1. கோட்டமங்கலம். அக்கு, தார்ச் சாலையிலிருந்து ஒரு கல் தொலைவில் புன்செய் நிலத்திடையே காணப்பட்டவை இரு கல்திட்டைகள். பெருங்கற்கால நினைவுச் சின்னங்களுள் இதுவும் ஒரு வகை. ஆங்கிலத்தில் “DOLMEN“ எனக் குறிப்பிடுவர். பெரும் பெரும் பலகைக் கற்களை வீடு போல இணைத்த ஓர் அமைப்பு. செவ்வக வடிவிலானது. முன்புறம் சிறிய அளவிலான இரண்டு பலகைக் கற்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றின் இடையில் வீட்டின் நுழைவாயில் போன்று இடைவெளி. நேர் பின்புறம் ஒரு ஒற்றைக் கல் பலகை. இவ்விரண்டு அமைப்பும் செவ்வகத்தின் அகலப் பக்கங்கள். செவ்வகத்தின் நீளப்பக்கங்கள் இரண்டிலும் இரண்டு நீளமான பெரிய பலகைக் கற்கள். இவற்றின் மேலே கூரைப்பகுதியில், ஆமையின் முதுகில் காணப்படும் ஓடு போன்றதொரு மிகப்பெரிய பலகைக் கல். செவ்வகப் பரப்பை முழுதும் மூடுகின்ற வகையில் மூடுகல். உள்ளே காணப்படும் அறை போன்ற இடம், கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டவாறு, இறந்தவர் எலும்புகள், பயன்படுத்திய பொருள்கள் ஆகியவற்றை வைத்து வழிபடும் இடம். இக்கல்திட்டையை அடுத்து அருகிலேயே மற்றொரு கல்திட்டை இருந்தது. இதில், மூடுபலகைக் கல்லில் ஒரு பெரிய வட்டமான துளை காணப்படுகிறது.
2.மடத்துக்குளம்: மடத்துக்குளம் பகுதியில் உள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்திட்டை ஆய்வு செய்யப்பட்டது.மடத்துக்குளம் அருகே, கிழக்கு நீலம்பூர் விளை நிலம் உள்ள பகுதியில் மிகப்பழமையான கல்திட்டை உள்ளது. இது குறித்து, தினமலரில் செய்தி வெளியானது. இதையடுத்து, உடுமலை ஜிவிஜி கல்லுாரி வரலாற்றுத்துறை பேராசிரியர் கற்பகவல்லி, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்ந்த செல்வராஜ், வளவன், அருள் செல்வன், ராபின் ஆகியோர் இதை ஆய்வு செய்தனர்இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பெருங்கற்கால பண்பாட்டில் இறந்தவர்கள் நினைவாக கல்திட்டை அமைப்பது வழக்கம். சங்ககாலத்திற்கு முன்பே, பாலக்காட்டு கணவாய் பகுதியில் நீர் வழித்தடத்தில் வர்த்தகம் நடந்துள்ளது.இதில் ஈடுபடும் வணிகர்கள், தரை வழியில் கிழக்கு திசை நோக்கி பயணிக்க வடபூதி நத்தம், கண்ணாடிப்புத்துார், ஐவர்மலை, சின்ன கலையம்புத்துார் வழியாக பாதை இருந்துள்ளது. இந்த வழித்தடத்தில் பயணித்த வணிகர்கள் அல்லது இனக்குழுக்களை சார்ந்தவர்கள் போர் காரணமாகவோ அல்லது இதர தாக்குதல் காரணமாகவோ இந்த இடத்தில் இறந்திருக்கலாம். அவர்கள் நினைவாக இந்த கல்திட்டை அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தடி உயரம், மூன்று அடி அகலமுள்ள பலகை வடிவ கற்களை பயன்படுத்தி, சதுர வடிவில் அறை போன்ற கட்டமைப்பு உருவாக்கியுள்ளனர். இதே அளவுள்ள கற்களை மேற்கூரையாக அமைத்துள்ளனர். இதுஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தது.இவ்வாறு, கூறினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக