#உடுமலை அருகே பாளையத்துக்காரர்களின் தளபதிகள் வழிபட்ட தாய்த்தெய்வம்
உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் பாளையத்துக்காரர்கள் ஆட்சி செய்தமைக்கான சான்றுகள் அதிகளவில் உள்ளன. 15 ஆம் நூற்றாண்டுக்குப்பிறகு பெருமளவில் இந்தப் பகுதிகளில் நாயக்கனூர், பாளையம் என்றும் ஊர்ப்பெயர் அமைந்தமைக்கான சான்றுகளை வரலாற்று ஆய்வாளர் திரு. கே.கே.பிள்ளை பதிவு செய்துள்ளார்.
அது போன்று இங்கு துங்காவி ஜமீன்தார் வாரிசுகள் வைத்திருக்கும் செப்பேட்டுப் பட்டயங்களில் பின்வருமாறு ஒரு சில செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மகா மகாகனமும் மேன்மையும் பொருந்திய ஒன்பதுக்கும் சத்தியந்த வராரவராகிய சனவமாடு சலையெருது ஆயல் குழல் இரத்தின கம்பளி பிடி செம்புக்கு உடையவரான புவிமிசையில் ஊஞ்சலாடுகறி பெரியோர்களுக்கான பாலம் பன்னிரண்டு தண்டிகைக்காரருக்கும் 1.துங்காவி ஜமீன்தார், 2. நெகமம் ஜமீன்தார், 3. பெரியபட்டி ஜமீன்தார், இன்று இந்த கோவிலைச் சேர்ந்த தாய் உறவின் முறையார்களும் ஜோத்தம்பட்டி ஜமீன்தார் 5. தளி ஜமீன்தார், 6. ஆவலம்பட்டி ஜமீன்தார், 7. தொண்டாமுத்தூர் ஜமீன்தார், 8. சிஞ்சுவாடி ஜமீன்தார், 9. தாளக்கரை ஜமீன்தரர், இந்த பத்து பேர்களும் மேலே சொன்ன தேவதைக்கு வரி விகிதம் தலைக்கட்டு ஒன்றுக்கு ரொம்ப ஏழைகளுக்கு ஒரு ரூபாயும் கொஞ்சம் செல்வமுள்ளவர்களுக்கு தலைக்கட்டு ஒன்றுக்கு 5 ருபாய்கள் விகிதம் விதிக்கப்பட்டிருந்தது குறித்தும் பதிவுகள் உள்ளது.
மேலும் கோயில்கள் குறித்த பாடல்களில்
இம்மைச் செய்தது மறுமைக்காமெனும்
ஆறவிலை வணிகன் ஆய்அலன் பிறரும்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன றவன் கைவண் மையே என்றும் அறிஞர்; பெருமக்கள் பதிவு செய்துள்ளனர்.
மேலும் 13 ஆம் நூற்றாண்டில் கொங்குச் சோழர்களுக்குப்பின் கொங்குப்பாண்டியரும் அதன் தென் கொங்கையே ஆண்டு வந்தனர் என்றும் இந்தக் கோயிலை பாண்டிக்கோயில் என்றும் தளவாய்கள் வழிபட்ட கோயில் என்றும் கூறப்படுகிறது. கோயிலுக்கு வெளியே இருக்கும் சிலையில் பாளையத்துக்காரர் காலத்தில் அரச குடும்பத்தில் உயர் பதவியில் இருக்கும் தளபதிகள் வழிபடுவது போன்று புடைப்புச்சிற்பங்கள் இருப்பதை வைத்துப் பார்த்தால் சுமார் 400 அல்லது 500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் சிற்றரசர்கள் காலத்தில் தளவாய்களாக அல்லது தானாதிபதிகளாக நாயக்கர் இருந்து வரி வசூல் செய்து கொடுத்து பாளையத்துக்காரர்களாக இருந்துள்ளனர் என்று உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
மேலும் இந்தக் கற்கோயில் உள்ள கருப்பக்கிரகத்தில் எட்டுக்கை கொண்ட அம்மன் காலடியில் ஒரு அரசன் கீரிடத்தோடும் கையில் வாளும் கேடயமும் ஏந்தி அம்மனால் சம்ஹாரம் செய்யப்பட்டு கிடக்கிறான்.
மக்கள் இதை கருங்காளியம்மன் என்றும் காளியம்மன், வீரமாத்தியம்மன் என்றும் வழிபடுகின்றனர். ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டும் வழிபாடு செய்யாமல் அனைத்து சமூக மக்களும் வழிபாடு செய்து வருகின்றனர்.
தனியாக குல வழிபாடு என்று செய்வதாக யாரும் வருவதில்லை என்றும் அந்தப் பகுதி மக்கள் தன்னார்வத்தோடு இந்தக்கோயிலை அமாவாசை, வெள்ளிக்கிழமை நாட்களில் வழிபாடுகள் செய்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த ஊருக்கு அருகில் வஞ்சிபுரம் எனும் பகுதியில் ஏற்கனவே தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் கல்வெட்டுகள் ஆவணப்படுத்தப்பட்டு எடுக்கப்பட்டது. மேலும் துங்காவி , இராமேகவுண்டன்புத}ர், வேடபட்டி, ஜோத்தம்பட்டி போன்ற பகுதிகளில் மாலகோயில் என்னும் பாளையத்துக்கார்களின் வழிபாட்டுச்சின்னங்களும், படிமங்களும் இருப்பதை வைத்துப்பார்த்தால் இது பாளையத்துக்காரர்கள் வழிபட்ட தெய்வம் என்று உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் ஆய்வாளர்கள் முனைவர் முனியப்பன்,பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முனைவர் விஜயலட்சுமி. மற்றும் உடுமலை அரசு கலைக்கல்லூரி வரலாற்றுப்பேராசிரியர் முனைவர் ம.மதியழகன், வரலாற்றுப்பேராசிரியர் செ.ராபின் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக