செவ்வாய், 13 மே, 2025

செல்வசென்ராயப்பெருமாள் கோயில் சின்ன நெகமத்தில்


 செல்வசென்ராயப்பெருமாள் கோயில்

சின்ன நெகமத்தில் இருக்கும் இக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம், கருடகம்பம் என்றழைக்கப்படும் விளக்குத்தூண் ஆகிய அமைப்புடன் விளங்குகிறது. அர்த்தமண்டபத்தின் தெற்குச் சுவரின் இடப்பக்கமாக அதன் கீழ்ப்பகுதியில் பதின்மூன்று வரிகளைக்கொண்ட கல்வெட்டு காணப்படுகிறது. கோயில் சுவர் முழுதும் வெள்ளைச் சுண்ணாம்பு பூசப்பட்டிருப்பினும், கல்வெட்டு அமைந்திருக்கும் பகுதி மட்டும் சுண்ணாம்புப் பூச்சு இல்லாமல் செங்காவி வண்ணம் பூசப்பட்டிருப்பதால் எழுத்துகள் தெளிவாகப் புலப்படும் நிலையில் இருந்தது.

கல்வெட்டு தெரிவிக்கும் செய்திகள்

1 கல்வெட்டின் காலம்

கல்வெட்டு “ஸ்ரீ றாம செயம்” எனத்தொடங்குகிறது. அதனை அடுத்து கலியுக சகாப்தம் 4941-ஆம் ஆண்டும், சாலிவாகன சகாப்தம் 1762-ஆம் ஆண்டும், தமிழ் ஆண்டுகளில் ஒன்றான சார்வரி ஆண்டின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த மூன்று குறிப்புகளைக்கொண்டு கல்வெட்டின் காலம் கி.பி. 1840 என்று உறுதியாகின்றது. கல்வெட்டில் ஆவணி மாதம் குறிக்கப்பட்டுள்ளதால், 1840-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

கல்வெட்டு

கல்வெட்டு-மூன்று பகுதிகளாக

2 நெகமம் பாளையக்காரர் கொண்டம நாயக்கர்

கல்வெட்டில் நெகமம் ஊரானது நிகமம் என்று குறிக்கப்பெறுகிறது. நிகமம் என்பது வணிக நகரைக் குறிக்கும் பெயராகும். எனவே, பழங்காலத்தில் நெகமம் ஒரு வணிக நகரமாக இருந்தது என்று அறிகிறோம். அதோடுமட்டுமல்லாமல், நெகமம் நாயக்கர் காலத்திலிருந்த ஒரு பாளையம் என்றும் அறிகிறோம். நிகமம் பாளையக்கார்ரின் பெயர் கொண்டம நாயக்கர் என்றும், அவர் பாலமவார் குலத்தைச் சேர்ந்தவர் என்றும் கல்வெட்டு கூறுகிறது.

3 முத்துவல்லக்கொண்டம தேவய நாயக்கர்

மேற்படி பாளையக்காரர் கொண்டம நாயக்கரின் மகன் பெயர் சுப்பராய தேவய நாயக்கர் என்றும் அவருடைய மகனின் பெயர், அதாவது கொண்டம நாயக்கரின் பேரன் பெயர் முத்துவல்லக்கொண்டம தேவய நாயக்கர் என்பதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும், இந்த முத்துவல்லக்கொண்டம் நாயக்கரின் மாமனார் பெயர் ஆவலச்சோத்தய நாயக்கர் என்றும், இவர் ஆவலப்பம்பட்டியின் அதிகாரர் (தலைவர்) என்றும், அவரது குலம் சேனை சல்லிவார் குலம் என்றும் கல்வெட்டு கூறுகிறது.

4 வெள்ளையம்மாள்-கோயில் திருப்பணி

ஆவலச்சோத்தய நாயக்கரின் மகளான வெள்ளையம்மாள் என்பவரை மேற்படி முத்துவல்லக்கொண்டம தேவ நாயக்கர் மணந்ததாகவும், இந்த வெள்ளையம்மாள் சின்ன நெகமம் சென்னராயப்பெருமாள் கோவிலைப் புதுப்பித்துத் திருப்பணி செய்ததைக் கல்வெட்டு குறிக்கிறது. கருவறை (கல்வெட்டில் கெற்பகிரி என்பது பெயர்), அர்த்தமண்டபம் (கல்வெட்டில் அஷ்த்தகிரி என்பது பெயர்) ஆகிய இரண்டையும் செங்கல் கட்டுமானத்திலிருந்து கல் கட்டுமானமாக வெள்ளையம்மாள் கட்டுவித்துள்ளார். மகாமண்டபம், திருமதிள் (மதில் சுவர்) ஆகிய இரண்டையும் செங்கல் கட்டுமானமாகக் கட்டியுள்ளார். இவை தவிர கல்லாலான கருடகம்பம், தீர்த்தக்கிணறு, துளசி மண்டபம், மடப்பள்ளி ஆகியனவும் வெள்ளையம்மாளால் கட்டுவிக்கப்பட்டன என்று கல்வெட்டு தெரிவிக்கிறது. ஆக கோவில் முழுமையும் புதுப்பித்துத் திருப்பணி செய்துள்ளார்.

5 பாளையக்காரர், வெள்ளையம்மாள் ஆகியோரின் சிற்பங்கள்

கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் நால்வரின் உருவங்கள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் சிறப்பாகும். முன்மண்டபம் நான்கு கல் தூண்களைக்கொண்டுள்ளது. அவற்றில் மூன்று தூண்களில், கல்வெட்டில் குறிப்பிடப்பெறும்

1. பாளையக்காரர் கொண்டம நாயக்கர்

2 அவரது பேரன் முத்துவல்லக்கொண்டம தேவ நாயக்கர்

3 முத்துவல்லக்கொண்டம நாயக்கரின் மனைவியான வெள்ளையம்மாள்

ஆகியோரின் கற்சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்களாக அழகாக வடிக்கப்பட்டுள்ளன. சிற்பங்களின் மேற்பகுதியில் அவரவர் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பல கோயில்களில் மண்டபத்தூண்களிலோ, விளக்குத்தூண்களிலோ அவற்றைக் செய்வித்த ஆண் மற்றும் அவர் மனைவி ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. பெயர் பொறித்துள்லதைப் பெரும்பாலும் அரிதாகவே காண இயலும். இங்கே, பெயர் பொறித்த உருவங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவதாக உள்ள தூணில் முத்தம்மாள் என்பவருடைய சிற்பம் உள்ளது. இவர் பாளையக்காரர் கொண்டம நாயக்கரின் மனைவி என்பதில் ஐயமில்லை. ஏனெனில், இரு தூண்களில் இரு ஆண்களின் சிற்பங்களூம், அவர்களுக்கு நேர் எதிரே இரு பெண்களின் சிற்பங்களும் காணப்படுவதால் இதை யூகிக்கலாம்.

6 கோயிலின் பழமை

திருப்பணி செய்யப்பட்ட காலம் கி.பி. 1840 என்பதால், கோயில் அதற்கு முன்பே செங்கல் கட்டுமானத்தோடு இருந்திருக்கும் என்பது கண்கூடு. எனவே, ஏறத்தாழ கோயில் 200 ஆண்டுகள் பழமையானது என அறிகிறோம். கோயில், போயர் குலத்தவரின் குலக்கோயில் என்பதைத் தற்போதுள்ள ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது.

7 சில செய்திகள்

· கி..பி. 1798-1805 காலகட்டத்தில், பாளையக்காரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப்போரிட்டனர். இறுதியாக, ஆங்கிலேயர் பாளையக்காரரை ஒழித்தனர். எதிர்ப்புக்காட்டாத எஞ்சிய பாளையக்காரர்களுக்கு ஜமீந்தார் பதவியை ஆங்கிலேயர் அளித்து ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் இணைத்துக்கொண்டனர். வரி வசூல் உரிமையை மட்டும் அவர்களுக்கு அளித்து, படை வைத்திருக்கும் உரிமையைப் பறித்துக்கொண்டனர்.

· இவ்வாறு, ஜமீந்தார் பதவி நிலவியிருந்த ஆங்கிலேயர் காலத்திலும், தங்களின் பாளையக்காரர் பெயர் மரபை மறவாது காட்டும் எண்ணம் சின்ன நெகமம் சென்னராயப்பெருமாள் கோயிலின் கல்வெட்டில் வெளிப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.

· கல்வெட்டின் காலம் கி.பி. 1840. இந்த ஆண்டு கி.பி. 1840-ஆம் ஆண்டை நமக்கு நினைவுபடுத்துகிறது. இந்த ஆண்டில்தான் ஆங்கிலேய ஆட்சியர் ”பிளாக் பர்ன்” (Black Burn) மதுரைக்கோட்டையை அழித்து நகரை விரிவாக்கம் செய்தார்.

· சின்ன நெகமம் கல்வெட்டில், காலக்கணிப்புக்குத் தேவையான பல குறிப்புகள் உள்ளன. கலி ஆண்டு(4941), சக ஆண்டு(1762), தமிழ் வியாழ வட்ட ஆண்டு(சார்வரி), ஆவணி மாதம் முதல் தேதி என்னும் குறிப்புகளுடன் பஞ்சாங்க்க் குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. 📚📚📚✍️✍️✍️✍️

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக