திங்கள், 19 மே, 2025

சல்லிப்பட்டி வம்ச பூர்வீக வரலாறு:-

 சல்லிப்பட்டி வம்ச பூர்வீக வரலாறு:-

பொள்ளாச்சி தாலுகா சல்லிப்பட்டி பாளையக்காரரான எரம நாயக்கரின் வம்சாவழி வரலாறு எதுவென்றால்:-
முற்காலத்தில் யாதவ குலத்தில் தோன்றிய ஒன்பது கம்பளத்துள் தொட்டிய கம்பள சாதியில் பிறந்த குச்சில பொம்ம நாயக்கன் காலத்தில் வடக்கில் டில்லி பாதுஷ்ஷா சீமையில் இருந்த குறுச்சி எனப்பட்ட பாளையத்தை குச்சில பொம்ம நாயக்கர் ஆண்டு வந்தார். அப்போது கம்பளத்தார் பெண்னை மணந்துக்கொள்ள பாதுஷ்ஷா விரும்பி கம்பளத்தாரிடம் பெண் கேட்டு வந்தார் ஆனால் துலுக்கருக்கு பெண்னை திருமணம் செய்துவைக்க கூடாது என்ற வைராக்கியத்தல் இருந்த கம்பளத்தார்கள் இனி வடதேசத்தில் இருந்தால் பாதுகாப்பில்லை என்று உணர்ந்தனர் எனவே ஒரே இரவில் பிற தேசங்களுக்கு சென்று வேண்டும் என முடிவெடுத்து பெருங்கூட்டமாக கம்பளத்தார்கள் சென்றுக்கொண்டிருக்கும் ஆறு குறுக்கிட்டது. அச்சமயம் அந்த ஆற்றை கடக்க புங்க மரங்கள் ஒன்றாக சாய்ந்து பாலம் போல் அமைந்து ஆற்றை கடக்க உதவியது. எனவே புங்கமரத்தை இஷ்ட தெய்வமாக ஏற்றுக்கொண்ட கம்பளத்தார்கள் விஜயநகரம் வந்தடைந்தனர்.
புங்கன் மரம்
அக்காலத்தில் விஜயநகரபட்டிணத்து அரசராக இருந்த புக்க ராயர் கம்பளத்தார்கள் வந்த செய்தியை அறிந்து அவர்களை சந்தித்தார் கம்பளத்தார்களின் சாகசம் மற்றும் வீரம் முதலிய குணங்களை தெரிந்துக்கொண்ட ராயர் கம்பளத்தார்களை விஜயநகரத்திலேயே தங்க உத்தரவிட்டு அவர்களூக்கு தேவையான வசதிகளை செய்துக்கொண்டிருந்த சமயத்தில் விஜயநகரின் அரசரான கொல்லவார் குல புக்கராயர் சல்லிப்பட்டி பாளையத்தின் மூதாதையரான குச்சில பொம்ம நாயக்கரிடம் அவரின் வரலாறு குறித்து கேட்டு அறிந்துக்கொண்டதில் குச்சல பொம்மர் மிகுந்த கம்பீரமும் விரமும் உடையவர் என ராயர் அறிந்துக்கொண்டு அவரை தனது சமஸ்தானத்தில் பணி அமர்த்தினார். அதற்கு பிறகான நாட்களில் இராயரின் பட்டத்து குதிரையை டில்லி துலுக்கரின் ஆட்கள் கடத்தி சென்று விட்டனர். இதன் காரணமாக வருந்தமடைந்த ராயர் தனது மக்களை அழைத்து பட்டத்து குதிரையை யார் மீட்டு வருகிறாரரோ அவர்களுக்கு பெரும் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தார் அப்போது குச்சில பொம்ம நாயக்கர் நான் குதிரையை மீட்டு வருகிறேன் என வெற்றிலையை வாங்கிக்கொண்டு வீர ஆவேசமாக கிளம்பி டில்லியை அடைந்து அங்கு சிறைப்பட்டிருந்த பட்டத்து குதிரையை மீட்டு இரவோடு இரவாக விஜயநகரம் வந்து சேர்ந்து குதிரையை ராயர் சமஸ்தானத்தில் ஒப்படைத்தார். இதனால் மன மகிழ்வு கொண்ட ராயர் குச்சல பொம்ம நாயக்கருக்கு சகல வெகுமதிகளும் கொடுத்து மேலும் ஒரு கிராமம் மற்றும் உம்பளிக்கையும் கொடுத்து கௌரவித்தார்.
பிறகாக விஜயநகரத்தில் ராயரை எதிர்த்து சில பளையக்காரர்கள் கிளர்ச்சி செய்தனர் அதை அடக்க ராயர் குச்சல பொம்ம நாயக்கரை அனுப்பினார். தனது பராக்கிரமத்தால் கிளர்சியாளர்களை ஒடுக்கி அவர்களை ராயர் சமஸ்தானத்திற்கு அடிபணிய வைத்தார் இதனால் சந்தோஷமடைந்த ராயர் குச்சில பொம்ம நாயக்கரை அழைத்து விஜயநகரத்தின் சில்லரை பாளையக்காரர்களுக்கெல்லாம் தலைவராக நியமித்தார் மேலும் அவருக்கு விருதுகளாக:-
காண்டா மணி
* பல்லாக்கு
* உபய சாமறம்
* சகசம்பு குடை
* பூசக்கிர குடை
* பசவசகறடால்
* சங்குசக்கிர டால்
* சந்திரகாவி டால்
* மகரடால்
* கருட டால்
* அனுமன் டால்
* பறாங்குசடால்
* பஞ்சவர்ண டால்
* வெள்ளபக்ற டால்
* ஆனைமேலம்பாறி
* ரணபாஷிங்கம்
* கமட்டசறம்
* முத்துச் சறம்
* வீரசங்கிலி
* பாறினிகளம்
* சாமதொரோஹா வெண்டயம்
* சோமத்தலை
* வீரகண்டாமணி
இவ்வாறு பல விருதுகள் கொடுத்து பாளையக்காரர்களுக்கு எல்லாம் முதன்மைகாரன் என்னும் கிறீட்டாதிபதி பதவியும் கொடுத்து
ஆனை மேல் அம்பாரி
* ஆணைமேல் பேரிக்கை
* ஒட்டிகை மேல் நகாறு
* எறுத்து மேல் தம்பட்டம்
* நவபத்து சங்கீத வாத்தியங்கள்
* ஆணை மேல் அம்பாரி
* குதிரை
முதலான பரிசுகளும் தந்து யானை மேல் அமரவைத்து நகர் வளம் வரச்செய்து பாளையக்கார்களின் முதன்மை காரராக பட்டம் கட்டினார். அந்த நாள் முதல் வட பிரதேசத்து சில்லரை பாளையங்களுக்கெல்லாம் முதன்மைகாரராக சகல அதிகாரங்களுடன் விளங்கினார்.
சல்லிப்பட்டி பாளையம் உருவான வரலாறு:-
குச்சில பொம்ம நாயக்கரின் மகன் பரப்பேதாதுல நாயக்கர் இவருக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தனர் அவர்கள்:-
1, எத்துல முத்தே நாயக்கர்
2, எரம நாயக்கர்
இவர்கள் ராயர் சமஸ்தானத்தில் அதிகாரங்கள் பெற்றவர்களாக இருந்த காலத்தில் ராயர் அவர்கள் தென்னாட்டிற்கு கம்பளத்தார்களை அனுப்பி அங்கு அவர்களுக்கு பாளையங்கள் கொடுத்து பாளையக்காரர்களாக ஆக்கினார். அப்போது தான் இளையவனாகிய எரம நாயக்கருக்கு நல்லுறுக்க நாட்டில் அக்கா தங்கச்சி மலைக்கு மேற்கு குடமறுக்கு சீத்தகல்லுக்கு கிழக்கு தளவாயி பேட்டை கரைக்கு தெற்கு முதுவர் சீமை எல்லை எடமலைக்கு வடக்கு இவ்விடங்களுக்கு உட்பட்ட மற்றும் காளைமலைக்கு உட்பட்ட 11காத தூரத்திற்கு உட்பட்ட பாளையத்திற்கு எரம நாயக்கரை பளையக்காரராக ராயர் நியமித்து உத்தரவிட்டார். ராயரின் ஆணைப்படி எரம நாயக்கர் நல்லுறுக்கு நாட்டில் உள்ள அழகாபுரிக்கு வந்து சேர்ந்தார். ராயர் கூறியபடியே தன்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில் குளங்கள் வெட்டி, சல்லிப்பட்டி என்னும் ஊரை உருவாக்கி அவ்வூருக்கு உட்பட்ட 14 கிராமங்களுக்கும் பாளையக்காரராக சகல மரியாதைகள் மற்றும் விருதுகளுடன் முடிசூட்டிக்கொண்டார்.
அந்த நாள் முதல் சாலிவாகன சகாப்தம் 1268 முதல் 1723 வரை 455 வருடங்களாக எரம நாயக்கர் வம்சம் சல்லிப்பட்டி பாளையத்தை ஆண்டுவந்தனர்
சல்லிப்பட்டி பாளையத்தின் வம்சாவழிகள்:-
1, எரம நாயக்கர் - (30 வருடங்கள் பட்டமிருந்தார்)
2, சம்பால நாயக்கர் - (24 வருடங்கள் பட்டமிருந்தார்)
3, சகசம்பால நாயக்கர் - (18 வருடங்கள் பட்டமிருந்தார்)
4, மயிலப்ப நாயக்கர் - (14 வருடங்கள் பட்டமிருந்தார்)
5, குறிச்சி நாயக்கர் - (32 வருடங்கள் பட்டமிருந்தார்)
6, கதிர் நாயக்கர் - (27 வருடங்கள் பட்டமிருந்தார்)
7, கணகாண்டி நாயக்கர் - (19 வருடங்கள் பட்டமிருந்தார்)
8, ரணவீராண்டி நாயக்கர் - (22 வருடங்கள் பட்டமிருந்தார்)
9, அமனாண்டி நாயக்கர் - (... வருடங்கள் பட்டமிருந்தார்)
10, சல்லி வீரப்ப நாயக்கர் - (26 வருடங்கள் பட்டமிருந்தார்)
11, கும்மன நாயக்கர் - (... வருடங்கள் பட்டமிருந்தார்)
12, பெரியமலையாண்டி நாயக்கர் - (9 வருடங்கள் பட்டமிருந்தார்)
13, ராமலிங்கமலையாண்டி நாயக்கர் - (24 வருடங்கள் பட்டமிருந்தார்)
14, சின்னமலையாண்டி நாயக்கர் - (15 வருடங்கள் பட்டமிருந்தார்)
15, அமணலிங்கம நாயக்கர் - (26 வருடங்கள் பட்டமிருந்தார்)
16, லிங்காண்டி நாயக்கர் - (12 வருடங்கள் பட்டமிருந்தார்)
17, நல்லமுத்து நாயக்கர் - (29 வருடங்கள் பட்டமிருந்தார்)
18, அமணாண்டி நாயக்கர் - (19 வருடங்கள் பட்டமிருந்தார்)
19, வேங்கடபதி நாயக்கர் - (40 வருடங்கள் பட்டமிருந்தார்)
20, ரங்கப்ப நாயக்கர் - (30 வருடங்கள் பட்டமிருந்தார்)
21, பெரிய நல்லமுத்து நாயக்கர் - (10 வருடங்கள் பட்டமிருந்தார்)
சல்லிப்பட்டி பாளையக்காரர்கள் பற்றிய குறிப்புகள்:-
முதலாம் பட்டக்காரரான எரம நாயக்கர் காலத்தில் பாலாற்றின் கரையின் தெற்கு மலைமேல் கதரனாய பொருமாள் எழுந்தருளி இருப்பதை அறிந்து பங்குனி மாதம் மலையை சுற்றி தேரோட்டம் நடத்தினார். மேலும் சல்லிப்பட்டி கிராம தேவதை கோவில்களுக்கு மானியங்கள் வழங்கினார். அவர் வாழ்ந்த காலத்தில் ஊர் மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கினார்.
இரண்டாம் பட்டக்காரர் சாம்பல நாயக்கர் காலம் முதல் பதினெட்டாம் தலைமுறையான அமணாண்டி நாயக்கர் காலம் வரை அதிகாரத்துடனும் ஆயுதங்களுடனும் ஆளும் சமஸ்தான அரசர்களுக்கு கட்டுப்பட்டு வரிப்பணத்துடன் ஆண்டுக்கு ஒரு யானை விதம் வழங்கி வந்துள்ளனர். ஆளும் அரசர்களுக்கு அன்புக்கு பாத்திரமாக இருந்து சல்லிப்பட்டி பாளையத்தை ஆண்டு வந்துள்ளனர்.
ஐதர் அலி
பத்தொன்பதாம் பட்டமான வேங்கடபதி காலத்தில் மைசூர் அரசன் ஜதர் அலி அரண்மனை ஆணைப்படி 1000 மைசூர் வீரர்கள் 500 சல்லிப்பட்டி வீரர்களுடன் பாலக்காட்டு ராஜாவின் மீது வேங்கடபதி போர் தொடுத்தார் போரில் பாலக்காட்டு படைகளை வீழ்த்தி, அரண்மனையையும் கைப்பற்றி வெற்றிப்பெற்று வீரமரணம் அடைந்தார்.
இருபதாம் பட்டம் ரங்கப்ப நாயக்கர் காலத்தில் அப்போதைய மைசூர் அரசன் திப்பு சுல்தான் அரண்மனைக்கு 9010 வரி பணம் ஆண்டு 1க்கு செலுத்தி வந்து 14 கிராமங்களை கொண்ட சல்லிப்பட்டியை ஆண்டுவந்தார்.
21ம் பட்டமான பெரிய நல்லமுத்து நாயக்கர் ஆங்கிலேய சர்காருக்கு வரி செலுத்தாமல் போராடி வந்தார். பின்பு நல்லமுத்து நாயக்கர் தலைமறைவானார். தலைமறைவாக இருந்தவரை ஆங்கிலேய அரசு பிடித்து குற்றவாளியாக அறிவித்து அவரை கொலை செய்தது. பின்பாக நல்லமுத்து நாயக்கரின் மகன் மற்றும் அவர் சார்ந்த மக்களை திண்டுக்கல்லில் சிறைவைத்தது. அவருடைய மகனுக்கு மட்டும் மாதம் 1விறகம் என்ற அளவில் பணம் தந்து உதவியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக