மனசுவிட்டுப் பாராட்டுங்க!
ஆன்ட்ராய்டு செல்பேசியில் விதவிதமான ரீல்ஸ்கள் வருகின்றன. மகள்கள் பாடல் நிகழ்ச்சியில் அருமையாகப் பாடி அசத்துகிறார்கள். அரங்கமே எழுந்து கை தட்டுகிறது! பெற்றோர் மேடைக்கு அழைக்கப்படுகிறார்கள். கண்ணீர் மல்க மகள்களை அரவணைக்கிறார்கள். இன்னொரு ரீல்ஸில், நீயா நானா பேச்சில், எங்களை அப்பாக்கள் தொடக்கூட செய்வதில்லை... அப்பாவின் தொடுகைக்காக... தலைகோதலுக்காக... அரவணைப்புக்காகத் தவிக்கிறோம் என்கிறார்கள் மகள்கள்! என்னவொரு விந்தை!
நாம் அனைவருமே தனித்தனி மனிதர்கள் தான்... அதுமட்டுமல்ல, உணர்வுள்ள மனிதர்கள்! பாசம், பரிவு, காதல் போன்ற உணர்வுகள் தான் நம்மை ஒருங்கிணைக்கின்றன. இந்த உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தான் சமூகத்தின் பார்வை, தோல்விகள், தேடல்கள், இயந்திரத்தன வாழ்க்கை எனப் பல்வேறு காரணிகள் குறுக்கே நிற்கின்றன. இவற்றைத் தாண்டி நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்தும்போது அங்கே ஓர் பிணைப்பு உருவாகிறது. நாம் நம் குழந்தைகளுக்காகவோ... குழந்தைகள் தங்கள் பெற்றோருக்காகவோ எவ்வளவோ செய்தாலும், பொதுப்பார்வையில் அவை அனைவரும் செய்யக்கூடியது தானே என்பதாக இருந்தாலும், அதற்காக எடுத்துக்கொள்ளும் சிரத்தையை உணர்ந்து பாராட்டும்போது... தட்டிக்கொடுக்கும்போது அங்கே ஓர் முழுமை, நிறைவு கிடைக்கிறதல்லவா? அது தான்... அதுக்காகத்தான் இந்த ஓட்டமெல்லாம்! 
கடந்த நான்கைந்து மாதங்களாக மகளின் கல்விக்கடனுக்காகத் தொடர்ந்து அலைந்துகொண்டிருந்தேன். இன்றுதான் அதன் நிறைவுப்பகுதியை எட்டினேன். இதேபோன்ற அலைச்சலை பத்தாண்டுகளுக்கு முன் வீட்டுக்கடனுக்காக அலைந்தபோது அனுபவித்திருக்கிறேன். இப்போது மீண்டும் அதேபோன்ற அனுபவம். எனது அக்கவுண்ட் உள்ள செங்குன்றம் வங்கிக்கிளையில், கல்விக்கடன் விவகாரங்களைக் கவனித்துக்கொள்ளும் வங்கி அலுவலரை சந்திப்பதற்காகவே மூன்று முறைக்கு மேல் அலுவலகத்துக்கு பெர்மிஷன் போட்டு வங்கிக்கு சென்றுவர வேண்டிய நிலை. அதன்பின் மகளோடு இணைந்து வங்கிக்கு சென்று வங்கிக்கடன் தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் முடிப்பதற்குள் வங்கியில் ஆடிட்டிங் வந்து, வங்கி மேலாளர் மாற்றப்பட்டு, தற்காலிக மேலாளர், அடுத்த மேலாளர் என்று மூன்று மேலாளர்களைப் பார்த்தாச்சு! அதன்பின் வங்கிக்கடன்களை ப்ராசஸிங் செய்யக்கூடிய மைய வங்கிக்கு சென்று, ஒருவழியாக அதற்கான அனைத்து வேலைகளையும் முடிச்சாச்சு!
இதற்காக இன்றைய தினம் மகளை அழைத்துக்கொண்டு, உடன்வந்த கனமழையையும் அழைத்துக்கொண்டு டூவீலரில் நீண்ட தூரம் பயணித்து, ஐய்யப்பன்தாங்கலிலுள்ள மைய வங்கியில், உரிய அலுவலர் வருவதற்காக ஒரு மணி நேரம் காத்திருந்து, அதன்பின், வடிவேலு சொல்வதுபோல் மடுவுக்கு ஒரு கையெழுத்து என்பதாக பக்கம் பக்கமாக கையெழுத்துகளைப் போட்டு முடித்து, ஒருவழியாக வங்கிக்கடனுக்கு ஓகே வாங்கியாச்சு! இந்த கல்விக்கடனுக்காக அலைந்த ஒவ்வொரு நாளிலும், அலுவலகத்தில் பெர்மிஷன், மகளின் கல்லூரியில் விடுப்பு என ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்துச் செல்வதும்... இடையே செல்பேசியில் கல்விக்கடன் ப்ராசஸ் குறித்து வங்கி அலுவலரிடம் செல்பேசியில் விசாரிக்கும்போது, ஒருவித ஒவ்வாமையோடு அவர்கள் தரப்பில் அரையுங்குறையுமாகப் பதில் வருவதும்... அதையும் பொறுத்துக்கொள்ளும் தருணங்களிலெல்லாம்... எப்படி இப்படி நான் மாறிப்போனேன் என்று என்னையே நான் ஆச்சர்யமாகக் கேட்டுக்கொள்வேன்!
தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சிக்காக... முன்னேற்றத்துக்காக... அவரவர் வருமானத்துக்கேற்ப... வாழ்க்கைச்சூழலுக்கேற்ப... ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொருவகையில் மெனக்கெடுகிறார்கள்... தங்கள் சக்திக்குட்பட்டோ, மீறியோ தங்கள் பிள்ளைகளுக்காக முடிந்ததை செய்துகொடுக்கிறார்கள். இது தானே பெற்றவர்களின் கடமை என்று ஒற்றை வரியில் சொல்லிவிடலாம் தான். கடமையை கடமையே என்று செய்வது வேறு, உளப்பூர்வமாக மெனக்கெடுவதென்பது வேறு... ஒவ்வொரு முறையும் பிள்ளைகளுக்காக ஒன்றை செய்யும்போது, அது, பிள்ளைகளுக்கு பிடித்த சமையலாகவும் இருக்கலாம்... பிள்ளைகளுக்கு பிடித்ததாக எடுக்கும் உடுப்பாகவும் இருக்கலாம்... அவர்களுக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை நிறைவேற்றுவதாக இருக்கலாம்... அதை பிள்ளைகளுக்காக செய்து தரும்போது பெற்றோரின் மனதுக்குள் ஓர் நெகிழ்ச்சி ஏற்படும்... அதை வெறும் கடமை என்று சொல்லிவிட முடியாது! அதற்கும் மேலான உணர்வு! அப்போது பிள்ளைகளோ, மற்றவர்களோ பாராட்டுகிறார்களோ இல்லையோ, மனசாட்சி பாராட்டும்! அது ஓர் நெகிழ்வான அனுபவம்! 
அதேபோல் பிள்ளைகள் தரப்பிலும், படிப்பு, விளையாட்டு, வீட்டுப்பணிகள், சமூகப்பணிகளென ஒவ்வொன்றிலும் ஏதேனுமொன்றை அருமையாக, மெனக்கெடலோடு செய்துமுடிக்கும்போது அவர்களுக்குத் தேவை ஓர் பாராட்டு! சின்னதாக தலைகோதல்! அரவணைப்பு! இங்கே அனைவருமே பெரிதாக சாதித்துவிட முடியாது... அது பெற்றோரானாலும், பிள்ளைகளானாலும்... ஆனபோதும், ஒருவருக்கொருவர் பாசப்பிணைப்போடு, அன்போடு செய்யும் சின்னச்சின்ன செயல்களையும் பாராட்டும்போது, அத்தனை மன வலியும், உடல் வலியும் பறந்துபோகும்... மறந்துபோகும்! 
இதைத்தான் குறுந்தொகை பாடலொன்றில், கூடலூர் கிழார்,
"முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே" எனக் குறிப்பிடுகிறார்.
இதன் அர்த்தத்தை சுருக்கமாகச் சொல்வதானால், செல்வச்செழிப்பான குடும்பத்தில் செல்லமாக வளர்ந்த தலைவி, தனிக்குடித்தன வாழ்க்கையில், மிகவும் சிரமப்பட்டு கணவனுக்காக மோர்க்குழம்பு செய்து உணவு படைக்க, அதை உண்ட கணவன், "நீ சமைத்த மோர்க்குழம்பு மிகவும் இனிமையாக இருக்கிறது" என்று பாராட்டவும், சமையலுக்காக அவள் பட்ட சிரமத்தையெல்லாம் மறந்து, முகம் மலர்வாள் என்கிறார். (அது சங்க காலச்சூழல்... இன்றைய காலத்தில் சமையலில் கணவனும் பங்கெடுப்பதே சுவை) இம்புட்டு தாங்க வாழ்க்கை! 
- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக