வியாழன், 9 ஜனவரி, 2020

திருமணத்திற்கு முன்பான வாழ்க்கைக்கும், பின்பான வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசங்களைக் கூறுக?

திருமணத்திற்கு முன் உலகத்தையே மாற்றலாம் என்று நினைத்தவர்கள் ,கல்யாணம் முடிந்த பின்பு நினைத்த சேனலை பார்க்க டிவியின் ரிமோட்டை கூட மாத்த முடியாது என்பது தான் உண்மை.😀😀😁😀😁

ஆம்லெட் போடுவதை வைத்து திருமணத்திற்கு பின்பான வாழ்க்கையை விளக்க போகிறேன்

ஆறுமாதத்திற்கு பின்:

கணவன்: என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம்!

மனைவி: இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க.அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க அதுக்குதான்.

ஒரு வருடம் பின்:

கணவன்: என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல்?

மனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க

கணவன்: அவ்ளோதானா?

மனைவி: முடியலைங்க!

ஒன்றரை வருடம் பின்:

கணவன்: என்னம்மா….சாப்பிடலாமா?

மனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன் ஆம்லெட் போட்டுடறேன்!

இரண்டு வருடம் பின்:

கணவன்: என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே.எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே?

மனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன? எல்லாத்தையும் நானே செய்யனுமா?

மூன்று வருடம் பின்:

கணவன்: என்னம்மா இது இத்துனூன்டு இருக்கு.முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க?

மனைவி: முட்டை என்ன நானா போடுறேன்? கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்னசெய்ய?சும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க!

நான்கு-ஐந்து வருடம் பின்:

கணவன்: என்ன இது ஆஃபாயில் போட்டிருக்க….நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல?

மனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது.ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு!

ஏழு வருடம் பின்:

கணவன்: என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா?

மனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு,முட்டையும் இருக்கு ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க!

பத்து வருடத்துக்கு பின்:

கணவன்: இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்?

மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா? எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா? அதை செய்யுங்க!

இவ்ளோதாங்க திருமண வாழ்க்கை… புரிஞ்சி இருக்கும்னு நினைக்கிறேன்.

எதுக்கோ தற்காப்புக்கு ஒரு குறிப்பை போடுவோம்


குறிப்பு : சிரிப்பு பதிவு மட்டுமே யாரும் அடிக்க வரவேண்டாம். சீரியஸ் ஆக பதில் எழுத வரமாட்டிக்கிது ஏன் என்று தெரியவில்லை



உத்தியோகம் புருஷலட்சணம் எனில் மனைவிக்கான இலக்கணம் எது ?

உத்யோகத்திற்கு சென்று வீட்டுக்கு வரும் புருஷனை மனம் நோகாமல் வரவேற்று நல்லுணவு பரிமாறி முடிந்தால் களைப்பு நீங்க சிறிது நேரம் கை கால்களை பிடித்துவிட்டு அவரை கவனித்துக் கொள்வதே மனைவிக்குரிய லட்சணம்.

நான் சொல்வது பெண்ணியவாதிகளுக்கு முரண்பாடாக தெரியலாம். ஆனால் மனைவி வேலைக்கு எதுவும் போகாமல் வீட்டில் இருக்கும் பட்சத்தில் இப்படி நடந்து கொண்டால் இல்லறம் இனிக்கும்.

பொருளாதார தேவைகளுக்காக வேறு வழியின்றி இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பங்களில் இது நடைமுறையில் சற்று சிரமம் தான் என்றாலும் மாதத்தில் ஒன்றிரண்டு நாட்களாவது நான் சொன்னவற்றை பின்பற்றி பாருங்களேன்.

நான் என் திருமண வாழ்க்கையில் செய்து கொண்டிருப்பதை தான் உங்களுக்கும் பரிந்துரைக்கிறேன்.

”ஆணுக்கு தான் சேவைகள் செய்ய வேண்டுமா..? பெண் மட்டும் உயிரில்லையா…? அவளுக்கும் வலிகளில்லையா…?” என்றெல்லாம் கேட்பவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது. இரு மனங்களும் ஒன்றி ஒத்திசைப்பதே திருமண பந்தம். ஒவ்வொரு பெண்ணுக்கும் self esteem இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் கட்டிய கணவனிடம் பெண்ணியவாதியாக நடந்து கொள்ளாதீர்கள். அது குடும்பத்திற்கு நல்லதல்ல.

பெண்ணுக்கான இலக்கணங்களை வகுத்த நமது தர்ம சாஸ்திரங்கள் ஆணுக்கான இலக்கணங்களையும் வகுக்காமல் இல்லை. ஆனால் காலப்போக்கில் ஆணாதிக்க சமுதாயத்தில் மறைக்கப்பட்டிருக்கிறது.

இதோ அதற்கான ஆதாரம்:

கார்யேஷு தாஸி

கரனேஷு மந்த்ரி

போஜேஷு மாதா

சயனேஷு ரம்பா

ரூபேஷு லக்ஷ்மி

க்க்ஷமயேஷு தரித்ரி

ஷத் தர்மயுக்தா

குலதர்ம பத்னி

சேவை செய்வதில் வேலைக்காரியாகவும்

ஆலோசனை சொல்வதில் மந்திரியாகவும்

பசியறிந்து உணவு அளிப்பதில் தாயாகவும்

படுக்கையில் ரம்பையாகவும்

அழகில் லக்ஷ்மியாகவும்

மன்னிப்பதில் பூமித்தாயாகவும்

இந்த ஆறு தர்மங்களைக் கடைப்பிடிப்பவள் குலதர்ம பத்தினி ஆவாள்.

பெண்ணுக்கு எத்தனை நெறிமுறைகளை சொல்லிய நமது சனாதன தர்மம் ஆணுக்கு எந்த ஒரு நெறிமுறையும் விதிக்கவில்லையா ..? விதித்திருக்கிறது.

அவை இதோ

கார்யேஷு யோகி

கரனேஷு தக்க்ஷா

ரூபேச க்ருஷ்ணா

க்க்ஷமயேது ராமா

போஜ்யேஷு த்ருப்தா

சுக துக்க மித்ரா

ஷத் கர்மயுக்தா

கலு தர்மான்தா

காரியமாற்றுவதில் யோகியைப் போல நிலையானவனாகவும்

குடும்பத்தை பிள்ளைகளை காப்பதில் தக்க்ஷ பிரஜாபதியை போலவும்

அழகில் கிருஷ்ணனைப் போலவும்

ஒழுக்கத்தில் பொறுமையில் இராமனைப் போலவும்

மனைவி சமைத்த உணவை குறை காணாமல் உண்பதில் திருப்தி உடையவனாகவும்

மனைவியின் சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டு ஆதரவளிப்பதில் நண்பனாகவும்

இந்த ஆறு தர்மங்களை கடைப்பிடிப்பவன் சிறந்த கணவன் ஆவான்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் நம் தர்மம் சம நீதியே வகுத்திருக்கிறது . ஆனால் ஆணுக்கு சாதகமாக பல உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கிறது.

பெண்கள் முதலில் கொடுப்பவளாக இருங்கள். பிறகு நீங்கள் கேட்காமலே எல்லாம் கிடைக்கும்.

புதன், 8 ஜனவரி, 2020

கிராமத்தில் அழுத்தமாக ஒலிக்கும் உறுமி சத்தம். ஆட்டக்காரர்களின் அசைவில் அத்தனை ரம்மியமாக வெளிப்படும் சலங்கை ஒலிச் சத்தம். இசையும், நடனமும் ஒருங்கே சேர்ந்த அழகிய நாட்டுப்புறக்கலை. கிராமங்களில், மார்கழி மாதம் முழுவதும் ஆடி தமிழர் திருநாளான தைத்திருநாளை கொண்டாடுகின்றனர். பாரம்பரியம் மாறாத இந்த தேவராட்டக் கலை உடுமலைப்பகுதியின் பொங்கல் கொண்டாட்டத்திற்கு கூடுதல் உற்சாகம்.
தை மாதம் துவங்கும் பொங்கல் விழாவிற்கு உடுமலை பகுதி கிராமங்கள் மார்கழி மாதத்திலேயே தயாராகின்றன. அடர்ந்த பனியை அகற்றி அனலாக உருமிஇசை ஒலிக்கிறது. கொட்டும் பனியில் கிராம மக்கள் ஒருங்கிணைந்து தேவராட்டம் எனப்படும் உருமி ஆட்டம், சலங்கை மாடு மறித்தல் (சளகெருது ஆட்டம்), கும்மி ஆட்டங்களை பார்ப்பது மிகவும் அலாதியான அனுபவங்களில் ஒன்று.
தேவராட்டத்திற்காக இரவு நேரங்களில் இசைக்கும் உருமி கிராமம் தோறும் மார்கழி மாதம் முழுவதும் கிராமங்களில் எதிரொலிக்கும். தேவராட்டம் என்பது தேவர்களால் (கடவுளால்) ஆடப்பட்டது என்ற பொருளில் அழைக்கப்படுகிறது. இறைவனை வழிபடவும், வேட்டைக்குச் செல்லும்போது பாவனை ஆட்டமாகவும், மழை, திருமணம் போன்ற விசேஷச காலங்களில் சடங்காட்டமாகவும் நிகழ்த்தப்படுகிறது.
தேவராட்டத்தில் 32 அடவுகள் உள்ளன. ஒவ்வொரு அடவுகளும் மனிதனின் செயல்பாடுகளை வெளிப்படுத்துவதாகவும், ஒவ்வொரு மனிதனுக்குத் தேவையான உடற்பயிற்சிகளின் வெளிப்பாடாகவும் உள்ளது.
தேவராட்டத்திற்கு பக்கபலமாக இருப்பது உருமி மேளம் மற்றும் காலில் கட்டப்படும் சலங்கை ஆகும். ஆட்டக்காரர்கள் மினு மினுப்பான தலைப்பாகை கட்டிக்கொண்டு ஆடுகின்றனர். உருமி மேளத்தின் மூலம் ஆட்ட அடவுகளுக்கு ஏற்ப சுதி ஏற்றப்படுகிறது.
தேவராட்டம் ஆடப்படும்போது, ஊதப்படும் ஒவ்வொரு விசில் சத்தத்திற்கும் இடையே அடவுகள் மாற்றப்படுகிறது. பங்கேற்கும் அனைவரும் ஒரே நேரத்தில் இசைக்கு ஏற்ப சீராக கால்களையும், கைகளையும், உடல் அசைவுகளையும் கொண்டு ஆடுவது கண்களுக்கு விருந்து.
ஆட்டத்தின் துவக்கத்தில் மெதுவாக துவங்கும் அடவு மாற, மாற வேகமும், உருமி சத்தமும், சலங்கை சத்தமும் கூடி ஒரு வித உச்சநிலைக்குச் செல்கிறது. ஆட்டம் துவங்கும் போது உருமியை கும்பிட்டும், இறுதியில் கடவுளுக்கு நன்றி சொல்லும் அடவுக்கு வரும்போது மீண்டும் மெதுவாக மாறியும் ஆட்டம் முடிவுறுகிறது. ஒயிலாக பாடலுடன் சேர்த்து ஆடப்படுவது ஒயிலாட்டம் எனப்படுகிறது.
இதன் அசைவுகள் மனிதனின் அனைத்துப் பாகங்களையும் அசைத்துப் பார்க்கும். ஒயிலாக ஆடப்படும் ஆட்டம் ஒயிலாட்டம் எனவும், விரைவாக ஆடுவது தேவராட்டம் எனவும் கூறப்படுகிறது. மார்கழி மாத பனி இரவில் முன் பனி காலத்தில் ஆடப்படுகிறது.
தை பிறந்ததும் ஆட்டக்காரர்கள் உடுமலை அருகே உள்ள சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோயிலுக்கு சலங்கை மாடு புடைசூழச் சென்று தேவராட்டம் ஆடி தங்களது மார்கழி மாத ஆட்ட விரதத்தை முடிக்கின்றனர். இது இப்பகுதி மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்துள்ள நிகழ்வாக இருக்கிறது.
இந்த கலை அழியாமல் இருக்க உடுமலைப்பேட்டையின் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஜல்லிப்பட்டி, தளி, பெரிய கோட்டை, கம்பாளப்பட்டி போன்ற கிராமங்களில் இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் தற்போது தேவராட்ட பயிற்சி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.🥰🥰📚📚✒✒
தொழில்நுட்பத்தை விரல் நுனியில் வைத்திருக்கும் தந்தையாக மாறுவதற்கான டிப்ஸ்...

இன்றைய கால கட்டத்தில் நகரத்தில் வாழும் தந்தைமார்கள் தங்கள் குழந்தைகளுடன் பிணைப்பை அதிகரிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்.

இணையதளத்தில் ஃபார்ம்வில்லே விளையாட்டை உங்கள் மகனுடன் போட்டி போட்டு கொண்டு விளையாடும் தந்தையா நீங்கள்? இரவு உண்ணும் போது சந்தையில் புதிதாக வந்துள்ள ஸ்மார்ட்ஃபோன் பற்றி பேசி கொண்டிருக்கும் தந்தையா நீங்கள்? அப்படியானால் நீங்கள் ஒரு நவீன தந்தை என்ற பட்டத்தை பெறுவீர்கள். இவ்வகை தந்தைகள் தங்கள் குழந்தைகளுடன் மிகவும் உற்சாகத்துடனும், பிணைப்புடனும் திகழ்வார்கள்.

* புதிய காட்ஜெட்ஸ் மற்றும் கிஸ்மொஸ் பற்றிய விவரங்களை வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை இணையதளத்திற்கு சென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

* உங்களுக்கு ஏதாவது தொழில்நுட்ப வார்த்தை புரியவில்லை அல்லது அதில் சந்தேகம் ஏற்பட்டால் தயங்காமல் உங்கள் குழந்தையிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

* உங்கள் குழந்தை வீடியோ கேம்ஸ் அல்லது கைப்பேசி வாங்க கடைக்கு சென்றால் நீங்களும் அவர்களுடன் செல்லுங்கள்.

* உங்கள் குழந்தைகளுடன் உரையாட சமுதாய வலைதளங்களை பயன்படுத்துங்கள். இருப்பினும் உங்கள் குழந்தைகளின் இணையதள பயன்பாட்டில் நீங்கள் ஓரளவுக்கு மேல் தலையிடக் கூடாது.

தங்கள் குழந்தைகளுடன் உரையாட, பத்தில் ஏழு பெற்றோர்கள் சமுதாய வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர்.

இந்த எண்ணிக்கையை இந்தியாவில் எதிர்ப்பார்க்க முடியாவிட்டாலும் கூட, நம் நாட்டு நகரங்களிலும் பல பெற்றோர்கள் இன்று சமுதாய வலைத்தளங்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். சொல்லப் போனால் இன்றைய டீனேஜ் குழந்தைகள் சமுதாய வலைதளங்களில் தங்களுடைய பெற்றோரையும் நண்பர்கள் பட்டியலில் சேர்கின்றனர்.

இருப்பினும் தங்கள் குழந்தைகளுடன் சமுதாய வலைதளங்களில் உரையாடும் பெற்றோர்கள் அவர்களுக்கான வரைமுறையை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குழந்தைகளுடன் பிணைப்பை ஏற்படுத்துவது எப்படி?

குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை விட்டு விலகி பள்ளிக்கு சென்று அது சம்பந்தப்பட்ட செயல்களில் ஈடுபட்டு கொண்டிருப்பார்கள். இருப்பினும் பொது அறிவு மற்றும் விருப்புகள் ஒரு உறவை சிறப்பான முறையில் மேம்படும். அதனால் தொழில் நுட்பத்தை கொண்டு குழந்தைகளுடன் பிணைப்பை உண்டாக்க முற்படும் போது அது குழந்தைகளையும் ஊக்குவிக்கும்.

SHYAM SUDHIR SIVAKUMAR.......
கல்யாணத்தேன்நிலா காய்ச்சாதபால்நிலா என்ற பாடலில் ஏன் "காய்ச்சாத" பால் நிலா என்கின்றார் கவிஞர்? காய்ச்சிய பாலை விட காய்ச்சாத பால் எவ்விதத்தில் நிலவோடு பொருந்துகின்றது?

இந்த பாடல் இடம்பெற்ற படம் " மௌனம் சம்மதம்"! இதில் ஹீரோ மம்முட்டி ஒரு சட்டம் படித்த வழக்கறிஞர்! சட்டம் என்றால் ஆங்கிலத்தில் "LAW" என்று அர்த்தம்!

தமிழில் " லா" என்று சொல்லி பாடலை முடிக்க வேண்டும்! முழுக்க முழுக்க இந்த கதை கோர்ட்டில் நடக்கும்! சட்டத்தைப் பற்றி " லா" பேசும் ஒரு லாயர் என்பவர் தன் காதலியை பார்த்து பாடும் போது லா லா என்று பாடுவது மூலம் தன் வழக்கை பற்றிய சட்டத்தைப் பற்றிய நினைப்பில் இருக்கிறேன் என்று மறைமுகமாக காதலி புரிந்துகொள்ள அப்படி பாடுகிறார்!

கல்யாண தேன் நி"லா"

காய்ச்சாத பால் நி"லா" எல்லா வரிகளும் லா லா என்று முடியும்!

மம்முட்டி நல்ல வக்கீலா என்று அமலாவுக்கு அந்த படத்தில் சந்தேகம் வரும்! தன்னை ஒரு மிகச்சிறந்த வக்கீல் என்று காட்டிக் கொள்வதற்காக மம்முட்டி டூயட் பாடல் பாடும்போது கூட காதலியிடம் தொழில் நினைவாகவே இருப்பதாக காட்டிக் கொள்கிறார்! தூங்கும் போது குறட்டை விடும் போது கூட லா லா என்று ஒருவர் குறட்டை விட்டால் அவர்தான் சிறந்த வக்கீல்!

மம்முட்டி ஒரு பொறியாளராக இருந்து அமலா மம்முட்டி இடம் ஒரு கட்டடம் கட்டும் காண்ட்ராக்ட் கொடுத்து இருந்தார் என்றால் அப்பொழுது பொறியாளர் மம்மூட்டி தாண் ஒரு நல்ல பொறியாளர் என்று தன் காதலிக்கு காட்டும் விதமாக

கல்யாண தேன் பொறி

காய்ச்சாத பால் பூரி

நீதானே கடலை பொரி

நான்தானே கார்த்திகைப் பொரி

என்று கவிஞர் பாட்டு எழுதி இருப்பார்!

கவிஞர் எல்லா வரிகளிலும் லா என்ற சட்டத்தை கொண்டு வந்தது பாராட்டவேண்டும்! சட்டம் ஏற்றப்பட்டு பாராளுமன்றத்தில் அங்கீகாரம் ஆகும் வரை அது ஒரு ஆர்டினன்ஸ் என்றுதான் சொல்லுவார்கள்!

அதுதான் காய்ச்சாத சட்டம்! இப்போது குடியுரிமைச் சட்டம் என்பது காய்ச்சி கொண்டிருக்கிறார்கள்! 370வது சட்டம் காய்ச்சப்பட்டு விட்டது!

மம்முட்டி பாடல் சட்டம் இன்னும் இயற்றப்படவில்லை! அதனால் அதை காய்ச்சாத பால் நிலா என்று மறைமுகமாக கவிஞர் குறிப்பிடுகிறார்!

காய்ச்சாத சீம்பால் போல் சுவையான ட்ரிவியா செய்தி : மம்முட்டி சினிமாவில் நடிப்பதற்கு முன் உண்மையிலேயே ஒரு லாயர் ஆக தொழில் செய்தவர்!

அவரை கௌரவிக்கும் விதமாக கவிஞர் ஒருவேளை அப்படி எழுதி இருக்கலாம்!

அதுவும் தவிர பாலை ரொம்ப காய்ச்சினால் பால்கோவா ஆகிவிடும்! ஒருவேளை மம்முட்டிக்கு கதைப்படி சர்க்கரைவியாதி இருந்து அதன் காரணமாகவும் காய்ச்சாத பால் நிலா என்று பாடி இருக்கலாம்! யார் கண்டது!

குறிப்பு :..நம் சொந்தங்கள் வக்கீல்கள் குழுவில் இருப்பதால்...அழகான பதிவு ..அப்புறம் வீட்டுக்காரம்மா வக்கீலுக்கு இந்த பதிவு dedicated ... 
வீடு கட்டுமானம் பற்றி அறிய வேண்டியவை என்ன?

நீங்கள் புதிதாக வீடு கட்ட முடிவு எடுத்துத்திருந்தால் நிச்சயம் இந்த பதிவு உங்களுக்கு பயன்தரும் .

முதலில் உங்களிடம் எவ்வளவு கை இருப்பு இருக்கிறது எவ்வளவு வரை நீங்கள் செலவு செய்யலாம் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து விடுங்கள். அப்போதுதான் நீங்கள் நினைக்கும் பட்ஜெட்டில் உங்களுடைய வீட்டை கட்ட முடியும்.

குறைந்தது 3 பில்டர்களிடம் Quotation பெற்றுக்கொள்வது நல்லது. அந்த Quotation என்னென்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு தெரிந்த கட்டிட பொறியாளர்களை கொண்டோ அல்லது அதை நீங்களோ தெளிவாக படித்து பாருங்கள்.

வெறும் பணம் மட்டுமே குறைவாக இருக்கும் என்பதற்காக யாரையும் தேர்தெடுத்து விடாதீர்கள்.

அவர்கள் இதற்கு முன் வீடுகள் கட்டி உள்ளார்களா என்பதை பற்றி விசாரியுங்கள். முடிந்தால் அவர்கள் சமீபத்தில் கட்டி முடித்த வீட்டை ஒருமுறை சென்று பாருங்கள்.

வீட்டுக்காரரிடம் அவருடைய வேலை மற்றும் வீடு கட்டி முடிக்க எடுத்துக்கொண்ட காலம். என பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

சிவில் துறையை பொறுத்த வரை இரண்டு வகையான அமைப்புகளில் வீடுகள் கட்ட படுகின்றன.

1 . Load Bearing

இது நமது பழங்கால முறை, அதாவது பெரிய வகை கற்களை கொண்டு அஸ்திவாரம் அமைத்து பின்பு

அதன் மேல் சுவர் எழுப்பி இறுதியில் கூரையில் Concrete அமைப்பது.

இவை இப்பொழுது பெரும்பாலும் கட்ட படுவதில்லை. ஆனால் இது தரமானது அல்ல என பலரும் கூறுவது உண்மையல்ல. நீங்கள் இந்த அமைப்பை பயன்படுத்தி 3 அடுக்கு மாடி வரை கட்டலாம்.

இது மாதிரியான கட்டிடத்திற்கு பெரிய வகையில் பொறியாளர்கள் தேவை இல்லை. உங்களுக்கு தெரிந்த கொத்தனாரை கொண்டே இது போன்ற வீட்டை கட்டி முடிக்கலாம்.

Framed Structure :

மிக பெரிய வணிக வளாகங்கள் அடுக்கு மாடி குடியிருப்புகள் அனைத்தும் இந்த அமைப்பை பயன்படுத்தி கட்ட படுகின்றன.

இந்த அமைப்பை பயன்படுத்தி நீங்கள் வீடு கட்ட செலவு கொஞ்சம் அதிகம் ஆனாலும் இதன் பளு தாங்கு திறன் மிகவும் அதிகம்.

இந்த அமைப்பை பயன்படுத்தி வீடு கட்ட கண்டிப்பாக பொறியாளர்கள் தேவை. ஏனெனில் இதனை கொஞ்சம் திறன் பட செய்ய வேண்டும்.

வீடு கட்டும் முன்பு உங்களுடைய பகுதியின் தட்ப வெட்ப சூழ்நிலை மண்ணின் தாங்கு திறன் இவை பற்றி நான்கு ஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில் நீங்கள் கட்டும் கட்டிடத்தை தாங்கும் அளவுக்கு தேவையான Concrete Reinforcement சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.

இதனை துல்லியமாக கணக்கிட்டு கொடுக்க பொறியாளர்கள் தேவை படுவார்கள். ஏனெனில் இந்த Concrete Reinforcement என்பது சரியான விகிதத்தில் இருக்க வேண்டும், இது கூடினாலும் சரி குறைந்தாலும் சரி அது கட்டிடத்தை பாதிக்கும். நீங்கள் பொறியாளர்கள் இல்லாத நபர்களை கொண்டு கட்டினால் 50 வருடம் இருக்க வேண்டிய கட்டிடம் 30 வருடத்திலேயே பழுதாக ஆரம்பித்து விடும்.

கட்டிடத்தின் பாதிப்பு என்பது உடனே நமக்கு தெரிய வராது. குறைந்தது 5 முதல் 10 வருடங்களில் இருந்து நீங்கள் பாதிப்பை உணர முடியும். ஆகவே இந்த மாதிரியான கட்டிடம் கட்டுவதில் சரியான பொறியாளர்களை தேர்தெடுத்து வீடு கட்டுங்கள்.

இதற்கு இரண்டு வகையான வரை படங்கள் தேவை படும்.

1 . Architectural Drawings

வீடு கட்டும் முன்பு architect ஒருவரை அழைத்து வீடு கட்ட போகும் இடம் மேலும் உங்களிடம் அதற்காக உள்ள பட்ஜெட் மேலும் வீடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை கூறினால் அவர் அதற்கு தகுந்தாற் போல் உங்களுக்கு வரைபடம் உருவாக்கி தருவார். ஒரு சில பொறியாளர்கள் அவர்களாகவே இந்த வரைபடத்தை வரைந்து கொடுப்பார்கள்.

2. Structral Drawings.

இது உங்களுடைய வீடு எவ்வளவு பளுவை தாங்கும் அதற்கு எவ்வளவு கம்பி எந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என்பதை முன்கூட்டியே சொல்ல கூடிய வரைபடம். இதை நீங்கள் ஒரு Structural Consultant மூலமாக பெற்று கொள்ளுங்கள்.


இந்த இரு வகையான வரைபடம் இல்லாமல் வரும் எந்த பொறியாளரையும் நீங்கள் உங்களுடைய வீட்டை கட்ட அனுமதிக்காதீர்கள். இந்த இரு வரைபடமும் மிகவும் முக்கியம்...

செவ்வாய், 7 ஜனவரி, 2020

உங்களுக்கு பிடித்த வருமான ஆதாரம் எது?

நீங்கள் கடினமாக உடல் ரீதியாக உழைத்து ஒரு நாள் முழுவதும் 500 ரூபாய் சம்பாதிக்க விரும்புவீர்களா அல்லது ஒரு நாளில் நாம் விரும்பிய நேரத்தில் வேலை செய்து எளிமையாக 500 ரூபாய் சம்பாதிக்க விரும்புவீர்களா..

பெரும்பாலும் அனைவரும் எளிமையாகவே சம்பாதிக்க விரும்புவீர்கள். நானும் அப்படித்தான். எளிமையாக எப்படி சம்பாதிக்கலாம் என யோசித்து, பல கட்டுரைகளை படித்து தெரிந்துகொண்டேன்.

எளிமையாக பணம் சம்பாதிக்கலாம் ஆனால் அதிலேயும் கடினமாகத் தான் உழைக்க வேண்டும் எனவும் அனுபவபட்டு தெரிந்து கொண்டேன்.

சரி..அப்படிப்பட்ட வேலைதான் என்ன என்று உங்களுக்கு தோன்றும். ஆமாம் பிளாக் எழுதுவது, யுடியூபில் வீடியோ பதிவிடுவது, மின்புத்தகம் எழுதுவது, அப்ளியேட் மார்க்கெட்டிங் செய்வது என ஒரு சில வழிமுறைகள் தான். ஆனால் வீடியோ பார்த்தால் காசு வரும், பிரௌசிங் பண்ணினால் காசு வரும் என எதுக்கும் பயனில்லாத பல வழிகளை தவிர்ப்பது மிக நல்லது.

எனக்கு பிடித்த வருமானம் எதுவென்றால் பிளாக் எழுதுவது, யுடியூப் வீடியோ செய்வது, அப்ளியேட் மார்கெட்டிங் செய்வது, பேஸ்புக்கில் வீடியோ பதிவிடுவது தான். இவற்றைப் பற்றி நான் எனது தளத்தின் எழுதியுள்ளேன்.படித்து அறிந்துகொள்ளுங்கள்
ஒரே ஒருமுறை மட்டும் கடுமையாக உழைத்துவிட்டு (6 மாதங்கள் அல்லது ஓராண்டு) பின்னர் வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக இருப்பதற்காக நேர்மையான வழியில் செய்யக்கூடிய தொழில்கள் எவை?

இருக்கு!

ஆனால், இல்ல!

இந்த வினாவை கேட்கும் பொழுது எனக்கு ஒரு கதை ஞாபகம் வருகிறது. இந்த கதையை யார் எனக்கு சொன்னார்கள் என்பதை கடைசியில் தெரிவிக்கிறேன்.

இத்தாலி நாட்டில் உள்ள சிறிய கிராமத்தில் பப்லோ மற்றும் ப்ருனோ என இருவர்கள்.

அவர்கள் இருவருக்கும் கடினமாக வேலை செய்து நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

ஒரு நாள் அந்த கிராமத்தில் இருந்த கிணற்றில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால், அந்த கிராமத்தில் உள்ள மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க ஒன்று கூடி ஒரு முடிவு எடுக்கிறார்கள். அது என்னவென்றால், அந்த கிராமத்தில் இருந்து 40 மைல் தொலைவில் ஒரு அருவி உள்ளது. அங்கிருந்து தண்ணீரை கிராமத்திற்கு கொண்டு வந்தால் தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து மீளலாம் என முடிவு எடுக்கிறார்கள்.

இந்த வேலையை பப்லோ மற்றும் ப்ருனோ விடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர்கள் கொண்டுவரும் தண்ணீருக்கு காசு தருகிறோம் என்று சொல்லி ஒப்படைக்கிறார்கள். அவர்கள் இருவரும் இதற்கு ஒப்பு கொள்கிறார்கள்.

பப்லோ வும் ப்ருனோ வும் ஆளுக்கு இரு வாளிகளை எடுத்து தினமும் 40 மைல் தொலைவிற்கு நடந்து சென்று வந்து கிராமத்திற்கு தண்ணீர் கொடுத்து சம்பாதித்தனர்.

நாட்கள் ஓடின!..

ஒரு நாள் பாப்லோவிற்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த யோசனையை ப்ருனோவிடம் சொல்கிறான். நாம் இருவரும் சேர்ந்து அருவியில் இருந்து தண்ணீரை கொண்டு வர ஒரு நீண்ட குழாய்களை இணைத்து கிராமத்திற்கு தண்ணீரை கொண்டு வருவோம் என்று ப்ருனோவிடம் சொல்கிறான். இது முட்டாள் தனமான வேலை அப்படி செய்தால் நமக்கு இன்றைய நாள் காசு எதுவும் கிடைக்காது என்று ப்ருனோ பப்லோவிடம் சொல்கிறான். ஆனால், பப்லோ இந்த யோசனையை ப்ருனோவின் உதவி இல்லாமல் செயல்படுத்துகிறான்.

நாட்கள் ஓடின!

ப்ருனோ தினமும் அருவியில் இருந்து தண்ணீரை வாளியில் எடுத்து கொண்டு வரும் வேலை செய்து தினமும் சம்பாதித்தான்.

பப்லோ, அவனது குழாய்களை இணைக்கும் பணியை தொடர்ந்து கொண்டே இருந்தான்.

சில மாதங்களுக்கு பிறகு!

ப்ருனோவின் தண்ணீரை சுமந்து சுமந்து உடல் தொய்வுற்றது. ப்ருனோவால் அந்நாளில் தண்ணீர் எடுத்துவர உடல் ஒத்துழைக்கவில்லை. நடந்து நடந்து கால்களும் பலவீனம் அடைய தொடங்கியது. அன்றைய நாளில் இருந்து ப்ருனோவால் தண்ணீரை கிராமத்திற்கு கொண்டுவர முடியவில்லை.

அதே சமயம் பப்லோ தன்னுடைய குழாய் இணைப்பை முடித்து கிராமத்திற்கு தண்ணீரை திறந்து உட்கார்ந்து சம்பாதிக்க ஆரம்பித்தான்.

இந்த கதையில் நீங்கள் கேட்ட கேள்விக்கு ஒரு நல்ல தெளிவு கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்.

ஆனால், இதற்கும் ஐன்ஸ்டீன்-க்கும் என்ன தொடர்பு?

தொடர்பு இருக்கு! ஆனா இல்ல!

இது சிலருக்கு புரியாது. இது புரிந்தால் நீங்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டீர்கள்.
நான் ஒரு புதிய தொழில் துவங்கும் முன் அறிந்து கொள்ள வேண்டியது என்ன?

ஏகபோகம்(Monopoly)

போட்டியாளர்களே இல்லாத சந்தையை தேர்ந்தெடுங்கள்

சிறிய சந்தையாக இருந்தாலும் போட்டி இல்லாத சந்தையை தேர்ந்தெடுங்கள். அப்பொழுது தான் நீங்கள் அதில் ஏகபோகமாக இருக்க முடியும்.

கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் இன்று மிக பெரிய அளவிற்கு வளர காரணம். அந்தந்த துறையில் அது தான் முதல் நிறுவனமாக இருந்தது.

எடுத்துக்காட்டாக கூகுள் 90-களில் ஆரம்பிக்கும் பொழுது அதன் சந்தை மிக சிறியது மற்றும் வேறு எந்த நிறுவனமும் அதற்கு போட்டியாக இல்லை. இது அவர்களின் மொத்த சந்தையையும் அவர்களுக்கே சொந்தமாக்கியது. இதே கதை தான் பேஸ்புக், மைக்ரோசாப்ட் மற்றும் பேபால் நிறுவனங்களின் இமாலய வளர்ச்சிக்கு காரணம்.

நீங்கள் தொடங்கும் தொழில் அந்த இடத்தில முதலாவதாக இருக்கட்டும். ஒரு இடத்தில் இருக்கும் 4-வது உணவகமாகவோ, 10-வது கைபேசி கடையாகவோ இருக்க முயற்சிக்காதீர்கள் .
சிறியதாக தொடங்குங்கள்

ஆரம்பத்தில் சிறிதாக தொடங்குங்கள்.

சிறிதாக தொடங்கினாலும் அதில் உங்களை விட சிறந்த பொருட்களை அல்லது சேவையை தர முடியாத அளவுக்கு சிறப்பாக இருங்கள்.

எடுத்துக்காட்டாக, அமேசான் நிறுவனர் ஜெப் பீசோஸ் தனது இலக்காக உலகின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் ஆக வேண்டும் என தீர்மானித்தார்.

ஆனால் அவர் எடுத்த உடனேயே அனைத்து பொருட்களையும் விற்கும் சில்லறை விற்பனையாளர் ஆகவில்லை. முதலில் புத்தகங்கள் மட்டும் விற்கும் தலமாக தான் அமேசானை தொடங்கினார். பின்னர் உலகிலேயே சிறந்த புத்தக கடையாக அதை மாற்றினார். அதன் பிறகு தான் அனைத்து பொருட்களையும் விற்கும் தலமாக அமேசானை மாற்றினார்.

புதிய சிந்தனை

அடுத்த பில் கேட்ஸ் ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவாக்கிக் கொண்டிருக்க மாட்டார்.
அடுத்த ஸுக்கர்பேர்க் ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்கிக் கொண்டிருக்க மாட்டார்.
நாம் அவர்களை பின்பற்றினால் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.

இது வரை யாரும் செய்திராத ஒரு விடயத்தை செய்யுங்கள்.
ஏனென்றால் ஒரே ஆற்றில் இரண்டு முறை அடியெடுத்து வைக்க முடியாது(You cannot step into the same river twice).

கடைசியாக இருங்கள்

ஒரு பொருள் இந்த உலகத்தில் இருந்து அழிய போகிறதென்றால், உங்கள் பொருள் தான் கடைசியாக அழிய வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மைக்ரோசாப்ட் தான் பல ஆண்டுகளுக்கு கடைசி ஆப்பரேட்டிங் ஸிஸ்டெமாக இருந்தது.

கூகுள் தான் கடைசி தேடு தலமாக இருந்தது.

எனவே முடிவை மனதில் வைத்துக்கொண்டு தொடங்குங்கள்...
புதிதாகத் தொழில் தொடங்கும் போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் எவை?

காலத்திற்கேற்ற தொழிலாகவும், நல்ல எதிர்காலமும் உள்ள தொழிலையும் தேர்ந்தெடுப்பது மிக அவசியம்.

20 சதவீதத்திற்கும் குறைவான இலாபம் உள்ள தொழிலை தவிர்ப்பது நல்லது.

தினமும் 16 மணி நேரம் வரை தொழிலில் ஈடுபடுங்கள்.

லாபம் வந்தால் தான் தொழிலில் தொடரமுடியும் என்ற சிந்தனை ஒவ்வொரு முடிவிலும் இருக்கட்டும்.

தொழில் சம்பந்த பட்ட விஷயங்களை ஒரு அனுபவமிக்க mentor உடன் பகிர பழகவும்.

தொழில் சம்பந்த பட்ட ஞானத்தை update செய்து கொண்டே இருப்பது அவசியம்.

முதல் மூன்று வருடங்கள் லாபத்தை எடுப்பதை தவிர்த்தால் working capital தேவை மற்றும் அதற்கான
வட்டி செலவு குறைந்தால் தொழிலின் வளர்ச்சி அபரிதமாக இருக்கும்.

கடும் உழைப்பு, நேர்மை, வாக்கு தவறாமை, புத்திசாலித்தனம் போன்றவை உங்கள் தொழிலை மிக சிறப்பாக்கும்.

திங்கள், 6 ஜனவரி, 2020

அன்பா - பணமா ?
-----------------------------------
பொருளாதாரமே அனைத்து உறவுகளையும் தீர்மானிக்கிறது என்கிறார்களே, அதெப்படி அன்புதானே அனைத்து உறவுகளையும் தீர்மானிக்கும் .

அப்படி ஒரு அவல நிலைக்கு சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டவே மாமேதை காரல் மார்க்ஸ் அப்படிச் சொன்னார்.

நம் அன்புக்குரியவர்கள் இறந்துபோனால், அவர்கள் பயன்படுத்திய தலையணை, பாய் போன்றவற்றை தூக்கி தெருவில் வீசிவிடுகிறோம். ஆனால் 24 மணிநேரமும் அவர்கள் உடலோடு ஒட்டியிருக்கிற மோதிரம், செயின் போன்றவற்றை கழட்டிக் கொள்கிறோமே எதனால் ?

பணமதிப்பை கழித்துவிட்டு, பயன்பாடு என்கிற அடிப்படையில் பார்த்தால் - படுக்க , உட்கார, சாய்ந்து கொள்ள, ஓய்வெடுக்க, உறங்க என்று நமக்கு அனுசரணையாக இருப்பது பாயும் , தலையணையும்தான்.

தங்கத்தால் என்ன பயன்?

ஆனால், தங்கத்திற்கு இருக்கும்  பண மதிப்புதானே, அதன் மீதான மதிப்பையும் உயர்த்தி இருக்கிறது.

ஒவ்வொரு திருமண நிகழ்ச்சிகளிலும் இந்த அன்பு அல்லோகலப் படுவதைக் கவனிக்கலாம்.

கல்யாண வீட்டுக்காரர்கள், கல்யாணத்திற்கு வந்திருக்கிற வசதி குறைந்த உறவினரை வரவேற்று பேசிக் கொண்டிருக்கும்போதே, தூரத்தில் வருகிற வசதியானவர் முகம் Close-up பில் தெரிவதும், அருகில் இருக்கிறவரின் முகம் Fade Out ஆகி மறைவதையும் எது தீர்மானிக்கிறது  ?


அன்பா ?   இல்லை  பணமா ? நடைமுறையில் பணம்தான்  அதைத்  தீர்மானிக்கின்றது. சமுக மாற்றத்தில் பணத்திற்குக் கிடைக்கும் மதிப்பு  பல நேரங்களில் நல் மனிதர்களுக்குக் கிடைப்பதில்லை என்பது வருத்தமான உண்மை.

பணத்தை வைத்து எடை போடும் மனிதர்களுக்கு எங்கே தெரிய போகிறது

உறவுகளின் அருமை ....


ஞாயிறு, 5 ஜனவரி, 2020

இன்று பிறந்த நாள் கொண்டாடிய அருமை தம்பி .வழக்கறிஞர் கோவை கார்த்திக் ,அருமை தங்கை பேராசிரியர் நீலவேணி ரமேஷ்  ,என் அருமை மாப்பிள்ளை செந்தில்குமார் கண்ணுசாமி  ..மார்கழி பனியானாலும் வாழ்த்து அடைமழையில்  நனைந்துவிட்டார்கள் ..என்றும் வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681

புதன், 1 ஜனவரி, 2020

உடுமலைபேட்டை சுற்றி இருக்கும் தொல்லியல் சார்ந்த ..வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்
1.கொங்கல்நகரம்
2.குடிமங்கலம்
3. கொங்கல்நகரம்
 4. குடிமங்கலம்
5.கோட்டமங்கலம்
 6.கடத்தூர்
 7.வஞ்சி புரம்
 8.நாட்டுக்கல்பாளையம்
 9.காரத்தொழுவு
 10.கண்ணாடி ப்புத்தூர்
 11.குமணலிங்கம்
 12.ஐவர்மலை
 13.மதகடிபுதூர்
14.கல்லாபுரம்
 15.துவரமலை
16.ஐம்புக்கல்மலை
17.தளிஞ்சி
 18.தளி
 19.திருமூர்த்தி மலை
 20.ஜிலேபநாயக்கன்பாளையம்
21.மஞ்சநாயக்கனூர்
22.துங்காவி ..