ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

 கேள்வி : தந்தை-மகன் உறவு ஆழமானது. இலகுவில் காட்சிப்படாதது.

 இவ்உறவில், உங்களது வீட்டிலுள்ள இருவருக்குமான நெறுக்கம் எவ்வாறு காணப்படுகிறது?


என் பதில் : 


ஆமாங்க. தந்தை மகன் உறவு ஆழமானது. இந்த மகன் என்ற உறவு.. அதில் ஒட்டிக் கொண்டிருக்கிற உணர்வு…வார்த்தையில் விவரிக்க முடியாதது.


பிரசவ வலியில் மனைவி பிரசவ வார்டுக்குள் சென்றிருக்கிறார். ஐயோ நல்லபடியாக பிரசவம் ஆகி தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டுமே. என்று ஒரே பதற்றம். கை கால்கள் நடுக்கம். அந்த நேரத்தில் இறைவனிடம் கூட என்ன முறையிட வேண்டும் என்பது கூட புலப்படவில்லை. பயம் பயம். மனத்துக்குள் ஒரே..திக்.திக்.டாக்டர் வெளியில் வந்து.. கொஞ்சம் சிக்கலாக தான்இருக்கிறது. இரண்டு உயிரில் ஒன்றைத்தான் காப்பாற்ற முடியும். உங்களுக்கு எந்த உயிர் வேண்டும் என்று கேட்கிறார்? ஏதோ காகிதத்தில் கையெழுத்து வாங்குகிறார்..?


ஆம்பளை நீ அழலாமா? என்று சொல்லிப் பாருங்கள். முடியாதுங்க முடியாது! அந்த சமயத்தில் அந்த டாக்டர்தான் தெய்வமாக கண்ணுக்குத் தெரிந்தார். எவ்வளவுதான் நானும் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு இருப்பேன். என்னால் அதற்கு மேல் அடக்க முடியல. வாயைத் திறந்து கத்தாமலே.. தாரை தாரையாக கண்ணீர் வடிக்கிறேன். அந்த டாக்டரை கையெடுத்து கும்பிட்டபடியே…எனக்கு பெரிய உசுரு வேணுமுங்க. என்று கூறுகிறேன்.


இந்த மாதிரி கஷ்ட நிலையில்.. எனக்கு அவரைத் தெரியும், இவரை தெரியும், எங்கிட்ட அவ்வளவு இருக்கு, இவ்வளவு இருக்கு,நான் நெனச்சா.. என்றெல்லாம் யாரும் பேச முடியாதுங்க. யாரோ நம்மை நெருப்பில தூக்கி வீசுன மாதிரி.. மனசுக்குள் அவ்வளவு போராட்டம், தவிப்பு இருக்கும். அரை மணி நேரம் கடந்திருக்கும். நர்சம்மா.. வெளியே வந்து உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கான்_என்று சொல்றாங்க! நான் ஓடிச் சென்று குழந்தையை பார்க்கிறேன். 


டாக்டரம்மா கையில் குழந்தை. இரண்டடி தூரம் தான் இடைவெளி. 5000 மைல் வேகத்தில் எனது கண்கள் குழந்தையை காண ஆவலோடு…அதே ஆவலோடு கண்கள் மனைவியை தேடுகிறது. முதலில் நான் பார்த்தது. மனைவியை. அவரின் சிரிப்பை. இரண்டாவது பார்த்தது. இல்லை இல்லை கேட்டது. எனது மகனின் அழுகுரல். மூன்றாவதாக தான் குழந்தையின் முகத்தை காண்கிறேன். திடீர்னு ஏதோ தங்கப் புதையல் கிடைத்து_நான்கோடீஸ்வரன் ஆகி விட்டது போல அவ்வளவு சந்தோஷம்ங்க. பட்ட கஷ்டத்துக்கு-பலன் கைமேல கிடைத்தது போல்.. பரவசம், சந்தோசம், குதூகலம், கொண்டாட்டம்.


ஐந்து நிமிடத்திற்கு முன்…ஒரே துக்கமாக இருந்தவன். இப்போது ஏகபோக கும்மாளம் கூடி வர_ஆர்ப்பாட்டம் ஆனவன்ஆனேன்.


இந்த விஷயம் நடந்து..13 வருஷம் ஆச்சு. இன்றுவரை என்னால் மறக்க முடியவில்லை. என் மகனை பார்க்கும் போதெல்லாம்.. என் வயிற்றில் பாலை வார்த்தவனே..என் ராசா! என்றுதான் எண்ணத் தோன்றும்! இப்படி முதல் பார்வையிலேயே.. ஆனந்த வெள்ளத்தை அள்ளித் தந்தவன் அவன் அன்றோ. அப்படி இருக்க_அவனுக்கும் எனக்கும் இருக்கிற நெருக்கம்.. 

சொல்லியா தெரிய வேண்டும்!!

நன்றி ......https://youtu.be/tX8o4efyMPg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக