நம் பொண்ணு இதைச் செய்ய மாட்டாள்’ என்று நம்புகிற பெற்றோர்களே அதிகம்.  அப்படியே நம்பினாலும் கூட ‘வயசு அப்படி..போகப் போக சரியாகிடும்’ என்று அதைவிடவும் அதிகமாக நம்புகிறார்கள். இவற்றையெல்லாம்தான் இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அதிகாரம், கொழிக்கும் பணம், எதையும் மூடி மறைத்துவிட முடியும் என்கிற தைரியம், கட்டற்ற சுதந்திரம், காமம், போதை, தொழில்நுட்பம் என பல தரப்பும் ஒரு தலைமுறையையே சிதைத்துக் கொண்டிருக்கிறது. பணம் இருந்தால் பிற எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம் என இன்னொரு கூட்டம் இதே மண்ணில்தான் மேற்சொன்ன எல்லாவற்றையும் தமக்கு ஏற்றபடி வளைத்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல வாய் நிறைய மரியாதையோடு அழைக்கும் மனிதர்கள் மட்டுமே நிறைந்த பிரதேசமாக இல்லை. மோசடிக்காரர்களும், அதிகார வெறி கொண்டவர்களும், சாதியப் பித்து ஏறியவர்களும், மதத் துவேஷம், இவற்றையெல்லாம் வர்த்தமாக்கத் தெரிந்து கொண்டவர்களும் நிறைந்து பெருகிக் கொண்டிருக்கும் களமாக மாறிக் கொண்டிருக்கிறது கொங்கு மண்டலம். இப்படியான அயோக்கியர்கள் அத்தனை பேருக்கும் நன்கு வேடம் அணியத் தெரிகிறது. அதே மரியாதை நிறைந்த வார்த்தைகளுடன் அன்பு குழையப் பேசத் தெரிகிறது. இப்படியான சூது நிறைந்த மனிதர்கள் சேர்ந்து ஒரு பகுதியின் பிராந்திய மனநிலையைக் கட்டமைக்கிறார்கள். ‘எந்த வரைமுறையில்லாமல் சம்பாதிக்கலாம். சம்பாத்தியம் மட்டுமே முக்கியம்’ என்று பிறரையும் நம்ப வைக்கிறார்கள். இங்கு நிலவும் நிலைகுலையச் செய்யும் மோசடிகளுக்கும், அத்துமீறல்களுக்கும் இப்படிக் கட்டமைக்கப்படும் பொது உளவியலே முழுமையான காரணம் என்று தீர்க்கமாக நம்பலாம். ‘புதுக்கோட்டையிலும் ராமநாதபுரத்திலும் கொலை செய்தவனெல்லாம் தப்பிச்சு வந்து இங்கே பனியன் கம்பெனியில் வேலை செய்கிறான்; அதனால்தான் குற்றச் செயல்கள் அதிகமாகிவிட்டன’ என்று அடுத்தவர்கள் மீது பழியைப் போடுவதும் கூட ஒருவிதமான தப்பித்தலே. நாம் எல்லாவிதத்திலும் சரியாக இருக்கிறோமா என்றும் யோசித்துப் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் உண்டாகியிருக்கிறது. 

கடந்த தலைமுறை வரைக்கும் குழந்தைகளுக்கு இவ்வளவு செகளரியங்கள் வழங்கப்படவில்லை. கேள்வி கேட்காமல் பணம் கொடுக்கப்படவில்லை. இரு சக்கர வாகனங்களும், கார்களும் கேட்காமலே கிடைக்கவில்லை. நீதி போதனை பேசினார்கள். திருக்குறளும், அறநெறிகளும் கற்பிக்கப்பட்டன. குடிப்பது அவமானம் என்ற பிம்பம் இருந்தது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பயப்பட வேண்டும் என்ற சூழல் இருந்தது. ஆசிரியர்களுக்கான சுதந்திரம் இருந்தது. திசை மாறும் பிள்ளைகளை அவர்கள் தண்டிக்கும் உரிமையைப் பெற்றிருந்தார்கள். குழந்தைகள் மீதான கண்காணிப்பு சற்றே வலுவாக இருந்தது. அதுதான் சமூகத்திற்கான பொதுவான மனநிலையை உருவாக்குவதாகவும் இருந்தது.  இன்றைக்கு எல்லாவற்றையும் உடைத்து வீசியிருக்கிறோம். பக்கத்து வீட்டுப் பையன், எதிர்வீட்டுப் பெண் என பிறரை அளவுகோலாக வைத்துத்தான் நம்முடைய முடிவுகள் இருக்கின்றன. ஆசிரியர்கள், பள்ளிகள் என்பதைவிடவும் தொழிலும் வருமானமுமே உளவியல் கட்டமைப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. எந்தவிதமான கட்டுப்பாடுகளுமில்லாதவர்களுக்கு எதைப் பற்றிய யோசனையுமில்லாமல் போய்விடுகிறது. பின்விளைவுகள் பற்றியக் கவலையே இல்லாமல் ஆகிவிடுகிறது.

கட்டுப்பாடில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் குதிரையின் கடிவாளத்தை இழுத்துப் பிடித்தே தீர வேண்டும். நம்மை நம் பெற்றோர்கள் எப்படி வளர்த்தார்கள் என்று குறைந்தபட்சமாகவாவது சிந்திக்க வேண்டும். பணத்தைத் தாண்டி நம் வாழ்க்கையை அர்த்தப்படுத்தும் நெறிகள் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளாதவரைக்கும் சூழல் மோசமாகிக் கொண்டேதான் இருக்கும். ஆனால் அதெல்லாம் இனி சாத்தியமா என்றே தெரியவில்லை. எந்தவிதமான சுய உணர்வுமில்லாமல் ஓடுகிற வேட்டை நாயாக இந்தப் பகுதி மாறிவிட்டது என்றுதான் தோன்றுகிறது.

மாற்றம் வரும் ...நம்பிக்கை தானே வாழ்க்கை .....மீண்டுவிடுவோம் ...

செவ்வாய், 12 மார்ச், 2019

இன்று மாலை உடுமலைப்பேட்டையில்  ..இராமய்யர் திருமணமண்டபத்தில் நடந்த திருமணநிகழ்வு ...நமது சொந்தம் "பொம்முராஜ் -கீர்த்திகா -மணமக்களுக்கு கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக திருமண வாழ்த்துக்கள் ..
நம் தம்பிகள் ,மாப்பிள்ளைகள் ,நமது சொந்தங்களின் கலகலப்பான பேச்சுக்களின் ஊடே ...உரையாடல்கள் ...மூன்று மணிநேரம் கடந்தது தெரியவில்லை ..மகிழ்ச்சி ...

ஞாயிறு, 10 மார்ச், 2019

உலக அதிசயங்கள் 7...??!! 🤔🤔💓💓💓🌱🌱🌷🌷

ஒரு வகுப்பில் ஆசிரியர் 👍👍பிள்ளைகளை உலகின் சிறந்த ஏழு அதிசயங்களைப் பட்டியலிடச் சொன்னார்.

பிள்ளைகள் அனைவரும் எழுதிக் கொடுத்துவிட்டனர். அவர்களின் கணிப்புப் படி கீழ்க்கண்டவை உலக அதிசயங்கள் வரிசைப் படி.

1.எகிப்தியப் பிரமிடுகள்.
2.தாஜ்மஹால்
3.கிரேண்ட் கேன்யான் (Grand Canyon )
4.பனாமா கால்வாய்
5.எம்ப்பையர் ஸ்டேட் கட்டிடம். (Empire State Building )
6. செயின்ட் பீட்டர் பேஸிலிக்கா (வாடிகன்)
7. சீனப் பெருஞ்சுவர்

ஒரே ஒரு குழந்தை மட்டும் இன்னும் முடிக்கவில்லை;யோசித்து யோசித்து எழுதிக் கொண்டிருந்தான் . ஆசிரியர் அருகில் சென்றார்

" ஷியாம் சுதிர் ..! என்ன ஆயிற்று ஏன் இன்னும் முடிக்கவில்லை?

"என்ன சார் செய்வேன்? ஆனடவனின் படைப்பில் அதிசயங்களுக்குப் பஞ்சமேயில்லை. அவற்றில் எனக்கு அதிசயமாகத் தோன்றியவை களைப் பட்டியலிட்டு விட்டேன். சரிதானா எனப் பார்த்துச் சொல்லுங்கள்." என்றான் .

ஆசிரியர்  ஷியாம் சுதிர் பட்டியலை வாசித்தார்.

ஷியாம்வின்  பட்டியல் இதோ:

என்னைப் பொருத்தவரை இந்த ஏழும்தான் கடவுளின் படைப்பில் அதிசயங்களாகக் கருதுகிறேன்.

1. பார்க்க முடிவது (ஒருநாளைக்குக் கண்களில் கர்சீஃபைக் கட்டிக்கொண்டிருந்து பாருங்கள்)

2.கேட்க முடிவது (ஒருநாளைக்குக் காதில் பஞ்சு வைத்துப் பாருங்கள்)

3.தொட்டு உணர முடிவது ( கற்பனை செய்து பாருங்கள் உங்கள் 6 மாதக் குழந்தை உங்களைத் தொடுவதை உணரமுடியாவிட்டால் எப்படியிருக்கும் என்று)

4.சுவையை உணர முடிவது ( பிரியாணிக்கும் கம்மங்கூழுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருந்தால் எப்படியிருக்கும்)

5.சிந்திக்க முடிவது (இதை விடாய் பெரிய தணடனை இருக்கமுடியுமா?)

6.சிரிக்க முடிவது (எவ்வளவு சந்தோஷப்பட்டாலும் மிருகங்களால் சிரிக்க முடிவதில்லை. சிரிப்பு எவ்வளவு பெரிய வரப்பிரசாதம் மனிதனுக்கு?

7.அன்பு செலுத்துவது( ஒரு நாய்க்குட்டி வளர்த்துப்பாருங்கள் அன்புக்கு அர்த்தம் தெரியும்)

வகுப்பில் ஒரே அமைதி (pin-drop silence). ஆசிரியர் மெதுவாகக் கைதட்டினார். புரிந்ததும் எல்லாக் குழந்தைகளும் ஒவ்வொருவராகக் கை தட்ட ஆரம்பித்தன.

வகுப்பே கைதட்டிப் பாராட்டியது ஷியாம் சுதிர்வை.

எல்லோரும் யோசிப்பது போலவே யோசிக்க வேண்டுமா என்ன? உங்களில் உங்களுள் தனித்து  யோசியுங்கள். புதுப் புது விஷயங்கள் புரிய வரும்.

 புதுப் புது  ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் அர்த்தங்கள் தோன்றும்...👏👏👍👍💓💓
🌱🌱என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681🌷🌷

சனி, 9 மார்ச், 2019

பாலியல் கல்வி எனும் தேவையுள்ள ஆணி . . . . . . . . . . . !
– அனஸ் சுல்தானா....

பாலியல் கல்வி (Sex Education) என்ற வார்த்தையை பார்த்தவுடன் பலருக்கும் ‘உவாக்’ என்றும் ‘இது தேவை இல்லாத ஆணி’ என்றும் நினைக்கத் தோன்றும். ஆனால் ஒரு சமூகத்தின் வளர்ச்சியை இந்த ஆணியைப் பற்றிய விவாதங்களையும் உள்ளடக்கியது தான் என்று கருதுகின்றேன். பாலியல் கல்வி என்றாலே ‘பலான விஷயங்களை’ எல்லாம் சொல்லிக் கொடுப்பாங்க என்றொரு பொதுபுத்தி நம் மனங்களில் பதியப்பட்டிருக்கிறது. அப்படி நினைக்கவேண்டியதில்லை. அது நம்முடைய அறியாமையே.

நான் பள்ளி பருவத்தைத் தொட்டு மாணவர் சங்கத்தோடு பயணித்த போது தான் வெளிவாசிப்பின் (out of syllabus) தேவைகளை உணர்ந்து எங்கள் பகுதியில் உள்ள ஒரு அரசு நூலகத்தில் உறுப்பினரானேன். எதை எதை வாசிப்பது என்று கூட தெரியாமல்,கண்டதை எல்லாம் வாசிக்க ஆரம்பித்தேன். எங்கள் ஊர் நூலகத்தில் பேப்பர் படிக்க தான் கூட்டம் வருமே தவிர,புத்தகம் படிக்க வெல்லாம் பெரிசா இருக்காது.அதனாலே எல்லா புத்தகங்களும் புத்தம் புதுசாகவே இருக்கும்.ஒன்றிரண்டு நபர்கள் படித்தாலே அது அதிசயம்.

ஆனால் அந்த நூலகத்தில் அடுக்கி வைத்திருந்த வரிசைகளில் ஒரேயொரு புத்தகம் மட்டும் கந்தல் கந்தலாக இருந்தது. அந்த புத்தகத்தை நானும் வாசிப்பதற்காக வீட்டுக்கு எடுத்துச் சென்றேன். அப்போது அந்த நூலகர் புத்தகத்தின் முன்னட்டையை பார்த்துவிட்டு என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். என்னமோ இதுல வேறுபல சமாச்சாரங்கள் தான் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து படிக்க ஆரம்பித்தேன். மிருகங்கள்,பறவைகள்,மனிதர்கள் எல்லாரையும் பற்றிய சின்ன சின்ன பாலியல் கதைகளாக அதில் தொகுக்கப்பட்டிருந்தது. அப்புறம் தான் அந்த புத்தகத்தின் பெயர் ‘மறைவாய் சொன்ன கதைகள்’ என்று அச்சிட்டிருப்பதை பார்த்தேன். எழுதியவர் கி.ராஜநாராயணன் என்றிருந்தது. (தமிழ் இலக்கிய உலகம் சுருக்கமாக அழைக்கும் கி.ரா இவர் தான் என்பதை பின்னர் தெரிந்து கொண்டேன்.)

அதில் ஒரு கதை: ‘ஒரு காளையும் பசு மாடும் ஒரு ஓரமா ஒதுங்குச்சாம். அப்போ அந்த பசு மாட்டு மேல ஒரு காக்கை உக்காந்துட்டு இருந்துச்சாம். திடீர்ன்னு அந்தக் காளை மாடு பசு மாட்டு மேல ஏற, என்னடா இந்தக் காளை பண்ணுதுன்னு அந்த காக்க குனிஞ்சு பாக்க, அந்த காக்கா பசுமாட்டு வைத்துக்குள்ள போய்யிடுச்சி!’ என்று ஒரு கதை. அதே போல  ‘வெற்றிலைக்கு பெண் உறுப்பின் வாசனை வரும்’ என்று மற்றொரு கதையை வாசித்துவிட்டு ஒரு மாதிரி ஆகிப்போனதால் அப்படியே வைத்துவிட்டேன். (பின்பு பல நாள் கழித்து தான் அந்த புத்தகத்தை வாசித்து முடித்தேன்.)

இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்று தானே நினைக்கிறீர்கள்! வேறு என்ன பாலியல் கல்வி பற்றி எளிமையாக விளக்குவதற்கு தான். நம் இலக்கியங்கள் பலவும் நம் மனிதர்களின் பாலியல் உணர்வுகள், தேவைகள், கற்பனைகளைக் கொண்டே உருப்பெற்றிருக்கிறது. ஆனால் தற்போது அதன் தேவை நவீனமயமாக்கப்படும் போது கலாச்சாரச் சீர்கேடு என்ற பதட்டத்திற்குள்ளாகிறார்கள் பழமைவாதிகள். பாலியல் கல்வி என்ற வார்த்தையை வெறும் உடல் உறவை மட்டுமே சொல்லிக்கொடுப்பது என்று புரிந்து கொண்டதால் தான் அதை பற்றி பொதுவெளியில் நாம் விவாதிக்க முன்வருவதில்லை.

சில வருடங்களுக்கு முன்பு சேலத்தில் இளம் பெண்கள் பங்கேற்ற மாநில அளவிலான ஒரு கூட்டத்தில் நான் கலந்துக்கொள்ள நேர்ந்தது. அப்போது அங்கு 300 இளம் பெண்களும் 30 ஆண்களுமாக பங்கேற்றோம். ‘பெண் உடலைப் பற்றி அறிவோம்’ என்கிற தலைப்பில் ஒருவர் பேச ஆரம்பித்த பொழுது அங்கிருந்த 30 ஆண்களும் வெளியேற எழுந்தோம். ஆனால் அந்த வகுப்பு எடுத்தவர் ஆண்கள் யாரும் வெளியேற வேண்டிய அவசியம் இல்லை, சொல்லப்போனால் பெண்களை விட நீங்கள் தான் அவர்களின் உடலை பற்றி புரிந்துக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்தார். அப்போது அவர் அந்த இளம் பெண்களை நோக்கிக் கேட்ட முதல் கேள்வியே எத்தனை பேர் உங்கள் பெண் உறுப்பை நீங்களே தொட்டுப் பார்த்து இருக்கின்றீர்கள் என்று கேட்டார்.அங்கு இருந்த 300 பேர்களில் வெறும் 20 பேர்கள் தான் ஆம் என்று பதில் சொன்னார்கள். மற்றவர்கள் பதில் ஏதும் சொல்லாமல் கீழே இறக்கிய தலையை மேலே கூட தூக்கிப் பார்க்கவில்லை. அதில் பெரும்பாதி பேர் அச்சத்தாலும் கூச்சத்தாலும் சொல்லவில்லை என்று வைத்துக்கொண்டாலுமே கூட மீதி நபர்கள் உண்மையாகவே தன் பெண் உறுப்பைப் பார்க்க வேண்டும் என்ற அந்த யோசனையே அவர் கேட்கும் முன்பு வரை அவர்களுக்கு எழவில்லை என்று தான் புரிந்துகொள்ள முடிந்தது. தன் பெண் உறுப்பில் clitorius, vagina, urethral opening , labia majora, labia minora போன்ற பகுதிகள் இருக்கின்றன என்பதைக் கூட அறியாத நிலையில் தான் பல பெண்கள் இருப்பதைப்போல அவர்களும் இருந்தார்கள். இதை விடப் பெரிய அறியாமை என்னவென்றால் ஆண்களில் பல பேருக்கு பெண் உறுப்பில் இரண்டு துளைகள் இருக்கும்,அதில் ஒன்றில் தான் அவர்கள் சிறுநீர் கழிக்கிறார்கள் என்பது கூட அறியாதவர்களாகத்தான் இருக்கின்றார்கள். அவர்களைப் (ஆண்கள்) போலவே பெண்களுக்கும் சிறுநீரும் விந்தனுவும் ஒரே துளையின் வழியாகத்தான் வெளியேறுகின்றது என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். (அதனால் இன்றும் ‘எப்படி மச்சான் urine போற இடத்துல எல்லாம் வாய் வைக்க முடியும்?’ என்றும் கேட்கும் ஆண்கள் தான் அதிகம்.)

இப்படித்தான் ஆண்கள் உடலைப் பற்றி பெண்களுக்கு தெரியாமலும்,பெண்கள் உடலமைப்பைப் பற்றி ஆண்கள் தெரிந்துக்கொள்ளாமலும் இருந்து வருகிறோம். குறைந்த பட்சம் நம் பள்ளிக் கல்வியில் இருக்கும் Reproductive Organ பற்றிய பாடத்தைக்கூட நம் ஆசிரியர்கள் நடத்தத் துணியாமல் தவிர்க்கிறார்கள். என்பது தான் வேதனையான விஷயம். எனது 10ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தில் இந்தப்  பகுதியை நடத்தாமல், ‘இதிலிருந்து எந்த கேள்வியும் கேட்கமாட்டார்கள்,’ என்று என் அறிவியல் ஆசிரியை சொல்லிவிட்டு, மாறாக ‘இந்திந்த சாப்டர்களில் இருந்து இத்தனை மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்பார்கள் அல்லது சாய்ஸ்ல விட்டிடலாம்,’ என்று சொல்லி அதை மட்டும் படித்தால் போதும் என்று சொல்லிக்கொடுத்து, அந்த ஒரு பக்கத்தை மட்டும் முழுமையாக நடத்த மறுத்துவிடுவார்கள்.

பின்பு 11ஆம் வகுப்பில் நடந்தது இன்னும் மோசம். நான் படித்தது ஆண்கள் மேல்நிலை பள்ளி என்பதால் உயிரியல் (Biology) பிரிவு மாணவர்களுக்கு மட்டும் உயிரியல் வாத்தியார் ஆணுறை (condom) பயன்படுத்துவது எப்படி என்று வகுப்பு எடுத்துக்கொண்டு இருந்தார். கம்பியூட்டர் சயின்ஸ் குரூப் மாணவர்களுக்கும் ஆர்ட்ஸ் குரூப் மாணவர்களையும் இந்த வகுப்பில் சேர்த்துக்கொள்வதில்லை. நமது பாடத் திட்டம் கூட, இந்த குரூப் மாணவர்களுக்கு ஆணுறை அணிய அவசியம் வராது என்ற முடிவுக்கு வந்துவிட்டது ஏனென்று இன்னும் கூட விளங்காத சங்கதியாகவே இருக்கிறது.

மேலை நாடுகளில் சொல்லித்தரப்படும் பாலியல் கல்வியில் மூன்றில் ஒரு பகுதியைக்கூட இங்கு சொல்லிக்கொடுத்தால் போதுமானது. அப்படி செய்தால் தான் இளம் தலைமுறை தங்கள் வாழ்க்கையில் எதிர் நோக்கி சந்திக்க வேண்டிய உடலியல் பிரச்சனைகளுக்கு அவர்களுக்கு அவர்களாகவே குறைந்த பட்சமேனும் சரிசெய்துகொள்ளமுடியும்.

இளவயதில் ஏற்படும் உடல் மாற்றங்களுக்கும் பாலியல் சந்தேகங்களும் பதில் சொல்ல வேண்டிய அவசியத்தை பற்றி கவலைக் கொள்ளாமல், ஒரு உயர்கல்வி எப்படி ஆரோக்கியமாக அமையமுடியும். இந்த அடிப்படையான தேவையைப் பற்றி ஒரு அறிவார்ந்த சமூகம் விவாதித்திட வேண்டும்.

வியாழன், 7 மார்ச், 2019

கம்பள விருட்சத்தின் மூன்றாண்டு காலப் பணிகளில்  சில உங்களுக்காக . . .
கம்பள விருட்சத்தின் மூன்றாண்டு காலபயணத்தில் உடன் நின்ற அன்பர்களுக்கும் உறவுகளுக்கும் கம்பள விருட்சத்தின் பணிகள் தெரிந்திருக்கும் . . இருப்பினும்  கடந்த காலப்  பணிகளை நினைவு கூறுவதும் அடுத்து செய்ய வேண்டிய பணிகளுக்கு ஒரு அடிப்படையே,
அந்த வகையில் கடந்த மூன்றாண்டுகளில்  கல்வி மேம்பாட்டுப்பணிகள் எனும் அளவில்  நமது சமூகத்தைச் சார்ந்த சொந்தங்களுக்குக் கல்வி உதவித்தொகையை வழங்கியுள்ளோம்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய நமது அறக்கட்டளையின் நடவடிக்கைக்கு கொண்டு வந்த பதினைந்து சொந்தங்களுக்கு தனியார் பணிகள் வாங்கிக்கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வாக தேவராட்டம் எனும் பெயரைக்கொச்சப்படுத்தும் வகையில் திரைப்படத்திற்கு வைக்கத் துணிந்ததை எதிர்த்து உடுமலையில் மாபெரும் தேவராட்டம் நடத்தப்பட்டு இன்று அந்தத் திரைப்படம் நமது அறக்கட்டனையின் தொடர்ச்சியான சட்டப்போராட்டங்களின் நெருக்கடியில் இன்று தனது திரைப்படத்தின் பெயரை மாற்றும் அளவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கோட்டமங்கலம் வல்லக்கொண்டம்மன் திருக்கோயிலில் உள்ள சிற்பங்கள்,சிஞ்சுவாடியில் உள்ள  நமது பாரம்பரியச்  சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு அது பராமரிக்கப்படும் என்ற சாதக நிலையை நமது அறக்கட்டளையின் மூலம் கொண்டுவந்துள்ளோம்.
உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் எனும் தளிஎத்தலப்பர்  பாளையக்காரரின் வீரத்தை ஆவணப்படுத்தும் பணியில் நமது கம்பள விருட்ச அறக்கட்டளை பெரும் சிரத்தையெடுத்து நூல் வெளிவருவதற்கும், 2018 மே 19 அன்று மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னிலையில் தேவராட்டம் ஆடி பொதுநிகழ்வாக நடக்க ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டது.வரும் காலங்களில் இன்னும் வேகம் கூடும் ..
அன்பு திருப்பூர் மாநகர கம்பள சொந்தங்களுக்கு ..💓💓🙏🙏
🌱🌱🌳🌳கம்பள விருட்சம் அறக்கட்டளையின் 🌱🌱🌳🌳.
👍👍அறிமுக கலந்தாய்வு நிகழ்வு ..🌷🌷
வரும் ஞாயிறு 10-03-2019...
இடம் ஹோட்டல் ஸ்ரீனிவாஸ் (மேல்மாடி )
பெரியார் காலனி பஸ் ஸ்டாப் ,
அவிநாசி ரோடு
திருப்பூர் ...

உறவாக இணைவோம் .🌱🌱..ஓர் உன்னதம் படைப்போம் ...🌷🌷
கரம் கோர்த்து ...🌷🌷அறம் செய்ய ....🌳🌳
கனிவுடன் உங்களை வரவேற்கிறோம் ....👍👍🎄🎄

கௌரவ தலைவர் :வழக்கறிஞர் முருகராஜ்
9894202111
பொருளாளர் :பொன் தமிழரசன்
9524777030
செயலாளர் -கார்த்திகேயன்
9894174016
மேலும் தொடர்புகளுக்கு :7708202061,8903674016
www.kambalavirucham.in
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681

மகளிர் தின வாழ்த்துக்கள் நமது கம்பளசமுதாயத்தில் பெண்கள்

மகளிர் தின வாழ்த்துக்கள் -நமது கம்பளசமுதாயத்தில் பெண்கள்

உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மூலம் ஒரு தாய், முழு  பெண்ணாகிறாள். ”அன்பு, ஆதரவு, பகிர்தல்” இது மூன்றுக்கும் அர்த்தமாய் மனிதகுலத்தில் வாழ்பவள் பெண்” சொன்னவர் சுஷ்மிதா சென், பிரபஞ்ச அழகி போட்டியின் கடைசிச் சுற்றில். இந்த பதில் தான் அவரை பிரபஞ்ச அழகியாக்கியது.

சக உயிர்களிடம் ஆதரவு காட்டும் ஆற்றல், மாசில்லா அன்பு, உயிர் மதிப்பில்லா தியாகம் இவை மூன்றும் தான் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் புதைந்திருக்கும் உணர்வு. ஒரு தாயாய், மகளாய், மனைவியாய், சகோதரியாய், நட்பாய், நலம் விரும்பியாய், வழிகாட்டியாய் காலத்துக்கு காலம் ஒரு பெண் ஏற்கும் வேடங்கள் தான் எத்தனை.. எத்தனை? உணர்ச்சிகளின் கலவையாய் பெண்ணை தவிர சிறந்த வேறொரு உயிரினை உங்களால் உலகில் காட்டமுடியுமா?

நமது கம்பள சமுதாயத்தில் ஒரு கல்லூரி பேராசிரியர் திருமதி பத்மா பெருமாள்சாமி M.Sc (Nsg), Associate Professor, KMCH college of Nursing, Coimbatore
படிப்பு -Bsc-KG college 2003,திருமணத்துக்கு பின் Msc 2008-  Ramakrishna cbe
இவருடைய கல்வி பயணம் பன்னிரண்டு வருடங்கள்  மருத்துவத்துறை சார்ந்தே இருப்பதால் ..இவரிடம் நமது வளரும் குழந்தை செல்வங்கள் தக்க ஆலோசனை கேட்டு கல்விமேற்படிப்புக்கு ஆலோசனை பெறலாம் ..இவரின் சொந்த ஊரு வீரம் விளைந்த தேனீ நகரம் அருகே உள்ள அ .வாடிப்பட்டி கிராமம் ..இவரின் கணவர் பெருமாள்சாமி அவர்களின் பதவி உயர்வுக்கு மேலும் பக்க பலமாக இருந்து வாழ்க்கையின் வெற்றிக்கு உறுதுணையாக உள்ளார் என்பதில் பெருமைகொள்வோம் ..இவர்களின் குழந்தைச்செல்வங்களும் பள்ளிக்கல்வியிலும் .விளையாட்டு போட்டியிலும் மின்னுவதற்கு கால அர்ப்பணிப்பு எண்ணிலடங்காது ..வாழ்த்துக்கள் .

திருமதி மல்லிகா பாலகிருஷ்ணன் B .Sc., B.Ed.,அரசுப்பள்ளி  ஆசிரியை- அரசூர் -
படிப்பு Bsc- chemistry, NGM college -Pollachi,திருமணத்துக்கு பின்
DTT, B.Ed படித்து...கொங்கல் நகரம்- உடுமலைப்பேட்டை  கிராம சூழலில் இருந்து இன்று வருங்கால இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பள்ளிக்குழந்தைகளை சிற்பங்களாக மின்னுவதற்கு இவரும் ஒரு காரணமாவர் ...இவருக்கு இரண்டு பெண்குழந்தைச்செல்வங்கள் ..வாழ்த்துக்கள்

உடுமலைப்பேட்டை ..நித்தியா  மணிகண்டன் M .Com  படித்து இவர் தற்பொழுது அணில் அம்பானி குழுமத்தில் ..கணக்காளராகவும் ,தகவல் நுட்ப துறையில் பணிபுரிந்துவருவது மிக்க மகிழ்ச்சி ...வாழ்த்துக்கள் ..



உடுமலைப்பேட்டை திருமதி சுதா தமிழரசன் .M .Com  படித்து ..நோக்கியோ நிறுவனத்தில் கணக்காளராகவும் ,தகவல் நுட்ப துறையில் பணிபுரிந்துவருவது மிக்க மகிழ்ச்சி ...வாழ்த்துக்கள்

உடுமலைப்பேட்டை திருமதி .சாந்தமணி பொன்னுராஜ் -கல்வி -பள்ளிப்படிப்பு முடித்து உடுமலையில் சஷ்டிகா ஹாலோ பிளாக் நிறுவனத்தை நடத்தி வருவது மிக்க மகிழ்ச்சி ..வாழ்த்துக்கள் ..
திருமதி .V .தங்கரத்தினம் மகேஷ்குமார் .M .S c .M .P hil ..படித்துவிட்டு தற்பொழுது VPS பஞ்சாலை நிறுவனத்தில் கணக்காளராகவும் ,நிறுவனத்தை மேலாண்மை சார்ந்த பணிகளையும் நிர்வகித்து வருகிறார் ..சொந்த ஊர் .பழனி அருகே உள்ள .R .வாடிப்பட்டி கிராமத்தில் தாய் தந்தையர் விவசாய குடும்பத்தில் பிறந்து வாழ்வில் வெற்றிநடை போடுவது மிக்க மகிழ்ச்சி ...

நம் கம்பள சமுதாயத்தில் பெண் கல்வி என்பது இந்த தலைமுறையில் வருடத்திற்கு வருடம் அதிகமாகி வருவது கல்வி விழிப்புணர்வு பெற்று வருவது எதிர்கால கம்பள சமுதாயத்திற்கு நல்ல முன்னேற்றம் ஆகும் ..இனி வரும் காலம் பல துறைகளில் வெற்றி பெற்று நம் கம்பள பெண்களின் பெருமையை கொண்டாடுவோம் ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681..


V. Thangarathinam M. SC., M. Phil., working in cashier and also management of VPS textiles [India]pvt Ltd,R.Vadipatty.


மீள்பதிவு ...நம் கம்பள சமுதாய பெண் தெய்வங்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்

உங்களின் சிவக்குமார் ...உடுமலைப்பேட்டையிலிருந்து ....9944066681...வாட்ஸாப்ப் எண் ...👍🌷🌷🌷🌷🌷





















திங்கள், 4 மார்ச், 2019

இன்றைய கணவன்-  மனைவிக்கு பொருளாதாரத் தேவைகள் அதிகரித்து விட்டதால், எந்நேரமும் பணத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி எல்லாமே அவர்களுக்குள்  நம்பிக்கை துரோகத்துக்கான விதைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ தூவிச் செல்கின்றன.

நம்பிக்கைத் துரோகத்தை ‘அமைதியான தொற்றுநோய்’ என்று சொல்லலாம். அது எல்லாக் காலங்களிலும் நம்மிடையே இருக்கும். மலேரியாவுக்கும்  எபோலாவுக்கும் வித்தியாசம் உண்டல்லவா? மலேரியா எப்போதும்தான் இருக்கிறது. திடீரென தலைதூக்கிய எபோலா அளவுக்கு மலேரியா  கண்டுகொள்ளப்படவில்லைதானே... அது போலத்தான் நம்பிக்கை துரோகமும்! பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும்தான் அதன் அவஸ்தை தெரியும். ஒருவர்  எத்தனை கல்யாணம் செய்கிறார் என்பதை சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம். ஒருவருக்கு எத்தனை கள்ளத் தொடர்புகள் இருக்கிறது என்பதைக் கணிக்கவே  முடியாது. நம் வாழ்க்கையில் அப்படி ஏதேனும் இருக்கிறதா, நம் துணைவருக்கோ, உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ அத்தகைய உறவு இருக்கிறதா என்பதைக்  கூடக் கண்டுபிடிக்க முடியாது.

நம்மூர் திருமணங்களில் தம்பதிக்குள் நம்பகத்தன்மை என்பது குறைவு. காதலில் கடமை உணர்வும்  காமமும் இருப்பதைப் போலவே நம்பிக்கையும் இருக்கும்.  அதனால்தான் ஒருவரை ஒருவர் நம்பி, உறவுகளை உதறிவிட்டு, துணிந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். திருமண உறவில் பொறுப்பும், கடமை  உணர்வும், காமமும் இருக்குமே தவிர, நம்பிக்கை இருக்காது. துணையிடம் எல்லா தகவல்களையும் பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டார்கள். இருவரும் வேறு  வேறு சூழல்களில் வளர்ந்து, திடீரென வாழ்க்கையில் இணைந்திருப்பார்கள். நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிற ரகசியங்களைக்கூட துணையிடம் பகிர்ந்து கொள்ள  மாட்டார்கள். காரணம், நம்பிக்கையின்மை. காதல் திருமணங்களிலும் பின்னாளில் அந்த நம்பிக்கை உடைந்து, தம்பதிக்குள் பிரச்னைகள் வருவது வேறு விஷயம். திருமணம் தாண்டிய உறவுகளுக்கான அடிப்படை நம்பிக்கையின்மையே. எந்த மதத் திருமணங்கள் ஆனாலும், ‘உன்னை நான் கைவிட மாட்டேன்’ என  உறுதிமொழி எடுத்துக் கொள்கிற சடங்கு இருக்கிறது. ஆனால், திருமண பந்தங்களில் உடைக்கப்படுகிற முதல் உறுதிமொழியும் அதுவாகவே இருக்கிறது.

துணையைத் தாண்டிய இந்த தகாத உறவு என்பது வேலையிடங்களில் மேலதிகாரிக்கும் அவரின் கீழ் வேலை பார்க்கிறவருக்கும் இடையிலும், அக்கம்பக்கத்து  வீட்டாருக்கும், குடும்ப நண்பர்களாக நம்பப்படுகிறவர்களிடமும் அதிகம் இருப்பதைப் பார்க்கலாம். திருமண உறவுகளில் கோபம், வெறுப்பு என எதையும்  துணையின் மீது காட்டத் தயங்குவதில்லை யாரும். துணை அல்லாத நபரிடமோ தனது நெகட்டிவ் பக்கத்தைக் காட்ட விரும்புவதில்லை. தன்னை நல்லவராகக்  காட்டிக் கொள்கிற முனைப்பு அங்கே தொடர்கிறது. துணையல்லாத ஒரு நபரிடம் ஏற்படுகிற இந்த ஈர்ப்புக்கு மூளையிலிருந்து சுரக்கும் ஆக்சிடோசின்,  புரோலாக்டின் உள்ளிட்ட ஹார்மோன்கள் வேகமாக சுரந்து, எதிர்பாலினத்தாரிடம் நெருக்கத்தை தூண்டுகிறது.

பெரும்பாலான தகாத உறவுகள், அப்பாவித்தனமாகத்தான் ஆரம்பிக்கின்றன. தொடக்கத்தில் அந்த உறவில் செக்ஸ் என்பது நோக்கமாக இருக்காது. யதேச்சையாக  தன் வீட்டுப் பிரச்னை களை எதிர்பாலினத்தாரிடம் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வார்கள். பிறகு அது அடிக்கடி தொடரும். இருவரும் வெளியில் சந்தித்து  அலுவலக வேலைகளைப் பற்றிப் பேசுவார்கள். அதனிடையே சிறிது அந்தரங்கப் பேச்சும் இருக்கும். ஒரு கட்டத்தில் வெளிச் சந்திப்புகளில் வெறும் அந்தரங்கம்  மட்டுமே பேசப்படும். இன்னும் சில நாட்களில் அது மேலும் கொஞ்சம் எல்லை மீறும். அந்த நபரை அடிக்கடி சந்திப்பதற்கான ஏக்கம் கூடும். அது உடல் ஈர்ப்பிலும்  கொண்டு விடும்.

இப்படியொரு உறவில் சிக்கியிருப்பதாக சந்தேகப்படுகிறவர்கள், தம்மைத் தாமே சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ளலாம்.

* எனக்கோ, என் துணைக்கோ திருமண வாழ்க்கையில் ஏதேனும் பிரச்னைகள் இருக்கின்றனவா? அவற்றைப் பற்றி நானோ, என் துணையோ மூன்றாம் நபரிடம்  அதிகத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறோமா?

* மூன்றாம் நபரிடம் தகவல்களை அதிகம் பகிர்வது என்பது எனக்கு குற்ற உணர்வைத் தருகிறதா?

* நான் என் அந்தரங்கத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிற அந்த மூன்றாம் நபர், என் சிந்தனையை அதிகம் ஆக்கிரமித்திருக்கிறாரா?

* அவரை மறுபடி சந்திக்க சூழல்களை ஏற்படுத்த என் மனம் விழைகிறதா?

இவற்றில் ஒரு கேள்விக்கு உங்கள் பதில் ஆமாம் என்று இருந்தாலும், நீங்கள் உணர்வு ரீதியாக தகாத உறவுக்குள் சிக்கியிருப்பதாக அர்த்தம். அடுத்தது  பொருளாதாரப் பின்னணி. பணம் பத்தும் செய்யும் என்பது இங்கே பொருந்தும். திருமணத்துக்கு முன்பான ஒருவரின் பொருளாதாரப் பின்னணி, வருமானம்,  செலவு, சேமிப்பு,  முதலீடு போன்றவற்றை துணையிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது, கட்டுப்பாடின்றி செலவழிக்கும் பழக்கம், சூதாட்டப் பழக்கம், பார்ட்டிக்கு  அதிகம் செலவழிப்பது போன்றவற்றை துணையிடமிருந்து ரகசியம் காக்கும் போது, அது அவர்கள் இருவருக்குமான உறவின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண  வைத்து விடும். துணையைத் தவிர்த்து வேறொருவருடனான ஈர்ப்புக்கு அடிகோலும்.

தகாத உறவுகளின் எண்ணிக்கை பெருகியதில் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் பங்கு மிகப் பெரியது. துணைக்குத் தெரியாமல் தகவல் தொடர்புச் சாதனங்களை  அதீதமாகப் பயன்படுத்துவது, செல்போன் உரையாடல், இமெயில் போன்றவற்றை துணைக்குத் தெரியாமல் கையாள்வது, இப்படித் தகாத உறவுப் பாதைக்குள் கொண்டு விடுவதும் அதிகம்  நடக்கிறது.

வியாழன், 28 பிப்ரவரி, 2019


விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது ...என் அனுபவத்தில் பதிவிடுகிறேன் ...

அன்றாட வாழ்வில் நாம் பல தர பட்ட விமர்சனங்களை எதிர்கொள்கிறோம். சில விமர்சனங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. சில விமர்சனங்கள் மனதில் காயத்தை உண்டாக்குகின்றன. சில விமர்சனங்கள் கோபத்தையும் விரோதத்தையும் வளர்க்கின்றன. விமர்சனங்களை சரியாக கையாளும் போது, அவற்றின் எதிர்மறையான பாதிப்பிலிருந்து நாம் தப்பிப்பதோடு, அவற்றை நம் நன்மைக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும். (சொந்த வாழ்வில்) வெற்றி பெற்றவர்களான தம்மைப் பற்றி எழும் விமர்சனங்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதை கண்கூடாக பார்க்க முடியும். எதிர்மறை விமர்சனங்களை எப்படி சிறப்பாக எதிர்கொள்வது என்பது பற்றி என் அனுபவத்தில் பதிவிடுகிறேன் ...

விமர்சனங்களுக்கான களங்களையும் காரணங்களையும் அடிப்படையாக கொண்டு அவற்றை மூன்று வகையாக பிரிக்கலாம்.

முதல் வகை காற்று வாக்கிலான விமர்சனங்கள். இவை பெரும்பாலும் விமர்சிப்பவரின் அறியாமையினாலேயே (இயந்திரகதியில்) எழுப்பப் படுகின்றன. இந்த குறிப்பிட்ட வகை விமர்சனங்களால் (இரு தரப்பிற்கும்) பயன்கள் எதுவுமில்லை என்றாலும் ஏதோ விமர்சிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இவை எழுப்பப் படுகின்றன. இந்த வகை விமர்சகர்கள், தன்னை/ சொந்த குடும்பத்தை/ வேலையை சரியாக கவனிக்காமல், உலகையே குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஐந்து நிமிட மின்வெட்டிற்கு உள்ளூர் மின் பணியாளர் முதல் முதலமைச்சர் வரை எல்லாரோரையும் திட்டித் தீர்த்து விடுவார்கள். பிரச்சினை இவர்கள் வீட்டு மின் இணைப்பில்தான் என்றால், உடனடியாக சரி செய்ய சோம்பேறித்தனப் படுவார்கள். இவர்களின் விமர்சனங்களில் அபூர்வமாக ஏதாவது நல்ல விஷயங்கள் ஒட்டிக் கொண்டிருக்கும் என்றாலும், இவர்களது விமர்சனங்களை முற்றிலுமாக ஒதுக்கி தள்ளி விடுவது நம் நேரத்தை மிச்சப் படுத்தும். இவர்களுக்கு நம் பதில் மெல்லிய புன்னகை மட்டுமே.

இரண்டாம் வகை விமர்சனங்கள் கவனிக்க வேண்டியவை. எளிதில் புறந்தள்ள முடியாதவை. இந்த விமர்சனங்களின் நோக்கங்கள் உள்ளே ஒளிந்திருக்கும். இவை பெரும்பாலும் நமக்கு அருகிலிருப்பவர்களாலேயே எழுப்பப் படும். விமர்சிக்கப் படுபவரின் கவனைத்தை தன் பக்கம் ஈர்ப்பது அல்லது அவரை காயப் படுத்துவதுதான் இந்த வகை விமர்சனங்களின் நோக்கங்கள். ஒருவரது உடல்ரீதியான பிரச்சினைகள், சாதி, மதம், ஏழ்மை, கல்வி இன்மை (அல்லது குறைவு), வேறு ஏதாவது குறைபாடு ஆகியவற்றை மறைமுகமாக விமர்சித்து அவரை காயப் படுத்த விரும்பும் ஒரு சிலர் உங்கள் அருகே எப்போதும் இருக்கிறார்கள். உதாரணங்கள்: "உங்கள் குடும்பத்திலேயே இந்த வழக்கம் இருக்காது." " எனக்கு அப்போதே சந்தேகம். உங்களால் முடியுமா என்று?" நம்மை காயப் படுத்த வரும் இந்த விமர்சனங்களை நாம் இதயத்திற்கு கொண்டு சென்றால் அது விமர்சித்தவருக்கு வெற்றியாகி விடும். எனவே, இந்த வகை எதிர்மறை விமர்சனங்களை, புரிந்து கொள்ளும் அதே சமயத்தில் பொருட்படுத்தவே கூடாது. இவர்களுக்கு நம் பதில், "நான் உங்களால் துளியும் காயப் பட வில்லை" என்பதை செய்கைகளால் உணர்த்துவது.

அதே போல உறவுகளில் (நட்புகளில்) விரிசல் வரும் போது, அதை மறைமுகமாக வெளிபடுத்துபவர்கள் இருக்கிறார்கள். உதாரணம்: "நீங்கள் ரொம்ப பிசி போல தெரிகிறது?" இங்கும் கூட விமர்சனங்களின் வெளிப் பொருளைப் பற்றி கவலைப் படாமல், உறவுகளின் (நட்புகளில்) விரிசலை சரி செய்யவே முயல வேண்டும். இவர்களுக்கு நம் பதில், "கவலைப் படாதீர்கள் உங்களுடன் நான் இருக்கிறேன்" என்று செய்கைகளால் உணர்த்துவது.

மூன்றாம் வகை விமர்சனங்கள் நம்மீது உள்ள அக்கறையால் நமது நலம் விரும்பிகளால் வெளிப்படுத்தப் படுபவை. இந்த வகை விமர்சனங்கள் சமயத்தில் காராசாரமாக கூட இருக்கலாம். ஆனால் இந்த விமர்சனங்களின் மீது எந்த வகையிலும் நம்முடைய அதிருப்தியை வெளியிடக் கூடாது. அது நமது நலம் விரும்பிகளை காயப் படுத்தி விட வாய்ப்பு உள்ளது. மேலும் அடுத்த முறை அவர்கள் விமர்சனங்களை வெளியிடாமல் கூட இருந்து விடலாம். அது நமக்குத்தான் நஷ்டம். இங்கு, விமர்சனம் வெளிப்படுத்தப் பட்ட விதம் பற்றி கவலைப் படாமல், அதில் உள்ள அக்கறையை புரிந்து கொண்டு நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு நம் பதில், "உள்ளார்ந்த நன்றி"

கடைசியாக எதிர்மறை விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி எனது தனிப் பட்ட அனுபவத்தில் இருந்து ஒரு சிறிய உதாரணம்.

தனக்குக் கீழே உள்ள அலுவலர்களின் பணியினை பற்றி கன்னாபின்னாவென்று விமர்சிக்கும் பழக்கம் கொண்ட ஒரு மேலதிகாரி விடுப்பிலிருந்து திரும்பி வருவதற்கு சற்று முன்பு, அவர் பெயர் சொல்லி பயமுறுத்திய ஒரு இடைநிலை அதிகாரிக்கு ஒரு இளநிலை அலுவலர் அளித்த பதில்.

"ஐயா! குற்றம் கண்டுபிடிப்பது மற்றும் கடுமையாக விமர்சிப்பது அவருக்கு (மேல் நிலை அதிகாரி) அதிகாரம் கொடுத்த உரிமை. இளநிலை அதிகாரி என்ற முறையில் அந்த விமர்சனத்தை சகித்துக் கொள்வதும் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டியதும் என்னுடைய கடமை. அதே சமயம், கொடுத்த பணியினை சிறப்பாக செய்ய வேண்டியது மட்டுமே எனது பொறுப்பு. அவரது தனிப்பட்ட (அலுவலக) குணாதிசியங்களைப் பற்றி கவலைப் (அச்சப்) படத்தான் வேண்டுமா என்று முடிவு செய்வது எனது தனிப் பட்ட உரிமை."

நன்றி.என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019




பிறந்த நாளில்  நினைவு கூறவேண்டும் 
உந்தன் நினைவை , நிழலை,   பெருமையை 
சொல்லவேண்டுமென்பதற்காகவே  பிறந்தநாள் வருகிறது 
என்ன சொல்லி வாழ்த்துவது 
சமூகத்தில் உயர்ந்த தலைவர்களைப் போல்
சமூகத்திற்காகப் பாடாற்றிய தலைவர்கள் போல் 
என்றெல்லாம் பேசாமல்  உன்னைப்போல் மற்றவர்கள்
பின்தொடர்;ந்து வரவேண்டும் 
கம்பளத்து விருட்சத்தின் கம்பீரமான வாரிசுகளில் 
கண்கண்ட வாரிசாக  கண்முன்னே வளரும் 
தேவராட்டத்தின் கலையுலக வாரிசு, 
வாழ்த்துவோம் உந்தன் பிறந்த நாளில்
செல்வங்கள் அனைத்தும் பெறவேண்டும்
பேறுகள் அனைத்தும் பெறவேண்டும்
மனமகிழ்வேடு மனநிறைவோடு 
வாழ்வாங்கு வாழ்க 
வாழ்த்துகின்றேன். உந்தன் பிறந்த நாளில்
என் இனிய மகள் ..நிவேதாவிற்கு  கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...