அம்மாவின் காலை நேர கோலங்கள் ...
பொங்கலோ பொங்கல்!!!!
மார்கழி பூ பறிப்பதிலும், கோல மாவு பொடிப்பதிலும் , விரைவாக சென்றது. பொங்கல் கொண்டாடும் , அழகையும், ஆர்வத்தையும் , கிராமங்களில் தான் , . முழுமையாகக் காண முடிந்தது!( இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. முழு நாளும் டிவி முன்னால் தானா?)
வீட்டில், அம்மா இதற்கான , வெண்கலப் பானையை பரணிலிருந்து எடுப்பார்கள். பொங்கல் முடிந்ததும், அது மேலே போய் விடும். அம்மா எப்போதும் 2 வகைப் பொங்கல் செய்வார்கள். சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண் பொங்கல். பெரும்பாலான வீடுகளில் , சர்க்கரைப் பொங்கல் மட்டுமே செய்வர். அம்மாவிற்கு வெண்பொங்கல் பிடிக்கும். அதனால் செய்வார்கள் போலும். இரண்டு பொங்கலுமே , ருசியில் போட்டி போடும். நெய்யும், முந்திரியும் தாரளமாக இருக்கும். 3 வேளையும் , சாப்பிட்டு, பானை காலி ஆகும்! தமிழ் பாரம்பரியம் .....பொங்கலுக்கு முன் நம் வீட்டு பரணியில் இருந்து இறங்கும் பித்தளை பாத்திரங்கள் .....நம் தலைமுறை அம்மாக்கள் இருக்கும் வரை..எத்தனை கோடி சொத்து இருந்தாலும் ...பித்தளை பாத்திரங்களுக்கு ஈடாககாது ...பொங்கலை வரவேற்போம் ..
இந்த ஊரில் தான் , முதன் முறையாக , வீட்டு வாசலில், கோலம் போட்டு, அடுப்பு வைத்து, புதுப் பானையில்,கோலமிட்டு,(சுண்ணாம்பும், காவியும் தான் )
சூரியன் வெளிவரும் , சரியான சமயத்தில், பொங்கலில் பால், பொங்க வைத்ததைக் கண்டேன்.( சென்னையில், மண் பானைகளில், கலர் கலராக பெயிண்ட் பண்ணி , விற்கிறார்கள். ) குண்டு குண்டாய் சிவப்பு கரும்புகள் , தோட்டங்களில் இருந்து, கட்டு கட்டாய் , வந்திறங்கும். ஒரு முழு கரும்பை, முழு மூச்சாய் , சாப்பிடுவோம்! பற்களினால் கடித்து, தோலை நீக்கி, பின் கரும்பை சுவைப்போம்!! அதுதானே, பழக்கம்?
ஒரு வீட்டில், (வேறு ஒரு ஊரில்) கரும்பின் தோலைக் கத்தியால் சீவி, பின் துண்டு துண்டாக வெட்டி, தட்டில் போட்டு சாப்பிட்டதைப் பார்த்து சிரிப்பு தான் வந்தது.
4,5 பேராக , வாசலில் உட்கார்ந்து கொண்டு, கதை பேசிய படியே , கரும்பைக் கடித்தால், சுவை பல மடங்காக இருக்குமே? அந்த அனுபவத்தை இழந்தவர்க்கு என் அனுதாபங்கள்!!!!!
காணும் பொங்கல், அங்கு இன்னும் கலகலப்பாய் இருக்கும். புதுத் துணி உடுத்திக் கொண்டு, வித விதமான சித்திரான்னங்களை , வீட்டில் செய்து , தூக்கு சட்டியில் எடுத்துக் கொண்டு, கோலத்தில் வைத்த ,பூவை வரட்டியாக செய்து சேமித்து வைத்து இருந்ததையெல்லாம் , ஒரு மூட்டை கட்டிக் கொண்டு, ஊரின் எல்லையில், உடுமலைப்பேட்டை அமராவதிக் கரையில் உள்ள கோவிலுக்குக் கூட்டி சென்றனர். ஊரே காலி!
திருவிழா தான் ! ஆற்றுப் படுகையிலேயே , சிலர் கூட்டான் சோறு ஆக்கிக் கொண்டு இருந்தார்கள்! எல்லா வித பயறுகளையும், காய்கறிகளையும் போட்டு, ஒரு கலவையான சோறு! அன்றைய ஸ்பெஷலாம் !!! கண்டதுமில்லை, கேட்டதுமில்லை அது நாள் வரை ! பலூனிலிருந்து, ஜவ்வு மிட்டாய், தின் பண்டங்கள் , வளையல், ரிப்பன் கடை எல்லாம் , முளைத்திருந்தன! செமையான வியாபாரம்! எல்லோரிடமும் காசு விளையாடிக்கொண்டு இருந்தது. பின், சாமி கும்பிட்டார்கள், குலவை போட்டார்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக