மாண்புமிகு முன்னாள் அமைச்சர் சரித்திரச்செம்மல் எஸ்.ஜே.சாதிக்பாட்சா
சரித்திரச் செம்மல் எஸ்.ஜே.சாதிக்பாட்சா பெயரைச் சொல்லும்போது அமைதியான உருவம் நம் மனக்கண் முன் வந்து போகும். அன்பின் வடிவம், அமைதியின் உருவம்,அடக்கத்தின் உறைவிடம்.
அவரைப்பற்றியான ஒரு அறிமுகம்
எஸ்.ஜே.சாதிக்பாட்சா திவான் குடும்பத்தின் வாரிசு, ஆம், உடுமலைக்குத் தெற்கே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலைக்கு அருகே ஏர்ராம் வயலிலிருந்து வல்லக்குண்டாபுரம் வரைக்கும் சுமார் 650 ஏக்கர் நிலத்தின் குடும்பம்தான் திவான்குடும்பம்.
இவரது தாத்தா சையத்திவான் குத்மி ஆலம் இவருக்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவிக்கு ஐந்து ஆண்கள் இரண்டாமவருக்கு ஒரே ஒரு திருமகன் அவர்தான் சாதிக்பாட்சா தந்தை(சையத் திவான் அப்துல் வதூத்.) உடன் பிறந்தவர்கள் அறுவர். இதில் 1. சையத் திவான் அப்துல் ரசாக் 2. சையத் திவான் அப்துல் வஹாப் 3. சையத் திவான் அப்துல் அஜிஸ் 4. சையத் திவான் அப்துல் லத்தீப் 5. சையத் திவான் ஹஸன் 6. சையத் திவான் அப்துல் வதூத்.
இதில் சையத் திவான் அப்துல் ரசாக் உடுமலைப்பேட்டையை நகராட்சியாக நிலை உயர்த்த அதற்காக அரசுக்கு செலுத்த வேண்டிய வரியினைச் செலுத்தித் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் போட்டியின்றி தலைவராக இருந்தார். மேலும் 1917 ல் கோவையில் தென்னிந்தில நல உரிமைச்சங்கத்தின் சார்பில் பார்ப்பனரல்லா முதல் மாநில மாநாட்டின் வரவேற்புக் குழு உறுப்பினராகவும், மாநாட்டுத் தலைவர் ராமராய நிங்கர் (பனகல் அரசரை) முன்மொழிந்தவராகவும் இருந்தார். தென்னிந்திய நல உரிமைச்சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்தார். அப்போதைய கோவை ஜில்லா போர்டு மெம்பராகவும், நீதிக்கட்சியில் மாநிலத்துணைத்தவைராகவும் இருந்தவர். 1900 க்கு முன்பு லண்டன் சென்று சட்டம் படித்தவர். உடுமலைப்பேட்டை நகராட்சியை உருவாக்கியவர். அனைத்து மக்களின் சார்பாக முன்னூறு ரூபாய் வரி கட்டியவர். இதனால் 1917 முதல் 1926 வரை தொடர்ந்து உடுமலை நகர மன்றத் தலைவராக இருந்தவர்.
திவான் குடும்பத்து வாரிசு
பொள்ளாச்சியிலிருந்து கேரளா செல்லும் வழியில் திவான்சா புதூர் என்ற ஊராட்சி இருக்கிறது. இது ஆறாயிரம் ஏக்கர் பரப்பளவில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு முதல் தற்போதுவரை இருந்துள்ளது. இப்போது 100 ஏக்கர் மட்டுமே ஐந்தாவது தலைமுறை பயன்பாட்டில் உள்ளது.
இந்த திவான்சாகிப்புதூர் பின்னாளில் திவான்சா புதூர் என மருவிவிட்டது. இங்கிருக்கும் மாரியம்மன் கோயிலில் திவான் குடும்பத்தினர் அறங்காவலராக இருந்து குடமுழுக்குப் பணிகள் செய்துள்ளனர்.
இந்த திவான் சாபுதூரில் இருக்கும் உயர்நிலைப்பள்ளிக்கு 5 ஏக்கர் நிலமும், கோயில்களுக்கும் நிலத்தை இலவசமாக வழங்கியுள்ளனர். இன்று வரையில் அந்த ஊரில் திவான் குடும்பத்தினரை பண்ணாடி குடும்பம் என்றே நடைமுறை வழக்கத்தில் அழைத்து வருகின்றனர்.
26.05.1928 இல் உடுமலைப்பேட்டை மேடை வீட்டில் சையத் திவான் அப்துல் வதூத் - சைத்தானி பீபி இணையருக்கு முதல் மகனாகப் பிறந்தவர்தான் எஸ்.ஜே. சாதிக்பாட்சா.
இரண்டாவது தம்பி அசன்பாட்சா, மூன்றாவது முதல் தங்கை மகபூப் பீபி நான்காவது தங்கை காதீன் பீபி, ஐந்தாவது தங்கை பீபி - இன்று சாதிக்பாட்சா உடன்பிறந்தவர்கள் யாரும் உயிருடன் இல்லை.
எஸ்.ஜே.சாதிக்பாட்சா- துணைவியார் சர்புன்னிசா, சாதிக்கிற்கு மூன்று வாரிசுகள் ஒன்று மகன் முஸ்டாக் பாஷா, இரண்டு பெண்மக்கள், மகள் சாஹீன், இன்னொரு மகள் ஹீனா,
மகன் முஸ்டாக்குடன் -சர்புன்னிஷா இருந்து வருகிறார். இரண்டு மகள்களில் ஒருவர் அமெரிக்காவிலும், இன்னொருவர் பெங்களுருவிலும் இருகின்றனர்.
மனிதப்புனிதர் எஸ்.ஜே.சாதிக்பாட்சா 1967 இல் சென்னை சென்று பட்டினப்பாக்கம் அரசு குடியிருப்பில் இருந்தார் அவர் மறையும் வரைக்கும் 1994 மே 12 வரைக்கும் அந்த வீட்டிலிருந்து எவ்வளவு சிரமங்கள், துன்பங்கள், தொல்லைகள் வந்த பொழுது மாறவேயில்லை. வீட்டை மட்டுமல்ல, கொள்கையிலும், கட்சியிலும் மாறாமல் இருந்தவர்.
அவர் சாகும் வரைக்கும் அவரது பெயரில் இருந்த ஒரே வீடு உடுமலையில் அவர் பிறந்த மேடை வீடு. இதைத் தவிர வேறு எந்த அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அவர் பெயரில் இன்றளவும் இல்லை.
தொடக்கக்கல்வி
1928 ல் பிறந்த சாதிக் தொடக்கக்கல்வியை உடுமலை கணக்கம்பாளையம் தொடக்கப்பள்ளியிலும் ஆரம்பக்கல்வியை ஜில்லாபோர்டு பள்ளியிலும் படித்தார். இவருடன் பயின்றவர்கள் நீதியரசர் மோகன், கணியூர் கே.ஏ. மதியழகன், கே.ஏ.கிருஷ்ணசாமி.
உடுமலை ஜில்லா போர்டு பள்ளியில் 9 ஆம் வகுப்பில் படிக்கும்போது நடந்த பேச்சுப்போட்டியில் இராமன் எனும் வீரன் எனும் தலைப்பில் பேசியமைக்காக சாதிக்பாட்சா முதல் பரிசும், நீதியரசர் மோகன் இரண்டாம் பரிசு பெறுகின்றனர்.
கல்லூரிக்கல்வி
1944 முதன்முதலாக பேரறிஞர் அண்ணாவை கணியூர் கே.ஏ.மதியழகன் வீட்டில் சந்தித்த சாதிக்பாட்சா அன்று முதல் அவர் மீது தீராக்காதல் கொள்கிறார். வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் புதுமுக படிப்பும், சென்னை இஸ்லாமியக்கல்லூரியில் இளங்கலையும், சென்னை சட்டக்கல்லூரியும் சட்டப்படிப்பும் படிக்கின்றார். இதில் வாணியம்பாடி கல்லூரியில் படிக்கும்போது சென்னை இஸ்லாமியக்கல்லூரியில் படிக்கும்போது பேரறிஞர் அண்ணாவை அழைத்துப் பேச வைக்கிறார். தமிழும் இஸ்லாமும் எனும் தலைப்பில் பேரறிஞர் உரை நிகழ்த்தினார்.
இடையில் 1947-48 ல் சென்னை சட்டக்கல்லூரி படிக்கும்முன்பு மேட்டுப்பாளையம் தனியார் பள்ளியில் 11 மாதங்களும், கோவை அஞ்சல் நிலையத்தில் 6 மாதங்களும் பணிபுரிந்தார்.
இவர் தனது பெரியப்பா திவான் போலவே இவரும் சட்டம் படித்து நீதிபதியாக வேண்டும் என்ற கனவில் இருந்தவர். 1944 ல் அண்ணாவின் சந்திப்பிற்கு பிறகு தனது மனநிலையை மாற்றிக்கொண்டு அரசியல் பணிக்கு வந்தார்.
அதாவது சட்டம் படித்து இந்த தமிழ்ச்சமூக மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று அண்ணா சொன்னதைத் தன் வாழ்நாளில் எல்லா இடங்களிலும் கடைப்பிடித்தார் என்று சொல்வதைக்காட்டிலும் வாழ்ந்து காட்டினார்.
சமூகப்பணி – அரசியல் பணி
பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற சொற்களைத் தம் குடும்பத்தாரிடம் ஒரு நாளைக்குக் கண்டிப்பாக நான்கு அல்லது ஐந்து முறைக்கு மேல் சொல்லிக்கொண்டே இருப்பார். தம் வாழ்நாள் முழுமைக்கும் இந்த சொற்களையே அதிகம் பயன்படுத்தியதாக அவரது துணைவியார் திருமதி. ஷர்புன்னிசா தெரிவித்தார்.
1955 இல் வழக்கறிஞர் பணியோடு திராவிட முன்னேற்றக்கழகத்தின் கட்சிப்பணிகளுக்கும் வருகை தருகிறார். 1956ல் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சத்தியவாணி முத்து பேச இருக்கும் முதல் கூட்டத்தின் தலைமையாக சாதிக்பாட்சா பெயர் போட்டு துண்டறிக்கை அச்சிடப்பட்டது. அப்பொழுதிருந்த இஸ்லாமியர்கள் தி.மு.க கட்சியை (சாமி இல்லென்னு) சொல்ற கட்சியில் நம்ம சாதிக் சேர்ந்திட்டாரு இதனால் இவர் இறந்தால் இவருக்கு மசூதியிலிருந்து செய்ய வேண்டிய சடங்குகள் செய்யப்படமாட்டாது என்று அறிவிப்பு கொடுத்தனர். அதையும் மீறி தி.மு.க.வில் சேர்ந்து கழகப்பணியோடு வழக்கறிஞர் பணிகளையும் சிறப்புற மேற்கொண்டார்.
உடுமலை மடத்துக்குளம் பகுதிகளில் எளிமையான, பண்பான, நேர்மையான ஒரு வழக்கறிஞர் கிடைத்துள்ளார் என்று வெகுஜன மக்களிடம் இவரின் அரசியல்செயல்பாடுகளும் சமூகப்பணிகளாலும் வெகு விரைவில் பொதுமக்களிடம் சென்று சேர்கிறார்.
1957 இல் உடுமலை நகர கூட்டுறவு வங்கியில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அதே வங்கியில் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
விலைவாசி உயர்வுப்போராட்டத்தில் கைதாகி மூன்று மாதங்கள் கோவை சிறை.
சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் கைதாகி ஆறு மாதம் சிறை
1962 இல் உடுமலை சட்டமன்றத் தேர்தலில் நின்று தோல்வி அடைகிறார். ஆனால் நகரமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்று நகர மன்ற உறுப்பினர் ஆகிறார். பின்னர் காங்கிரஸ் கட்சியினரால் உடுமலை நகர மன்றத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகிறார்.
1966 இல் உடுமலை போடிபட்டியில் பேரறிஞர் அண்ணாவைத் தாக்கும் முயற்சியில் கேடயமாகப் பயன்பட்டு அவரது உயிரைக்காப்பாற்றியவர் சாதிக்.
அமைச்சராக
06.03.1967 முதல் 14.02.1969 வரை பொது சுகாதாரத்துறை அமைச்சர்.
(சுகாதாரம், மருத்துவம், வீட்டு வசதி, கட்டுப்பாடு, அனாதைவிடுதிகள், பிச்சைக்காரர்கள் பிரச்சினை, பத்திரிகை; காகிதக் கட்டுப்பாடு, பண்டங்கள் சப்ளை, விலைவாசி)
1967 ல் தேர்தலில் வெற்றிபெற்று சுகாதாரத்துறை அமைச்சராகிறார் சாதிக்பாட்சா. அதுவரையிலும் இல்லாத சுகாதாரக் கட்டமைப்பினை ஏற்படுத்துகிறார். ஆரம்ப சுகாதார நிலையம், (ஊருக்கு ஒன்று) ஆரம்ப சுகாதார மேம்படுத்தப்பட்ட நிலையம், (ஐந்தாறு ஊர்களுக்கு ஒன்று) தாய் சேய் நல விடுதி, அரசு மருத்துவமனை சிற்றூர்ப்புறங்களிலிருந்து நகரத்திற்கு வர நான்கு நிலைகளை உருவாக்கியவர் சாதிக்பாட்சா.
13.02.1969 முதல் 01.07.1973 வரை பொதுப்பணித்துறை அமைச்சர்.
1967 வரைக்கும் கட்டப்பட்ட பாலங்கள் 20.
1967 க்குபிறகு 1973 வரை கட்டப்பட்ட பாலங்கள் 50
(சவுதிஅரேபிய, மேற்கு ஜெர்மனி, ஈரான், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். )
26,27,28,29.11.1969 இல் கலைஞருடன் பஞ்சாப் பயணம் மேற்கொண்டார்.
02.07.1973 முதல் 01.12.1974 வரை வருவாய்த்துறை அமைச்சர்.
02.02.1975 முதல் 30.01.1976 வரை வணிகவரித்துறை அமைச்சர் .
(அரசு ஊழியர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு கையேடு உருவாக்கிக் கொடுத்தார் - வணிகர்களின் காவலன் பட்டம் கொடுக்கப்படுகிறது.)
02.02.1975 முதல் முதல் 30.01.1976 வரை மின்சாரத்துறையின் கூடுதல் பொறுப்பு
1975 ல் கற்கண்டு இதழ் இவரை 'சபாஷ் சாதிக்பாட்சா' என்று செய்தி போடுகிறது.
டெக்கான் குரோனிக்கல் நாளிதழ் பாராட்டி எழுதுகிறது.
1976 ல் நெருக்கடி காலத்தில் அன்பகத்தில் கடை நிலை ஊழியராகப் பணியாற்றியது.
13.11. 1976 முதல் தலைமை நிலையச் செயலாளராக
1977 முதல் 1980 வரை ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் (எதிர்க்கட்சி)
(சொந்தக்கார் இல்லாததால் பட்டினப்பாக்கத்திலிருந்து தலைமைச்செயலகத்திற்கு பேருந்தில் பயணம்)
நீண்ட நாள் பொருளாளர் (14 ஆண்டுகள்)
1977 முதல் கழகப்பொருளாளராக
1983- 1985 முடிய சட்டமேலவை உறுப்பினர்
1977 முதல் 1989 வரை உயர்நீதிமன்ற வழக்கறிஞராகவும், கட்சிப்பொருளாளராகவும்
1978 ஏப்ரல் 2 அருப்புக்கோட்டை துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்தில் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பித்தார்.
ஆகஸ்ட் 1983 முதல் 1986 நவம்பர் வரை சட்ட மேலவை உறுப்பினராக இருந்துள்ளார்.
1985 -86 இந்தி எதிர்ப்புப் போராட்டம் கலைஞரும், பேராசிரியரும் சிறையில் இருக்கும்போது சாதிக்பாட்சா கழகத்தை முன்னின்று வழி நடத்துகிறார்.
27.01.1989 முதல் 31.01.1991 வரை சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர்
மே 12 , 1994 மறையும் வரைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர்.
(சூலை 15, 1977 முதல் மே,12, 1994 வரை)
சாதனைக்குச்சான்றாக : உடுமலைக்குச் செய்திட்ட அவரது பணிகள்
1. அரசு மேனிலைப்பள்ளி
2. அரசு மருத்துவமனை
3. அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி
4. அரசு கலைக்கல்லூரி
5. உடுமலை மின்வாரிய அலுவலகம்
6. ஜல்லிபட்டி கால்நடை மருத்துவமனை
7. கணியூர்- கடத்தூர் பாலம், கணியூருக்கு குடிநீர் கொண்டு வந்தவர்.
8. உடுமலை-கொமரலிங்கம் பாலம்
9. பழனி- மடத்துக்குளம் பாலம்
10. கல்லாபுரம் பாலம்
11. உடுமலைக்கு இரண்டாம் குடிநீர்த்திட்டம்
12. மத்திய பேருந்து நிலையம்
13. உடுமலைநகராட்சி இரண்டாம் நிலை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தியது.
14. உடுமலை புறவழிச்சாலை ( பை பாஸ் சாலை)
15. உடுமலை பயணியர் விடுதி
16. அமராவதி பயணியர் விடுதி
17. திருமூர்த்தி மலை பயணியர் விடுதி
18. உடுமலை சார்பு நீதிமன்றம்
19. உடுமலைப்பேட்டை பெண்கள் பள்ளி விடுதி
20. நேதாஜி விளையாட்டு மைதானம் சுற்றுச்சுவர்
21. சர்க்கரை மில் அலுவலகம் , பயணியர் விடுதி
22. உடுமலை நகராட்சி ஆணையாளர் குடியிருப்பு
23. பழனி கொடைக்கானல் சாலை
24. ஒட்டன்சத்திரம் பாய்ச்சலூர் சாலை
சாதிக்பாட்சாவின் பண்பு நலன்கள்
1989 ல் உதகமண்டலம் மலர்க்கண்காட்சியில் இருந்தபோது ஒரு முதுபெரும் வழக்கறிஞர் தனக்கு நியாயமாகக் கிடைத்த அரசு வழக்கறிஞர் பணிக்காக ரூ. 10 ஆயிரம் கொடுத்தவரை கையோடு பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்து அவருக்கு வழக்கறிஞர் பணியும் இல்லாமல் செய்துவிட்டார்.
1991 ல் திருச்சி சிறையில் பணியாற்றும் ஒருவர் கட்சிக்காரர் என்று சொல்லி ரூபாய் 1000 கொடுத்துள்ளார். அவரை பணியிலிருந்து நீக்கிவிட்டு சிறைக்கும் அனுப்பி வைத்துவிட்டார். இது போன்று இன்னும் நிகழ்வுகள் புத்தகத்தில் இடம்பெறுகிறது.
1967 முதல் 1991 வரையிலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர், பதினோரு ஆண்டு காலம் அமைச்சராக இருந்தவர், 650 ஏக்கர் நிலத்திற்குச் சொந்தமான திவான் குடும்பத்திலிருந்து வந்தவர். சென்னையில் அவருக்கென்று சொந்தமாக வீடு இல்லாதவர். ஒரு வாகனம் இல்லாதவர்.
பேரறிஞர் அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற சொற்களுக்கு இலக்கணமாக வாழ்ந்திட்ட ஒருவர் உண்டென்றால் அவர்தான் சாதிக்பாட்சா.
எளிமை, தூய்மை, நேர்மை, வாய்மை, உண்மை என அனைத்தையும் தம் வாழ்வில் கடைசி வரைக்கும் கடைப்பிடித்தவர்.
தன்னுடைய மகனுக்கு சென்னையில் கல்லூரியில் இடம் கொடுத்தபோது இந்த மதிப்பெண்ணுக்கு இந்த கல்லூரியில் இடமா என வினவி, இது அமைச்சரின் மகன் என்று அறிந்து கொடுக்கப்பட்டதை அறிந்து, அந்தக் கல்லூரியிலிருந்து விலக்கி பெங்களுரு கல்லூரியில் படிக்க வைத்தார்.
தன்னுடைய அரசு வாகனத்தை எக்காரணத்தைக் கொண்டும் தம் குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்த அனுமதிக்கமாட்டார்.
மாற்றாக தம் மனைவியின் சகோதரர் ஒரு வாகன விபத்து காரணமாக அமைச்சர் பெயரை, பதவியைப் பயன்படுத்தியமைக்காக சிறைக்கு அனுப்பினார் சாதிக்பாட்சா.
காமராஜரின் வாகனத்தை சாலையில்கூட முந்தக்கூடாது என்று தம் ஓட்டுநர் தங்கவேலுவிடம் சொன்னவர்.
அண்ணாவின் உயில் 'மாநில சுயாட்சி' என பதிவு செய்தவர்.
கடமை,கண்ணியம், கட்டுப்பாடு - இது வெறும் சொற்களல்ல் வாழ்க்கை என வாழ்ந்து காட்டியவர் !
சென்னை தி.நகரில் அவரின் துணைவியார் திருமதி. ஷர்புன்னிசா வுக்கு அவர் தந்தை கொடுத்த வீட்டிற்கு வரச்சொன்ன போது (வரமாட்டேன் என்று சொல்லி) கடைசி வரைக்கும் பட்டினப்பாக்கம் வீட்டில்தான் இருப்பேன். இல்லையென்றால் உடுமலை வீட்டுக்குப் போய்விடுவேன். எந்தக்காரணத்தைக்கொண்டும் யார் வீட்டிற்கும் வரமாட்டேன். 'அவ்வாறு வந்தால் தான் அமைச்சராகி சம்பாதித்த பணத்தில் சொந்த வீடு கட்டிவிட்டார் என்று சொல்லி விடுவார்களோ' என மனச்சான்றின் அச்சத்தில் கடைசி வரைக்கும் அவர் பட்டினப்பாக்கம் வீட்டிலேயேதான் இருந்தார். அங்குதான் அவர் இறந்தும் உடல் கிடத்தப்பட்டது.. எஸ்.ஜே.சாதிக்பாட்சாவில் வரலாற்றில் கோவை பி.எஸ். ஜானகிராமன் பெயரும் இடம் பெறுகிறது. ஏனென்றால் எஸ்.ஜே.சாதிக்பாட்சா இறந்த போது அவர் வீட்டு வாசலில் இறந்தவர் பி.எஸ்.ஜானகிராமன்.
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்திலிருந்து 500 பக்கங்களுக்கும் மேலாக தயாரித்து வெளியிடப்படுகிறது. 'சரித்திரச்செம்மல் சாதிக்பாட்சா'
தொடர்புக்கு : இல.அ.அருட்செல்வன் : 98420 91244,


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக