புறநானூறு :
"இல் அடு கள்ளின் சில் குடிச் சீறூர்ப்
புடை நடுகல்லின் நாள் பலி யூட்டி
நன்னீர் ஆட்டி நெய்ந் நறைக் கொளீஇய
- புறநானூறு 329, 1-4"
பொருள் :
வீடுகளில் கள்ளைச் செய்யும் சில குடிகளையுடைய சின்ன ஊரில், நடுகல்லிற்கு தினமும் படைத்து, நல்ல நீரால் அதைக் கழுவி, நறுமண எண்ணையைக் கொண்டு விளக்கு ஏற்றுவார்கள். அதன் கருமையான பெரும் புகையானது நறுமணத்தோடு தெருக்களில் கமழும்.
என்று புறநானூற்று பாடல் நமக்கு தொன்மை வாய்ந்த நடுகல் வழிபாட்டின் முறையை கூறுகின்றது. சங்க காலம் தொட்டே நடுகல் வழிபாடு நம் தென்னாட்டவர்கள் மரபில் வேரூன்றி இருந்துவரும் வீரத்தை பறைச்சாற்றும் பண்பாட்டு மரபாகும்.
மேலும், நடுகற்கள் பொதுவாகவே வீரர்களுக்கு நடப்படும் கல்லாகும், போர்களில் வீரமரணமடைந்தவருக்கும், தம் குடியிருப்பு மக்களை தாக்கவரும் கொடிய விலங்குகளிடமிருந்து காத்த தீரர்களுக்கும், நிரை மீட்கும் போராளிகளுக்கும், ஏன் உடன்கட்டை ஏறி வீரகுல கற்புக்கரசிகளுக்கும் கூட நடுகற்கள் நடப்படுவது பண்டை தொட்டுவந்த பாரம்பரியபாகும்.
யார் இந்த அரண்மனையப்பன்?
யார் இந்த மாலையம்மன் என்கிற சந்தேகம் உங்களில் பலருக்கும் எழலாம்?
அரண்மனையப்பன் என்பது ஒரு குறிப்பிட்ட தனியொரு தெய்வம் அன்று அது வேடப்பட்டி ஜமீனின் ஒட்டுமொத்த ஆண் வழி முன்னோர்களையும் குறிப்பதாகும்.
அதே போல மாலையம்மன் என்பதும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தில் அடங்காது ஒட்டு மொத்த ஜமீன் பரம்பரையின் பெண்கள் வழி முன்னோர்களை குறிப்பதாகும்.
இது வேடப்பட்டி ஜமீனில் பல தலைமுறைகளாக, நாங்கள் கேள்விப்பட்டவரை 700 வருடங்களுக்கு முன்பிருந்தே தமிழக மண்ணில் வேடப்பட்டி அரண்மனையார்களால் நடத்தப்படும் அவர்தம் வம்ச வழிப்பாடாகும்.
இவ்வழிப்பாட்டின் நிகழ்வுகளாக
முதலில் வேடப்பட்டி பாளையத்தின் முழுமுதற் முன்னோன் போடிதலை கும்மநாயக்கருக்கு முதல் பூஜை செய்துயப்படுகிறது.
பிறகு அரண்மனை காவல் தெய்வம் சப்பாணி கருப்புக்கு பூஜை செய்து முடித்த பிறகு, பாரம்பரிய அரண்மனை உறுமிக்காரர்களின் உறுமி இசைப்புடன் முன்னோர் நடுகற்களுக்கு கிடா வெட்டுடன் வழிப்பாடு நடக்கிறது.
அவ்வகையில் இன்று வேடப்பட்டி அரண்மனையார் மாலைக்கோவிலில் எனது அம்மாவின் அம்மா எனது பாட்டியார் வேடப்பட்டி ஜமீன் திரு. துரைசாமி நாயக்கரவர்களின் ராணியார் வெங்கிட்டம்மாள் அவர்களுக்கு வழிபாடு நடந்தது
...
தலைமுறைகள் கடந்தும் தொடரும் ஒரு போர்க்குடி மரபின் வம்ச பாரம்பரியம் இது 






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக